“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

ஆதிசங்கரர் அருளிய இந்த சௌந்தரலகரிப் பாடலின் மூலவடிவத்தை வடமொழியில் மேற்கோள் காட்டி ஜடாயு அவர்கள் முகநூலில் ஒருபதிவு இட்டிருந்தார்கள். அதன் மறுவினை இக்கட்டுரை.

அரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற
உரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே.

‘பார்வதி தேவியார் பரமேஸ்வரனுடன் ஒருசமயம் மலர்ச்சோலைக்கு எழுந்தருளினார்கள். அங்கோர் அசோக மரம் இருந்தது. அசோக மலர்களை விரும்பிய அன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். அதைக் கண்ணுற்ற பரமசிவானார், தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது என்ற எரிச்சலுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு யானும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேலும் மேலும் இனிதாவதாகும்’ என்பது இத்திருப்பாடலின் பொருளாகும்.

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களிற் காணும் கவி மரபு. இம்மரபு சங்ககாலத்திலேயே தமிழ்மரபுடன் கலந்து விட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்து புலனாகின்றது.

அகப்பொருள் இலக்கிய மரபில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. அது, தலைவியின் காதற் களவொழுக்கத்தை அறிந்து வைத்துள்ள தோழி உரிய காலத்தில் அதனைச் செவிலிக்கு உணர்த்துவதாகும். அறத்தொடு நிற்றல் என்பது தலைவியின் காதலை வெளிப்படுத்துவது. இந்தத் துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டிய ஒரு பாடலும் உண்டு.

அகநாநூறு 48 ஆம் பாடலே அது. அது செவிலி கூற்றினைத் தோழி வாங்கிக் கொண்டு மறு மொழியாகக் கூறியது.

“அன்னாய்! நின்மகள் பாலுங் கூட உண்ணாதவளாய்ப் பெரிய துன்பங்கொண்டு உடல் வெளிறி இளைத்து வருகின்றாள், அது ஏனென என்னை வினவுகின்றாய். அதற்கு என்ன காரணம் எனத் தெளிவாக எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தோன்றுகிறது.

சில நாட்களுக்கு முன்னம் நானும் அவளும் மற்ற தோழிமாருடன் பூக்கள் மலிந்து மலர்ந்துள்ள மலைச் சாரலுக்கு விளையாடச் சென்றிருந்தோம். பூக்கொய்து விளையாடுகையில் அங்கொரு வேங்கை மரம், கிளை கொம்பெல்லாம் பூத்து மணம் பரப்பி நின்றிருந்ததைக் கண்டோம். ஒரு சிக்கல். அந்த கிளைகளெல்லாம் கைக்கெட்டா உயரத்தில் இருந்தன.

அந்தக் கிளைகளைத் தாழச் செய்யப் புலி புலி என்று கூக்குரல் எழுப்பினோம்.

அப்பொழுது, கண்போல் மலர்ந்த செங்கழுநீர்மலர்களை ஊசியினால் கோத்தமைத்த மாலையன், வெட்சிப்பூக் கண்ணியன், நிறைய செஞ்சாந்து பூசிய அகன்ற மார்பினன் ஒருவன், வரிந்து கட்டிய வில்லில் ஏற்றிய கணையுடன் தோன்றினான். ‘எங்கே அந்தப் புலி? எந்தத் திசையில் சென்றது? எனப் பதைப்புடன் வினவி, புலிமேல் கணை தொடுக்க ஆயத்தமாக நின்றனன்.

அவன் அவ்வாறு நிற்க, நாங்கள் ஒருவர் முதுகில் ஒருவர் ஒடுங்கி நாணத்துடன் மறைந்து நின்றோம்.

நாங்கள் வாய் பேசாது ஒடுங்கி நிற்றலைக் கண்ட அவன், “மையீர் ஓதி மடவீர்! நும்வாய்ப் பொய்யும் உளவோ” (உங்கள் அழகிய வாயில் பொய்மொழியும் தோன்றுமோ) என்று கூறி, ‘பை’ யெனத் தான் ஊர்ந்து வந்த புரவியை முடுக்கிச் சென்றனன். அப்படி அவன் குதிரையைத் திருப்பும்போது உன் மகளின் கண்களைப் பலமுறை நோக்கினான், அக்குறிஞ்சித் தலைவன். (செங்கழுநீர் மலர்போலச் சிவந்த அவனுடைய கண்பார்வை இவளது நெஞ்சில் பதிந்துவிட்டது )

இவளும் பகலொளி நீங்கிச் சூரியன் மறையும் அந்திப் பொழுதில் அவன் சென்று மறைந்த திசையை நோக்கிக் கொண்டு,” இவன் மகனே தோழி” என்றனள் (மகனே-perfect gentle-man) இந்த சம்பவத்தை ஆராய்ந்து நோக்கும் மதிவல்லோர்க்கு ஒருக்கால் உன் மகள் உண்ணாமல் உடலிளைத்துக் காணப்படும் உண்மை புலனாகலாம் எனத் தோழி சாமர்த்தியமாகத் தலைவியின் காதலைப் புலப்படுத்துகின்றாள்

இப்பாடலில் வேங்கை மலர்கள் உயரத்தி லிருப்பதால் பறிக்க வியலாத பெண்கள் ‘புலி புலி’ எனக் கூவினர் என்பதறிகிறோம் புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது ஒரு பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும்.

இதற்குத் தோதகக் கிரியை என்பது பெயர். இதுவடமொழி இலக்கியமரபு. சங்க இலக்கியங்களிலோ அன்றிக் காப்பியங்களிலோ இந்த நம்பிக்கை இடம்பெறக் காணோம்.

மாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய மரபுகளையும் வைதிக மரபுகளையும் பதிவு செய்வார். காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளியது. இயற்கை வருணனையே காப்பியமாக அமைந்தது. இதில் இள வேனிற்காலத்தில் இளமகளிர் புறத்தேசென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத்தோதகக் கிரியைகளையும் அவற்றுக்கு உடம்படும் மரங்களையும் பற்றி விரிவாகப் பாடுகின்றார்.

மகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லைமலர் கொய்தனர். அது,’முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா’ என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல்லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக் கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு தண்டம் விளைப்பார் போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல இருந்தது.

முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன்முறுவலைக் குறித்தது.

ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள் . முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்திற் உடன்போக்கு நிகழ்த்தியபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு கனற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவு கூர்ந்தா ரென்னும் படியாக, அவ்வேழிலைம்பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறுமையடைந்த ஏழிலைம்பாலை மரமும் நட்புப் பூண்டதென்னக் கொத்து விரிந்தது புது மலர் முகிழ்ப்ப மகளிர் அதனை நெருங்கிக் கொய்தார்.

பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர்,அம்மரத்தை இகழ்ந்தனர். ‘ பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும் மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலைம் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதிர் எனப் பணிந்ததைப் போலக் கைக்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக் கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு.

செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீட்டும் மீட்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரணத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றனர்

மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப்பார்வை செறிதலினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன்றன., அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதை ஒத்துக்கொண்டது போலக் கொய்தலை நீத்துக் கை சோர்ந்து இளைத்தனர்.

மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலிற் பறிப்பேன் நான் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு பறித்தனர். ஒருசிலர் ஒருகரத்தால் கிளையைப் பற்றிக் கொண்டு மறு கரத்தால் பரித்தனர். அருகில் சிலர், ஒருகையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் எனும் மான நோக்கினால் மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகையினாலும் பறித்தனர். அவ்வாறு பறித்தும் மலர்கள் குறையாமையைக் கண்ட மற்றையோர் மகிழமரம் நடுநிலைமை பிழைத்தது என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர்.

மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரைமலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்பிற் பாடவே, தேன் ஒழுக மாதவிமலர் மிகுதியாகப் பூத்துக்குலுங்கியது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துத் தம் கைம்மலரால் அம்மலரை முகத்தில் வியர் அரும்பக் கொய்தனர்.

மகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ ஒளியுடைய எம் நிறத்தைக் கவர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத்தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோக மலரினை முயற்சியின்றிக் கிடைத்தமையால் மகிழ்ச்சியுடன் வேறு சிலர் அவற்றை அள்ளிக் கொண்டு சென்றார்.

புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றார்.

மகளிர் தழுவ மலர்வது குரவம். குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். அம்மானை விளையாட்டில் மணியால் செய்த அம்மானைக் காயைக் குரவம் பாவைக்கு அளிப்பவர் போல மேலே வீச, அது மராமரக் கிளையில் சிக்கித் தங்கியது. அந்த அம்மானைக் காயை எடுப்பதற்குக் குரவ மரத்தின் மேல் ஏற விரும்பி அம்மரத்தைமகளிர் தழுவினர். தாம் அம்மானைக்காயைக் கவர்ந்து கொண்டதாக நினைத்து இவர்கள் தாக்குவர் என அஞ்சிய குரவம் அடிதாழ்ந்து வணங்குவது போலத் தாழவே, கவர்ந்து கொண்ட பொருளோடு அபராதத் தொகையும் கொடுப்பது போல, அம்மானைக் காயுடன் எமக்குப் பூக்களையுந் தந்ததெனப் புகழ்ந்து குரவமலர்களைக் கொய்தனர்.

இத்தகைய அரிய மரபுகளைப் பதிவு செய்து போற்றிப் பாது காத்து வைத்திருப்பதே செவ்விலக்கியத்தின் மாண்பு.

2 Replies to ““நும்வாய்ப் பொய்யு முளவோ?””

  1. ஐயா, அருமையான கருத்துச்செறிவு மிகுந்த கட்டுரை. படிக்க இன்பமாக இருந்தது. மிக்க நன்றி.

  2. “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” தமிழ்விடு தூது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *