ஸீதையின் மஹாசரித்ரமும்  அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5

 

கட்டுரையின் மங்கல வாழ்த்து

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட்டம்மானே

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழும்குழவி அதுவே போன்றிருந்தேனே-

பெருமாள் திருமொழி-5-1

பொருள்: மணம்மிகுந்த, மலர்கள்நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவித்துவக்கோடு என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! பெற்ற தாயானவள் மிகுந்த கோபம்கொண்டு குழந்தையைத் தள்ளி, வெறுத்து ஒதுக்கினாலும், மறுபடியும் அவளுடைய அன்பையே எண்ணி அழுகின்ற சிறுகுழந்தையைப்போன்று, நீ எனக்குத் தருகின்ற மிகுதியான துன்பங்களை நீயே தடுக்காவிட்டாலும் உன் திருவடிகளையன்றி, எனக்கு வேறு ஒரு புகலிடம் இல்லை.

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல்

மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா என்

சித்தமிக அன்பாலே வைப்பன் அடியேனே

-பெருமாள் திருமொழி-5-7

பொருள்: வித்துவக்கோடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! மேகங்கL எவ்வளவு காலம்தான் மழை பெய்யாதிருந்தாலும், பசிய பயிர்களானவை, கருநிறத்துடன் எழும் பெரியமேகங்களையே எதிநோக்கிக்  காத்திருக்கும். அதுபோல என்னை வருத்தும் துன்பங்களை நீ தீர்க்காவிட்டாலும் உனக்கு அடியவனாக, நான் என்மனத்தை உன்மீதே செலுத்திய வண்ணம் இருக்கின்றேன் என்னும் பாசுர வரிகள் நிபந்தனையற்ற-பக்தி அல்லது பாரதந்தர்யத்தினை விளக்கவல்லனவாம்.

இக்கட்டுரையில் திருக்குறட்பாவில் ஶ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள், திருக்குறட்பாவில் பத்து உபநிஷதங்கள், திருக்குறட்பாவில் 545 ப்ரம்மசூத்திரங்கள் என்று திருக்குறளின் பரப்பைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமாம். அம்முயற்சிக்கு உதவும் தர்க்கசாஸ்திரத்தின் இன்றியமையாமைபற்றியும் கூறப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள் ஏதோ பௌத்த (அ) சமண நூல் என்றனர், சில பகுத்தறிவுவாதிகள். அதற்கும் மறுப்பு கூறுவது இக்கட்டுரையாம். முடிவில் பிரணவத்தின் “உகாரம்” பற்றி விளக்கிய பின்பு, பாரதந்த்ரயம் என்னும் பிராட்டியின் இரண்டாம் குணவர்ணனை தலைக்கட்டப்படுகின்றது.

தர்க்கமும் குறட்பாவும்:

  • குறட்பாவில் தர்க்க வகுப்பு (அ) ஜாதி என்னும் சாமான்ய குணம்

முதல் குறட்பாவின் வேறுசில விளக்கங்களைப் பார்ப்போம். அக்குறட்பாவில் பயின்று வந்த “எழுத்து”, ”ஆதிபகவன்”, “உலகு” என்னும் பதங்களை ஜாதி (அ) வகுப்பு வாசகங்கள் என்பர் தார்க்கிகர்கள். ஜாதி என்றால் ஒரு குறிப்பிட்ட பண்பு(ABSTRACT) (அ) அருவம் (அ) நுண் உருவம் (அ) பொதுவான தன்மையாகும். எடுத்துக்காட்டாக   ஒரு பூவில் அதன் நிறம், மணம், உருவம், மென்மை, கவர்ச்சி, வடிவம் போன்றன ஜாதிகள். OBJECT ORIENTED PROGRAMMING ல் CLASS = ஜாதி என்று பொருத்தினால் அதன் INSTANCE (சான்று) என்பது OBJECT = இலக்கு /வ்யக்தி ஆகும். பூத்தன்மை  -> ரோஜாத்தன்மை -> சிகப்புரோஜாத்தன்மை -> பட்டன்ரோஜாத்தன்மை  -> பட்டன்ரோஜாமொட்டுத்தன்மை   என்று ஜாதிக்கு படிநிலை(HIERARCHY) உண்டு.  அவற்றின் மரபுப்பண்புகளுக்கும்(PROPERTY) படிநிலையுண்டு (INHERITANCE ). முற்பட்ட வகுப்பு  பரா வகுப்பு எனப்படும். பிற்பட்ட வகுப்பு அபரா வகுப்பு எனப்படும்.

பூத்தன்மை என்னும் வகுப்பு பரா ஆகும். ரோஜாத்தன்மை என்னும் வகுப்பு அபரா ஆகும். பூத்தன்மை என்னும் வகுப்புக்கு  -> செண்பகம், மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி, ரோஜா என்பன [வ்யக்திகள்] இலக்கு ஆவன.

ரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> சிகப்புரோஜா, மஞ்சள்ரோஜா, வெள்ளைரோஜா, கருப்புரோஜா    என்பன இலக்கு ஆவன.

சிகப்புரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> பட்டன்ரோஜா(சிறியது), (சாதாரண) பெரியரோஜா என்பன இலக்கு  ஆவன.

பட்டன்ரோஜாத்தன்மை என்னும் வகுப்புக்கு -> பட்டன்ரோஜாமொட்டு, (மலர்ந்த) பட்டன்ரோஜா மலர்  என்பன இலக்கு  ஆவன.

இங்கே வள்ளுவர் சொன்ன அகார வகுப்பிற்கு  அதனை உச்சரிக்கும்  ஆண் குரல், பெண் குரல் மற்றும்  குழவியரது குரலை மறைபொருளாகக் கொண்டு வேறுபாடு காணலாம். இவையெல்லாம் அகாரத்தின் வெவ்வேறு  பிற்பட்ட வகுப்புக்களாம். வடமொழியில் குறிலான அகாரத்திற்கு  உதாத்தம், அநுதாத்தம், ப்லுதம், ரங்கப்லுதம் என்று சீக்ஷா உச்சரிப்பினால் வேறுபாடு காணலாம். இதேபோன்று நெடிலுக்குமுண்டு. அவ்வாறே  “உலகு” என்னும் வகுப்பில் எண்ணிலடங்காத வகுப்புக்கள் கூடும். என்றாலும் அகார ஜாதிக்கு கொப்பூழுக்கு கீழே, மூலாதாரத்தில், அதன் முற்பட்ட நிலையில்,  ஒரேயொரு இலக்குதான். அவ்வாறே ஆதிபகவன்  என்பதும் ஒரு வகுப்பு. அதற்கும் ஒரேயொரு இலக்குதான். அவனே ஸ்ரீமந்நாராயணன் ஆவான். அவனை “ஒத்தார், மிக்காரை இலையாய மாமாயா” -என்கிறார் நம்மாழ்வார்.

நியாய கலையின்/மதத்தின் நிறுவனரான  கௌதம மஹரிஷி சொன்ன [த்ரவ்யம்]தாமஸ மிகுதி, குணம்(சாத்விக மிகுதி), கர்மம்/செயல்(ராஜஸ மிகுதி) என்பன குறட்பாவிலுள்ள “உலகு” என்னும் பதத்தால்  சுட்டப்படுவன. அவற்றின் சாமான்ய தர்மமாக/பண்பாக   த்ரவ்யத்வம், குணத்வம், கர்மத்வம் என்று கொண்டால் அவை ஜாதிகள். இவையனைத்தும் காலதத்துவத்தில் கூடினால் மட்டுமே செயல்பாட்டிற்கு வரும்/பாவத்தன்மை(BHAVAM) பெரும். இல்லையெனில் அவை அபாவங்கள் எனப்படும். அபாவத்திற்கு தொடர்புள்ளவன் பரமனாவான். இந்த அபாவமும் பெளத்தர்கள் சொல்லும் சூன்யமும் வேறு வேறானவை. சூன்யம் என்பது அத்யந்தாபாவம் ஆகும். அப்படி ஒரு தத்துவமே கிடையாது.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள்

உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்

உளன் என இலன் என இவைகுண முடைமையில்

உளன் இரு தகைமையொடு  ஒழிவிலன் பரந்தே.

https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3490

என்கிறார் நம்மாழ்வார்.

  1. குறட்பாவில் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமங்கள்:

ஒரு தத்துவம்  காலத்தோடு  கூடினால்  அதனை [சத்]இருப்பு என்பர். சத் என்பதன் ஜாதி (அ) பாவம்(BHAVAM) [சத்வம்] இருக்கும்தன்மை ஆகும். இந்த சத்வத்திற்கு ஆதாரமே பரமாத்மா ஆவான்.

இதை யஜுர்வேதத்தில் நாராயண ஸூக்தத்தில், “ஸ ப்ரம்மா, ஸ சிவ, ஸ இந்திர, ஸ அக்ஷர, பரம ஸ்வராட்” (அவனே நான்முகன், அவனே சிவன், அவனே  இந்திரன், அவனே அந்தர்யாமி ஆகிய சர்வேஸ்வரன்) என்றும், “அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:” (உள்ளும், புறமும் என்று அனைத்தையும் வியாபித்த நாராயணன்), “ருதம் ஸத்யம் பரப்பிரம்ம புருஷம் க்ருஷ்ண பிங்கலம்” என்றும் விளக்குகின்றது.

இப்படி அனைத்துலகும் ஆகியும்-ஆக்கியும் காக்கும் அவனை  “விஶ்வம்” என்ற திருநாமம் சுட்டும். அனைத்து உலகையும் வ்யாபித்த அவனை “விஷ்ணு” என்ற திருநாமம் சுட்டும். அனைத்து உலகையும் தன் கட்டுக்குள் வைத்து நியமிக்கும் அவனை “வஷட்கார:” என்ற திருநாமம் சுட்டும். இப்படியே தர்க்கம் கொண்டு, “விஸ்வம் விஷ்ணுர் வஷட்கார:” என்று    இவற்றையொழிந்த ஶ்ரீவிஷ்ணுவின் மீதி 997 திருநாமங்களையும், ஒரு குறட்பாவினை வைத்தே,  விவரித்து விடலாம்.

  1. குறட்பாவில் காலம் என்னும் தத்துவம்:

இதற்கு முன் தோன்றிய இறந்தகாலத்தில் உச்சரித்த  சப்தங்களுக்கும், நிகழ் காலத்தில் உச்சரிக்கும்  சப்தங்களுக்கும், எதிர்காலத்தில் உச்சரிக்கப்போகும்  சப்தங்களுக்கும் அகாரம்தான் முதலாகும். எனவே அகாரமானது காலத்தால் அளவுபடுத்த முடியாதது. அதேபோல பகவானும் –“பூத பவ்ய பவத் ப்ரபு” (முக்காலத்திற்கும் ஈஸ்வரன்)  என்று கொள்கின்றோம். இதனை “எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் (முக்காலத்திலும் தன்னை ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன் )” என்கிறது திருவாய்மொழி-1-1-2.

4  .குறட்பாவில் தேசம் என்னும் தத்துவம்:

அரேபிய, ஜப்பானிய, டச்சு மொழிகளானாலும் அந்தந்த சப்தங்களுக்கும் அகாரம்தான் வ்யாப்தி (அ ) காரணமாகும்.  எனவே அகாரமானது தேசத்தால் அளவுபடுத்த முடியாதது. அதேபோல பகவானும் தேசத்தால் பரிச்சேதிக்க முடியாதவன். “எங்குமுளன் கண்ணன்” என்கிறது திருவாய்மொழி-2-8-9. தர்க்கசாஸ்திரத்தில் பயின்றுவரும்  ஜாதியில்/வகுப்பில் பரா, அபரா என்று இரண்டு வகையுண்டு என்று முன்பே பார்த்தோம். காலத்தாலும், தேசத்தாலும் அதிகமான இருப்புள்ள வகுப்பு பரவகுப்பாகும். குறைவான  இருப்புள்ள ஜாதி அபரஜாதியாகும்.

  1. குறட்பாவில் அவைதிக மதக் கண்டனங்கள்:

இந்த ஜாதியையும், காலத்தையும், தேசத்தையும் பவுத்தர்கள் ஏற்பதில்லை. எனவே இக்குறட்பாவில் பவுத்தமத கண்டனம் உளது.  இக்குறட்பாவில் சப்தபோதம், அனுமானம் என்னும் பிரமாணங்கள்(அறியும் கருவிகள்) எடுத்தாளப்பட்டுள்ளன . நாஸ்திகர்கள் பிரத்யக்ஷப் பிரமாணத்தை மட்டுமே ஏற்பர். ஆகவே இக்குறட்பாவில் நாஸ்திகமத கண்டனம் உளது. சமணர்கள் சப்தபோதத்தை ஒப்பமாட்டார்கள் . ஆகவே இக்குறட்பாவில் சமண மதகண்டனமும் உளது.

  1. குறட்பாவில் ஆத்ம தத்துவ போதம்:

குறட்பாக்களை  எழுதியவர் திருவள்ளுவர். நம் அறியாமையினைப் போக்கும் ஒரு நூலாகும் அது. அதனை அறிவிக்கும்  குறட்பா என்னும் கருவிதான் பிரமாணம் (ப்ரமா+ல்யுட் = பிரமாணம்). இதை அறியும் நாம் ப்ரமாதா (ப்ரமா+த்ருச் = ப்ரமாதா) ஆவோம். இப்படி நாம் பேச உபயோகிக்கும் சொற்களுக்கும் அதன் பொருள்களுக்கும் ஆஸ்ரயமானது புத்தி (அ) அறிவு (அ ) சைதன்யம்  ஆகும். இந்த அறிவின் ஆதாரம் ஆத்மா (அ ) சேதனன் ஆவான்.  இந்த அறிவுள்ள மற்றும் அறிவற்ற பிரபஞ்சத்தையே தனது பிரகாரங்களாக /விஶிஷ்டங்களாக  கொண்டவன் பரமாத்மா ஆவான். இவை முழுதும் அறியப்படும் பொருட்கள் (அ ) ப்ரமேயங்கள் ஆவனவாம்.

  1. குறட்பாவில் தஶ உபநிஷதங்கள்:

“சத்யம்  ஞானம் அனந்தம் ப்ரம்ம” என்கிறது தைத்திரிய உபநிஷத்.

ஸத்யம் (உண்மை ) மாறாத்தன்மை கொண்டவன் = பரமன்.

ஸ்வரூபத்தால் மாறுவது ஜடப் ப்ரக்ருதி மற்றும் அதன் கார்யங்கள்.

ஸ்வபாவமான ஞானத்தில்   மாறுபடுவது அஜடமான ஜீவர்கள்.

அவ்வாறன்றி ஸ்வரூபத்தாலும், ஸ்வபாவத்தாலும் மாறாத்தன்மை கொண்டவன்  பரமன் ஆவான்.

ஞானம் என்னும் புத்திக்கு ஆதாரம்  = பரமன்.

தேச, கால, வஸ்து(பொருள்) இவைகளுள் அடங்கியவர்கள் ப்ரக்ருதியும், ஜீவர்களும்.

தேச, கால, வஸ்து(பொருள்) இவைகளால்  அளவிட முடியாதவன்/அடங்காதவன்    பரமன் ஆவான்.

இது தைத்திரிய உபநிஷத் கூறும் விளக்கமாகும். முதல் குறட்பாவில், இறைவன் உண்மைத்தத்துவம் என்றும், இறைவன் ஞானவடிவினன் என்றும், கடவுள்  கால,தேச,வஸ்து பரிச்சேதமற்றவன் என்றும் வந்து, இவ்வுபநிஷதக் கருத்துடன் தெளிவாகப் பொருந்துகின்றது.

இவ்வாறு  மீதமுள்ள ஈச, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐதரேய, சாந்தோக்ய, ப்ரஹதாரண்யக  ஆகிய  முக்கிய  உபநிஷத்  வாக்கியங்களுக்கு ஒரு குறட்பாவை வைத்தே விளக்கமளிக்கலாம். இக்குறட்பாவில் விஶிஷ்ட அத்வைத வாதம் உளது.

8.குறட்பாவில் ப்ரம்ம சூத்ரங்கள்:

மேலும் ப்ரம்ம சூத்ரம் மற்றும் இக்குறட்பாவின் சம்பந்தம் பற்றி சில விவரங்களைக் காண்போம். இக்குறட்பாவில் ….

  • முதல் குறட்பாவானது “ஆதிபகவன் முதற்றே உலகு” -என்பது உலகை படைத்து, காத்து, அழிப்பவன் இறைவன் என்று பொருள் தருகிறது. இதனை “ஜந்மாதி அஸ்ய யத:” என்னும் 1 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.  இதைத்தான் கம்பநாடரும் தனது நூலில் “உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும்”

என்று முதல் பாடலாக வைத்தார்.

  • வள்ளுவர் “எழுத்தெல்லாம் அகர முதல” என்று சப்தத்தை உபமானமாகக் கொண்டு இறைவனை அறிவிக்கின்றார். இது – சாஸ்திரம் கொண்டுதான் இறைவனை அறியமுடியும் = “ஶாஸ்த்ர​ யோநித்வாத்” என்கிற 2 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.
  • பூர்வ மீமாம்சை சாஸ்திரம் என்பது, நம்மை “இதைச் செய்” (விதி), “இதைச்  செய்யாதே” (நிஷேதம்)  என்று (கர்மங்க்களாகவே) வினைமுற்றாகவே செல்வதாகும்.

வள்ளுவரும் தமது குறட்பாக்களில் இன்னின்ன  செய் என விதித்தும் [தோன்றிற் புகழொடு தோன்றுக], இன்னின்ன செய்யாதே [அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று] என்று  நிஷேதித்தும் எழுதியுள்ளார்.

அவ்வாக்கியங்களை சாதன வாக்கியங்கள்(கர்ம வடிவம்) என்பர். அதன் படி தான, தர்ம, யாக கர்மங்களால் புண்ணியமும், அதர்மத்தினால் பாவமும் சேர்க்கின்றான்.

சுவர்க்கம், நரகம் என பற்பல ஜென்மங்களில் அவஸ்தைப்பட்டு, பல  வர்ணங்களில் பிறந்து, ”புநரபி ஜனனம் புநரபி மரணம்” என்று  விஷய  வைராக்கியம் அடைகின்றான். அதன் பிறகே கர்மத்தளையிலிருந்து விடுதலை அடைய ஞான, பக்திகளால்  சாத்யமான இறைவனை அறிந்து, அவனையே  அடைகின்றான். இதனை நமக்கு உபதேசிப்பது  உத்தர மீமாம்சை (அ ) வேதாந்தம் ஆகும். அதாவது இதன் கருத்தாவது “கர்மத்தால் அனுபவப்பட்டு, கனிந்தவர்க்கு மட்டுமே ஞானம் பிறக்கும்” என்பதாகும். நாம் நமது கண்களில்  சிறிது விளக்கெண்ணெய் விட்டு பார்த்தால், இம்முதல் குறட்பாவில்  எந்த ஒரு வினைமுற்றும் காணமுடியாது. எனவே இதுவும் ஒரு சித்த வாக்கியம் (ஞான வடிவம்) தான். இதனை “அதாதோ ப்ரம்ம ஜிக்ஞாஸா” என்கிற 1 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.

9.  குறட்பாவில் ப்ரணவத்தினுடைய உகாரம் பற்றிய தத்துவம்:

  • மேலும் “முதற்றே” என்னும் பதத்தில் காணப்படும் தேற்றேகாரம் நிச்சய பாவத்தை(BHAVANA) சொல்லவந்தது. இது ப்ரணவத்தில் உகாரத்தை சுட்டும். அகாரம் அடைய வேண்டிய இலக்கான, சாத்தியமான பரமனை சுட்டும். அவனை அடைய இச்சிக்கும் ஜீவனை மகாரம் சுட்டும். ஆகவே உகாரம் அடையும் வழி /அயனம்/கதி/கருவியை சுட்டும். நம்மை படைத்து,காத்து, அழிக்கும் அவனே வழியாவான். இதற்கு பிரதியுபகாரமாக அவனுக்கு, நம்மால் எதுவும் தர இயலாது. நான் என்கிற ஆத்மாவும் அவனுடையதே. “நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேன்” என்றும் “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர் கைம்மாறு   நானொன்றிலேன்.   எனதாவியும்  உனதே” என்றும் (சரணாகதி அங்கம்#1) ஆகிஞ்சன்யம் சொல்கின்றது திருவாய்மொழி -5-7-10 ஆம் பாடல்.

வேறு யாரிடமும் புகலாக செல்ல மாட்டேன் என்ற (சரணாகதி அங்கம்#2) அனன்ய கதியினை “புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்கிறார் ஆழ்வார் தமது திருவாய்மொழி-6-6-10 ஆம் பாட்டில்.

அவன் நம்மைக் கைகொடுத்துக் காப்பான் என்று (சரணாகதி அங்கம்#3) மஹாவிச்வாஸம்  “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” –திருவாய்மொழி -10-9-9 என்றும் “அலர்மேல் மங்கை உறைமார்பா, என்னை யாள்வானே ” என்றும் – தமது திருவாய்மொழி-6-6-10 ஆம் பாட்டில் பாடுகின்றார்.

பரமன் சொன்னதை மட்டுமே செய்வது (சரணாகதி அங்கம்#4) அனுகூல சங்கல்பம். அவன் சொல்லாததை செய்யாது ஒழிவது/விடுவது (சரணாகதி அங்கம்#5) பிரதிகூல வர்ஜனம் என்பர். “இந்த ஐந்தினை அங்கங்களாக/ உறுப்புக்களாக கொண்டு பரமனை அடைவிக்கும் வழிதான் ஶரணாகதி” என்று இந்த வ்யாப்தி ஞானம் (சாஹசர்ய நியமம், ஏகாந்திக நியமம்)  சொல்லும். இதுவே உகாரத்தின் விளக்கம். இப்படி அவனை உபாஸித்தலுக்கு பலனாக, ஐச்வர்யம் (இல்லம், மனைவி, மக்கள், தோட்டம், பசுக்கள், சேனை ) என்னும் இச்சுவையும்,   இந்திரலோகமாளும் அச்சுவையும் வேண்டாது அவனையும், அவனுடைய தொண்டினையும் பலனாக வேண்டுவது உத்தம நிலை (பிரதம பர்வ  நிஷ்டை -முதல் படி-இதற்கு உதாரணம் => லக்ஷ்மணன் மற்றும் பரதன் ).

அவனைவிட அவனடியார்களையும், அவ்வடியார்களுக்கு தான் செய்யும் தொண்டினை    பலனாக வேண்டுவது -உத்தமதர நிலை (மத்திம பர்வ  நிஷ்டை -நடு நிலை –உதாரணம் => சத்ருக்னன் ஸ்ரீராமனை விட்டு பரதனுக்கு தொண்டு புரிந்தது).

தனக்கு இவ்வாறெல்லாம் கற்பித்த ஆசார்யனை, அவருக்கு நாம் செய்யும் தொண்டினை    பலனாக வேண்டுவது -உத்தமதம நிலை (சரம பர்வ நிஷ்டை -இறுதி நிலை –உதாரணம் => சீதை ஸ்ரீராமனை பிரிந்து, தனக்கு ஆசார்யராக ஆன வால்மீகி பகவானுக்கு தொண்டு புரிந்தது).

இதனை   “தத் து சமன்வயாத்”  என்று 4 ஆம் ப்ரம்ம சூத்ரத்தில் பொருத்தலாம்.

இவ்வாறே சுருக்கமாக ப்ரம்ம சூத்ரத்தின் மொத்த 545 சூத்திரங்களையும் விளக்க முடியும். இதனால் திருவள்ளுவர் ஒரு வைதீகர் / வேதாந்தி /உத்தர மீமாம்ஸாகாரர் /விஶிஷ்ட​ அத்வைதி /ஸ்ரீவைணவர்  என்று  முடிக்கின்றேன்.

நியாய () தர்க்க சாஸ்திரம் ஆசார்யர்களுக்கு பயன்பட்ட விதம்:

தர்க்கம் கொண்டு தான் உதயணாச்சார்யரும், குமாரில பட்டரும் பவுத்த மதத்தினை இந்நாட்டை விட்டே துரத்தினர். (வேதத்தை பௌத்தரும், ஜைனரும் ஒப்ப மாட்டர்கள். ஆகவே மீமாம்சை அறிவை அவர்களிடம் காட்ட இயலாது. எனவே நமது ஸநாதன தர்மத்தினை காக்க, அவர்கள் ஒப்பும் தர்க்கத்தினாலே தான், அவர்களை வெல்ல முடியும்.)

Image result for குமாரில பட்டர்தர்க்கம் கொண்டு யாமுனாச்சார்யரும், கத்தியின்றி, ரத்தமின்றி, ஆக்கியாழ்வானை வாதத்தில் வென்று,  சோழனின் பாதி ராஜ்ஜியத்தை வென்று ஆளவந்தாரானார். தர்க்கம் கொண்டுதான் ஆதிசங்கரரும் தன் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் முன்னுரையில் ஆத்மாவின் இருப்பை, பவுத்தர்களுக்கு நிரூபிக்கின்றார். தர்க்கம் கொண்டுதான் ஶ்ரீமத் ராமானுஜரும் தொண்டனூரில் 3000 ஜைனர்களை வாதில் வென்று, மன்னன் விட்டலதேவனை விஷ்ணுவர்த்தனன் என்று திருத்தி, ஒன்பது திருநாராயணத் திருக்கோவில்களையும் கட்ட வைத்தார். தர்க்கம் கொண்டே ஶ்ரீபராசர பட்டரும், மேல்கோட்டை வேதாந்தியான மாதவாசார்யரை திருத்தி நஞ்ஜீயராக்கி 100 முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்யவைத்தார், அதற்கு பதினாறாயிரப்படி வியாக்கியானமும் செய்ய வைத்தார்.

தர்க்கம் கொண்டு, ஒரு குறட்பாவை வைத்தே, ஸ்ரீவிஷ்ணுவின் 1000 நாமங்களுக்கு விளக்கமும், பத்து உபநிஷத் வாக்கியங்களுக்கு சமன்வயமும், பிரம்மசூத்திரங்களுக்கு பொருத்தமும் சொல்லலாம். சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் ஒரு அரசன் அறிந்திருக்க வேண்டிய கலைகளில் ஆந்வீக்ஷிகீ என்னும் நியாய சாஸ்த்திரம் மிகவும் தலையாயது என்கிறார்.

இவ்வாறு பாரதந்த்ர்யம் பற்றி விரிவாகப் பார்த்த நாம் மேற்கொண்டு, பிராட்டி இறுதியாகப் பிரிந்து அநன்யார்ஹத்வம் என்னும் குணத்தினை வெளிக்காட்டியமை பற்றி, மேல்வரும் கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.

பின்குறிப்பு:

அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அசம்பவம் என்னும் பிழையான வியாப்திகள்

அறிவு என்பது மா. ப்ர+மா = ப்ரமா (ஐயம், திரிபு இல்லாத தெளிந்த /லக்ஷணமுள்ள அறிவு). ப்ரமா என்பது சரியான வ்யாப்தி/லக்ஷணம். அப்ரமா என்பது தெளிவற்ற, பிழையான அறிவு/லக்ஷணம்/வ்யாப்தி. இது மூன்று வகைப்படும். I) அவ்யாப்தி– “பசு என்பது வெள்ளை நிறம் கொண்ட வீட்டுப்பிராணி” என்று  லக்ஷணம் சொன்னால் “பழுப்பு, கருப்பு, கலந்த நிறமுள்ள பசுக்களுமுண்டு”. அவற்றை பசு அல்ல என்று தள்ளியதாகும். இது தவறு. II) அதிவ்யாப்தி – “பசு என்பது தலையில் கொம்புள்ள   வீட்டுப்பிராணி” என்று  லக்ஷணம் சொன்னால்-“ஆடுகளையும்,

எருமைகளையும் பசு” என்று சொன்னதாகும். இதுவும் தவறு.  III) அசம்பவம்–“பசு என்பது காலில் ஒரு குளம்புள்ள      வீட்டுப்பிராணி” என்று  லக்ஷணம் சொன்னால் “குதிரைகளையும், கழுதைகளையும் பசு” என்று சொன்னதாகும். இதுவும் தவறு. ஏனெனில் பசுவுக்கு இருகுளம்புகளுண்டு. “பசு என்பது கழுத்தில் ஆடும் தசை  (சாஸ்னா)   உடைய வீட்டுப்பிராணி”   என்பதே சரியான லக்ஷணமாகும்.

 ***

 

 

2 Replies to “ஸீதையின் மஹாசரித்ரமும்  அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5”

  1. திரு.துளசிராம் ,

    ‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ – என்று புகழ்ந்தவர் இடைக்காடர்.
    இதுவரையில் இப்படியொரு விளக்கங்களை யாரும் தந்ததில்லை .

    மிக்க நன்றி ,
    தென்றல்

  2. நல்லதொரு ஆய்வு செய்துள்ளீர்கள்.அதிவ்யாப்தி, அவ்யாப்திக்கு மேலும் விளக்கம் வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *