தேவிக்குகந்த நவராத்திரி – 3

மீனாட்சி பாலகணேஷ்

5.  தேவி பரமேஸ்வரனை வரவேற்கும் வைபவம்.

            பார்வதி தனது சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள்.  தேவாதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், நாரதர் முதலான முனிபுங்கவர்கள் அனைவரும் வந்து பணிந்து அவள் அருளைவேண்டிநிற்கின்றனர்.  அனைவருமே சாஷ்டாங்கமாக நமஸ்காரம்செய்து அவளது திருவடிகளைச் சேவித்திருக்கின்றனர்.  அவ்வமயம் பரமசிவன் முன்னறிவிப்பின்றி, பார்வதியின் இருப்பிடத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.

தன் அவையில் அவர் நுழைவதனைக் கண்டுவிட்ட பார்வதி, தானே அவரை வரவேற்கவேண்டும் எனும் ஆவலினால் பரபரப்புடன் எழுந்துசெல்ல முயற்சிக்கிறாள்.  தான் எல்லா உலகங்களுக்கும் அரசியாய் (ராஜராஜேஸ்வரியாக) இருப்பினும், தனது அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர்  வரும்போது தானேவரவேற்கவேண்டும் என்ற உயர்பண்பு இச்செய்கையில் பிரதிபலிக்கின்றது என்கிறார் சௌந்தர்யலஹரியை இயற்றிய ஆதிசங்கர பகவத்பாதர்.

விரையும் அவளை நோக்கிச் சேடியர் கூறுகின்றனர்:  “தேவி! எதிரில் உள்ள பிரம்மாவினுடைய (வைரிஞ்சம்) கிரீடத்தைவிட்டு நகர்ந்து வாருங்கள்; கைடபாசுரனைக் கொன்ற மகாவிஷ்ணுவின் கடினமான கிரீடத்தில் (கடோரே கோடீரே ஸ்கலஸி) இடறிக் கொள்ளப் போகிறீர்கள்;  இந்திரனுடைய கிரீடத்தைவிட்டு விலகி வாருங்கள்! ” என்றெல்லாம் கூறி பார்வதி தேவியை ஜாக்கிரதையாகச் செல்லுமாறு வேண்டிக் கொள்கின்றனராம்.

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:

          கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம் l

          ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவனம்

          பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்- விஜயதே ll

                                                — (சௌந்தர்யலஹரி-29)

            இந்த அழகிய காட்சியைத்தான் நாம் இங்கு நவராத்திரிக் காட்சியாகக் காண்கிறோம்.

           6.  பார்வதி பரிணயம்

            தனது காவியமான குமாரசம்பவத்தில் காளிதாசன் பினவருமாறு வர்ணிக்கிறான்:

‘சிவபெருமான் இமயமலையில் கடும் தவத்திலாழ்ந்திருக்கிறார்.  அப்போது ஹிமவானின் அருமை மகள் தனது தோழியருடன் அவருக்குப் பணிவிடைசெய்ய வழக்கம்போல அங்கு வருகிறாள்.  அவள் வசந்தகால மலர்களை ஆபரணங்களாகப் பூண்டுள்ளாள்.  மாணிக்கங்கள் போன்ற அசோகமலர்கள், பொன்னைப் போன்ற கர்ணீகர மலர்கள்;, சிந்தூவர மலர்கள் ஆகியவை முத்தாரம்போலப் பொலிந்தன.

  ‘ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள்.  கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள்.  ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான்.

   ‘உமா சிவனாரின் குடிலின் வாயிலை அடைந்ததும் அவரும் தனது ஆழ்ந்த மோனநிலையிலிருந்து சிறிது விடுபடவும் சரியாக அமைந்தது.  ஈசன் வீராசனத்தைத் தளர்த்தினார்.  தலையை அசைத்து உமாவின் பணிவிடைகளுக்கு அனுமதி அளித்தார். தோழியர் இருவரும் மலர்களை இறைவனடியில் தூவினர்.  உமாவும் அவரைப் பணிந்து நமஸ்கரித்தாள்; அப்போது அவள் கூந்தலிலிருந்து சில இலைகள் உதிர்ந்தன;  ஒரு பொன்னிற கர்ணீகரமலரும் நழுவியது.

‘சிவனார் அவளை நோக்கி, “உன்னைத் தவிர வேறு ஒருவரையும் எண்ணாத கணவனை அடைவாயாக,” என ஆசிர்வதித்தார்.  பெரியோரின் ஆசிகள் என்றுமே பொய்யாதவை அன்றோ?  மன்மதன் தனது வில்லின் நாணைத் தடவியவண்ணம் சரியான பொழுதினை நோக்கி ஆவலாகக் காத்திருந்தான்.

‘உமா தவசீலர்கள் அணிவதற்கே உரித்தானதும், மந்தாகினி நதியில் விளைந்து சூரியனின் கதிர்களால் உலர்த்தப்பட்டதுமாகிய தூய தாமரை மணிகளால் (விதைகள்) கோர்க்கப்பட்ட ஒரு மாலையை அவருக்குக் காணிக்கையாக அளிக்க முற்பட்டாள்.  அடியார்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்யும் அண்ணலும் தன் தலையைச் சிறிது தாழ்த்தி, அந்த மாலையை ஏற்றுக் கொள்ளலானார்.  அந்த மிகச் சரியான சமயத்தில் மன்மதனும் சம்மோஹனம் எனப்படும் என்றுமே பிழையாத தனது மலரம்பினை எய்தான்.

‘நிலாவின் உதயத்தால் சலனமுறும் கடல்போல, தனது உறுதியில் சிறிது தளர்ந்த சிவபிரான், பிம்பா பழம் போன்ற சிவந்த அதரங்களையுடைய உமாவின் அழகிய முகத்தைக் கண்ணுற்றார்.  மலையரசன் மகளும் மனக்கிளர்ச்சியினால் உண்டான மயிர்க்கூச்சத்தினால், மலரும் கதம்ப மலர்களைப்போல் காணப்பட்டு, முகத்தையும் நாணத்தினால் சிறிது திருப்பியவண்ணம், ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தபடி, அழகுற நின்றாள்.” என்கிறான்.

சிவபிரானும் உமையான பார்வதியும் காதல் வயப்படும் தருணமே இங்கு நவராத்திரிக்கான காட்சியின் கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.

*************************

இது தொடர்பான சில நினைவலைகள்:

  1. இந்த வருடம் பொம்மைகள் வாங்கக் கிடைக்கவில்லை. அதனால் Plaster of Paris-ல் செய்யப்பட்டுக் கிடைக்கும் ஆண்-பெண் முகங்களை வாங்கி அவற்றிற்கு முடியலங்காரங்களும், கொண்டைகளும், சிவனாருக்கு ஜடாமுடியும், ஆடை அணிமணிகளும் செய்தேன். தோல் நிற வண்ணத்திலான துணியால் கைகால்களைச் செய்து பஞ்சினைத் திணித்து, தேவைப்பட்ட (உட்கார்ந்த, நிற்கும்) நிலைகளில் மிகுந்த சிரமப்பட்டு பொருத்தினேன்.
  2. மிகவும் சிலிர்க்க வைத்த ஒரு அனுபவம்– தாமரை விதைகளாலான மாலை – எங்கு போய்த் தேடுவது? உண்மையாகவே கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்குமல்லவா? பூஜை சாமான்கள் விற்கும் ஒரு கடையில் கேட்ட போது நீளமான பெரிய ஒரு தாமரை விதை (108 மணி)மாலையைக் கொடுத்தார்.  மெய்சிலிர்க்க அதை வாங்கி வந்தேன்.  எனக்குத் தேவையான நீளத்திற்கு 21 மணிகள் நீளத்திற்கு அமைத்துக் கொண்டேன்.  அதைத்தான் பார்வதியின் கையில் காணலாம்.
  3. பார்வதிப் பதுமை நவராத்திரியின் 10 தினங்களும் அந்த மண்டியிட்ட நிலையிலிருந்து இம்மியும் அசையவே இல்லை! நாள்தோறும் சிவபிரானுக்கான அவளுடைய பூஜைக்கு, மண்குடத்தில் புதுநீரும், பொற்கூடையில் புதுமலர்களும் பறித்து வைத்து மகிழ்ந்தேன்.

மன்மதபாணத்தினால் தாக்குண்ட ஐயனும் அம்மையும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் தருணம் அற்புதமாக அமைந்தது என நண்பர்கள் கூறி ரசித்தபோது மிக மிகச் சிலிர்ப்பாக இருந்தது.

  1. செடி கொடிகளிடையே மறைந்து நிற்கும் ரதி- மன்மதனைக் காணலாம். மரங்களுக்கும், செடிகொடிகளுக்கும் எனது போன்ஸாய் மரங்களும் மற்ற செடிகளும் உதவின. கண்டு களியுங்கள்.

(நவராத்திரி தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *