ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

மார்ச் 5, 1666-ஆம் வருடம் ராய்காட்டிலிருந்து புறப்பட்டு ஔரங்காபாத்தை வந்தடையும் சிவாஜிக்கு, ஐந்நூறு முகலாய குதிரைப்படையினரும், அதே அளவிலான காலாட்படையினரும் அணிவகுத்து மரியாதை செய்கிறார்கள். சிவாஜியின் படையணியில் அவரது மிகச் சிறந்த மந்திரிகளும், படைத்தலைவர்களும் இருந்தார்கள். ஔரங்காபாத் நகரம் முழுவதும் திரண்டுவந்து ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சிவாஜியை மிகச் சிறிய ஜமீந்தாராக எண்ணிக்கொண்ட ஔரங்காபாத் கவர்னர் சஃபி ஷிகான் கான், சிவாஜியை நேரடியாக வரவேற்க வரவில்லை. தன்னைவந்து சிவாஜி பார்க்கவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த சஃபி ஷிகானை உதாசீனப்படுத்திய சிவாஜி நேராக ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்குப்போய்த் தங்குகிறார்.

கவர்னர் சஃபி ஷிகான் கானும் அவரது பிரதானிகளும் சிவாஜியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டவுடன் கோபமடைந்த சிவாஜி, “யாரிந்த சஃபி ஷிகான் கான்? என்ன மாதிரியான பதவியிலிருக்கிறார், அந்த ஆள்? என்னை எதற்காக வந்துபார்த்து மரியாதைசெய்யவில்லை?” எனச் சீறுகிறார். அதேநாள் மாலையில் சஃபி ஷிகானும், அவரது பிரதானிகளும் சிவாஜியின் தங்குமிடத்திற்கு வந்து அவருக்கு மரியாதைசெய்கின்றனர். சிவாஜி மறுநாள் கவர்னரின் இருப்பிடத்திற்குச் சென்று அந்த மரியாதையைத் திரும்பச் செலுத்துகிறார்.

சிவாஜியின் ஆக்ரா பயணத்திற்காக முகலாய அரசு கொடுக்கவேண்டிய ஒரு இலட்சம் ரூபாய்கள் வந்துசேரும்வரை ஔரங்காபாத்தில் தங்கியிருக்கும் சிவாஜி, அது கைக்கு வந்துசேர்ந்ததும், ஆக்ரா நோக்கிப் பயணத்தைத் தொடர்கிறார். ஔரங்காபாதிலிருந்து ஆக்ராவரைக்கும் சிவாஜியும் அவரது படையணிகளும் மிக மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். அவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது ஔரங்கஸிப்பின் உத்தரவு. அரசகுலத்தில் பிறந்த ஒருவருக்குத் தரப்படவேண்டிய அத்தனை மரியாதைகளும் சிவாஜிக்கு அளிக்கப்பட்டன.

மே மாதம், ஒன்பதாம் தேதி, 1666-ஆம் வருடம் ஆக்ராவை வந்தடைகிறார், சிவாஜி.

அதே வருடம் ஜனவரி 22-ஆம் தேதி ஷாஜஹான் ஆக்ராவில் காலமானார். முகலாய அரசின் முழு அதிகாரமும் ஔரங்கஸிப்பின் கைக்கு வந்து சேருகிறது. அரியணைக்குப் போட்டியிட யாரும் இல்லாத நிலைமையில் மிக மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்த ஔரங்கஸிப் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். சபிக்கப்பட்ட‘  மராட்டாக்களின் தலைவரன மலை எலி‘  சிவாஜிக்கு ராஜ்ஜியத்தின் செல்வச் சிறப்பையும், வலிமையையும் காட்டுவதற்காக ஆக்ரா அரண்மனை மிக அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

சிவாஜி தனது படைகளுக்கெதிராகச் செய்த அட்டூழியங்களைச் சொல்லி, இனியும் அதுபோலச் செய்துதால், தான் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என அவருக்கு உறுதியாக எடுத்துச் சொல்ல ஔரங்கஸிப் எண்ணிக்கொண்டிருக்கிறார். முடிந்த அளவிற்கு சிவாஜியைக் குறைவாக நம்பி, அவர்மீதான தனது பிடியை இறுக்குவது — தனக்கு அடிபணிய மறுத்தால் கடுமையாக தண்டிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ஔரங்கஸிப்.

ஆக்ராவை மே 9, 1666 அன்று வந்தடையும் சிவாஜியை ராஜா ஜெய்சிங்கின் மகனான ராம்சிங் வரவேற்கிறார். முகலாய அரசின் சார்பாக யாரோ ஒரு சாதாரண அதிகாரி தன்னை வரவேற்க வந்திருப்பதனை அறிந்த சிவாஜி கோபம் கொள்கிறார். ராஜா ஜெய்சிங்கின் அரண்மனைக்கும் தாஜ்மஹாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிவாஜி குடியமர்த்தப்படுகிறார். அந்தப் பகுதிக்கு ஷிவ்புரா எனத் தற்காலிகமாகப் பெயரிடுகிறார்கள். சிவாஜியைக் குஷிப்படுத்துவதற்காக.

பின்னர் அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நாளும் வந்தடைகிறது. மே 12, 1666ம் நாளன்று சிவாஜி ஔரங்கஸிப்பைச் சந்திக்கப் புறப்படுகிறார். இந்தியாவில் அன்றைய தினம் வாழ்ந்த இரு மாபெரும் மனிதர்கள் — ஒருவருக்கெதிராக ஒருவர் வெறுப்புடன் கடும் போர்புரிந்தவர்களான அவர்களிருவரும் உலகின் மூலை, முடுக்குகளில் அறியப்பட்ட முகலாய ராஜதர்பாரான திவான்-இ-ஆமில் சந்திக்கவிருந்தார்கள். திவான்-இ-ஆம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முகலாய அரசப்பிரதானிகள், ராணுவத்தினர் அவரவரின் தகுதிக்கேற்ப தர்பாரின் உள்ளே அமைந்த தங்க வளையத்தடுப்புகளுக்கும், வெள்ளி வளையத்தடுப்புகளுக்கும் உள்ளேயோ அல்லது வெளியேயோ அமர்ந்திருக்கிறார்கள். முகலாய அரசு அதன் உச்சத்தில் இருந்த காலம் அது. விலைமதிப்பில்லாத மயிலாசனத்தில் ஔரங்கஸிப் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் நின்றிருக்கிறார்கள்.

சிவாஜி ஒரு மந்திரவாதி என ஔரங்கஸிப்பின் மாமனான சைஸ்டாகான் எச்சரித்திருந்ததால், ஔரங்கஸிப் அதற்கு எதிராக எடுக்கவேண்டிய அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் சைஸ்டாகான் அன்றைக்கு அரசவைக்கு வரவில்லை. அவரது மனைவி, ஔரங்கஸிப்பின் மனைவி, மகள்கள் ஆகியோர், அரண்மனைப் பெண்களுடன் திரைக்குப்பின் அமர்ந்து, அரசவை நடவடிக்கைககளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜியால் கொல்லப்பட்ட அவளது மகனின் நினவுடன், சைஸ்டாகானின் மனைவி சிவாஜியை எதிர்நோக்கிக் கோபத்துடன் காத்திருக்கிறாள்.

நிராயுதபாணியான சிவாஜியுடன், அவரது சொந்த அலுவலர்கள் பத்துபேர்கள் மட்டுமே அழைத்துவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ராஜா ஜெயசிங்கின் மகனான ராம்சிங் சிவாஜியையும், அவரது மகனான சாம்பாஜியையும் (9 வயது) அரசவைக்கு அழைத்து வந்திருக்கிறார். ராம்சிங்கால் அறிமுகப்படுத்தப்படும் சிவாஜியை “ஆயியே சிவாஜி…(வாருங்கள் சிவாஜி)” என்கிறார் ஔரங்கஸிப்.

ஔரங்கஸிப்பின் முன்னர் நிறுத்தப்பட்ட சிவாஜி அவருக்கு மூன்றுமுறை பணிந்து சலாமிடுகிறார். அவ்வாறு சலாம் செய்ய மறுத்து ராம்சிங்குடன் வாதிட்டு இறுதியில் அரசவை விதிகளை மீறாமல் இருக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. முதலாவது சலாம் மகாதேவுக்கு (சிவன்); இரண்டாவது சலாம் பவானிக்கு; மூன்றாவது சலாம் அவருடைய தந்தைக்கு என்பது சலாம்களுக்கு சிவாஜியின் கொடுத்த அர்த்தம். மூன்றாவது சலாமிற்குப் பிறகு ஔரங்கஸிப்பினுடன் பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார் சிவாஜி. அரசவை விதிகளின்படி யாரும் பாதுஷாவை ஏறிட்டு நோக்கக்கூடாது. பாதுஷாவே அழைத்தாலன்றி வரக்கூடாது அல்லது பதிலளிக்கக்கூடாது என்பது விதி. சிவாஜியை இரண்டாம்தர அரசவைப்பிரதானிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லும்படி ராம்சிங்கிடம் கூறுகிறார் ஔரங்கஸிப்.

மரியாதை நீரூற்று இருக்கும் பகுதிக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்னர் பெண்கள் பகுதியிலிருந்து சைஸ்டாகானின் மனைவி தன் மகனைக் கொன்ற சிவாஜியை உடனே கொல்ல வேண்டும் எனக் கூச்சலிடுகிறாள். ஔரங்கஸிப்பால் அவளை உடனடியாக அடக்க இயலவில்லை. ஒருவேளை அது சிவாஜியை அவமானப்படுத்த ஔரங்கஸிப்பே செய்ததாக இருக்கலாம் என்றாலும், உறுதியாகத் தெரியவில்லை.

இதனால் சிறிது எரிச்சலடையும் சிவாஜி, தான் நின்றிருக்கும் பகுதியில் தனக்கு முன்னால் நின்றிருப்பது யார் என ராம்சிங்கிடம் கேட்கிறார். அவர் ராஜா ஜஸ்வந்த்சிங் எனப் பதில்கூறுகிறார் ராம்சிங். ஜஸ்வந்த்சிங் சிவாஜியை போர்களில் தோற்கடித்தவர் என்றாலும் அவரை உடனடியாக சிவாஜிக்கு அடையாளம் தெரியவில்லை. மேலும் அவரைத் தனக்கு இணையாக நினைக்கவில்லை. தன்னை இப்படி இரண்டாம் நிலை ஆசாமிகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துவந்து ஔரங்கஸிப் அவமானப்படுத்தி விட்டதாக சிவாஜி பல்லைக் கடித்துக் கொண்டிருக்கையில், சிவாஜிக்கு வழங்கப்படவிருக்கும் பதவி, பட்டம் குறித்து வாசிக்கப்படுகிறது. அதன்படி சிவாஜிக்கு வருடம் 30,000 ரூபாய்கள்  நஸ்ர் (பரிசு) வழங்கப்படுவதுடன், ஐயாயிரம் (பாஞ்ச் ஹஸாரி) குதிரைகள் அடங்கிய படையின் தலைமையாளராக ஆக்கப்படுவார். அதே பாஞ்ச் ஹஸாரித் தலைமை பதவி அவரது மகனான ஒன்பது வயது சாம்பாஜிக்கும் வழங்கப்படுவதாக வாசிக்கப்படுவதனைக் கேட்ட சிவாஜி அறிவிப்பைக்கேட்டுக் கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறார்.

ஆக்ராவிற்கு வருவதற்குமுன்னர் ராஜா ஜெய்சிங்குடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சிவாஜி பிற அரசர்களுக்கு இணையாக நடத்தப்படுவதுடன், தக்காணப்பகுதி அவருடைய பொறுப்பில் விடப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராஜா ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிடம் எடுத்துச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஔரங்கஸிப் இந்த சந்திப்பிற்கே தடைவிதித்திருக்கலாம். அல்லது ஜெய்சிங் சொன்னதை ஔரங்கஸிப் ஏற்றுக்கொள்ள மறுத்து, வேண்டுமென்றே அவரை அவமானம் செய்வதற்காக அவருக்கும் அவரது மகனுக்கும் ஒரே பதவியைத் தருவதற்கு நினைத்திருக்கலாம். இதனைக் கொண்டு சிவாஜியை எளிதாகக் கட்டுப்படுத்தவும் அவர் நினைத்திருக்கக் கூடும். ஔரங்கஸிப் அவ்வாறு செய்யக்கூடிய இயல்புடையவர்தான். ஆனால் இந்தச் சந்திப்பிற்கு இருவருமே தயாராக இல்லை என்பதுதான் அடிப்படை  உண்மை.

சிவாஜி இதுபோன்ற சிறுமைகளைத் தாங்கிக்கொள்கிற ஆளில்லை. கோபத்துடன் ராம்சிங்கிடம் தனது உடைவாளைத் தரும்படி கர்ஜிக்கிறார். எனக்கும் என் மகனுக்கும் ஒரே பதவியா? இந்த அவமானம் எனது மக்களைச் சென்றடையுமுன் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனக் கோபத்துடன் கூறி ஔரங்கஸிப்பை நோக்கிச் செல்லமுயன்றவரின் தோள்களில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சிவாஜி மயங்கிவிழுகிறார்.

ஔரங்கஸிப் அரசாங்க நடவடிக்கைகளில் மிக உறுதியாக இருக்கும் ஒரு மனிதர். அரசவை சடங்குகளை மீற அவர் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சிவாஜி இருக்கும் பகுதியில் நிகழும் குழப்ப நிலையைக் குறித்து அவருக்குச் சொல்லப்படுகிறது.  சிவாஜியை மறைத்துநிற்கும் ராம்சிங்கிடம் காரணத்தைக் கேட்கிறார் ஔரங்கஸிப்.

“காட்டில் கட்டற்று வாழ்ந்த புலிக்கு தர்பாரின் அடைபட்ட சூழ்நிலை பிடிக்கவில்லை” எனப் பதிலளிக்கிறார் ராம்சிங்.

படுக்கையில் படுத்துக் கிடக்கும் சிவாஜியை நோக்கிக் கைகாட்டும் ஔரங்கஸிப் “இந்த ஆளை எப்படிச் சிக்க வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார், கோபத்துடன்.

ஜெபுன்னிஸ்ஸா பேகம்

பெண்கள் பகுதியிலிருந்து நடப்பதனைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஔரங்கஸிப்பின் பிரியத்திற்குரிய மகள் ஜெபுன்னிஸா பேகம், உடனடியாக சிவாஜிக்கு முதலுதவி செய்யவேண்டும் என ஔரங்கஸிப்பை நோக்கிச் சைகை செய்கிறாள். அதனை ஏற்கும் ஔரங்கஸிப், உடனடியாக சிவாஜிக்கு மயக்கம் தெளிவித்து, அவருடைய இருப்பிடத்தில் கொண்டு விட்டுவிடும்படி ராம்சிங்கிற்கு உத்தரவிடுகிறார். ஆக்ராவின் கொத்வாலை (புலந்த்கான், தலைமை போலிஸ் அதிகாரி) அழைக்கும் ஔரங்கஸிப், சிவாஜியின் வசிப்பிடத்தைச் சுற்றிக் கடுமையான கண்காணிப்புசெய்ய ஆணையிடுகிறார். அத்துடன் சிவாஜி அரண்மனைக்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கிறார்.

சிவாஜி சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய வாழ்வும், சாவும் ஔரங்கஸிப்பின் கைக்குச் சென்றுவிட்டது. அதனைக் குறித்து ஔரங்கஸிப் மிகவும் மகிழ்ந்திருப்பார் என்றாலும் சிறிது காலத்திலேயே அவ்வாறு செய்ததற்காக பெரிதும் வருந்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும். ஔரங்கஸிப் தனது குறுகிய பார்வையால் அதனை இழந்தார்.

[தொடரும்]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *