முகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், ராமாயணம்

இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?

September 10, 2017
-  

இராமபிரான் முதலில் முடிவு கட்டியது, பரசுராமரின் செருக்கை;   இறுதியாக முடிவு கட்டியது, இராவணனின் செருக்கையும், வாழ்வையும்.  இருவருமே பிராம்மணர்கள்.

வேட இனத்தவரான குகனையும், சபரியையும் ராமாயணம் சிறப்பித்துச் சொல்கிறது.  தொண்டிலும், அன்பிலும் உயர்ந்த குகனை ‘குகப்பெருமாள்’ ஆக்குகிறது வைணவம். ’சபரீமோக்ஷ ப்ரதாயக [சபரிக்கு மோட்சத்தைத் தந்தவர்] என்றில்லாமல் ’சபரீமோக்ஷ ஸாக்ஷிபூத [சபரியின் மோட்சத்திற்குச் சாட்சியாக இருந்தவர்]’ என்கிறார் சுவாமி நிகமாந்த மஹாதேசிகன்.

சபரிக்குக் கிடைத்த பெரும்பேற்றைச் சத்குரு தியாகையாவும் வியந்து போற்றுவார். அந்த அளவு சபரியின் தகைமை மிக உயர்ந்து விளங்குகிறது. வனவாச விதிமுறைக்கேற்ப, அர்க்ய – பாத்யங்களுக்குமேல் வேறு எதையும் அந்தண முனிவர்களிடத்தும் கைநீட்டிப் பெறாத அண்ணல் சபரி அளித்த கனிகளை மட்டும் ஏற்கிறார்.

இராவணன் பிறப்பைச் சங்க இலக்கியம் சொல்லவில்லை; வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் விரிவாகச் சொல்கிறது, அதுவும் முனிவர்கள் வாயிலாக. ராமாயணத்துக்கான மறு பெயர் ‘பௌலஸ்த்ய வதம் [புலஸ்தியரின் மகனின் வதம்]’ என்பதே.

ஸப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்த்தியரின் வழித்தோன்றல் முனிவர் விச்ரவசு; அவர்தம் புதல்வன் வைச்ரவணன் [குபேரன்] யக்ஷர்களுக்குத் தலைவனாகச் செல்வாக்கோடு திகழ்வதைப் பார்க்கிறான் சுமாலி எனும் அரக்கன். சுமாலி, சுகேசன் என்ற அரக்கனின் புதல்வன்; மால்யவானுக்குத் தம்பி. [இந்த மால்யவானின் கடுமையான எச்சரிக்கைகளை இராவணன் அசட்டை செய்தது பின்னால் நடந்த நிகழ்ச்சி] சுமாலி, தன் மகளான கைகசியிடம் முனிவர் விச்ரவசை வலியச்சென்று வரித்து மக்கட்பேற்றை அடையுமாறு அறிவுறுத்துகிறான். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

முதலில் பிறந்தவன் ராவணன்; பின்னர் கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன். தவத்தால் அவர்கள் வலிமை பெறுகின்றனர். ராவணன் குபேரனின் லங்காபுரியையும், புஷ்பகவிமானத்தையும் கைப்பற்றுகிறான். மகளிரைப் பல இடங்களிலிருந்தும் கவர்ந்துவந்து தன் அந்தப்புரத்தில் சேர்க்கத் துணைபுரிகிறது இந்த விமானம். தென்னகம் சார்ந்த இலங்கை அரக்கர்க்குரியதாக முன்பு இருந்ததில்லை.

இராவணன் பிறந்த ஊர் ‘பிஸ்ரக்’ [நொய்டா அருகில்] என்றே வடபுலத்தவர் இன்றும் நம்புகின்றனர்; விச்ரவ என்பதன் திரிபு ‘பிஸ்ரக்’. அங்கு அவனுக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது –

https://en.wikipedia.org/wiki/Bisrakh

இராவணன் தென்னிந்தியன் – திராவிடன் என்பதை வடபுலத்தவர் ஏற்பதில்லை; குபேரனின் இலங்கை தனக்கு வசப்பட்டபின் அரக்கச் சுற்றத்துடன் ராவணன் நிலையாக அங்கு வாழத்தலைப்பட்டதால், அவன் தென்னகம் சேர்ந்தவனோ எனும் ஐயம் ஏற்படுவது இயல்பே. புலமையும், நூலறிவும் வாய்க்கப்பெற்ற இராவணன் செய்த ’ராவண ஸம்ஹிதை’ வடபுலத்தில் புகழ் பெற்ற நூல்.

திராவிடர் எனத் தென்னகம் சார்ந்த ஓர் இனம், அவர்களையே அரக்கராகச் சித்திரிக்கின்றனர்’ எனும் கருத்தியல் உண்மையா?

தாடகை – சுபாகு – மாரீசர்கள் வாழ்ந்ததும் வடபுலத்தில்; இலவணன் என்ற அரக்கன் வடபுலத்தின் மதுவனத்தில் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது. சத்ருக்னர் இவனை அழிக்கிறார். அரக்கர் பலர் வாழ்ந்தது தண்டகவனத்தில்.

ராவணன் பெற்ற வெற்றிகள் பல; தோல்வியடைந்த சந்தர்பங்களும் உண்டு; சமாதான உடன்படிக்கைகளும் இதில் அடக்கம்.

அவன் தண்டகவனத்தின் ஒருபகுதியான ஜனஸ்தானத்தில் புறக்காவல் படையிருப்பு [outpost] ஒன்றை அமைக்கிறான், கர/தூடணர் தலைமையில். அது தவிரத் தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. இராமபிரான் ஜனஸ்தான அரக்கரை மாய்த்தபின் [கோதாவரிக்கரை], தேவியைத் தேடிக்கொண்டு தென்திக்கில் செல்லும்போது இடர்செய்த கபந்தனை மாய்த்தபின் தென்னகத்தில் அரக்கர் எவரையும் வதைசெய்யவில்லை. அரக்கர் வதைப் படலம் பின்னால் இலங்கையில்தான் மீண்டும் தொடர்கிறது. ஆக, அரக்கர் தென்னகம் சார்ந்த திராவிடர் எனும் பரப்புரை பொருளற்ற புலம்பலாகிவிடுகிறது.

தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். ரஜோ குணமும், ஆயுதவலிமையும் ஒரே இடத்தில் குவிந்தால் அரக்கத் தன்மை மிகுதியாகும். இதைச் சமன் செய்யுமுகமாகப் பெருமான் வசிஷ்டர்/விசுவாமித்திரர் தொடக்கமாக முனிவர்களிடமிருந்து [அஸ்த்ர – சஸ்த்ர] விற்பயிற்சி/வாள்பயிற்சி முறைகளை அறிந்து கொண்டார்; மிகுந்த வேகத்தோடு செருக்குற்றுத் திரிந்த பரசுராமரை, விவேகத்தோடு அமைதியான முறையில் அடக்கி, மீண்டும் அவரைத் தவம் புரியுமாறு செய்ததும் ஒரு சமன்பாட்டு நடவடிக்கையே.

உலக இன்பங்களைத் துய்க்கவேண்டிய இளம்பருவத்தில் எதிர்பாராதவிதமாக மிகக்கொடிய பதினான்காண்டு வனவாச தண்டனை தம்மீது திணிக்கப்பட்டபோதும், சற்றும் நிலைகுலையாமல், அதையே தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார் ஐயன்.

அண்ணல் வனமேகும்போதும் ஆயுதங்களோடுதான் சென்றார். சித்ரகூடத்திலிருந்து கிளம்பிய தசரத குமாரர்கள் நேராக மிகக்கொடிய, அடர்ந்தவனமான தண்டகவனத்தில் புகுந்ததும் இதே நோக்கத்தோடுதான்-

அங்கு தங்கிய அண்ணல், உலகியல் தொடர்பின்றி அருந்தவமியற்றும் அறவோர்க்குத் துணையாக அரக்கரை மாய்த்து, சத்வ குணம் பெருக வழிகோலினார். அகத்தியரிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டார். [அஸ்த்ர – சஸ்த்ரங்கள் அரசர்க்குரியவை; அஸ்த்ரம் – எதிரிமேல் எறிந்து தாக்கும் ஆயுதங்கள்; சஸ்த்ரம் – கையில் வைத்துக்கொண்டே போர்செய்வதற்கானவை, வாள், கதாயுதம் போன்றவை] ராவண வதமானபின் ஆற்றல் சமன்பாடு முழுமையான பின்னரே அண்ணல் அரியணை ஏறுகிறார். அரியணை பெற்றுப் பெருவலிமை தம்மிடம் சேர்ந்தபின்னரும் எதையும் துஷ்ப்ரயோகம் செய்யவில்லை இறுதிவரை.

எதிரிகளே இல்லை எனும் சூழல்; ஆற்றல்வாய்ந்த உடன்பிறந்தோர், எல்லையில்லாத தோள்வலிமை, உறுதுணையாக சக்திவாய்ந்த படைக்கலன்கள் — உலகமே ‘ராஜாராமன்’ எனப் பலவாறாகப் போற்றிநிற்கும்போதும், இராமபிரான் தம்மை ஒரு தேசத் தொண்டனாகவே கருதிக்கொண்டு பக்தன்செய்யும் தெய்வ உபாசனைபோல் தம் நாட்டையே தெய்வமாக உபாசித்ததாக வால்மீகி பகவான் கூறுகிறார் –

சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாதசெயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.

சமய நூல்களின் மையக் கருத்து:

[சிச்ந] – வயிற்றுக்கு முக்கியமான [இடுப்புக்குக் கீழே தொங்கும் உறுப்பையும், இடுப்புக்கு மேலுள்ள வயிற்றையும் பேணும்] போக்கை ஒருவன் கைவிட வேண்டும்.

இழிசெயலில் ஈடுபடுபவன் தேவனே ஆனாலும் அவன் பழிப்புக்குரியவன். ஆற்றல்மிக்க இந்திரனைப் புகழும் மறை ‘அஹல்யா ஜார ! கௌதம ப்ருவாண!!’ என அஹல்யையை நாடிய இந்திரனைக் கேலி பேசுகிறது.

பெண் பித்தனாயினும் ராவணனது சிவ பக்தி போற்றுதற்குரியதாகிறது; சிவ பூஜையின் முடிவில் நந்தி – சண்டேசர்களுக்கு நிகராக ராவணனும் சிவ நிர்மால்யம் பெறும் தகுதி படைத்தவனாகிறான் –

ஆஞ்ஜநேயரும், பீஷ்மரும் நமக்கு முன் மாதிரிகள்.

உயர்குடியில் தோன்றிய மகான்கள் பலர் செய்த போதனைகள் நம் உள்ளத்தில் தங்கியுள்ளதால்தான் உள்ளீடற்ற மேற்கத்திய மேனிமினுக்கி சமயக் கருத்துகள் நம்மைக் கவர்வதில்லை.

ஜய் ஸ்ரீராம்!

***

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 

9 மறுமொழிகள் இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?

 1. கெணேசு on September 10, 2017 at 10:01 am

  /*** சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாதசெயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.***/

  காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
  நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
  வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
  ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* – பெரிய திருமொழி 2-2-1

  திருமங்கை ஆழ்வார் ராவணனை “காவித் துணியால் உடலை மறைத்து ஜானகியை தூக்கிவந்தவன்” என்று எள்ளி நகையாடுகின்றார். அவனது ஊரான இலங்கையை அழித்தவன் ஶ்ரீராமர் என்று அவருக்கு மங்களாஶாசனம் செய்கின்றார் ஆழ்வார்.

 2. கெணேசு on September 10, 2017 at 1:48 pm

  ஐயா !
  1.) பரசுராமர் ஒரு ப்ராம்ஹ்ணரல்லர் !
  /*** இராமபிரான் முதலில் முடிவு கட்டியது, பரசுராமரின் செருக்கை; இறுதியாக முடிவு கட்டியது, இராவணனின் செருக்கையும், வாழ்வையும். இருவருமே பிராம்மணர்கள். ***/

  பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் பரசுராமர் ஒரு ப்ராம்ஹ்ணரல்லர். ஆனால் அவர் ஒரு க்ஷத்திரியராவார். அதேபோல விஶ்வாமித்ரரும் ஒரு க்ஷத்திரியரல்லர். மாறாக அவர் ஒரு ப்ராம்ஹ்ணராவார். பரசுராமரின் பிதாமஹி சத்யவதியும் விஶ்வாமித்திரரின் மூத்த சஹோதரியாவார். இந்த வர்ண மாறாட்டம் விதைமாற்றத்தினால் விளைந்தது. இதனை மஹாபாரதம் வனபர்வம் 115 ஆவது அத்யாயத்தில் கூறப்பட்டுள்ளது.

  கன்யாகுப்ஜ தேசத்தின் அரசர் காதி மஹாராஜருடைய ஒரேமகள் சத்யவதியாவார். இவர் மீது ப்ருகு மஹரிஷியினுடைய குமாரர் ரிஶீகர் காதல் வயப்பட்டு காதியிடம் பெண் கேட்கின்றார். அதற்கு காதி அரசரும் 1000 குதிரைகள் கன்யாஶுல்கமாகக் கேட்டுப் பெற்று சத்யவதிக்கும் ரிஶீகருக்கும் விவாகம் செய்விக்கின்றார்.

  சில நாள்கள் கழித்து ப்ருகு மஹரிஷி தன் மகனையும் மருமகளையும் சந்திக்க அவர்கள் ஆஶ்ரமத்திற்கு வருக தருகின்றார். மருமகள் சத்யவதியினுடய பணிவிடைகளால் மகிழ்ந்து அவருக்கு என்ன வரங்கள் வேண்டும் என்று வினவ அதற்கு சத்யவதியும் ,” எனக்கு ஒரு மகனும், ஆண்வாரிசு இல்லாத் என் தாய்க்கு ஒரு மகனும் வேண்டும் என்று கேட்கிறார். அதற்காக ப்ருகு மஹரிஷி இரண்டு சருக்களை செய்து –“இது உனக்கு , இது உன்னுடைய தாயாருக்கு. இதை சாப்பிட்டால் இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறக்கும்” என்று சொல்லி அந்தர்தானம் ஆகின்றார். சத்யவதியினுடய தாயார் –“ என்ன இருந்தாலும் உன் மாமனார் உனக்கு கொடுத்த சருவை விஶேஷ முறையில் செய்திருப்பார். நீங்கள் வனவாசிகள். ஆனால் நாங்களோ ராஜ்யத்தை ஆள்பவர்கள். எனவே உன்னுடைய விஶேஷமான சருவை எனக்கு கொடுத்து விடு. என்னுடைய சருவை நீ சாப்பிடு என்று கேட்கின்றார்.

  அப்படியே இருவரும் சருவை மாறாடி சாப்பிடுகின்றனர். பிறகு சத்யவதி தன்னுடைய மாமனாரான ப்ருகு மஹரிஷியிடம் நடந்ததை சொல்கின்றார். ப்ருகு மஹரிஷி அதற்கு –“ அடடே ! என்ன காரியம் செய்தீர்கள். ப்ராம்ஹணனான என் மகனை மணந்த உனக்கு ப்ராம்ஹண சருவும், க்ஷத்ரியரான உன்னுடைய தாய்க்கு க்ஷத்ரிய சருவை என்று இரு சருக்களை செய்தேன். விதை மாற்றத்தால் இப்பொழுது உனக்கு க்ஷத்ரிய குமாரனும், உன்னுடைய தாய்க்கு உலகம் புகழும் ப்ராம்ஹண குமாரனும் பிறப்பார்களே ! என்று வருந்தி விளக்குகின்றார். ஆயினும் சத்யவதி பலவாறு கெஞ்சி “ எனக்கு ப்ராம்ஹண குமாரன் பிறக்கட்டும். என் பெயரன் வேண்டுமானால் க்ஷத்திரியனாகப் பிறக்கட்டும்” என்று வேண்ட –“ அப்படியே ஆகுக” என்று மஹரிஷியும் ஆஶ்வாசம் செய்கின்றார்.

  இதன்படியே ப்ராம்ஹணரான ரிஶீகருக்கு ஜமதக்னியும் , ஜமதக்னிக்கு க்ஷத்திரிய மகனாக பரஶுராமரும் பிறக்கின்றனர்.
  க்ஷத்திரியரான காதி மஹாராஜருக்கு ப்ராம்மண மகனான விஶ்வாமித்ரரும் பிறந்து ,தவத்தால் ப்ரம்ம ரிஷியாகிறார் என்பது வரலாறு.

  2.) ராவணன் ஒரு ராக்ஷஸன். அவன் அண்ணனான குபேரன் ஒரு யக்ஷன். இருவரும் மனிதர்களே கிடையாது. எல்லா மிருகங்களும் , பறவைகளும், தேவர்களும் ,ராக்ஷச-யக்ஷர்களும், மனிதர்களும் 9 ரிஷிகளுக்கு (நவ ப்ரஜாபதிகளுக்கு) பிறந்தவர்கள் என்பது ராமாயணம் ஆரண்யகாண்டத்தில் 14 ஆம் சர்கத்தில்– ஜடாயு, ஶ்ரீராமருக்குமான சம்வாதத்தில் இடம் பெறுகின்றது.

  எனவே இருவரும் ப்ராம்மணரல்லர்கள்.

  இவண்,
  கெணேசு

 3. கெணேசு on September 10, 2017 at 2:27 pm

  ஐயா !

  /*** சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாதசெயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.***/

  ராவணன் செய்த அடாத செயல்களை ஆழ்வார்கள் கண்டித்த இடங்கள் என்று காஞ்சிபுரம். ஶ்ரீமத். உ.வே. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காராசார்யர் அருளிய “ஆழ்வார்கள் உகந்த ராமன்” என்னும் நூலிலிருந்து தொகுத்தது கீழ்வருமாறு

  1. திருப்பல்லாண்டு – 1 முறை
  2. பெரியாழ்வார் திருமொழி – 12 முறை
  3. திருப்பாவை – 2 முறை
  4. நாச்சியார் திருமொழி -3 முறை
  5. பெருமாள் திருமொழி -4 முறை
  6. திருச்சந்த விருத்தம் -5 முறை
  7. திருமாலை – 1 முறை
  8. திருப்பள்ளியெழுச்சி -1 முறை
  9. அமலனாதிபிரான் -1 முறை
  10. பெரிய திருமொழி – 62 முறை
  11. திருகுறுந்தாண்டகம் – 1 முறை
  12. திருநெடுந்தாண்டகம் – 3 முறை
  13. முதல் திருவந்தாதி – 1 முறை
  14. இரண்டாம் திருவந்தாதி -2 முறை
  15. மூன்றாம் திருவந்தாதி – 2 முறை
  16. நான்முகன் திருவந்தாதி – 2 முறை
  17. திருவிருத்தம் -1 முறை
  18. பெரிய திருவந்தாதி -2 முறை
  19. சிறிய திருமடல் -2 முறை
  20. பெரிய திருமடல் – 1 முறை
  21. திருவாய்மொழி – 17 முறை

  மேற்கூறிய கணக்கில் ராக்ஷஸன் ராவணன் கண்டிக்கப் பெறுகின்றான்.

  நன்றி,
  கெணேசு

 4. Geetha Sambasivam on September 10, 2017 at 5:27 pm

  அருமையான தெளிவான விளக்கம். தாமாகவே வலிய வந்து தங்களை அரக்கர் குலம் என்று சொல்லிக்கொள்வோரை என்ன சொல்ல முடியும்! 🙁

 5. sakthipalani on September 10, 2017 at 11:03 pm

  இந்த கட்டுரையின் மூலம் இராமாயணத்தில் சாதி உயர்வை, அல்லது சாதியை பற்றி தேவ் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.நல்லது.
  பொதுவாகவே,இறை மறுப்பாளர்கள்,ராமாயண, மகாபாரத எதிர்ப்பாளர்கள்,
  சொல்லக்கூடிய, எடுத்துவைக்கும் வாதமான இதிகாச புராணங்களில்
  உயர் சாதிக்காரர்களே உயர்வாக சொல்லப்படுகிறார்கள்.என்ற வாதத்தை
  முறியடிக்கும் விதமாக இந்து மத பற்றாளர்களோ,உபன்யாசகர்களோ,
  அல்லது இந்து ஆன்மிகவாதிகளோ,ராமாயண,மகாபாரதத்தில்,சாதி
  வலியுறுத்தப்படவில்லை, அந்தந்த இடத்தில செயல்களே வலியுறுத்தப்படுகிறது,என்று இறை மறுப்பாளர்களுக்கு இணையாக,
  அதைவிட சத்தமாக சொல்வதில்லை. மறைந்த துக்ளக் ஆசிரியர் “சோ “
  அவர்கள் மட்டும் அவ்வப்பொழுது கூறிவந்திருக்கிறார்.இன்றைய அளவிலும் கூட தமிழக இந்துக்களில் பெரும்பான்மையர்கள் ராமரை
  பிராமணனாகத்தான் அறிந்து வைத்துள்ளனர்.ராவணனை பிராம்மணன்
  அல்ல சூத்திரன் என்று நம்பவைக்கப்பட்டுள்ளார்.இந்துக்களின் புராண
  இதிகாசங்கள் சாதிய கொள்கைக்கு உட்பட்டதல்ல.என்பதை இன்னும்
  பலமாக எடுத்துரைக்க வேண்டும்.இந்து மத சாதிய உயர்வு தாழ்வு
  எண்ணத்தை வருங்காலங்களில் வலிமையான பிரசாரத்தின் மூலம் தெளிவு படுத்தவேண்டும்.இந்த கட்டுரை சாதி பற்றி அவ்வளவு அழுத்தம்
  கொடுக்கவில்லை.

 6. BSV on September 10, 2017 at 11:41 pm

  //மேற்கூறிய கணக்கில் ராக்ஷஸன் ராவணன் கண்டிக்கப் பெறுகின்றான்.//

  நன்றிகள் பல.

  இனியாவது கட்டுரையாசிரியர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தெரிந்ததாகப் பேசவேண்டாம்.

  அனைத்து ஆழ்வார்கள் பாசுரங்களிலிருந்து வடித்தெடுத்து இராமாயணக்கதையைக் கோர்வையாகச் சொல்லலாம். அப்படி எழுதியிருக்கிறார் ஒரு வியாக்யாண சகரவர்த்தி. சில நாலாயிரத் திவ்யபிரபந்த நூல்களில் பிற்சேர்க்கையாக அது போடப்பட்டிருக்கும். அதைப் படித்துவிட்டால், இங்கு காட்டப்பட்டிருக்கும் பாசுரஙகள் அதற்கு மேலும் இராமயாணம் பற்றிப் பேசுகிறது என அறிய முடியும். பல ஆழ்வார்கள் இராவணனைப் பற்றி உரக்க எழுதியிருக்கிறார்கள். பொழிப்புரைத் தேவையேயில்லை. நேரடியாக வாசித்தறியலாம்.

 7. க்ருஷ்ணகுமார் on September 11, 2017 at 10:36 am

  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என போகிற போக்கில் தோன்றிய குற்றச்சாட்டுக்களையெல்லாம் ராமாயணத்தின் மீது வைப்பது தமிழக இடதுசாரி அறிவுஜீவியர் வழமை. அதைத் துலக்குவதில் இந்த வ்யாசத்தின் பணி போற்றுதற்குரியது.

 8. க்ருஷ்ணகுமார் on September 11, 2017 at 7:10 pm

  அன்பர் பீ எசு

  \\ இனியாவது கட்டுரையாசிரியர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தெரிந்ததாகப் பேசவேண்டாம். \\

  தேவ் ஐயா அவர்கள் தான் சரி என்று தெரிந்த / எண்ணிய ஒரு விஷயத்தையே தமது வ்யாசத்தில் பகிர்ந்திருக்கிறார். அப்படி அவர் சரி என்று தெரிந்த விஷயம் வாஸ்தவத்தில் தவறாகவும் கூட இருக்கலாம். அது துலக்கப்பட்டால் அவரும் தன்னுடைய புரிதலை சரி செய்து கொள்ளுவார். வ்யாசத்தை வாசிக்கும் ஏனைய வாசகர்களும் தம்முடைய புரிதலை மேம்படுத்திக்கொள்ளுவர். அவ்வளவு தான்.

  வ்யாசகர்த்தா என்ன? கருத்துப்பகிரும் வாசகர்களும் நான் நீங்கள் உட்பட…… ஒரு விஷயம் உங்களுக்கு / நமக்கு சரி என்று தோன்றுவதால் தானே கருத்துப்பகிர்கிறீர்கள் / றோம். கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது அருணகிரிநாதர் என்று தேவரீர் அருள்வாக்கு அளித்தீர்கள். தப்பு தானே ஸ்வாமின். பின்னார் அது சரி செய்யப்பட்டது. அப்படியான தப்பு ஒரு வ்யாசத்திலும் கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது ஸ்வாமின். cheers 🙂

 9. BSV on September 14, 2017 at 6:15 pm

  கிருட்டிண குமார்

  மாணவன் பிழை போட்டு எழுதலாம். ஆசிரியரே போடலாமா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*