முகப்பு » அரசியல், புத்தகம், பொருளாதாரம்

நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்


இளம் அரசியல் விமர்சகர்  மாரிதாஸ் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி  பெரும் வரவேற்பைப் பெற்ற பதிவுகளின் கோர்வையான தொகுப்பு இந்த நூல்.  கம்யூனிசத்தால்  கவரப்பட்டு கொஞ்சநாள் அந்த முகாமில் தங்கி விரைவிலேயே  அந்த சித்தாந்தத்தின் பொருளின்மையை, அபத்தங்களை உணர்ந்து அதிலிருந்து விலகிவந்த ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலம்.

உங்களுக்கு மோதியைப் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால், இந்தப் புத்தகம் நிஜமாகவே நிறைய நிறைய புள்ளிவிபரங்களையும் பல தகவல்களையும் கொண்டது. இந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம், சாகர் மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளன.   மிக எளிய தமிழ் நடையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

“நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.

ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும். எனவே நான் உங்களுக்கு நிர்வாக விவரங்கள் சார்ந்து சில உண்மைகளை எடுத்து  சொல்லவும் – சித்தாந்தம் சார்ந்து கொள்கைகளை ஆதாரங்கள் கொண்டு விளக்கவுமே விரும்புகிறேன். நிச்சயம் உணர்வுகளை மலினமாகத் தூண்டி ஆதாயம் தேடவிரும்பவில்லை. மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திர மோதியின் மீதும் பிஜேபி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டிருக்கிறது” என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
மாரிதாஸ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 225

ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

இந்தப்  புத்தகம் முன்பதிவாக ரூ. 150 சலுகை விலைக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் முன்பதிவு செய்யப்பட்டது. அதற்குக்  கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, மாரிதாஸ் தனது ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:

வெளிப்படையாக கூறினால் நான் மொத்தம் இந்த ஆண்டு நான்கு புத்தகங்கள் வெளியிட விரும்பினேன்

01.நான் ஏன் மோதியை ஆதரிக்கிறேன்.
02.நான் ஏன் மோதியை ஆதரிக்கிறேன் (பாகம் 02)
03.கம்யூனிஸ்ட் சித்தாந்தம் தோல்விக்கு என்ன காரணம்.
04.எல்லாப் புரட்சியும் புனிதமாகாது.(இந்திய பொருளாதார அடிப்படை தெரிந்து கொள். பின் உன் போராட்ட களத்தை முடிவு செய்.)

இந்த நான்கு புத்தகங்களில் முதல் இரண்டு நரேந்திர மோடி ஏன் நல்ல நிர்வாகி என்பதைச் சித்தாந்தம் , பொருளாதாரம் , வரலாறு என்று அனைத்திலும் ஒரு தேடலாக எனக்கு வந்த கேள்விகளின் தொகுப்பு. இதில் ஏறக்குறைய அடிப்படையான அனைத்து நிர்வாக கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை உண்மையான புள்ளி விவரங்களோடு கிடைக்கும்.

மூன்றாவது புத்தகம் – கம்யூனிஸ்ட் எதனால் உலக அளவில் பொருளாதார தோல்வியைத் தழுவினர் , இன்று உலகத்தில் எதுவுமே கம்யூனிசத் நாடு இல்லை என்ற நிதர்சன உண்மையை மாணவர்களுக்குப் புரியவைக்கவும் இந்தப் புத்தகம் மூலம் முயற்சிக்கிறேன்.

நான்காவது புத்தகம் : மாணவர்கள் , பெற்றோர்கள் அனைவர்க்கும் அடிப்படை இந்திய பொருளாதாரம் மிக எளிமையாக விளக்க விரும்பி இந்த நூல் வெளியிடுகிறேன். மிக முக்கியமாக BSNL, Bank என்று 300க்கும் மேற்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இந்த அரசு தொழில் சங்கங்களால் எவ்வளவு பெரிய நாசத்தை சந்திக்கிறது என்ற உண்மை முகத்தை வெளியிட விரும்புகிறேன். அத்தோடு உணர்வை தூண்டி உருவாக்கப்பட்டு போராட்டங்கள் உண்மை என்ன என்பதையும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிடும் இந்த நூல் மூலம்- அடிப்படை பொருளாதாரம் மாணவர்களுக்கு தெரிந்துவிட்டால் எது போராட்டம் எது நாட்டுக்கு எதிரான சதி என்பதை அனைவரும் உணர்வர் என்பதால் இந்தப் புத்தகம் வெளியே கொண்டு வரவிரும்புகிறேன்.

இந்த நான்கு புத்தகமும் அனைத்து மாணவர்களும் ஒருமுறையாது படிக்க வேண்டும் என்பது என் ஆசை.  இங்கே எழுத்துலகத்தில் வணிக நோக்கத்தோடு எழுதப்படும் பல குப்பை புத்தகங்களை நான் அறிவேன், நானே அவர்களை வெறுத்தவன் – அந்த தவறை நான் செய்யமாட்டேன் என்பதை உறுதி அளிக்கிறேன்”.

மாரிதாஸ் இது போன்று தொடர்ந்து நூல்களை எழுதி தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஜனநாயக  அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த  வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்

 1. அத்விகா on March 11, 2018 at 8:57 am

  விழாவில் நேரில் கலந்து கொண்டேன்.ராஜா கிருஷ்ணமூர்த்தியை இந்த மேடையில்தான் முதன்முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் உரை மிகப்பிரமாதம். மாரிதாசின் உரையும் ராகவன், அன்பழகன் ஆகியோர் உரையும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் விதத்தில் அமைந்தது.விழா முடிந்து வீடு திரும்பிய பின் பார்த்தால் முழு நிகழ்ச்சியும் யூ ட்யூப் காணொளியாக பதிவேற்றம் ஆகிஇருந்ததை, நேரில் வரமுடியாதவர்களுக்கு பகிர்ந்தேன்.நன்றி.

 2. TES Raghavan on March 17, 2018 at 10:20 am

  இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவரவேண்டும் நாட்டு மக்கள் பலரும் பொருளாதார அடிப்படைகளைபுரிதலோடு உணர இதில் வாய்ப்புண்டு. ஜனநாயகம் என்ற பெயரில் பெரும் பொறாமைத் தீயை வளர்த்து சுய லாபம் ஒன்றே குறிக்கோளாக தங்கள் குடும்பத்துக்குப்பெரும் சொத்து சேர்க்கும் பணி ஒழிய மனத்துக்கண் மாசின்றி வாழ
  நல்லோர் பலரும் படித்து நேர்மையான தலைவர்களைத்தேர்ந்தேடுக்க இப்புத்தகம் நம் நாட்டு மொழிகள் குறிப்பாக இந்தி, மராட்டி, வங்காளம் ஒரியா, அஸ்ஸாமீஸ்,பஞ்சாபி இவற்றில் மொழி பெயர்க்கப்படவேண்டும் அன்பன் இராகவன்

 3. இந்துவா on March 18, 2018 at 3:09 am

  //நல்லோர் பலரும் படித்து நேர்மையான தலைவர்களைத்தேர்ந்தேடுக்க இப்புத்தகம் நம் நாட்டு மொழிகள் குறிப்பாக இந்தி, மராட்டி, வங்காளம் ஒரியா, அஸ்ஸாமீஸ்,பஞ்சாபி இவற்றில் மொழி பெயர்க்கப்படவேண்டும் அன்பன் இராகவன்//
  அது தேவை தான் திரு இராகவன். நாசகார திராவிட பிரிவினைவாத கூட்டம் ஆட்டம் போடும் தமிழ்நாட்டில் இந்த நூல் தமிழில் வந்தது முதல் தேவை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*