முகப்பு » புத்தகம், வழிகாட்டிகள்

சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு


தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985).  சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது.  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள  ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு‘ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது.  மூன்று பாகங்களாக,  1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது.

நூலாசிரியர்   யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சுவாமி சித்பவானந்தரிடம், 1984ல் தீட்சை பெற்று துறவியானவர்.  திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 2007ல் திருவண்ணாமலையில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தை நிறுவினார். பேராசிரியராகவும் சிறந்த கல்வியாளராகவும் விளங்கும் யதீஸ்வரி அம்பா அவர்கள் சகோதரி நிவேதிதை பற்றி நான்கு நுால்களும், ஹிந்து மதம் கூறும் இறை வழிபாடு தொடர்பான ஒரு நூலும் எழுதியுள்ளார்.

நூல் வேண்டுபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ சாரதா ஆசிரமம், 58, சாரதா நகர், மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை – 606603.

தொலைபேசி: 9442131956

மின் அஞ்சல்: ykpamba@gmail.com

கோவை மாவட்டத்தில்,  பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டை பாளையம் என்ற ஊரில் பெரியண்ண கவுண்டர் – நஞ்சம்மை தம்பதிக்கு, ஏழாவது மகனாக பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர். பூர்வாசிரமத்தில் சின்னு என்ற பெயரில் விளங்கிய அவர்  அந்தக் காலத்திலேயே ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்கி தமது  கல்லுாரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லுாரியில் முடித்தார்.  லௌகீக வாழ்வில் நாட்டம் ஏதுமின்றி,  தெய்வீகத்தையும் ஞானத்தையும் துறவையும் தொண்டையுமே அவரது மனம் நாடியது.  தனது குருவான  சுவாமி சிவானந்தரால்  தீட்சை அளிக்கப்பட்டு, சித்பவானந்தர் ஆனார் (ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவானந்தர் மஹாபுருஷஜி மகராஜ் அல்லது தாரக் மகராஜ்  என்றும் அழைக்கப்பட்டார்).  திருப்பராய்த்துறையில்  ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை’ நிறுவினார்.  உபநிஷதங்கள், பகவத்கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுக்கு அற்புதமான விரிவுரைகளையும்,  அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும்  சுவாமிகள் எழுதியுள்ளார்.  ஏராளமானோர் நல்வழியிலும் ஆன்மீக வாழ்விலும் மேம்பாடு அடைய  ‘அந்தர்யோகம்’ எனும் சிறப்பான பயிற்சியை அறிமுகம் செய்தார்.   1956ல் சேலத்தில் ‘ஸ்ரீ சாரதா சமிதி’ என்ற துறவு ஸ்தாபனத்தை உருவாக்கினார். இது, பின்னாளில் கரூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில், சித்பவானந்தரின் போதனைகளை பின்பற்றி, 60 பள்ளிகளும், ஏழு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.  இத்தகு பெருமைகள் கொண்ட சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு தமிழக மக்களிடத்தில் பரவலாக சென்றடைய வேண்டும்.  அதற்கு உதவும்  இந்த நூலை வாசகர்கள் வாங்கி வாசித்தும் ,  நூலகங்களுக்கு வழங்கியும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

 

12 மறுமொழிகள் சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

 1. R Nanjappa on April 17, 2018 at 4:05 pm

  இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஸ்வாமி சித்பவானந்தர் தம் புத்தகங்களீன் மூலமாகவே ஆஸ்திகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமானவர். எளிமையாகவும் அருமையாகவும் தமிழில் எழுதும் ஆற்றல் அமையப்பெற்றவர். சம்ஸ்கிருத மூல நூல் கருத்துக்களைத் தமிழில் எழுதும்போது, அதுவும் மூல நூல் போன்றே இருக்கும். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையையும் உபதேசங்களையும், ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்வையும் வாக்கையும் மிக அருமையாக விளக்கியுள்ளார். தாயுமானவர் பாடல்களுக்கு இவர் எழுதிய உரை அற்புதமானது. தாயுமானவரின் பாடல்களை அழகிய பதிப்பாக வெளியிட்டார். திருவாசகத்திற்கு இவர் எழுதிய உரை தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு இடத்திலும் தகுந்த உபனிஷத மந்திரங்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இதற்கு இவர் எழுதியுள்ள முகவுரை அற்புதமானது.திருவாசகத்தின் சொல்லழகில் தோய்ந்து விடாமல் அது காட்டும் ஆத்ம சாதனத்தை உணரவேண்டும் என வலியுறுத்தி யுள்ளார். மேலும்,”மாயை” என்ற கருத்தின் உண்மைப் பொருள் என்ன, மாயா வாதம் பிரம்ம வாதத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். வேதாந்தம் பிரம்மவாதத்தை அடிப்படையாகக்கொண்டது, மாயாவாதமல்ல என்பதையும் விளக்கியுள்ளார். எத்தனை ஆங்கில, தமிழ் நூல்களை வாசித்தாலும் இவ்வளவு தெளிவான விளக்கத்தைக் காணமுடியாது. இதுவே இவருடைய சொந்த ஆன்மீக அனுபவத்தின் ஒரு அடையாளமாகும். Where words come out from the depth of Truth. இவர் எழுதியுள்ள கீதை உரை பிரசித்தமானது. அதில் இவர் எழுதியுள்ள முகவுரை மிகச்சிறப்பானது. வேதாந்தக் கருத்துக்களையும், வேதாந்த-சித்தாந்த சமரசத்தையும் இவர்போல் தமிழில் யாரும் விளக்கியதில்லை.
  நாங்கள் 50களில் பள்ளியில் படிக்கும்போது “அறம் வளர்த்த நம்பி” , “உலகுக்கு உயிர் கொடுத்த உத்தமன்”, “உலகை உய்வித்த உத்தமன்” என்ற ஸ்வாமி சித்பவானந்தர் எழுதிய மூன்று புத்தகங்கள் மூன்று வகுப்பில் துணைப்பாட நூல்களாக இருந்தன! இவை ஸ்ரீ ராமர், ஏசு கிறிஸ்து, புத்தர் பற்றியவை! காலம்தான் எப்படி மாறிவிட்டது! ராமரைப் பற்றிய புத்தகம் இன்றைய பாட நூல்களில் சேர்ப்பார்களா! நினைத்தும் பார்க்க முடியவில்லை!
  இவர் தபோவனத்திலிருந்து வெளியிட்டு வந்த ‘தர்ம சக்கரம்’ என்ற தமிழ் மாதப்பத்திரிகையும் சிறந்து விளங்கியது. இதை அப்போது வீட்டில் படிக்க இயலாதிருந்தவர்கள் எங்களை (பள்ளிப் பசங்களை) படிக்கச் சொல்லிக் கேட்பார்கள்! எனவே, நாங்களும் சிலவற்றை அறிந்துகொண்டோம்! இப்படி ஸ்வாமி சித்பவானந்தர் எங்களுக்கும் ஆசானானார்!
  இவர் எழுதிய தமிழ் நூல்கள் காலத்தால் அழிக்கமுடியாதவை.தமிழர்களின் பெரும் ஆஸ்திகச் செல்வமாகத் திகழும். இவரைப்பற்றிய பல செய்திகளை அங்குமிங்குமாகக் கேட்டிருந்தாலும், விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் மகிழ்சியுடன் வரவேற்கத்தக்கது.
  இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி.

 2. அ.அன்புராஜ் on April 17, 2018 at 4:45 pm

  சுவாமிகள் விரும்பிய அந்தா்யோகம் என்ற நிகழ்ச்சியை கிராமங்கள் தோறும் நடத்துவது அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

 3. துரை சரவணன சபாபதி on April 18, 2018 at 12:39 am

  சுவாமிகளின் குரு, இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவானந்தர் ( மஹாபுருஷஜி மகராஜ் அல்லது தாரக் மகராஜ்).

 4. துரை சரவணன சபாபதி on April 18, 2018 at 12:51 am

  ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அல்லது(பூர்வாஸிரமத்தில் டாக்டர். குப்புசாமி என்று அழைக்கப்பட்டார். அப்பையா தீக்ஷிதர் வழிவந்தவர்). அவர் வேறு, சித்பவானந்தரின் குரு வேறு.

 5. ஆசிரியர் குழு on April 18, 2018 at 6:24 am

  துரை சரவணன சபாபதி அவர்களுக்கு, மிக்க நன்றி. தவறைத் திருத்து விட்டோம்.

 6. BSV on April 18, 2018 at 1:30 pm

  சந்நியாசிகளாக வாழ்ந்து மறைந்தோரின் சாதிகளை வெளிப்படுத்துவது தவறு. கட்டுரை (அல்லது நூல்) சுவாமி சித்பவானந்தரை கவுண்ட சாதியில் பிறந்தவர் என்கிறது. பின்னூட்டத்தில் ஒருவர் சுவாமி சிவானந்தாவை அப்பைய தீட்சிதர் வழிவந்தவர் என்பனவெல்லாம் நாகரிகமா?

 7. ஆசிரியர் குழு on April 23, 2018 at 8:01 am

  // சந்நியாசிகளாக வாழ்ந்து மறைந்தோரின் சாதிகளை வெளிப்படுத்துவது தவறு. கட்டுரை (அல்லது நூல்) சுவாமி சித்பவானந்தரை கவுண்ட சாதியில் பிறந்தவர் என்கிறது. பின்னூட்டத்தில் ஒருவர் சுவாமி சிவானந்தாவை அப்பைய தீட்சிதர் வழிவந்தவர் என்பனவெல்லாம் நாகரிகமா? //

  அன்புள்ள BSV அவர்களுக்கு, உங்களது கருத்து அர்த்தமற்றதாக உள்ளது. ஒரு 50-60 ஆண்டுகள் முன்பு வரை கூட தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் குலப்பெயர்களை சகஜமாக குறிப்பிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் – வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், முத்துலட்சுமி ரெட்டி, மு.ராகவையங்கார், தியாகராஜ செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் இத்யாதி இத்யாதி. இதே ரீதியில் தான் சுவாமிகளின் பெற்றோர் பெயரும் எப்படி அழைக்கப் பட்டதோ அதே பாணியில் எழுதப் பட்டுள்ளது. ஒருவரது பெயர் எவ்வாறு வழங்கப் பட்டதோ அதை அப்படியே எழுதுவது தான் நாகரீகம், அதை சிதைப்பது அநாகரீகம். பெரியண்ண கவுண்டர் என்ற பெயரை பெரியண்ணன் என்று மொட்டையாக எழுதுவது தவறானதும் பிழையானதும் மட்டுமல்ல. அவருக்கு இழைக்கப் படும் அவமரியாதையும் ஆகும். திராவிட இயக்கத்தினரின் உள்ளீடற்ற, போலித்தனமான சாதி எதிர்ப்பு உணர்வால், என்னவோ குலப்பெயர்களை சேர்த்து எழுதுவதே ஒரு அவமானம், நாகரீகமின்மை என்ற அபத்தமான கருத்து தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது (இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முட்டாள்தனம் இல்லை). நீங்களும் அந்தக் கருத்தையே எதிரொலிக்கிறீர்கள். இந்தப் பழக்கத்தை இப்போதுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வரலாற்றில் முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கும் நீட்டித்து, வலிந்து அவர்களது குலப்பெயர்களை உடைத்து விட்டு எழுதவேண்டும் என்பது அநாகரீகம் மட்டுமல்ல, வெறித்தனத்தின் உச்சம் என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.

  அப்பைய தீட்சிதர் ஓரு மிகப்பெரிய மகான். அந்த மகானின் பரம்பரையில் சமீபகாலத்தில் சுவாமி சிவானந்தா என்ற மற்றொரு மகான் அவதரித்தார் என்று கூறுவது அநாகரீகமா? சுவாமி சிவானந்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலிலேயே இந்த விஷயம் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ன வகையான சிந்தனைப் போக்கு இது?

 8. BSV on April 23, 2018 at 9:40 am

  Oh yes. Thanks for response.

 9. துரை சரவணன சபாபதி on April 23, 2018 at 4:05 pm

  சித்பவானந்தரின் சந்யாச ஸ்விகரித்தலின் போது, ஊட்டியில் சுவாமிகள் பித்ருபிண்டம் கொடுக்கும் அந்த நிமிடத்திலேயே, அவரின் தந்தை easy chair ல் அவரின் ஊரில் உட்கார்ந்து இருக்கும் அதே க்ஷணத்தில் உயிர் பிரிந்தது. இது ஒரு அரிதான நிகழ்ச்சி! இதைப் கேட்டுவிட்டு விட்டு மஹாபுருஷஜி மகராஜ்,” உனது தந்தை ,” ஒரு குப்தயோகி”( வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளதா யோகி) என்று அருளுவர்! அப்பையா தீக்ஷிதர் வழிவந்தவர் என்று சொன்னதோ அல்லது சித்பவானந்தரின் தந்தை பெரியண்ண கவுண்டர் குறித்து நிகழ்ச்சியோ , ஸ்வாமிகள் இருவரும் எப்படி பட்ட பரம்பரையில் வந்தவர்கள் என்று மேன்மையை சொல்லுவற்காக கூறியது! இதைப் புரிந்து கொள்ள வேண்டும்! வேறு காரணம் என்ன இருக்கமுடியும்?

  இராமகிருஷ்ண பரம்மஹம்ஸ மூர்த்தி சொல்லுவார்,” கருணை கிழங்கின் முளையை”, வைத்தே அதிலிருந்து தோன்றும் கிழங்கின் தரத்தை முன்பே அறிந்துகொள்ளலாம்!

 10. தாயுமானவன் on April 23, 2018 at 6:19 pm

  அன்பார்ந்த ஆசிரியர் குழுவினரே..

  //திராவிட இயக்கத்தினரின் உள்ளீடற்ற, போலித்தனமான சாதி எதிர்ப்பு உணர்வால், என்னவோ குலப்பெயர்களை சேர்த்து எழுதுவதே ஒரு அவமானம், நாகரீகமின்மை என்ற அபத்தமான கருத்து தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது (இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முட்டாள்தனம் இல்லை). நீங்களும் அந்தக் கருத்தையே எதிரொலிக்கிறீர்கள்.//

  மேல் சாதியை சார்ந்தவர்களை சாதி பெயரிட்டு அழைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்கள் சரி. அப்படியே அம்பேத்கரையும் , கக்கனையும் இன்னும் பல தாழ்த்த பட்ட வகுப்பினை சார்ந்த தலைவர்களையும் இவ்வாறு உங்களால் குல(சாதி) பெயரிட்டு கூப்பிட முடியுமா. அது முடியாது எனும் பொழுது, இவர்களை மட்டும் இவ்வாறு சாதி பெருமிதத்துடன் அழைப்பது எந்த வகையில் நியாயம். வ.உ. சிதம்பரனார் நிச்சயம் இன்று இருந்திருந்தால் உங்களின் கருதத்தினை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

  //வரலாற்றில் முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கும் நீட்டித்து, வலிந்து அவர்களது குலப்பெயர்களை உடைத்து விட்டு எழுதவேண்டும் என்பது அநாகரீகம் மட்டுமல்ல, வெறித்தனத்தின் உச்சம் என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்…//

  இது எப்படி வெறித்தனத்தின் உச்சமாகும். இந்த ஒரே வார்த்தையில் காலமெல்லாம் சாதியை அதான் நீங்கள் கூறும் குல பெருமையை ஒழித்து கட்ட அரும்பாடு பட்டா வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி நாராயண குரு , குருநானக் , அய்யன் காளி, பசவண்ணர் போன்றோரை முட்டாள்கள் என கூறி விட்டிர்கள். மேற்படி மகான்களை அநாகரீகர்கள் ஆக்கி விட்டிர்கள். நாட்டில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை தான் நாகரீகமானது என ஏற்றுக் கொள்கிறேன்.. மட்டுறுத்தாமல் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்..

 11. துரை சரவணன சபாபதி on April 23, 2018 at 6:59 pm

  “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்”- ஔவையார்

 12. துரை சரவணன சபாபதி on April 23, 2018 at 7:44 pm

  மேலும்,இராமகிருஷ்ண மடத்தில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சமயத்தில் தான் பெரும்பாலும் சந்யாச நாமத்துடன் குறிப்பிடுவார்கள். மற்றபடி, பேசும் போது, பூர்வாசிரம நாமத்துடன் ,” மஹராஜ் “, என்று சேர்த்து அழைப்பது வழக்கம். சித்பவானந்தரை,”சின்னு மஹராஜ், இராமகிருஷ்ணனந்தரை சசி மஹராஜ், சிவானந்தரை தாரக் மஹராஜ் “, என்று அழைப்பதும் வழக்கம்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*