தூற்றிப் போற்றினரே! -2

உயர்ந்த ஆண்டகை ஒருவன்பால் ஒரு இளம்பெண்ணின் மனம் ஈடுபட்டு விடுகின்றது. இதனை அறிந்த  தாய் நயமாகவும் இதமாகவும் ஏளனமாகவும்,  “அவனிடம் என்னதான் உயர்வாக உள்ளதென நீ அவன்மீது ஆசைப்பட்டாய் பெண்ணே?” எனக் கடிந்து கொள்கிறாள். பெண்ணின் நல்வாழ்வில் தாயைத்தவிர வேறு யாருக்கு அக்கறை இருக்கும்?

‘எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாயடி மகளே!

          என் பெண்ணே! கண்ணே நீ இப்போதே!’

தன் பெண் காதல்கொண்ட அவனைப்பற்றி இத்தாய் அனைத்தும் அறிந்தவள் போலும்! ஆகவே மகளின் மனதை மாற்றி அவள் அந்தப் ‘பயித்தியக்கார’னிடம் கொண்ட மையலை மாற்ற முனைகிறாள்.

சுத்தப் பயித்தியக்காரன் கங்காதரன் தோகையே முன்னவன் பேயுடன்

          ஆடிய தொந்திக்கோ பழம் கந்தைக்கோ ஏறும் நந்திக்கோ செய்யும் விந்தைக்கோ

                                                                             — (எத்தைக் கண்டு நீ)

“கங்காதரன் எனும் பெயர்கொண்ட அவன் முழுப் பயித்தியக்காரன்; மயில் போலும் அழகிய என் மகளே (தோகையே)! முன்பு சுடுகாட்டுப் பேய்களுடன் நடனமாடிய அவன்தொந்தியைக் கண்டு மயங்கினாயாடி? அல்லது அவன் உடுத்திருக்கும் பழங்கந்தைக்கு ஆசைப்பட்டாயோ? இல்லாவிட்டால் ஏறிச்செல்லும் வாகனமான நந்தியின்மீது நீயும் ஏற விரும்பினாயா? இல்லை, அவன் செய்கின்ற விசித்திரமான செயல்களையெல்லாம் பார்த்துப் பிரமித்து விட்டனையோ?”

எல்லாத் தாய்மார்களையும் போல்பவளே இவளும் என எண்ணத் தோன்றுகின்றது. மகள் விரும்பியவனின் இத்தனை செயல்களும் அவளுக்கு அவனுடைய பெருமைகளாகத் தோன்றுகின்றனவா எனப் பரிகாசம் செய்து கேட்கிறாள்.

பாடலின் போக்கைக் கண்டால், இது சிவன்மீது மையல் கொண்டு அவனுக்காக அரசபோகங்களைத் துறந்து கடுந்தவம் செய்து அவனை அடைய விழையும் பார்வதியிடம் அவளுடைய தாயான மேனை கேட்பதுபோலத் தெரிகிறது!

மறுமொழி தரமறுக்கும் மகளிடம் மேலும் கிண்டலாகவே தனது உரையாடலைக் கேள்விகள் மூலம் தொடர்கிறாள்.

புலியை உரித்து ஆடை அணிந்திட்ட போர்வை ஆசைக்கோ

          வலிய கரத்தில் மழுவை ஏந்தும் மனது துணிவுக்கோ

          மலையின் பாம்பை பிடித்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதைப்

          பூட்டிக் கொண்டிட்ட மாலைக்கோ தரும் சேலைக்கோ 

          செய்யும் வேலைக்கோ சிவ லீலைக்கோ

“அவன் புலியை உரித்து ஆடையாக அணிந்துகொண்டிருப்பவன், அதற்கு நீ ஆசைப்பட்டாயா? இல்லை வலிமையான கரத்தில் மழுப்படையை ஏந்திநிற்கும் துணிச்சலான செயலுக்காக அவன்மீது விருப்பம் கொண்டாயா? (சாகசம் செய்யும் இளைஞர்களிடம் இளம்பெண்கள் மயங்குவார்கள் எனத் தாய்க்குத் தெரியும். அவளும் ஒருகாலத்தில் இளம்பெண்ணாக இருந்தவள்தானே!) மலையிலுள்ள பாம்புகளைப் பிடித்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ள அவன் உனக்கு அதனை மாலையாகத் தருவான் என நினைக்கிறாயா? (உனக்கு வேறென்ன மாலைதர அவனால் முடியுமடி பெண்ணே?) உனக்கு அவன் கொடுக்கப் போகும் ‘பட்டுச்சேலை’க்காகவா? (சுடுகாட்டு ஆண்டியான அவனால் என்ன பெரிய சேலையைக் கொடுத்துவிட இயலும் எனும் எகத்தாளம் தொனிக்கிறது) அவன் செய்கின்ற பெரிய வேலைக்காகவா? (அவனென்ன பெரிய உயர்ந்த பதவி வகிப்பவனோ?) அவனது தனித்துவமான சிவலீலைகள் புரிகிறானே, அதற்காகவோ? எதற்காக அவன்மீது நீ ஆசைகொண்டாய்?”

மகள் இப்போது சினத்தின் உச்சத்தில் நிற்கிறாள்.  தாய் தனது காதலனை ஏற்றுக்கொள்ள மறுக்க மட்டும் இல்லாமல், தன் உளம்கவர்ந்த தலைவனையே இழிவு படுத்தும் விதத்தில் பலவகையான கூற்றுகளை முன்வைப்பதால், கோபத்தில் சிவந்த முகத்துடன் தாயை நோக்குகிறாள் இமயவான் மகளான பார்வதி.

மாமனும் மாமியும் ஒன்றாய் செய்கின்ற வரிசை பெருமைக்கோ

          சோமனை சிரத்தில் அணிந்து ஒருகண் துலங்கும் நெற்றிக்கோ

          காமனை வென்றவர் ஆலத்தையுண்டு மார்க்கண்டனுக்காகவே

          சண்டனை உதைத்த காலுக்கோ சாம்பல் மேலுக்கோ

          கரித் தோலுக்கோ காளை வாலுக்கோ

“என்னடி பார்க்கிறாய்? உனக்கு மாமனும் மாமியும் ஒன்றுசேர்ந்து செய்யப்போகின்ற சீர்வரிசைகளையும் அவைபற்றிய பெருமைகளையும் எதிர்பார்க்கின்றனையோ, என்னவோ? [யார் வயிற்றிலும் பிறக்காத சிவனுக்கு (பிறப்பிலிப் பிஞ்ஞகன்) அப்பனா, அம்மையா? உனக்கு மாமனும் மாமியும் வந்து திருமணச்சீர் செய்யப் போகிறார்கள் எனக் கனவு காண்கின்றாயா எனும் குத்தல்தொனி இழைகிறதே!] அவன் சோமன் எனும் நிலவைத் தலையில் ஆபரணம்போல அணிந்துகொண்டிருக்கும் அழகையும், நெற்றியில் துலங்கும் மூன்றாவது கண்ணையும் கண்டு ஆசையில் விழுந்துவிட்டாயோ? மன்மதனையே அவன் வென்றவன் எனும் நினைப்பு உன்னைக் கவர்ந்ததோ? மார்க்கண்டேயன் எனும் சிறுவனைக் காக்க எமனை உதைத்த கால் உன்னையும் எப்போதும் காக்கும் எனும் நினைப்பினால் வந்த ஆசையோ? சாம்பலைப் பூசிக்கொண்டு திரியும் அவனுடைய மேனியழகைக்கண்டு மயங்கிவிட்டாயா? அல்லது அவன் அரையில் அணிந்துகொண்டுள்ள யானைத்தோலாடைக்காகவா? இல்லை, அவனேறும் அந்தக் காளையின் வாலுக்காகவா? எதற்காகத்தான் நீ அந்த சிவன்மீது இச்சை கொண்டாயோ, மகளே!” எனப்புலம்புகிறாள் அன்னை!

இந்தப் பாடலில் சிவபிரான் எனும் சொல்லோ, மகளின் தலைவன், காதலன் எனும் சொல்லோ ஒருமுறைகூட கையாளப்படாதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. வேண்டுமென்றே செய்த கவிதைநயம் என எண்ணத்தோன்றுகின்றது.  இவ்வாறெல்லாம் கிண்டலும் கேலியும் இழைய, தாயின் கூற்றாகப் பாடப்பட்டுள்ள இந்த கல்யாணி ராகப்பாடலை இயற்றியவர் கனம் கிருஷ்ணையர் என்பவர். இவர் இன்னும் நிறையப் பதங்கள் எனும் பாடல்வகைகளை எழுதியுள்ளார். நாட்டியத்திற்கும் அபிநயத்திற்கும் பொருத்தமான பாடல்கள்.

நையாண்டியாக எழுதப்பட்டுள்ள இப்பாடலின் உட்பொருள் தெள்ளென விளங்குகிறது! சிவபிரானின் சிறப்பையும்,  பல திருவிளையாடல்களையும் பாடி மகிழ்கிறார். அடியார்களுக்கே உரிய அன்பின் நெருக்கத்தால் அதனைக் கிண்டலும் கேலியுமாக —  மையல்கொண்ட மகளிடம் தாயின் கூற்றாகப் பாடப்பட்ட  மிக அழகான ஒரு பாடலாகப் பாடியுள்ளார்.

தூற்றுமறைத்துதியின் மற்றொரு பரிமாணம்:

திருவாரூர்த் தியாகராஜர் விடங்க மூர்த்தி.  அதாவது, உளியால் செதுக்கப்படாத மூர்த்தம் எனப்பொருள்.  சமஸ்கிருதத்தில் விடங்கம் என்றால் மிகுந்த அழகுடைய மூர்த்தி எனவும் பொருள் உண்டு.

தியாகராஜப்பெருமானின் மூர்த்தம் தனிச் சன்னிதியில் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், மூர்த்தம் முழுமையும் — முகத்தைத்தவிர — ஆடைகள், மலர்மாலைகள், அணிமணிகளால் மூடப்பெற்று இருக்கும். பாதங்களும் மறைக்கப்பட்டிருக்கும். ஆண்டிற்கிருமுறை நடைபெறும் ‘பாத தரிசன சேவை’யன்று மட்டுமே பாததரிசனம் கிட்டும். இவை முறையே மார்கழித் திருவாதிரையன்று நிகழும் வலது பாத தரிசனம் எனவும் பங்குனி உத்திரத்திருவிழாவில் நிகழும் இடது பாததரிசனம் எனவும் அறியப்படும். பெருமானுடன் இணைந்த உமையம்மை கொண்டி எனப் பெயருடையவர்.

  தியாகேசப் பெருமானின் மூர்த்தம் சிவன்-உமை-கந்தன் ஆகிய மூவருமிணைந்த சோமாஸ்கந்த வடிவமாகும்.  இவ்வடிவிற்கு மிக நுணுக்கமான தாத்பரியங்கள் உண்டு எனப் பெரியோர்கள் கூறுவர். இப்பெருமான் வீதிவிடங்கர் எனவும் அறியப்படுவார்.

ஒரு அடியாருக்கு இத்தலத்தின் விசேடங்கள் பிரமிப்பையும், புளகாங்கிதத்தையும், பேரானந்தத்தையும் ஒன்றுசேர அளிக்கின்றன. கவிதை பாடுவதில் வல்லவரான பாபவிநாச முதலியார் பைரவி ராகத்திலமைந்த அற்புதமானதொரு பாடலால் தூற்றுமறைத் துதியாக ஈசனைப் போற்றிக் களிக்கிறார்.

‘முகத்தைக் காட்டியே தேகம் முழுமையும்

          காட்டாமல் மூடுமந்திரம் ஏதய்யா — (முகத்தை)’

ஜகத்தில் அதிகமான ஆரூரில் வாசரே

          செழித்த மேனியில் ஊனம் உண்டோ தியாகேசரே?  —  (முகத்தை)

இந்தத் தாத்பரியத்தைத் துருவித் துருவி யாரும் கேட்பதில்லை; அறிய முற்படுவதில்லை. அன்பர்களாலும், தொண்டர்களாலும் அடியார்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமம் இதுவாகும். இருப்பினும் கேட்கிறார்:

“உலகில் மிகப்பெருமை வாய்ந்த ஆரூரின் ஈசனே! உமது அழகான தேகம் முழுமையும் ஏன் மறைத்தீர்?  உங்கள் உடலில் குறை, ஊனம் ஏதாவது உள்ளதா,?சாயரட்சை பூஜையில் பார்க்கலாம் என்றால் காதிலணிந்த அழகான தோட்டைக் காட்டி மயக்கி விடுகிறீர்; மயக்கும் புன்னகையால் மான்மழுவேந்திய கரத்தையும் கூட மறைத்துக் கொள்கிறீர்!”

சாயரட்சையில் வந்து சலிக்கப் பார்ப்போம் என்றால்

          சாந்தணிந்த செவ்வந்தி தோட்டைக் காட்டி மயக்கி

          மாயாவித்தனமுள்ள மந்தஹாசமுடன்

          மான்மழுவேந்திய கரத்தைக் கூட மறைத்து (முகத்தை)

நாம் ஐயன் திருமுன்பு நிற்கும்போது, அவனுடைய திருவழகும், இனிய அருள்பெருகும், மயக்கும் மாயாவித்தனமான புன்முறுவலும் நம் மனதைத் திசைதிருப்பி விடும். முழுமையான வடிவைக்காண இயலவில்லை எனும் குறையே ஏற்படாது! அதைத்தான் கூறுகிறார் போலும். தன்னில் நம்மை ஈர்த்து இணைத்துக் கொள்ளும் அபூர்வ ஆனந்த வடிவம் ஆண்டவனுடையது.

திருவாரூர் வீதிவிடங்கப்பெருமான் அஜபா நடனம் எனும் நடனத்தை ஆடுவதாகக் கூறுவர்.  இது நமது சுவாசத்திற்கேற்ப முன்னும் பின்னும் இழைந்தாடும் ஒருவித லயத்தில் இயங்கும் ஆட்டமாகும்.  நடனமாடுபவர் ஏதாவது ஒரு சமயத்தில், ஒரு அசைவில் காலைத்தூக்கியே ஆக வேண்டுமல்லவா? அப்போதாவது ஐயன் காலைப் பார்த்துவிடுவோம் என உற்றுப் பார்த்தால் அந்த நடனக்காட்சியே நம்மைப் பரவசப்படுத்தி, பசி, தாகம் எல்லாவற்றையும் தீர்த்துவிடுகின்றதாம்!   தனது திருப்பாதத்தினைப் பணிகளாகிய ஆபரணங்களாலும் பாம்புகளாலும் மறைத்துக் கொண்டு நமக்குக் காட்டாமல் மறைத்து விடுகிறானாம் ஐயன்! எப்படி இருக்கிறது பக்தர் கூற்று!

தியாகேசப்பெருமானின் மற்றொரு பெயர் ‘இருந்தாடழகர்’ என்பதாம். அதாவது காலைத் தூக்காமலே இருந்து ஆடுபவர் எனப்பொருள்! ஆடரவக்கிண்கிணிக்காலழகர் என்பதும் இவரது மற்றொரு பெயராகும்!

கூத்தாடும் போதங்கே குனிந்து பார்ப்போம் என்றால்

          குதித்து குதித்து முன்பின் ஓடும் விதத்தை உற்றுப்

          பார்த்தால் பசிகள் தீரும் பரவசமாகச் செய்யும் பணியால்

          மறைத்துக் கொண்டொரு பதம் காட்டுவதல்லால் (முகத்தை)

அபிஷேக காலத்திலும் ஐயன் திருமேனியை ஒரு நீண்ட அங்கியால் மறைத்துத்தான் அபிஷேகம் செய்வார்களாம். ஆண்டிற்கு ஆறுமுறை மட்டுமே தியாகேசப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். தினப்படி அபிஷேகம் எல்லாம் அருகிலுள்ள பேழையிலிருக்கும் மரகதலிங்கத்திற்குத்தான்.

இவ்வாறு அபிஷேக காலத்திலாவது அருமைத் திருமேனியைத் தரிசித்துவிட வேணும் எனும் ஆவல் பக்தருக்கு! இப்பேராசையை அறியாதவனா இறைவன்? அவன் அதிரகசியமாகத் தன் திருமேனியைத் தோட்டால் மறைத்துக் கொள்கிறாராம். அழகான பெரிய தோடுகளைக் காதிலணிந்த பெருமானுக்கு செவ்வந்தித் தோடழகர், கம்பிக்காதழகர் எனப்பெயர்களும் உண்டு.

“வாழ்வில் மேன்மை எல்லாம் தந்து எம்மைக் காக்கும் புனிதமான மங்களமான வடிவுடைய விடங்கரே! தியாகராஜரே! பாபங்களை எல்லாம் நசிப்பிப்பவரே!” எனத் தன் பெயரையும் முத்திரை பதித்துப் பாடலை முடிக்கிறார் அடியார் பாபவிநாச முதலியார்.

அபிஷேக காலத்தில் அருமைத் திருமேனியை

          அதி ரகசியமான தோட்டால் மறைக்கிறீர்

          விபவம் தந்து ரக்ஷிக்கும் திவ்ய மங்கள ரூப

          விடங்க தியாகராஜரே பாபவிநாசரே (முகத்தை)

அழகான பொருள்பொதிந்த அதியற்புதமான பாடல். அதிகமாக யாருமே பாடிக் கேட்டதில்லை. சமீபத்தில் ‘அழகா‘ எனும் தலைப்பிலமைந்த குறுந்தகட்டில் பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளது கேட்கக் கிடைத்தது. திருமதி ஆர். வேதவல்லி, இன்னும் சில பாடகிகளின் இசைப்பதிவுகளையும் you tube-ல் கேட்டு மகிழலாம்.

தியாகேசப்பெருமானின் திவ்ய மங்கள வடிவின் அறியவொண்ணாத சூட்சுமத்தை அழகாகக் கோடியிட்டுக் காட்டும் பாடல்.

தூற்றுவது போலப் போற்றியமைந்த சூட்சுமம் கொண்டது!

மணிவாசகப் பெருந்தகையும் இவ்வாறு இறைவனிடம் உரிமை கொண்டாடிப் பாடியுள்ளதைப் பார்க்கலாம்.

நீத்தல் விண்ணப்பத்துப் பாடலொன்று நிந்தாஸ்துதி எனும் தூற்றுமறைத் துதியாகவே விளங்குகிறது. உலகப்பற்றை விட்டொழிக்க ஈசனை வேண்டி உளமுருகப் பாடும் மாணிக்கவாசகர், ஒரு கட்டத்தில் ஈசனிடம், ” நீ எனக்கருளவில்லையாயின் உன்னைப் பலவாறு பழிப்பேன்,” எனக் கடிந்துரைக்கிறார். அன்பினாலும் பக்தியினாலும் கொள்ளும் உரிமை இதுவல்லவோ?

உழைதரு நோக்கியர் கொங்கைப்

                   பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்

          விழைதரு வேனை விடுதி கண்டாய்

                   விடின் வேலை நஞ்சு உண்

          மழைதரு கண்டன் குணம் இலி

                   மானிடன் தேய் மதியன்

          பழைதரு மாபரன் என்றென்றென்

                   அறைவன் பழிப்பினையே

                        (திருவாசகம்- நீத்தல் விண்ணப்பம்)

“பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா!

“அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா? நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்,” என்கிறார்.

சிறிது ஆராய்ந்தால் ஈசனைப் போற்றும் அருமையான விளக்கங்களை இதில் உய்த்துணரலாம்: கடல் நஞ்சை உண்டது ஈசன் தன் பெரும் கருணையினால் செய்த செயல்; அவன் நீலகண்டன் ஆனது தியாகத்தின் விளைவாகும்; ‘குணம் இலி’ என்பது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் எனப் பொருளுடையது; ‘மானிடன்’ எனில் மானை இடக்கையில் ஏந்தியுள்ளவன் எனும் பொருள்; ‘தேய்மதியன்’ என்றது பிறைச்சந்திரனுக்குத் தன் சடைமீதிருக்க அடைக்கலம் கொடுத்தவன் எனப் பொருள்படும். ‘பழைதரு’ என்பது அவனே முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளானவன் என்றும் ‘மா பரன்’ என்பது உமையவளை இடப்பாகம் கொண்டவன் எனவும் பொருள்படும்.

இவ்வாறு இறைவனின் சிறுமைகளாகக் கூறப்படுபவை உண்மையில் அவனுடைய பெருமைகளாகும்.

உள்ளன்போடு அவனை ஒன்றி வழிபடும் அடியவர்கள் உரிமையாக இவற்றைத் தமது கற்பனை வளத்தினால் தூற்றுவதுபோலப் போற்றியும், [நிந்தாஸ்துதியாகவும்] பாடிப்பரவி மகிழ்ந்துள்ளனர் எனக்காணும்போது நம் உள்ளம் நெகிழ்கின்றது.

(நிறைந்தது)

2 Replies to “தூற்றிப் போற்றினரே! -2”

  1. Nhm writer I am using to record my comments in tamil got corrupted. I tried my best.I am unable to make use of it. I request readers to suggest other means to write in Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *