நம்பிக்கை – 1

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர்.

இவர் 1996-ஆம் ஆண்டிலிருந்து சென்னை சின்மயா மிஷனுடன் தொடர்பு கொண்டிருந்தவர். சின்மயா மிஷனின் ஆச்சாரியார்களில் ஒருவரான ஸ்வாமினி ஸ்ரீ நிரஞ்ஜனானந்தா ஜி அவர்களின் சீடராக வேத, உபநிடத, அத்வைத நூல்களையும் பகவத்கீதையையும் கற்று, அவருடைய வழிகாட்டுதலில் உத்தராஞ்சலம், ஹிமாசலப் பிரதேசம் உட்படப் பலப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றவர். ஆச்சாரியா ஸ்வாமினி ஸ்ரீ நிரஞ்ஜனானந்தா ஜியிடம் கர்ம யோகமும் பக்தி யோகமும் பயின்றவர்.

2002-ஆம் ஆண்டு ஸ்வாமி பிரம்ம யோகானந்தா அவர்களிடம் BKS ஐயங்கார் அவர்களின் முறைப்படியான யோகக்கலைக் கல்வியில், யோகாசனங்களும் பிராணாயாமும் கற்று அவற்றைத் தினமும் பயின்று வந்தவர்.

“ஆரோக்யமான உடலும் விழிப்பான மனமும் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் ஆரோக்யமாகவும் ஒளிமயமாகவும் வைத்திருக்கும்” என்கிற கொள்கையில் தீவிரப் பற்று கொண்டு வாழ்ந்தவர்.

இந்தத் தொடரை எழுதி முடித்துவிட்டு தன்னுடைய குருவான பூஜ்ய ஸ்வாமினி ஸ்ரீ நிரந்தனானந்தா ஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தார் டி.வி.ஜெயராமன். தொடரைப் படித்துவிட்டுக் கருத்தைக் கூறுமாறும் வேண்டியிருந்தார்.

அவருடைய கடிதமும், அதற்குப் பதிலாக பூஜ்ய ஸ்வாமினி ஸ்ரீ நிரஞ்ஜனானந்தா ஜி அவர்கள் எழுதிய பதில் கடிதமும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

14 அக்டோபர் 2015

ஸ்வாமினி நிரந்தனானந்தா ஜி,
ஆதி சங்கர நிலையம்,
கேரளா.

ஹரி ஓம்!

அம்மா!

அனேக நமஸ்காரங்கள்.

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.

முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான். ஏழாவது அத்தியாயத்திலிருந்து என் வயதை ஒத்த உறவினர்கள் அனைவரும் இதில் ஈடுபாடு காண்பித்தனர். ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்.

இந்தத் தொடரில் நான் கையாண்டிருக்கும் அனைத்துக் குறிப்புகளும், விவாதங்களும், கருத்துக்களும், கதைகளும், உங்களுடைய சொற்பொழிவுகளிலிருந்து நான் திரட்டியவை தான். அவற்றை அந்தந்த இடத்துக்கு ஏற்றார்போல் பயன்படுத்தியிருக்கிறேன், அவ்வளவுதான்.

தங்கள் நேரத்தில் சிறிதளவு ஒதுக்கி, தங்களுடைய மாணவன் ஒருவன் தன்னுடைய மனதில் தோன்றியதை தனக்கே உரிய மனம்போன போக்கில் கொட்டியிருக்கிறான் என்கிற எண்ணத்துடன் இதைப் படித்து, தங்கள் கருத்தைக் கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நன்றிகளுடனும் நமஸ்காரங்களுடனும்

என்றும் தங்கள் மாணவன்

டி.வி.ஜெயராமன்.

டி.வி.ஜெயராமன், குரு மாதாஜி சுவாமினி நிரஞ்சனானந்தாவுடன்

ஜெய ஹோ! ஜெயராமன்!

நம் குழந்தைகளுக்கு வேதாந்த வாழ்க்கை முறையை அற்புதமாக, எளிமையான, தெளிவான மொழியில் வழங்கியுள்ளீர்கள். இந்தச் சிறு புத்தகம் ஒவ்வொரு பள்ளியின் நூலகத்திலும் இடம் பெறவேண்டும்.

ஓர் குரு என்கிற முறையில் உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். சுயநலமற்ற உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய ஆண்டவன் அருளட்டும்!

ஓம்!

அன்புடன்

ஸ்ரீ நிரஞ்ஜனானந்தா
ஆதி சங்கரா நிலையம்
26.02.2016.

சமர்ப்பணம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். அன்பிற்குரிய என் நெடுநாளைய (பள்ளிப் பருவத்திலிருந்து) நண்பன் டி.வி.ஜெயராமன் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தான்.

“ஹரன்! உனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன். அது ஒரு குறிப்பிட்ட கருத்துப்பொருளை மையமாகக் கொண்டு நான் எழுதிய தொடர். ஒரு குடும்பச் சூழ்நிலையில் அந்தக் குடும்பத்தினர் உரையாடுவதைப் போல எழுதியிருக்கிறேன். சுமார் 60 பக்கங்கள் கொண்ட தொடர். இது உனக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும் இந்தத் தொடரைப் பற்றிய உன்னுடைய கருத்து எனக்கு மிகவும் முக்கியம். உன்னுடைய கருத்தையும் தெரிந்துகொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஒன்றும் அவசரமில்லை. நீ நிதானமாக நேரம் கிடைக்கும்போது படித்துப்பார். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்” என்றான்.

நானும், “சரி ஜெயராம். அவசியம் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த மின் அஞ்சலைப் பார்த்துவிட்டு, “முக்கியம்” என்று குறிப்பிட்டுச் சேமித்து வைத்தேன். பிறகு வேலைப்பளுவில் மறந்தே போனேன்.

சில மாதங்கள் கழித்து, எங்களுடைய பள்ளி நண்பர்கள் சந்திப்பு நடந்தபோது, எனக்கு மீண்டும் இந்தத் தொடரைப் பற்றி நினைவு படுத்தினான். நானும் தாமதம் ஆனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, உடனடியாக அதைப் படித்தேன்.

படிக்க ஆரம்பித்து இரண்டாவது அத்தியாயம் முடியும்போதே சுவாரஸ்யம் கூடியது. அடடா, இதை அப்போதே படிக்காமல் போனோமே, என்று தோன்றியது. அதன் பிறகு தொடர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். முடித்தவுடன் ஜெயராமைத் தொலைபேசியில் அழைத்து, “மிகவும் அருமையாக வந்திருக்கிறது ஜெயராம். இளம் தலைமுறையினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அழகாகத் தொகுத்து அளித்திருக்கிறாய்” என்று பாராட்டிவிட்டு, “இதை ஒரு சிறிய புத்தகமாகப் பதிப்பித்து நம்மால் முடிந்த அளவு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பரப்ப வேண்டும்” என்றேன்.

“நன்றி ஹரன். என்னுடைய நோக்கமும் அதுதான். நான் ஏற்கனவே இதை என் குருவிடம் காண்பித்து அவருடைய ஆசிகளுடன் சின்மயா மிஷன் மூலமாக ஒரளவுக்குப் பரப்பிக்கொண்டிருக்கிறேன். இதை மேலும் வெளியுலகில் உள்ள அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றான்.

“உன்னதமான இந்தச் சேவையில் நானும் சேர்ந்துகொள்கிறேன். என்னுடைய பங்களிப்பாக இதை நானே தமிழில் மொழிபெயர்த்து எழுதுகிறேன்” என்றேன்.

மிகவும் சந்தோஷத்துடன் அனுமதி அளித்தான். “உண்மையில் நான் உனக்கு அனுப்பியதே அதற்காகத்தான் ஹரன்” என்று சொல்லிச் சிரித்தான். “நீயே தமிழில் எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்” என்றான்.

அதன் பிறகு, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தி வரும் “ஹிந்து மித்திரன்” பத்திரிகையில் தொடராகத் தமிழில் எழுதினேன். ஒவ்வொரு அத்தியாயம் எழுதியவுடன் ஜெயராமனுக்கு அனுப்பி அவனுடைய அனுமதிக்குப் பிறகுதான் ஹிந்து மித்திரனில் வெளியிட்டோம்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டு, “ஹரன், தமிழில் படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பரவசமூட்டுகிறது. தாய் மொழி என்பதோடு மட்டுமல்லாமல், கருத்துப் பொருளின் ஆழம் நன்கு வெளிப்படுகிறது. படிக்கும்போது ஒரு நெருக்கமான தொடர்பை உணர முடிகின்றது. உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்றான்.

“இப்படி ஒரு அருமையான வாய்ப்பைத் தந்ததற்கு நான் தான் உனக்கு நன்றிகள் சொல்ல வேண்டும் ஜெயராம். ஆங்கிலம், தமிழ் இரண்டு தொடர்களையும் சேர்த்து ஒரே புத்தகமாகப் பதிப்பித்து இலவசமாகவே அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வோம். என்னால் ஆன உதவிகளை நான் கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றேன்.

டி.வி.ஜெயராமன் & பி.ஆர்.ஹரன்

எட்டு அத்தியாயங்களை அவனுக்கு அனுப்பி, அவனுடைய கருத்துக்களைக் கேட்டுக்கொண்டு, அவன் கூறிய சிறு சிறு மாற்றங்களைச் செய்து, அவனுடைய அனுமதியுடன் தான் பத்திரிகையில் வெளியிட்டேன்.

நான் ஒன்பதாம் அத்தியாயம் எழுதுவதற்குள், நாங்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று எல்லாம் வல்ல இறைவன் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் அவனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.  நாங்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வருத்தத்திலும் உறைந்தோம். இருப்பினும், இறைவன் தனக்குப் பிடித்தமானவர்களை சீக்கிரமாகவே அழைத்துக்கொள்கிறார் என்று எங்கள் மனதைத் தேற்றிக்கொண்டோம்.

இறை நம்பிக்கையோடும் நாட்டுப்பற்றோடும் தன் பணியை சமுதாயப்பணியாக, தேசப்பணியாக, இறைப்பணியாக நேசித்துச் செய்தவன் இறைவன் திருவடி நீழலில் இளைப்பாறச் சென்றுவிட்டான்.

கடைசி முன்று அத்தியாயங்களை எழுதும்போது என்னுள்ளே அவன் இருப்பதை உணர்ந்தேன். அவனே என்னை இயக்குவதைப் போல உணர்ந்தேன். மானசீகமாக அவனுடைய அனுமதியைப் பெற்றேன். ஹிந்து மித்திரன் பத்திரிகையில் படித்தவர்கள் பலர், தொடர் மிகவும் நன்றாக உள்ளதாகக் கருத்துத் தெரிவித்தார்கள்.

குருவருளாலுல் திருவருளாலும் அருமை நண்பன் ஜெயராமனின் விருப்பம் நிறைவேறியுள்ளது. இறைவனின் திருவடிகளில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் அந்தப் பரிசுத்தமான ஆன்மா இந்தப்பணி வெற்றிபெற அங்கிருந்தபடியே ஆசீர்வதிக்கும் என்பதில் ஐயமில்லை.

மாசற்ற பொன் போன்ற மனம் கொண்ட ஓர் உத்தமனைப் பிள்ளையாகப் பெற்ற ஜெயராமனுடைய தாயாருக்கு என்னுடைய அனேக நமஸ்காரங்கள். அவருக்கும், ஜெயராமனின் மனைவி, மகன்களுக்கும், ஏனைய குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அவனது முதலாம் நினைவு நாள் இன்று – 31 மார்ச், 2018. 

இனி, தொடருக்குள் செல்வோம்.

(தொடரும்)

6 comments for “நம்பிக்கை – 1

  1. தொடரினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன், திரு ஹரன்.

  2. ஒர் உண்மையான ஹிந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *