இது தாண்டா பட்ஜெட்!

அரசாங்கங்களின் நிதிநிலை அறிக்கை என்பது, வரும் நிதி ஆண்டில் அரசு பெற உள்ள வருவாய், செய்ய உள்ள செலவினங்கள் குறித்த திட்டமிடல் ஆகும். கூடவே சென்ற நிதியாண்டின் சாதக பாதகங்களும் அலசப்பட வேண்டும். ஆனால், சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவா என்ற மீள்பார்வை முழுமையாகச் செய்யப்பட்டதில்லை. இதனை ஊடகங்களும் கண்டுகொண்டதில்லை.

மாறாக, அரசால் செய்யப்படும் வரியின மாற்றங்களால் எந்தெந்தப் பொருள்கள் விலை உயரும், எவை விலை குறையும் என்ற மிகச் சாதாரணமான புரிதல் மட்டுமே இதுவரையிலான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் காணப்பட்டது. அத்துடன், தனிநபரின் வருமான வரிவிதிப்புக்கான உச்ச வரம்பு மாற்றமும் முக்கிய அம்சமாக இருந்து வந்தது.

இதைவிட நகைச்சுவை, உலகில் வேறெங்கும் இல்லாத நிகழ்வாக, இந்தியாவில் மட்டுமே ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதிலும், பெரும்பாலான அறிவிப்புகள் நாடாளுமன்ற அவைகளில் மேஜையைத் தட்டி கரவொலி பெற மட்டுமே உதவி வந்தன. அவற்றில் பல அறிவிப்புகள் செயல் வடிவம் பெற்றதில்லை.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே, நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதில் புதிய மாற்றம் தென்படத் துவங்கியது. முதலாவதாக, இதுவரை பொது நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுவந்த ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, ரயில்வே திட்டங்களுக்காக பொது நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. புதிய ரயில்வே திட்டங்களிலும் முக்கியமானவை மட்டுமே நிதிநிலை அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டன. புதிய ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பை அந்தந்த பிராந்திய ரயில்வே நிர்வாகிகளே முடிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானபோதும், அரசின் முடிவு சரியானதே என்பதை கடந்த ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்கள் உணர்த்தியுள்ளன.

அதேபோல, தனிநபர் வருமான வரி விதிப்பில் கடந்த மூன்றாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் வருமான வரி செலுத்தவே பலர் தயங்கிக்கொண்டுள்ள சூழலில் இருக்கும் நிதியாதாரத்தை இழக்க அரசு தயாராக இல்லை என்பதே இதன் காரணம். இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டதால், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. அரசு எதிர்பார்ப்பதுபோல வருமான வரி செலுத்தத் தகுதி உள்ள அனைவரும் தயக்கமின்றி வரி செலுத்த முன்வரும்போது, வருமான வரிவிகிதம் தாமாகவே குறையக் கூடும்.

மூன்றாவதாக, பொருட்கள் மீதான வரிவிதிப்புக்கான் பொறுப்பை, அனைத்து மாநிலங்களும் அங்கம் வகிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆணையத்திடம் கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்படைத்துவிட்டது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமலான பின் வழக்கமான நிதிநிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய தேவை எழவில்லை. ஏனெனில், சந்தை மற்றும் பயன்பாட்டு நிலவரத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் கருத்துகளை ஏற்று ஜி.எஸ்.டி. வரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சீரமைக்கப்படுகிறது. இது ஓர் பொருளாதாரப் புரட்சியாகும். எனவேதான் இந்த ஆண்டு, நிதிநிலை அறிக்கையின் தாக்கத்தால் விலை உயரும் – விலை குறையும் பொருள்களின் பட்டியலை வெளியிட்டு ஊடகங்கள் மக்களை மிரட்ட முடியவில்லை.

அதாவது, இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இந்த நிதிநிலை அறிக்கைக்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே.

மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 18 லட்சம் பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளனர். அதேபோல மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. மூலமாகவும் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது. இந்த அழுத்தமான பொருளாதார பலத்தின் மீதுதான் தற்போதைய நிதி நிலை அறிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையின் சில சிறப்பம்சங்கள்:

  • விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு.
  • ஊரக வளர்ச்சிக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • உள்கட்டமைப்புக்கு 5.97 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • முத்ரா வங்கிக்கடனாக ரூ. 3 லட்சம் கோடி வழங்க இலக்கு.
  • பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • ரயில்வே துறைக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • உணவு மானியத்துக்கு ரூ. 1.69 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
  • 1.75 கோடி வீடுகளுக்கு புதிதாக மின்னிணைப்பு.
  • புதிதாக 2 கோடி கழிப்பறைகள் கட்டத் திட்டம்.
  • வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையின் அளவு ஜி.டி.பியில் 3.3 சதவிகிதமாக கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
  • புதிதாக 180 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • உதான் திட்டத்தில் செயல்படாமல் உள்ள 56 விமான நிலையங்களும், 31 ஹெலிகாப்டர் தளங்களும் இணைக்கப்படும்.
  • ஜன்தன் திட்டம் 60 கோடி பேருக்கு ஓய்வூதியத் திட்டத்துடன் விஸ்தரிக்கப்படும்.
  • நிறுவன வரி 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைப்பு.
  • பங்குச்சந்தை வருவாய்க்கு 10 சதவிகித மூலதன ஆதாய வரிவிதிப்பு.
  • நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு (ஜி.டி.பி.) ரூ. 160 லட்சம் கோடியாக இருக்கும். இது உலகின் 7-வ்து பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

இவ்வாறு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல அம்சங்கள் புதியவையாகவும், பிரமாண்டமானவையாகவும் உள்ளன. உள்கட்டமைப்பு, விவசாயம், ஊரக வளர்ச்சி, கல்வி, தொழில்துறை, பொருளாதார நலம் ஆகிய பல பிரிவுகளில் தொலைநோக்கு சிந்தனையுடன், தெளிவான இலக்குகளுடன், நிதிநிலை அறிக்கை வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை. இதை ஏன் கடந்த மூன்றாண்டுகளில் செய்யவில்லை என்று கேள்வி கேட்பவர்கள், இந்தக் கட்டுரையை ஆரம்பத்திலிருந்து மீண்டும் படிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கும் என்று ஊடகங்கள் கட்டியம் கூறின. ஆனால், மோடியும் ஜேட்லியும் தாங்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்லர், எதிர்காலத் தலைமுறையைக் கருதும் தலைவர்கள் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையால் நிரூபித்திருக்கின்றனர். அவர்களுக்கு நல்லாதரவு அளிப்பது தேசத்தின் கடமை.

இந்த நிதிநிலை அறிக்கை செயலாக்கம் பெறும்போதுதான், புதிய இந்தியாவுக்கான ஏணியில் நாம் ஏற முடியும். இந்த அறிவிப்புகள் விரைவில் செயலாக்கம் பெறும் என்று நம்புவோம். அதை விழிப்புடன் கண்காணிப்போம்!

3 Replies to “இது தாண்டா பட்ஜெட்!”

  1. வந்தே மாதரம். அருமையான விளக்கம். பலமாக புரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. எழுத்துப்பிழைகளை சரி செய்து விடுங்களேன். வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த். (பாதுகாப்புத்துரை)

  2. உங்கள் நம்பிக்கை வாழ்க! ஆனால், ” Map is not the territory ” என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை அம்சங்களயும் அமல் படுத்தப்போவது யார்? நமது ஊதிப்பெருத்த அதிகார வர்கத்தினர் தானே ? இவர்கள் இதுவரை எதையாவது முழுதாக, உருப்படியாகச், சரியாகச் செய்திருக்கிறார்களா [ மக்களுக்கு இடர் தருவதைத் தவிர]?
    எம்.பிக்களுக்கு ஊதிய உயர்வு தரும் முறை எந்த விதத்தில் நியாயமானது? இதே நிதி மந்திரி சிலரின் பென்ஷன் விஷயத்தில் [ 25-30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விஷயத்தில்] ரிவிஷன் செய்ய மறுத்து வருவது ஏன்? இவருக்கு நியாய உணர்வு சிறிதாவது இருக்கிறதா?
    விவசாயிகள் கஷ்டப்படுவது தேவைப்பட்ட பொருள்களின் விலை உயர்வினால்தான். இவற்றை பன்னாட்டு ரசாயனக் கம்பெனிகள் தானே நிர்ணயிக்கின்றனர்? இந்த ரசாயானங்களினால் கேடுதான் விளைகிறது என்பது நிறூபிக்கப்பட்ட பின்னரும் இவற்றைத் தடைசெய்யாமலிருப்பது எந்த வகையில் நியாயம்?
    இப்படித் துருவி ஆராய்ந்தால், எதிர் காலத்தில் தீமை விளைவிக்கக்கூடிய எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.
    ஆனால் தனி நபர் மீதான வருமான வரிவிதிப்பு முட்டாள்தனமானது மட்டுமல்ல, காட்டுத்தனமானது. விவரத்திற்குப் போகாமல் ஒரு உதாரணம் சொல்கிறேன். மாதம் Rs.40000 வருமானமுள்ள தனி நபர், கணவன்-மனைவி இருவரும் சம்பாதிக்கும் குடும்பம், இரண்டு-மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம், குழந்தைகளுடன் பெற்றோரையும் கொண்ட குடும்பம்- இந்த எல்லா நிலைகளிலும் பணத்தின் மதிப்பு ஒன்றுதானா? இல்லை. பின், அனைவருக்கும் ஒரே வரிவிகிதம் எப்படிச் சரியானதாகும்? வருமானத்திற்கு வரி என்பது 19ம் நூற்றாண்டில் தோன்றிய வழக்கம். இன்று பொருளாதாரம் எவ்வளவோ மாறிவிட்டது. அரசினருக்கு பணம் ஈட்ட எவ்வளவோ வழிகள் இருக்கின்றன, பணத்தையும் சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டு, வருமானவரியையே- அதுவும் நடுத்தர வர்க்கத்தையே பெரிதும் பாதிக்கும் ஒரு முறையை- கட்டி அழும் ஒரு நிதி மந்திரியை எப்படிப் பாராட்ட முடியும்? இந்தத்துறையில் இவர் செய்திருப்பது ஆரம்பப்பள்ளி கூட்டல்-கழித்தல் தான்!

  3. இந்த செய்திக்கு விவரம் தெரிந்தவர்கள் யாராவது விவரமாக பதில் சொல்ல்வார்களா?

    “மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவர் சுசில் சந்த்ரா கூறுகையில், ‘பணமதிப்பழிப்பு’ நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகளில் குறைந்தது 15 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் அதற்கான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எனினும், இதுவரை ஒருவர் கூட நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை. உரிய பதில் அளிக்காவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.”

    ஒரு அனுமானத்தில்,இந்த 1.98 லட்சம் பேரில்,ஒரு லட்சம் பேர் (ரூ 15 லட்சம் மட்டும் டெபாசிட்செய்தவர்கள் என்று வைத்துக்கொண்டால் ) சரியான விளக்கம் அளிக்கவில்லையென்றால் அவர்களுக்கு 10% அபராதம் விதித்தால் கூட அரசாங்கத்துக்கு 15,000 கோடி கிடைக்குமே.இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பெரிய சாதனை அல்லவா?! இதில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *