பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 99 சதவீத ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன: ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தகவல்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  `நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15,44,000 கோடியாக இருக்கும்’’ என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் தெரிவித்தார். தற்போது 15,28,000 கோடி ரூபாய் (99%) திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

தி இந்து (தமிழ்) செய்தி, 30-ஆகஸ்டு, 2017 

இது குறித்து இரு பார்வைகளை இங்கு தருகிறோம்.

ச.திருமலை ஃபேஸ்புக்கில் எழுதியது: 

படம்: Courtesy: The Hindu

முதலில் ரிசர்வ் வங்கியிடம் இது நாள் வரை வெளியில் சுற்றுக்கு விட்ட கரன்ஸி எவ்வளவு என்ற உண்மையான கணக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் சொல்லும் கணக்கை விட பல மடங்கு அதிக பணம் வெளியில் இருந்திருக்க வேண்டும். அதை மறைத்திருக்கிறார்கள் அல்லது தெரியாமல் இருந்திருக்கிறார்கள்.

ஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள்? இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

இப்பொழுது அரசாங்கத்திடம் அதாவது வங்கிகளிடம் கணக்கில் காட்ட முடியாத 3.5 லட்சம் கோடி ரூபாய்கள் உள்ளன. அதன் உரிமையாளர்கள் ஒன்று கணக்கு காட்டி வரி கட்ட வேண்டும் அல்லது கணக்கைக் காட்ட முடியாமல் பணத்தை அரசாங்கத்திடம் இழக்க நேரிடும். ஆக அப்படி அரசாஙக்த்திடம் வரப் போகும் பணமே இந்த நடவடிக்கையினால் கிட்டிய கருப்பு பணமாக இருக்கும். இது முதல் நன்மை.

அடுத்ததாக இன்றைய தேதியில் இருந்து ரிசர்வ் வங்கியிடமும் அரசிடமும் மொத்தம் எவ்வளவு கரன்ஸி நாட்டில் வெளியில் சுற்றுகிறது என்ற துல்லியமான கணக்கு கிடைத்திருக்கிறது. இது இரண்டாவது நன்மை.

மூன்று லட்சம் கள்ள நிறுவனங்கள் இந்த நடவடிக்கையின் மூலமாகக் கண்டு பிடிக்கப் பட்டு முடக்கப் பட்டு விசாரிப்பில் வந்துள்ளன. இது மூன்றாவது நன்மை.

ரிசர்வ் வங்கி வெளியிடாத பாக்கிஸ்தான் மூலமாக உள்ளே வந்த கள்ளப் பணம் முற்றிலுமாகக் களையப் பட்டுள்ளது. இனி புதிதாக அவர்கள் அடித்து உள்ளே விட வேண்டியிருக்கும். இது நான்காவது முக்கியமான நன்மை.

பணத்தை வங்கியில் கட்டியதன் மூலமாக ஏராளமான பேர்கள் புதிதாக வரி செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் இது ஐந்தாவது நன்மை.

இது வரை வசூலிக்கப் படாமல் இருந்த பல வரிகள் பல்வேறு அரசு அமைப்புகளுக்குக் கிட்டியுள்ளது இது ஆறாவது நன்மை.

பல கருப்புப் பணங்கள் விநியோகிக்கப் பட்டு ஏராளமான மக்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. இது ஏழாவது நன்மை.

அரசியல்வாதிகளிடமிருந்த ஏராளமான கள்ளப் பணமும் கருப்புப் பணமும் முடக்கப் பட்டு உபி தேர்தலில் அந்தக் கட்சிகளின் வெற்றி முடக்கப் பட்டது இது எட்டாவது நன்மை.

காஷ்மீரிலும் பிற இடங்களிலும் பயங்கரவாதத்துக்குச் செல்லும் பணம் தடை பட்டது. இது ஒன்பதாவது நன்மை.

ரிசர்வ் வங்கியின் கணக்கில் இல்லாமல் வெளியே புழங்கிய பணம் அனைத்தும் இப்பொழுது செல்லாமல் ஆகிப் போயிருக்கிறது இது பத்தாவது நன்மை.

ஆகவே இந்த டிமானிடைசேஷன் என்னும் நடவடிக்கையினால் நேரடியாக பணம் அரசுக்குத் திரும்பி வரவில்லையென்றாலும் கூட இதன் மறைபலன் அளப்பரியது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மோடியைத் திட்டுபவர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

*********

ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் ஃபேஸ்புக்கில் எழுதியது

பணமதிப்பிழப்பு சாதித்தது என்ன?

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மட்டும் வைத்து பணமதிப்பிழப்பு தோல்வி என்று சொல்பவர்கள் அரைகுறை பொருளாதார அறிவு உடையவர்கள் அல்லது அரசியல் ஆதாயங்களுக்காகச் சொல்பவர்கள் என்று இரு வகையினராகத்தான் இருக்க முடியும்.

இந்த நடவடிக்கை தேவைப்பட்டது மூன்று காரணங்களுக்காக:
(1) பணமாகப் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது.
(2) வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கையையும், வருமான வரி மூலம் வரும் வருவாயையும் உயர்த்துவது.
(3) கள்ள நோட்டுகளை ஒழிப்பது.

இதில் பணமாகப் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது அரசு எதிர்பார்த்த அளவில் இல்லை. நோட்டு அடிக்க ஆன எட்டாயிரம் கோடி செலவைப் பார்க்கும்போது, வங்கிகளுக்குத் திரும்பி வராத பணம் பதினாறாயிரம் கோடி என்பது மட்டும்தான் இந்த விஷயத்தில் சறுக்கல். ஆனால் பொதுவாக கணக்கு காட்டாத பணம் நிலம், தங்கம் ஆகிய இனங்களில்தான் அதிகமாக முதலீடு செய்யப்படும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இரண்டாம் விஷயத்தில் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. திரும்பி வராத பணம் மட்டும் கறுப்புப்பணமல்ல. திரும்பி வந்த பணத்திலேயே வருமானத்துக்குப் பொருந்தாத பணமும் கறுப்புப் பணம்தான். வழக்கமாக வங்கிகளில் புழங்கும் பணத்தை விட பணமதிப்பிழப்பு சமயத்தில் மூன்று லட்சம் கோடி அதிகமாக வங்கிகளுக்கு வந்திருக்கிறது. அதில் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி வருமானத்துக்குப் பொருந்தாத பணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு பதினெட்டு இலட்சம் பேரும், மூன்று இலட்சம் போலி நிறுவனங்களும் சிக்கியுள்ளார்கள். இது வங்கிகளுக்கு வந்த பணத்தை வைத்து வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கும் தொகை. இப்போது விசாரணையில் இருக்கும் பதினெட்டு இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். நீதிமன்ற விசாரணை எவ்வளவு வருடங்கள் நடக்கும் என்று கேட்காதீர்கள். அதில் அரசு தலையிட முடியாது. செப்டெம்பர் வரை தானாக முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் இருந்தபோது, அறுபத்தைந்தாயிரம் கோடிதான் வெளி வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை 91 இலட்சம் அதிகரித்தது மற்றும் வருமான வரி மூலம் அரசின் நேரடி வரி வருவாய் 25% உயர்ந்தது ஆகியவையும் இதனால் உண்டான பலன்கள்.

மூன்றாவது விஷயமான கள்ளநோட்டு ஒழிப்பு தானாக நடந்திருக்கும். ஆனால் புதிய கள்ளநோட்டுகள் உருவாகாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்களின் நேர்மையைப் பொறுத்தே நீண்ட கால பலன்கள் கிடைக்கும். நேர்மைதான் வெற்றியின் இரகசியமே.

*******

4 Replies to “பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்”

  1. அற்புதமான பதிவு. திரு ஜெகன்நாத் ஸ்ரீனிவாசன் அவர்களது சுட்டிக்காட்டல்கள் அனைவரின் கருத்திலும் ஏறவேண்டிய விஷயம் ஆகும். பண மதிப்பு இழப்பு மூலம் பாகிஸ்தான் அடித்து அனுப்பிய பணம் முற்றிலும் செல்லாமல் ஆகி , பாகிஸ்தானிலேயே கொட்டி கொளுத்தப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அனுப்பிய கள்ள நோட்டுக்களும் அதோ கதி ஆயின.

    இந்திய கருப்புப்பணத்தில் பெரும்பகுதியை வைத்திருந்த அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பங்களும் தங்கள் சேமிப்பில் பாதியை இழந்தன. லஞ்ச சீமான்கள் தங்கள் புத்தம் புதிய ஆயிரம், ஐநூறு கட்டுக்கள் அடங்கிய ஸ்டீல் பீரோக்களை பார்த்து கண்ணீர் வடித்தனர். ஆற்றிலும், குப்பை தொட்டிகளிலும் கிழித்து வீசினார்கள் சிலர். இரவோடு இரவாக எரித்தனர் பலர். முதல் முறையாக கருப்பு இல்லாமல் வெறும் வெள்ளை பணத்தை வைத்து நாட்டை நடத்தமுடியுமா என்று எக்காளம் இட்ட சோனியா காங்கிரசின் எடுபிடிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.நற்பலன்கள் ஏராளம் விளைந்துள்ளன என்பதே உண்மை. இந்தியா மேலும் உயர்க .

  2. காலையில் ரிசர்வ் வங்கி அறிக்கையை செய்திதாளைகளில் படித்தும்,ப.சி.,கபில் சிபல் போன்ற மெத்த படித்த (படித்ததாகக் காட்டி கொள்ளும்) அரைகுறை பொருளாதார நிபுணர்களின் அறிக்கையையும், ராகுல் ,மம்தா போன்ற நாட்டுப்பற்று மிக்க அரசியல் வியாதிகளின் அறிக்கையையும் படித்து சற்று குழம்பிப்போய் இருந்த எனக்கு திருமலை மற்றும் ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலாபலன்களை பற்றிய நல்ல விளக்கத்தை கொடுத்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. “படித்தவன் தவறு செய்தால் ஐயோ! என்று போவான்” என்ற மஹா கவி பாரதியின் வார்த்தை தான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

  3. பாரத பிரதமர் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட பின் ஏற்பட்ட பல்வேறு
    நன்மைகளை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
    இனிமேல் பணத்தை சேர்த்து வைக்க முடியாது என்ற பயத்தை
    கருப்பு பண முதலைகளிடம் மோடி விதைத்துள்ளார்.மேலும்
    பணத்தை பல்வேறு வண்ணத்தில் அச்சடிப்பதன் மூலம் எந்த வண்ண
    பணத்தின் புழக்கம் மக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதை
    வங்கி சுலபமாக கண்டுபிடித்துவிடும் அந்த வண்ண பணத்தை
    பதுக்கி வைத்திருப்பவரிடம்மிருந்து வெளிக்கொணர ஏதேனும்
    யுக்தியை கையாளும் என்ற பயம் பணத்தை பதுக்கி வைத்திருக்கும்
    கருப்பு பண முதலைகளிடம் இருந்துகொண்டேயிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *