கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

முதலில் “கரப்பு” என்ற பத்திரிகையைத் தொடங்கவும்.

நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?

குழுமப் பத்திரிகளுக்கு செய்தி சேகரிப்பு எவ்வாறு செய்வது? முதலில் எதையாவது ஒரு பொதுவான விஷயத்தை எடுத்துத் தொலையுங்கள். உதாரணமாக ” நகம்”.

கரப்பு : இது வெகுஜனப் பத்திரிகை. எனவே,

ஸ்கார்லட் ஜான்சனுக்கும் ” நகராட்சி” ஹீரோயின் நெயில்யா சக்சேனாவிற்கும் ஒற்றுமை நகம் கடிப்பது. ” சின் புள்ளனின்சி இதே பேடு ஹேபிட்டு நாக்கு ” என்று பெங்காலியில் கொஞ்சுகிறார். நகராட்சி , வட சென்னையில் நடக்கும் நகராட்சி ஊழல் அவலங்களைத் தோலுரிக்கும் படம். ரொன்றோ ( டொராண்டோ)வில் நடக்கும் சர்வ தேச விழாவில் தயாரிபபிறகு முன்பே திரையிடப்பட இருக்கிறது. ஹீரோ கதிரேசனின் அழுக்கு லுங்கி நகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்காக ஏலம் விடப்படும். ( ஹ்யூமன் ஆங்கிள் முக்கியம்)

ஜூனியர் கரப்பு :

இது அரசியல் பத்திரிகை. எனவே ” கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்” என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம். எனவே அழகிரி மீண்டும் குடும்ப வட்டத்தில் வருவது உறுதி என்று தயாளு அம்மாள் கருதுவதாக செல்வம், சபரீசனிடம் தெரிவித்த விஷயத்தை நகம் கடிக்கும் பழக்கமுள்ள அருள் நிதி ஆமோதித்துள்ளாராம். இது மோதிக்கு வரவிருக்கும் நகச்சுத்தி என்று குதூகலிக்கிறார்கள் உடன் பிறப்புகள்.

அவள் கரப்பு : இது பெண்கள் கரப்பு…..சீ…பத்திரிகை!

வீட்டில் பாதாமும் முந்திரியும் மிதிபடுகிறதா ? குங்கமப்ப்பூவை மெலிதாக நெய்யில் வறுத்து ஊறவைத்த பாதாமும் முந்திரியும் சேர்த்து மிக்சியில் அடித்து நகங்களில் தடவினால் நல்ல உறுதியான நகம் நாற்பதே வாரங்களில். நடுவில் கை கழுவவேண்டாம்.

தன கரப்பு : இது மணி மேட்டர்ஸ்.

ராஜஸ்தான் பிகநீர் மாவட்டத்தில் நகம் வளர்க்கும் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. பரிசுத் தொகை ரூ 10 லட்சம். கார்ப்பொரேட்களான லாக்மே, லோ ரியல் இதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்கள். தற்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி இதில் 1000 கோடி முதலீட்டுடன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. இந்திய நகங்களுக்கு தென் அமெரிக்க நாடான் சிலியில் பெரும் கிராக்கி. அம்பானி, அதானியின் கடைப்பார்வையும் இந்த நக ஏற்றுமதியில் விழுந்துள்ளதாக உலக வங்கியின் ரக்சிய சுற்றரிக்கை தெரிவித்துள்ளது.

ஆன்மீகக் கரப்பு :
இது பக்தி சமாசாரம்.

நகம் கடிப்பதை பழக்கமாக வைத்திருந்த நசிகேதஸைத் திருத்த யமன் போதித்த தலம். லால்குடிக்கு அருகிலுள்ள நகர் கிராமத்தில் இருக்கும் நக கடேஸ்வரர். அம்பாளின் பெயர் நகநகவல்லி. இங்கு ஆடி அவிட்டத்தில் நகத்தைக் கிள்ளிப் போட்டால் நகம் கடிக்கும் பழக்கும் போகும் என நசிகேதஸ புஜங்கத்தில் இருக்கிறது.

டாக்டர் கரப்பு :
இது மருத்துவம்.

நகம் கடிப்பதால் புற்று நோயா? இருக்கவே இருக்கு க்யூரர் தினகரின் சிகிச்சை. ஆண்டொன்றுக்கு நகச் சுத்தியாலும் நகப் புற்று நோயாலும் 5 கோடி பேர் இறப்பதாக உள்துறை ரகசிய அறிக்கை. இதில் 4 கோடிப் பேர் கால் நகம் கடிப்பதால் என்று ரிப்போர்ட் நம்மை அதிர வைக்கிறது. நகம் கடிக்கும் வழக்கத்தைத் தொடங்கியதே இல்லுமினாட்டிகள் என்று மிரள வைக்கிறார் க்யூரர் தினகர்.

துறுதுறு கரப்பு : இது குழந்தைகள்.

உங்கள் குட்டீஸ் நகம் கடிக்கிறார்களா? தடுக்காதீர்கள். நகம் கடிக்கும் குழந்தைகள் மற்ற சராசரிக் குழந்தைகளைவிட 56.5% அதிக புத்திசாலிகளாகவும், சூழ் நிலையை சமாளிக்கும் பெரியவர்களாகவும் உருவாகிறார்கள் என்று கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது. நகத்தை கடிக்குமுன் சாஸ், மயோனீஸ், சீஸ் தடவினால் உங்கள் குட்டீஸ் மிகவும் விரும்புவார்கள். நகமும் சீக்கிரம் வளரும். எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் நகத்தைக் கடிக்க அனுமதிப்பது சுகாதாரக் குறைவு என்று வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் அறிக்கை.. சீ, ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது.

இது போல் பல், முடி, விரல், என்று பல வாரங்கள் எழுதி வாசகர்களைக் கவரமுடியும்.

(தி.ரா.சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

2 Replies to “கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?”

  1. அட்டகாசமான அங்கதம்! வெட்டவெளீயாகத்தெரியும் இந்த அவலத்தைக்கண்டும் கூட படித்த ஆசாமிகள் இந்தப்பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்க், படித்து, நம்பி…

    ஒண்ணும் தேறாது!

  2. சங்கர் அவர்களே சபாஷ்! கலக்கி விட் டீர்கள்!! .கட்டுரைக்கு “கரப்பு “என்கிற தலைப்பே அபாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *