சுப்பிரமணிய புஜங்கம்

Image result for கந்தசஷ்டி

திருச்செந்தூரில் கந்தசஷ்டி கொண்டாட்டம்

சுப்பிரமணியன் எனும் கந்தனின் பெருமைவாய்ந்த கந்தசஷ்டி விழாவை இவ்வாரம் கொண்டாடுகிறோம். அச்சமயம் அவன்மீது ஆதிசங்கரரால் இயற்றப்பெற்று, பின்பு இருபதாம் நூற்றாண்டில் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிப்புலமை வாய்ந்தவரான கோவை ‘கவியரசு’ நடேச கவுண்டர் எனும் பெரியாரால் அற்புதமாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் எனும் ஒரு சிறுநூலின் அழகையும் பெருமையையும் உணர்ந்து மகிழ்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கோவை கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களின் தந்தையாராவார். பிள்ளைத்தமிழ், கலம்பகம், மற்றும் பல அருமையான நூல்களை அன்னார் எழுதியுள்ளார். இவற்றைப் பற்றி, தமிழ்கூறும் நல்லுலகம் அதிகமாக அறிந்துகொள்ளாதது வருத்தத்திற்குரியதாகும். சிறிது நாட்களுக்கு முன்பு முனைவர் ஐயாவுடனான உரையாடலின் விளைவாக, அன்னாரின் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். கந்தசஷ்டியும் சேர்ந்துகொண்டதால் நல்ல சமயம் வாய்த்தது.

‘புஜங்கம்’ என்றால் தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு என்று பொருள்.  இச்சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ஒருவகைச் செய்யுள் அமைப்பைக் குறிக்கும். இந்த புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது. இவற்றின் இசைப்பதிவுகள் குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றன.

ஆதிசங்கர பகவத்பாதர் இதை எழுதியது தொடர்பான ஒரு நிகழ்வை முனைவர் ஐயா தமது நூலில் குறிப்பிடுகிறார்: ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக்கண்டு பொறாமைகொண்ட அபிநவகுப்தர் எனும் புலவர் மந்திர ஏவலால் பகவத்பாதர் காசநோயால் வருந்தும்படிச் செய்தாராம். சிவபிரான் ஓரிரவு சங்கரருடைய கனவில் தோன்றி ‘ஜயந்திபுரம்’ (திருச்செந்தூர்) எனும் திருத்தலத்தில் சூரபத்மனை வென்ற ‘ஜய இன்ப வடிவாக’ விளங்கும் எனது குமாரனாகிய செந்தில்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடியநோய் உன்னை அடியோடு விட்டகலும் எனக்கூறித் திருநீறு அளித்தருளினார்.ஆதிசங்கரரும் தனது யோகசக்தியால் மறுநாள் திருச்செந்தூரை அடைந்து அங்கு ஆதிசேடன் செந்தில்குமரனின் திருவடிகளில் வழிபடுதலைக் கண்டார். உடனே பாம்பு எனும் பொருளைத்தரும் ‘புஜங்கம்’ எனும் பெயரைக்கொண்ட புதுவகையான ஒரு செய்யுள் அமைப்பில் சமஸ்கிருதத்தில் முப்பத்துமூன்று கவிதைகள் கொண்ட ‘சுப்பிரமணிய புஜங்கத்தை’ப் படைத்தார். தமது நோயும் நீங்கப் பெற்றார்.

கவியரசு அவர்கள் செய்துள்ள தமிழாக்கம் மூலநூல் போலவே யாப்பிலும் கருத்துச் செறிவிலும் சிறந்து விளங்குகின்றது.

இந்நூலில் சுப்பிரமணியக்கடவுளின் பெருமை, உயர்வு, முடிவற்ற தன்மை ஆகியவற்றை இரு விதங்களில் ஆதிசங்கரர் விளக்குகிறார். முதலாவது, வெளிப்படையாக நாம் தரிசிக்கும் திருச்செந்தூர்க் கோவிலும் அலைகளை வீசியெறியும் கடலும்  இயற்கையின் பிரம்மாண்டத்தைக் காட்டும். அந்த இயற்கையே இறைவடிவம் கொண்டு விளங்குகிறது. இரண்டாவது, நமது உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனின் சக்தி — நம்மை ஆள்வதும், மகிழ்விப்பதும், வழிநடத்துவதும் அவனே என உணர்தல் வேண்டும். மானிடராகிய நமக்கு தோன்றாத்துணையாக என்றென்றும் நிற்பவன் இறைவனே!

முதற்பாடலான விநாயக வணக்கமே அருமையாக அமைந்துள்ளது.

எப்போதும் இளமைப் பருவம் உடைய விநாயகன் நமது மலைபோன்ற இடையூறுகளை நாம் அவனை வணங்கியதுமே பொடிப்பொடியாக்கி விடுவான். பஞ்சமுகனான சிவனாலும் மதிக்கப்படுபவன் அவன். திருமால் முதலான தேவர்கள், முனிவர்கள் தேடுபவன். அளவற்ற மங்களமுடைய அவனருளை நாம் நாடுவோமாக!

எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
பொன்றாத திருவாளன ருள்பேணு வோமே (1)

சமஸ்கிருத சுலோகத்தில் காணக்கிடைக்காத ஒரு அழகான பிரயோகம் கவியரசு அவர்களின் தமிழ்ச் செய்யுளில் திகழ்கிறது. அது ‘பொன்னாகர் சுரர் நாடு புனிதன்’ என்பதாம்.
பொன் + ஆகர் எனில் திருமகளை மார்பில் கொண்டவரான திருமால் என ஒரு பொருள்.
பொன் + ஆகர் எனில் பொன்னிறம் வாய்ந்த உடலைப் பெற்றவர்- பிரமதேவன்.
பொன் + நாகர் எனில் பொன்மயமான வானுலக அரசனாகிய இந்திரன் என மற்றொரு பொருள்.
பொன் + நாகர் + சுரர் என்பது பொன்மயமான தேவலோகத்தில் வாழும் தேவர்களைக் குறிக்கும்.
பொன் + நாகர் என்பது அழகிய நாகலோகத்தவர்கள், பாதாள உலகத்தவர் என்பதனையும் குறிக்கும். ஆக, அனைவரும் போற்றும் புனிதன் விநாயகன்.

அடுத்த பாடல், இயற்றிய பெரியோர்களின் அவையடக்கத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ‘உன்னைப்பாட பொருத்தமான சொற்களோ, பொருளோ, கவிதையோ, வசனமோ, நான் அறிந்தவனில்லை. ஆனால் உனது ஒப்பற்ற ஆறுமுகங்களின் பெருஞ்சோதியான ஞானவடிவம் எனது நெஞ்சில் குடிகொண்டு தேன்போன்ற கவிதைகளை ஊற்றெனப் பெருகச் செய்கிறது.’ உள்ளுறையும் இறையை உணர்ந்த ஞானியர் வாக்கல்லவோ இவை?

சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே (2)

இப்படிப்பட்ட செந்திலோன் நான்மறைகளும் விளக்கும் பொருளானவன்; ஞானிகள் பயிலும் ‘தத்வமஸி’ எனும் வாக்கியத்தின் இலக்கானவன் எனவெல்லாம் மேலும் கூறுகிறார்.
Image result for கந்தசஷ்டிசெந்திற் கடற்கரையில் வீற்றுள்ள குமரன் ஒரு பெரும் தத்துவத்தை விளக்கா நிற்கிறான். ‘என் சந்நிதிக்கு வந்து யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் தீவினைகள் கடலலைகள் அழிதல்போல் அழிந்துபடும். ஆகவே என்முன் வாருங்கள்,’ என உணர்த்துவது போலத் திருச்செந்தூர்க் கடலலைகள் வந்துவந்தழியும். அந்தச் சீரலைவாய்க் குமரனை என் மனதில் வைத்து தியானிக்கிறேன்.

திரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மிங்களென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்தில்
சேயோனை இதயத்தி லேவைத் துளேனே (5)

இந்த முருகனின் பாதங்களைப் பற்றிக் கொள்வோம் எனக்கூறி, முருகப்பெருமானின் பாதாதிகேச வருணனை அடுத்துத் தொடர்கின்றது.

பொன்னாலும் மணியாலும் ஆகிய ஒரு சிம்மாசனத்தில், பிரகாசிக்கும் ஒருகோடி சூரியர்களுடைய சோதியும் மங்கிவிடுமாறு முருகன் பெருமையுடன் வீற்றிருக்கிறான். இவனுடைய திருவடிகள் சிறப்பு வாய்ந்தவை; அன்னப்பறவைகள் பொலிந்து விளங்கும் தாமரைமலர்கள் இவை; அமுதம் பொழிவன; அடைக்கலம் புகுந்தோருக்கு பிறப்பெனும் கொடியபிணியைத் தவிர்க்கக் கூடியவை; இப்படிப்பட்ட அலைவாயில் குடிகொண்டுள்ள முருகனின் பாததாமரைகளின்மீது என் மனமெனும் வண்டு எப்போதும் ரீங்காரம் செய்துகொண்டிருக்க வேண்டுகிறேன்.

அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே (9)

அரையில் உடுத்த தங்கமயமான பட்டாடை; அதன்மீது மின்னும் இடுப்புச் சதங்கை.
அன்பர்களைத் தடுத்தாட்கொள்ள வேண்டுமெனும் ஆசையினால் சிவந்தநிறம் கொண்டு இலங்கும் திருமார்பு; அதனைத் தொழுவேன்.

அடுத்து திருக்கைகளின் சிறப்பைக் கூறுகிறார்: இக்கைகள் பிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டவை; அண்டங்களை எல்லாம் காத்தருளியன; வடிவழகில் யானையின் தும்பிக்கையையும் வென்றவை; எமனை ஓட்டி, இந்திரனின் பகைவனான சூரபதுமனை வென்று, உன்னை அபயம் என அடைந்தோரை என்றென்றும் காத்தருளும் உனது கைகள் எனக்குத் துணையாக விளங்குக.

அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணைசெய்க உயர்செந்தி லிறைவா எமக்கே (12)

களங்கமற்ற பரிபூரண நிலவொளி வீசும் ஆறு திருமுகங்கள். ஆறு செந்தாமரைமலர்கள் போன்ற ஆறுமுகங்கள். அவற்றிலுள்ள பன்னிரு கண்களிலிருந்து ஒரு கண்ணின் பார்வையாவது நாயேனாகிய அடியேன்மீது வீசினால் உனக்கென்ன குறைவு உண்டாகும்?

சிவபிரான் முருகனை, “மைந்தனே, நீ எனது அங்கமானவனல்லவோ?” எனக்கூறி, உச்சிமுகந்து மகிழ்கின்றான், அந்தக் கிரீடமணிந்த திருமுகத்தை தியானிப்போம் என்கிறார்.
இவ்வாறு திருவடிவை வருணித்துப் பின் தனது வேண்டுகோளை முன்வைக்கிறார். “நீ என்முன் தோன்றி என்னை கடைத்தேற்ற வேண்டுகிறேன் செந்திலாதிபா!”

வரவேணு மடியேன் முனெசெந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச. (17)

அன்னை உமையின் மடியிலமர்ந்த குகனை, தந்தையாகிய சிவபிரான் ‘வா’வெனக் கையை நீட்ட, அவனும் குதித்தோடித் தந்தையின் மடிமீதேறித் தழுவிக் கொள்கிறான்.

அவனை, “சக்திமைந்தா! சிவகுமாரா! தேவசேனாபதியே!” எனவெல்லாம் தொழுது, பின் தனது பிறவிப்பிணியை நீக்கவும், எப்போதும் தனக்கு அபயமளிக்கவும் வேண்டுகிறார் ஆதிசங்கரர்.

நாமும் முருகனை இந்தக் கந்தசஷ்டித் திருநாளில் இவற்றைக் கூறியே வேண்டிக் கொள்ளலாமே? இந்தத் துதிகளின் சாராம்சமே இதுதான்: உயிர் இந்த உடலிலிருந்து பிரியும்போது, கோழை மேலிட்டு, அறிவு தடுமாறி, உயிர்மங்கும். அப்போது வடிவேலனன்றி யார் அபயமளிப்பார்?

ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி உளமஞ்சி உயிர்மங்கு போதே
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினயன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே. (20)

யமதூதர்கள், ‘வெட்டு,’ ‘பிள,’ ‘சுடு,’ எனவெல்லாம் அதட்டி வெருட்டும்போது ‘அன்பனே, அஞ்சேல்!’ என வேலேந்தி மயிலின்மீது வந்து காட்சி கொடுத்துக் காத்தருளல் வேண்டும் என விண்ணப்பம் வைக்கிறார்.

மற்ற மெய்யடியார்களைப்போல் அப்போதைக்கு இப்போதே சொல்லியும் வைக்கிறார். “உயிர்மங்கும்பொழுதில் உனது தாள்களை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனக்கூறவும் இயலாதவனாகி விடுவேன். கைகளைக் குவிக்க இயலாது. அப்போது நீ என்னைக் கைவிடலாகாது. இப்போதே நான் உனக்கு அடைக்கலம் என்று கூறிக்கொள்கிறேன்,” என்கிறார்.
பற்பல அடியார்களும் வேண்டுவது இதனைத்தானே!

உயிர்மங்கு பொழுதின்க ணுளதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயெங்கி லேங்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே. (22)

சூரசம்ஹாரம்.jpgபிரபுவே! அண்ட புவனங்களை வருத்திவந்த சூரனையும், தாரகாசுரனையும், சிங்கமுகாசுரனையும், நீ வதைக்கவில்லையா? என் மனநோயை ஒழிப்பாயாக! உன்னையன்றி நான் யாரிடம் செல்வேன்? உனது இலைவிபூதியைக் கண்ட மாத்திரத்தில் கைகால் வலிப்பு, காசம், கயம், குட்டம் ஆகிய நோய்களும், பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே பறந்தோடிவிடுவது என்ன ஆச்சரியம்? நான் உன் புகழைப்பாடவேண்டும், எனது அனைத்து உணர்வுகளும் கந்தனைச் சார்ந்தே அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறார்.

செந்திற் குமாரன் தனைக் கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க (26)

‘ஆனந்தப் பெருக்கே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்,’ என நிறைவு செய்கிறார்.
வேலும் மயிலும் துணை!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
______________________

உதவிய நூல்கள்: ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் – சமஸ்கிருதம்; தமிழ்.

இக்கட்டுரையை எழுதுமாறு என்னைப்பணித்த பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன்.

6 Replies to “சுப்பிரமணிய புஜங்கம்”

  1. மிக மிக பயனுள்ள பணி. சுப்ரமண்ய புஜங்கத்தின் பாடல்கள் அனைத்தின் நயத்தையுமே தமிழில் தருவது என்பது மிகப் பெரும் பணி. தவிரவும் ஆதிசங்கரர் இயற்றிய பிற நூல்கள் இவ்வாறு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் அறியத் தர வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அவை குறித்த தனிக்கட்டுரைகளையும் தாங்களே எழுதி இந்த அறிவார் தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். இறையருள் கூட்டட்டும்

  2. நானும் திருச்செந்தூா் வட்டத்தைச் சோ்ந்தவன்தான். அங்கு நடைபெறும் சஷடி விரதம் ஒரு அற்புதமான நிகழ்வு. ஆயிரக்கணககில் இந்து மக்கள் அருமையான பண்பாடு விளங்கும் வண்ணம் விரதம் இருப்பாா்கள். உணவு குறைத்துதிருக்கோவில் வளாகத்தில் தங்கி தவ வாழ்வு மேற்கொள்வாா்கள்.இது ஒரு சிறந்த தவநிலை.

    இதுபோல் தசராவும் மாறி அமைய வேண்டும்.

  3. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நானறிந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஆதிசங்கரரின் நூல்கள் சில உள்ளன. மற்ற சில பெரியோர்களின் நூல்களும் உள்ளன.இவற்றைப் பற்றி அவ்விறையருளின் துணையுடன் விரைவில் எழுதுகிறேன்.

  4. எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
    இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
    பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
    பொன்றாத திருவாளன ருள்பேணு வோமே (1)

    சமஸ்கிருத சுலோகத்தில் காணக்கிடைக்காத ஒரு அழகான பிரயோகம் கவியரசு அவர்களின் தமிழ்ச் செய்யுளில் திகழ்கிறது. அது ‘பொன்னாகர் சுரர் நாடு புனிதன்’ என்பதாம்.
    பொன் + ஆகர் எனில் திருமகளை மார்பில் கொண்டவரான திருமால் என ஒரு பொருள்.
    பொன் + ஆகர் எனில் பொன்னிறம் வாய்ந்த உடலைப் பெற்றவர்- பிரமதேவன்.
    பொன் + நாகர் எனில் பொன்மயமான வானுலக அரசனாகிய இந்திரன் என மற்றொரு பொருள்.
    பொன் + நாகர் + சுரர் என்பது பொன்மயமான தேவலோகத்தில் வாழும் தேவர்களைக் குறிக்கும்.
    பொன் + நாகர் என்பது அழகிய நாகலோகத்தவர்கள், பாதாள உலகத்தவர் என்பதனையும் குறிக்கும். ஆக, அனைவரும் போற்றும் புனிதன் விநாயகன்.

    ============

    சிவக்குடில் ஆசான் முனைவர் ஐயா அவர்களின் சிவக்குடில் மாணவனாகிய நான், பலமுறை அனுபவித்ததை மீண்டும் அனுபவிக்க தந்தமைக்கு நமஸ்காரம். எத்தனை முறை சொன்னாலும் சலிக்காதது ஐயாவின் தமிழாக்கம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *