ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

ஆங்கிலேயப் புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்.

ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹிந்து மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆந்திர அரசின் உத்தரவு

ஹிந்துப் பண்பாட்டைப் பெரிதும் மதிக்கும் முதல்வர்களில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு முக்கியமானவர். ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பின்போதும், யுகாதி நன்னாளன்று, அரசு சார்பாகப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளவர் அவர். சமீபத்தில் மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அறநிலையத்துறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

2018 ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோவில்களில் நடுநிசி நேரத்தில் திறந்து வைத்துப் பூஜைகள் நடத்தக் கூடாது, என்று அரசாணைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது ஹிந்து அமைப்புகளாலும், விஷயம் அறிந்த ஹிந்துக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற மாநிலங்களிலும் அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விவரம் அறிந்த ஹிந்துக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

ஆந்திரப் பிரதேச அரசு எதனால் இப்படிப்பட்ட உத்தரவை இட்டுள்ளது என்று யோசித்துப் பார்த்தால், நாம் பல விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கிறிஸ்தவக் கலாச்சாரம்

ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசியப் படையெடுப்புகளாலும், ஆங்கிலேய அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் நமது பாரத தேசத்தில் கிறிஸ்தவக் கலாச்சாரம் பலவிதங்களில் ஊடுருவியுள்ளது.

சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டப் பிறகும் கூட, அமைந்த அரசுகள் ஆங்கிலேய ஆட்சி முறையையே பின்பற்றி வருவதாலும், அரசியல் சாஸனத்தை உருவாக்கும்போது கூட பாரத கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலேயரின் அரசியல் சாஸன அடிப்படையில் உருவாக்கியதாலும், தொடர்ந்து வந்த அரசுகள் (பெரும்பாலும் காங்கிரஸ் அரசுகள்) மதச்சர்பின்மை என்கிற பெயரில் ஹிந்து தர்மத்தின் நலனைப் புறந்தள்ளியதாலும், பொதுவாகவே பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள மேற்கத்திய மோகம் அதிகமாகிக் கொண்டே இருப்பதாலும், ஆங்கிலேயப் புத்தாண்டு (கிரெகோரியன் காலண்டர்) கொண்டாடுவது, ஆங்கிலேயக் காலண்டர்படி பிறந்தநாள் திருமணநாள் (கேக் வெட்டி, மெழுகுவர்த்தி அணைத்து) கொண்டாடுவது, விடிய விடிய மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபடுவது, போன்ற வழக்கங்கள் ஹிந்துக்களிடையேயும் தொற்று நோய் போலப் பரவியுள்ளன.

நடை, உடை, பாவனையிலிருந்து முக்கிய தினங்கள் கொண்டாடுவது வரை மேற்கத்தியக் கலாச்சாரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் ஹிந்துக்கள் இன்றைய சூழலில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கத்தைச் சுத்தமாகக் கடைப்பிடிக்காத நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

பாரதக் கலாச்சாரமும் பஞ்சாங்கமும்

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் உருவான நாகரிகம் நமது வேத நாகரிகம். இறை தரிசனம் கண்ட மஹரிஷிகள், பிரபஞ்சத்தின் ஒலிகளைக் கிரகித்து வெளிக்கொணர்ந்த வேதங்களின் அடிப்படையில் உருவான நாகரிகம். மஹரிஷிகள் இயற்றியுள்ள வேதங்கள் உபநிடதங்கள், இதிஹாசங்கள், புராணங்கள், ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள், தர்ம சாஸ்திரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதே நமது கலாச்சாரம்.

ஆலயங்கள் கட்டப்படுவதில் ஆரம்பித்து, பூஜைகள் நடத்துவது, உற்சவங்கள் நடத்துவது, திருவிழாக்கள் கொண்டாடப்படுவது போன்ற ஆலயங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் ஆகமங்கள் வழிவகுத்தபடியே நடைபெற்று வருகின்றன. அப்படி நடைபெறுவதே தொடரவேண்டும். அதுவே நமது ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆன்மிகப் பாரம்பரியம் ஆகும்.

அதேபோல, பிறந்த நேரம் முதல் அந்திம நேரம் வரை நமது பிறந்த தினம், வளர்ச்சி, கல்வி, தொழில், திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், இறந்த பிறகு நடத்தப்படும் அந்திமக் காரியங்கள் என்று நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளபடியே நாம் நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு தனி நபரின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், ஆலயங்களின் விசேஷ தினங்களுக்கும், அரசாங்கங்களின் ஆட்சிமுறைக்கும் கூடப் பஞ்சாங்கங்களைப் பின்பற்றுவதே நமது பாரதப் பண்பாடாக இருந்து வந்துள்ளது. பஞ்சாங்கங்கள் என்பவை கிரக சஞ்சாரம், கணித சாஸ்திரம், காலச்சுழற்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. வருஷங்கள், அயனங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், யோகங்கள், கரணங்கள் என்று துல்லியமாகக் கணிக்கப்படும் நேரங்களில் தான் ஒவ்வொரு காரியத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது சாஸ்திர விதி. சுப காரியங்களாக இருந்தாலும், அசுப காரியங்களாக இருந்தாலும், பஞ்சாங்கத்தின்படி செய்வதே நமது பண்பாடு.

ஹிந்துப் பண்பாட்டில் புத்தாண்டு

காலச்சுழற்சி என்று வருகின்ற போது நமது தேசத்தில் சூரிய மானம், சந்திர மானம் ஆகிய இரண்டு முறைகளைத் தழுவி காலக்கணக்கு கணிக்கப்படுகின்றது. மானம் என்றால் மானித்தல், கணக்கிடுதல் என்று அர்த்தம். பூமிக்குச் சார்பாக சூரியனின் இயக்கத்தைக் கணக்கிடுவது சூரிய மானம், பூமிக்குச் சார்பாகச் சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிடுவது சந்திர மானம். அவ்வாறு கணிக்கப்பட்டுத்தான் பஞ்சாங்கத்தில் புத்தாண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.

அதன்படி தான், தமிழ் புத்தாண்டு (வருஷப்பிறப்பு – சித்திரை முதல்நாள்), விஷு, யுகாதி, பைகாசி போன்று நமது தேசத்தில் ஹிந்துக்கள் புத்தாண்டுகள் கொண்டாடி வருகின்றனர்.

ஆலயங்களில் பல்வேறு திருவிழாக்கள் உற்சவங்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்று தான் வருஷப் பிறப்பும். வருஷப்பிறப்பு தினத்தன்று ஆலயங்களில் அந்த வருஷத்திற்கானப் புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுவது நமது பாரம்பரிய வழக்கம். நமது கலாச்சாரத்தில், புத்தாண்டுப் பிறப்புக்குப் பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

ஆலயங்கள் திறக்கப்பட்டு, சன்னிதிகள் ஒவ்வொன்றும் நடை திறக்கப்படுவது, பள்ளி எழுச்சி, பூஜைகள் செய்யும் காலங்கள், அபிஷேக, அலங்கார, அர்ச்சனைகள், நைவேத்யங்கள், ஷோட உபசாரங்கள், தீப ஆராதனைகள், பள்ளிக்கு அனுப்புதல், நடை சாத்துதல், ஆகியவை முடிந்து கோவில் மூடுதல் வரை ஆகமங்களில் தெளிவாக நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகம விதிகளின் படி, அர்த்த ஜாம (இரவு) பூஜை முடிந்தவுடன் சன்னிதிகளைச் சார்த்தி (நடை அடைப்பது) கோவில்களை மூடிவிடுவர். பின்னர் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில்தான் கோவில்களும் சன்னிதிகளும் திறக்கப்படும். அந்நேரத்தில் தான் பூஜைகளும் அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறும். புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கமும் படிக்கப்படும்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அர்த்த ஜாமப் பூஜைக்குப் பிறகு மூடப்பட்ட சன்னிதிகள் மீண்டும் பிரம்ம முகூர்த்தத்தில்தான் திறக்கப்பட வேண்டும். வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி போன்ற வெகு சில, குறிப்பிட்ட விசேஷ தினங்களில் மட்டுமே கோவில்களும், நடைகளும் இரவு நேரங்களில் திறந்து பூஜைகள் நடத்தப்படும். மற்றபடி, நடுநிசிகளில் கோவில்கள் திறந்து பூஜைகள் நடத்துவது ஆகம விதிகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், தோஷம் மிகுந்த செயலும் ஆகும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு

ஆந்திர அரசு, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி நடுநிசிகளில் கோவில்கள் திறக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசும் அவ்வாறு உத்தரவிட வேண்டும் என்று விவரமறிந்த தமிழ் ஹிந்துக்களும் ஹிந்து அமைப்புகளும் விரும்பின. ஆனால், வருமானம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அறநிலையத்துறையோ அல்லது தமிழக அரசோ அவ்வாறு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

எனவே, அஸ்வத்தாமன் என்கிற வழக்கறிஞர், “ஆகம முறைப்படி, அர்த்த ஜாமப் பூஜைக்குப் பிறகு மூடப்பட்ட கோவில்கள் அடுத்த நாள் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் தான் திறக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையை மீறும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நடுநிசி நேரத்தில் கோவில்கள் திறக்கப்படக் கூடாது. எனவே, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டிக் கோவில்கள் நடுநிசியில் திறக்கப்பட்டுப் பூஜைகள் நடத்துவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்கிற மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்துள்ளார்

விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகியோர் வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர், “புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது இல்லை; பொது மக்களின் வசதிக்காகவும் தரிசனத்துக்காகவும் தான் திறக்கப்படுகின்றன. இது காலம் காலமாக நடந்துவரும் வழக்கமாகும். இதனால் ஆகம விதிகள் மீறப்படவில்லை” என்று வாதிட்டுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடை விதிக்க மறுத்துவிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் ஜனவரி 8-ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அறநிலையத்துறையின் சந்தேகத்திற்குரிய செயல்?

இதனிடையே சென்ற வாரம் டிசம்பர் 30-ம் தேதியன்று தினமலர் நாளிதழ் ஒரு மூலையில் “கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை” என்கிற தலைப்பின் கீழ் ஒரு பெட்டிச் செய்தி போட்டிருந்தது. அதில். “கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதால், புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, பகலில் கூடுதல் நேரம் கோவில்கள் திறந்திருக்கும்” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதாவது, மொட்டையாக “அறநிலையத்துறை அதிகாரிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதிகாரிகளின் அந்தஸ்து என்ன? ஆணையரா? இணை ஆணையர்களா? உதவி ஆணையர்களா? இல்லை ஏதாவது சில கோவில்களின் நிர்வாக அலுவலர்களா? அவர்கள் பெயர் என்ன? போன்ற எந்தத் தகவலும் இல்லமல், ஒரு கிசு கிசு போன்ற செய்தியாகத்தான் அது இருந்தது.

மேலும், இது சம்பந்தமாக அரசு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை. துறை ரீதியான சுற்றறிக்கையும் விடப்பட்டதாகத் தெரியவில்லை. அதோடு மட்டுமல்லாமல், தினமலரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் இந்தச் செய்தியைச் சொன்னதாகவும் தெரியவில்லை.

அதன் பிறகு ஜனவரி 1ம் தேதி தினமணி நாளிதழில், “புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்; தேவாலயங்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு” என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், “தேவாலயஙளில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலிகளும், கோயில்களில் திங்கள் கிழமை அதிகாலை சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன” என்றும் “புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், முண்டகக் கன்னியம்மன் கோவில், அஷ்ட லட்சுமி கோவில், வடபழனி முருகன் கோவில், தியாகராய நகரில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களில் திங்கள் கிழமை அதிகாலையில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்றன; முக்கியக் கோவில்களுக்குப் பக்தர்கள் செல்ல ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன” என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு நாளிதழ்களின் செய்திகளையும் பார்க்கும்போது, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை மனதில்கொண்டு, அறநிலையத்துறை செய்கின்ற விஷமமா என்கிற சந்தேகமும் வரத்தான் செய்கிறது.

பொறுத்திருந்து பார்க்கவேண்டும்

ஹிந்துக் கோவில்களில் இந்த நடைமுறைக் கொண்டுவரப்பட்டபோதே ஹிந்துக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தி இருக்க வேண்டும். அப்போதே வழக்குகளைத் தொடர்ந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச நடவடிக்கையாக, நடுநிசி நேரத் தரிசனங்களுக்குப் போகாமல் அறநிலையத்துறை நடவடிக்கையைப் புறக்கணித்திருக்க வேண்டும். பல வருடங்களாக இவை எதையும் செய்யாமல் இருந்தது தவறு.

மேலும், இவ்வழக்கைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ள நிலையில் தற்காலிகத் தடையாவது வழங்கியிருக்க வேண்டும். பலதரப்பட்ட வழக்குகளில் தற்காலிகத் தடை வழங்குவது என்பது நடைமுறையில் உள்ளதுதான். இவ்வழக்கில் ஹிந்துக்களின் மதவுணர்வுக்கு மதிப்பளித்துத் தடை வழங்கியிருக்கலாம். வழங்காதது வியப்பாகத்தான் உள்ளது.

ஜனவரி 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரப்போகும் இவ்வழக்கில், நமது தேசத்தின் ஹிந்து கலாச்சாரத்தையும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களையும், ஆகம விதிகளையும், ஆந்திர அரசின் உத்தரவையும் கருத்தில்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்புக்கு நடுநிசியில் கோவில்கள் திறப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பதே ஹிந்துக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

*******

தினமணி செய்தி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *