அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

வேதாந்த உட்பொருளை
தீர முடிவுசெய்தோர்
துறவெனும் யோகத்தால்
உள்ளம் தூய்மையுற்றோர்
மேலான அமுதநிலை அடைவர்.
ஈற்றிறுதிக் காலத்தே
முற்றிலும் விடுபட்டு
இறைநிலை அடைவர்.

– முண்டக உபநிஷதம், 3.2.6

உயிர்மூச்சு காற்றில் கலந்திடும் அழிவற்று
உடல் சாம்பலாகும்
ஓம்
மனமே எண்ணுக செய்ததை எண்ணுக
மனமே எண்ணுக செய்ததை எண்ணுக.

– ஈசாவாஸ்ய உபநிஷதம்

நமது காலகட்டத்தின் மகத்தான ஆசாரியராகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (பிப்ரவரி 28, 2018)  காலை சித்தியடைந்தார்கள் என்னும் செய்தி  வந்துள்ளது.

இத்தருணத்தில் அவரது புனித நினைவைப் போற்றி  தமிழ்ஹிந்து தனது  இதயபூர்வமான சிரத்தாஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

திருவாரூர் மாவட்டம் இருள் நீக்கி’ கிராமத்தில் மகாதேவ ஐயருக்கும், சரஸ்வதி அம்மாளுக்கும் குமாரராக, 1935-ம் ஆண்டு ஆடி மாதம் 3- ம் தேதி ஸ்ரீஜெயேந்திரர் பிறந்தார்.  அவரது பூர்வாசிரமப் பெயர் சுப்ரமணியம்.  1954 – ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி பரமாச்சாரியார் ஸ்ரீ  சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால்  ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அடுத்த பட்டமாக  நியமிக்கப்பட்டார்.

துறவறம் ஏற்ற நாள் முதல்  ஆன்மீகம், தர்ம ஸ்தாபனம்,  மக்கள் தொண்டு ஆகியவற்றையே முழுமூச்சாகக் கொண்டு சுவாமிகள் இயங்கினார்.

“பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரர் மடாதிபதியாகப் பொறுப்பேற்ற காலத்தில் தமிழகத்தின் சூழ்நிலையில் மாற்றம். ஒரு புறத்தில் கடவுள் மறுப்பு அமைப்புகள். மறு புறத்தில் ஒட்டுமொத்த மத மாற்றங்கள். இந்தச் சூழ்நிலையில் மடாதிபதியாக இருப்பவரும் கூடக் களம் இறங்க வேண்டும் என்பது தான் காலாச்சாரம். கால ஆச்சாரம். அதை மிகச் சிறப்பாகச் செய்தவர் பெரியவர்.

ஹிந்து சமுதாயத்தில் ஜாதியப் பிரிவினைகள் பலஹீனமாக்குகின்றன என்பதை உணர்ந்து, மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்தவர். குடிசைப் பகுதிகளுக்கு, தலித் சமுதாயத்தினர் என்று தற்போது அழைக்கப்படும் திருக்குலத்தோர் வாழும் பகுதிகளுக்கு, விடிந்தகரையில் மீனவ சமுதாயத்தினர் மத்தியிலெல்லாம் தாமே நேரடியாக வந்து ஆசி வழங்கியவர். காஞ்சி மடத்திற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தான் செல்ல முடியும் என்ற தவறான கருத்தை மாற்றி, ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த, ஹிந்து சமுதாயத்தைச் சாராதவர்களும் கூட மடத்திற்கு வந்து பெரியவரைச் சந்தித்து ஆசி பெற முடியும் என்ற நிலையை உண்டாக்கிக் காட்டியவர்.

தமிழ்நாட்டில் சவாலாக இருந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்க பல ஹிந்து இயக்கங்கள் பாடுபட்டன என்பது உண்மை. ஆனால் அதன் பின்னணியில் தமது தவ வலிமையால் ஊக்கம் தந்த பெருமை யாருக்கேனும் உண்டென்றால் அது பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களைத் தான் சாரும். இவரது முயற்சியாலேயே தமிழ் இலக்கியங்களைப் பயிற்றுவிப்பதற்காக சென்னையிலேயே கூட சேத்துப்பட்டு சங்கர மடத்தில் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜனகல்யாண் அமைப்பின் மூலம் தொண்டு புரியும் எண்ணத்தை எல்லோர் மனத்திலும் விதைத்தவர். இன்றும் கூட காஞ்சிபுரத்தில் ஜனகல்யாண் பெயர் போட்ட ரிக்‌ஷாக்களைப் பார்க்கலாம். ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி, பல்வேறு சேவைக் கார்யங்களைத் தொடக்கி வைத்திருக்கிறார்.

மடாதிபதியாக இருந்து காலத்தின் தேவையை உணர்ந்து சமுதாய முன்னேற்றத்திற்கான சேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், தம் வாழ்வின் கடைசிக் காலம் வரையில் உழைத்தவர் காஞ்சிப் பெரியவர் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அவர் இன்று சித்தி அடைந்தார். அவரது பிரிவு ஹிந்து சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை”

– பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 

ஏனாத்தூர்  ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாவித்யாலய பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத பேராசியராக உள்ள அறிஞர் ஜி.சங்கரநாராயணன், சுவாமிகளைக் குறித்து பின்வருமாறு நினைவு கூர்கிறார்:

“குழந்தை போன்ற உள்ளம்கொண்டவர். எல்லோரிடமும் கனிவாகத்தான் பேசுவார். குருமீது அளவில்லாத பக்திகொண்டவர். அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து குருவின் (மகா பெரியவர்) அதிஷ்டானத்தை வந்தனம் செய்த பிறகே அன்றாடக் காரியங்களைத் தொடங்குவது அவரது வழக்கம். குருவுக்கான பூஜைகளை நியமப்படி நடத்திவந்தார்.

ஆன்மிகப் பணிகளை மட்டுமே அதிகம் செய்துவந்த நிலையில், இவரது காலத்தில் காஞ்சி மடம் சமூகப்பணிகளையும் அதிகம் செய்யத்தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களில்கூட கல்வி, மருத்துவப் பணிகளை செய்து வந்தது காஞ்சி மடம். பழங்குடி மக்களின் கல்வி, மருத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்தியவர் ஜெயேந்திர சுவாமிகள். ஏனாத்தூர் பல்கலைக்கழகத்தில் நவீனக் கல்விமுறைகள் உண்டாகக் காரணமானவரும் இவர்தான். பாலிடெக்னிக், இன்ஜினீயரிங் கல்லூரி முதலிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவித்துக் கொண்டுவரச் செய்தார்.

நாட்டில் எங்கே, எப்போது இயற்கைப் பேரிடர்கள் நடைபெற்றாலும் உடனே பரிதவித்துப்போவார். அங்கே என்ன செய்யலாம்? என்ன என்ன பொருள்களை உதவிக்கு அனுப்பலாம் என்று உடனே ஆலோசிப்பார். சுனாமி, புயல், உத்தரகாண்ட் பெருவெள்ளம்… என எல்லாப் பேரிடர்களின்போதும் காஞ்சி சங்கர மடம் பங்குகொண்டு நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க ஆணையிடுவார். பொருள்கள் போய்ச்சேர்ந்து, மக்களை அடையும்வரை தூங்கவே மாட்டார். மக்களின் மீது மாளாத பிரியம்கொண்டவர் சுவாமிகள். சத்தமில்லாமல் அவர் செய்த சமூகப்பணிகள் ஏராளம்.

வயதாகி உடம்பு ஒத்துழைக்காத வேளையில்கூட அவரது ஆன்மிகப்பணிகள் ஓயவே இல்லை. அவரிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் அவரது மனோபலம்தான். எந்த நிலையிலும் தளர்ந்துபோக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும். இறுதிவரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப்படுத்துபவை.இம்மி அளவுகூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை எத்தனை மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் சுவாமிகள்.

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆலயங்களைப் புனரமைத்தவர் சுவாமிகள். காஞ்சி காமாட்சி ஆலயத்தின் விமானத்துக்குத் தங்கம் வேய்ந்தது, ஏகாம்பர நாதருக்கு பெரிய தேர் செய்தது என அவரது ஆலயப்பணிகள் எண்ணிலடங்காதவை. வடநாட்டில் தமிழகக் கோயில்கள் பலவற்றை உருவாக்கினார். எத்தனையோ இடிந்துபோன கோயில்களைப் புனருத்தாரணம் செய்து நித்ய பூஜைகள் நடைபெறக் காரணமாக இருந்தவர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். அழிய இருந்த எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்களைப் படியெடுக்க உதவிசெய்து, பாதுகாத்தவர். வௌவால்கள் பறந்துகொண்டிருந்த அநேக ஆலயங்களில் கடந்த 30 ஆண்டுகளில் மறுமலர்ச்சி உண்டாக்கி, மக்களை வரச்செய்த புண்ணிய காரியங்களைச் செய்தவர்.

நாட்டில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து, அம்பாள் நாமங்களைப் பாராயணம் செய்துகொண்டேயிருப்பார். அங்குள்ள மக்கள் குணமாகவும், நிலைமை சீரடையவும் வேண்டிக்கொண்டேயிருப்பார். எளிமையாக, எளிய மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தவர் சுவாமிகள். அவர் மறைந்தது மிகப்பெரிய சோகம். அவரது பணிகளைத் தொடர்ந்து செய்வதும், எளிய மக்களைத் தொடர்ந்து பாதுகாப்பதும் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்…”

2004ம் ஆண்டு பூஜ்ய சுவாமிகளை அப்போதைய மாநில அரசு பொய்வழக்கிட்டு அராஜமான முறையில் கைது செய்தது. அவரது சிறைவாசம், விடுதலை, பின்பு விசாரணைகளின் முடிவில் அப்பழுக்கின்றி வெளிவந்தது இவை மிகவும் வேதனையான  அத்தியாயங்கள். இவையனைத்தின் போதும் சுவாமிகள் தனது உறுதியிலிருந்தும் ஆன்மீக நிஷ்டையிலிருந்தும் சிறிதும் விலகாமலிருந்தார் என்பது முக்கியமானது.

“காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதை விட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு  கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை. இதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியது…

ஸ்ரீ ஜெயேந்திரர் பயணித்த பாதை கடும் முட்களும் விஷ பாம்புகளும் நிரம்பியது. ஒவ்வொரு தலித் பகுதிக்கும் சென்றது, தலித் பூசகர்களிடம் கை நீட்டி பிரசாதம் வாங்கியது, தலித் தொழில் முனைவோருக்கு மடத்தின் சார்பில் உதவி வழங்கியது- என மடத்தின் போக்கை மாற்றியவர் அவர். அவரது மடத்தின் சூழலிலும் வரலாற்றிலும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் மிகப் பெரிய முன்னகர்வு. அதற்கான துணிவு அவரிடம் இருந்தது. இதை திராவிடர் கழகத்தைச் சார்ந்த சின்ன குத்தூசியே 1980களில் அவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியுடன் எடுத்த -பின்னர் பல சர்ச்சைகளை உருவாகிய- பேட்டியின் இறுதியில் ஒத்துக் கொண்டார்… “

ஜெயேந்திரர் விடுதலை, 2013 தமிழ்ஹிந்து கட்டுரையில் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும் தனது செய்தியில் சமுதாயத்திற்கு சுவாமிகள் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்துள்ளார்.

8 Replies to “அஞ்சலி: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்”

  1. //அவரது பிரிவு ஹிந்து சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.//

    அவரது பிரிவு அனைத்து சமுதாய மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை என்று இருக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் ஜன் கலியாண் வாசகம் வைத்த ரிக்ஷாக்கள் ஓடுவதாக அஞசலியில் சொல்லிவிட்டு இந்துக்களுக்கு மட்டுமே இழப்பு என்றால் எப்படி? இந்தியா முழ்வதும் சங்கர மடத்தில் சமூக சேவைகள் எல்லாருக்கும்போய்ச் சேர, இந்துகளல்லா பொதுச்சமூகத்திற்கு இழப்பில்லையா?

    Correct the mistake.

  2. ஒரு சம்பிரதாய மடத்தில் இருந்துகொண்டு நேரடியாகச் சமூகப் பணிகளில் ஈடுபடுவது எளிதல்ல. அதுவும் ஒரு ஹிந்து மடம் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது சிரமமானது. இதை ஸ்ரீ ஜயேந்திரர் முயற்சித்தார்.
    பொதுவாக ஹிந்து அமைப்புகளுக்கு நிர்வாகத்திறன் போதாது.அனேக திட்டங்கள் போடும்போது அவற்றை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் தகுந்த நபர்கள் தேவை.இவை இல்லாமல் பல திட்டங்கள் தொய்ந்துவிடுகின்றன.
    நமது அரசியல் சூழ்நிலை, அதுவும் தமிழ் நாட்டில், ஹிந்துக்களுக்கு எதிரானது. அதனால் மடமே நேரடியாக எதிலும் ஈடுபடாமல், சில விசேஷ அமைப்புகளின் மூலம் செயல்படுவது சிறந்தது எனத் தோன்றுகிறது.இந்த மனோபாவம் ஹிந்துக்களுக்கு இல்லை.
    ஸ்ரீ ஜயேந்திரர் மேற்கொண்ட/ஊக்குவித்த முயற்சிகளின் நிறையையும் குறையையும் இந்த பின்னணியில் பார்க்கவேண்டும்.ஒரு ஹிந்து சம்பிரதாய மடத்திலிருந்து இவ்வளவு தூரம் செய்ததே அரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.
    ஸ்ரீ ஜயேந்திரரின் மடத்துடனான 64ஆண்டுகால தொடர்பில் இரண்டு நிகழ்ச்சிகள் முன் நிற்கின்றன. ஒன்று, அவர் திடீரென மடத்தை விட்டு வெளிச்சென்றது.இதைப்பற்றி இப்போது பேசுவது உசிதமல்ல.
    இரண்டாவது, அவர்மீது திணிக்கப்பட்ட பொய் வழக்கு. இதில் உண்மை இல்லை என்பதை உச்ச நீதி மன்றம் பெய்ல் வழங்கிய தீர்ப்பிலேயே கூறிவிட்டது. ஆனாலும் வழக்கு உரிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வர 10 ஆண்டுகளாயின. இது ஒவ்வொரு ஹிந்துவும் மனவேதனையுடன் கழித்த காலமாகும். இந்த நாட்களில் தமிழ்ப் பத்திரிகைகள் தாறுமாறாகச் செய்திகள் வெளியிட்டன. ஸ்ரீ ஜயேந்திரர் அமைதி காத்ததுடன் உயர்ந்த சன்யாசிக்குரிய பக்குவத்துடன் நடந்து வழிகாட்டினார்.
    சமூகப் பணிகளில் ஈடுபடும் ஒரு ஹிந்து மடத்திற்கும் சன்யாசிக்கும் என்னவெல்லாம் துன்பம் வரும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
    இவற்றையெல்லாம் தாங்கி, தாண்டி வழிகாட்டிய ஸ்ரீ ஜயேந்திரருக்கு நமது அஞ்சலிகள்.

  3. Jதூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை என்ற ஊரில் ஒரு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. சுவாமிகள் பெயரில் நடைபெறும் இக் கல்லூரியின் நிா்வாக பொ?றுப்பு உள்ளுா் மக்களிடமே உள்ளது.இருப்பினும் இந்த பள்ளிக்கு வருடம் தோறும் பெரும் தொகை உதவியாக ஸ்ரீ சங்கர மடம் எந்தவித விளம்பரம் பிரதிபலன் இன்றி செய்து வருகின்றது. மகாசுவாமிகள் கல்லூரிக்கு பலமுறை வந்துள்ளாா்கள்.அவரது திருவடிகளில் வணங்கி ஆசி பெற்ற அனுபவம் அருமை.சுவாமிஜி கையால் பெற்ற குங்குமம் எனக்கு மனநிறைவைத்தந்தது. கைது செய்து சிறையில் அடைத்த அன்று என் மனம் பட்ட வேதனை ….அளவிடமுடியாதது. சிறையில் அடைக்காமல் வழக்கை நடத்தியிருக்கலாம். முட்டாள்கள்.நயவஞ்சகா்கள்.

  4. பொது வாழ்வில் தியாக மனப்பான்மையோடு ஈடுபடும் நபா்களுக்கு அதிக வேதனை உண்டு.அத்தகைய மாமனிதர்கள் மகான்கள் பட்ட பாடுகளை அவர்களது சரித்திரத்தில் கொஞ்சமே சொல்லப்பட்டுள்ளது.ஸ்ரீராமன் படாத வேதனையா துன்பமா. தேள் கொட்டுவது அதன் இயல்பு.சுடசுட ஜொலிப்பது சான்றோா் பண்பு. -ஜெயேந்திரா் குங்குமம் அள்ளும் காட்சியைப் பாருங்கள். தெய்வீகம் உருவம் பெற்றதுபோல் இல்லை!

  5. A big loss to the society. Sri Jayendrar Saraswathi swamigal did not confine himself to just religious activities but indulged in many societal activities also. He reached out to the dalits and provided education to many poor sections of the society via institutions built by the mutt.

    Unfortunately this was not liked by the politicians & they indulged in mud slinging & defaming him.

    His arrest, specially was a big blow & it greatly affected him & the mutt.

    We sincerely hope that Sri Vijayendra Saraswathi Swamigal continues & furthers the good work done by his Guru.

  6. //ndulged in many societal activities also//

    தவறான சொற்பிரயோகம். இன்டல்ஜ் எனற வினைச்சொல், மோசமான நடத்தை-நடத்தைகளைக் குறிப்பிடவே. சமூக சேவை என்பது நன்னடைத்தை. சமூக சேவைகள் பல‌ செய்தார் என குறிப்பிட Sri Jayendrar Saraswathi swamigal did not confine himself to just religious activities but performed (or did) many societal activities also என்று எழத வேண்டும்.

    //Unfortunately this was not liked by the politicians & they indulged in mud slinging & defaming him.// இங்கே அதே வினைச்சொல் சரியாகப் பயனபடுத்தப்படுகிறது.

    ஆனாலும் இக்கருத்து எனக்கு உடன்பாடில்லை. அரசியல்வாதிகளுள் ஒரேயொருவர்தான் இந்த டிஃபேமைச் செய்தார். அவரும் மறைந்துவிட்டார். கருநாநிதி அரசாக இருந்தால் நடந்தேயிருக்காது என்று இந்துக்கள் கூட இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதி எவரும் மறைந்த சங்கராச்சாரியாரை தனிநபர் விமர்சனம் செய்ததே கிடையாது. (அவர்கள் தொண்டர் படை செய்திருக்கலாம். கீழ்மட்டத்தில் நாகரிகம் எதிர்பார்க்கக்கூடாது) எல்லா அரசியல்வாதிகளும் தலித் ரீச்சைப் பார்க்கத்தான் செய்தார்கள். கட்சித்தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கைகளில் எல்லாருமே நீங்கள் குறிப்பிட்டதையே சொன்னார்கள். இப்படியிருக்க பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளைத் திட்டுவது உணர்ச்சிப்பெருக்கின் மிகை.

    உண்மையில் நடந்ததென்ன? மறைந்தவர் தன் மடத்தலைமை காலத்தில் தலித்துக்களிடம் உரையாடியது; பல சமூக சேவைகளில் இறங்கியது – மடத்தில் பழைமைவாதிகளைக் கோபமடையச்செய்ததுதான். அவர்களில் ஒருவர்தான் சங்கரராமன். சீனப்பயணமே செய்யக்கூடாதென்று உயர்நீதிமனறத்தில் வழக்கு போட்டவர்கள் யார்? இந்துக்கள். வேறெவருமே இல்லை.

  7. தவறான சொற்பிரயோகம்.

    I stand corrected, BSV.

    அரசியல்வாதி எவரும் மறைந்த சங்கராச்சாரியாரை தனிநபர் விமர்சனம் செய்ததே கிடையாது.

    Hence I beg to differ. Many a time when mu. ka was asked whether stalin will be his successor. he ha s said ” DMK is not sankara mutt.”. Probably, your “favourite” leader is unaware that Sankara mutt does not elect its head dynastically.

    Also, with respect to the Sankararaman case, though mu.ka did not make an open comment, sun TV portrayed the Swamiji in extremely poor light.

    Even after the verdict was out, most of the politicians expressed the view that the court had favoured the Seer.

    As for the obituaries, it is a convention to not speak bad of the dead & not too much must be read into this.

    As far as the Dravidian leaders’ relationship with the sankara mutt is concerned, I am sure you know better about how your Godfather EVR badmouthed the mutt.

  8. உண்மையில் நடந்ததென்ன? மறைந்தவர் தன் மடத்தலைமை காலத்தில் தலித்துக்களிடம் உரையாடியது; பல சமூக சேவைகளில் இறங்கியது – மடத்தில் பழைமைவாதிகளைக் கோபமடையச்செய்ததுதான். அவர்களில் ஒருவர்தான் சங்கரராமன். சீனப்பயணமே செய்யக்கூடாதென்று உயர்நீதிமனறத்தில் வழக்கு போட்டவர்கள் யார்? இந்துக்கள். வேறெவருமே இல்லை.
    ———–
    இந்துக்கள் வேறெவருமே இல்லை என்ற கருத்து நியாயமானதல்ல. இந்து-தலீத் என்று சதா தீமுட்டும் கருத்துக்களை பதிவு செய்வது பண்பாடு அல்ல.

    இருப்பினும் ஸ்ரீஜெயேந்திரா் வாழ்வின் முக்கிய அம்சங்களை தாங்கள் புரிந்துகொண்டீர்கள்.மகிழ்ச்சி.
    ஸ்ரீஜெயேந்திரா் சங்கரமடத்தை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் போல் ஆக்க நினைத்தார்.

    வெளிப்படையாக மேற்படி கருத்தை பகிரங்கப்படுத்தனார்.

    சங்கர்ராமன் என்ற கயவனுக்கு இது பிடிக்கவில்லை.அவன் சதா சங்கராச்சரியாரை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான் என்பதும் உண்மை.சீனா அரசுதான் விரும்பி அழைத்தது.நீதி மன்றத்தில் தடை வாங்கிவிட்டான். சீனா சென்றிருக்க வேண்டும்.இந்தியர்கள் வாழும் உலக நாடுகள் அனைத்திற்கும் அவர் செல்ல தயாராக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *