நம்பிக்கை – 2: யார் கடவுள்?

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

சங்கர் கவலையில் இருந்தார். அவருடைய மகன் கௌசிக்கும் மகள் ஸ்நேஹாவும் அவருடைய அறிவுரைகளைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், அவருடைய பண்பாடு மற்றும் ஆன்மிகப் பழக்க வழக்கங்களையும் பகிரங்கமாகக் கேள்விகளுக்கு உள்ளாக்கினர். கலாச்சார மற்றும் ஆன்மிகப் பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் கேள்விக்கு உள்ளாக்காமல் தொடர்ந்து பின்பற்றி வந்துகொண்டிருப்பவர் சங்கர். ஆனால் அவருடைய மகனும் மகளும் கேட்கும் கேள்விகள் அவருக்கு நியாயமற்றதாகத் தெரிந்தாலும் அவற்றை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களையோ அல்லது விளக்கங்களையோ அவரால் தர முடியவில்லை.

சங்கருடைய நெடுநாளைய நண்பரான மஹாதேவன் அவ்வப்போது சங்கரின் வீட்டிற்கு வருவதுண்டு. அவர் நீண்ட நாட்கள் கழித்து, சங்கர் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டமிட்டு சங்கரிடமும் தெரிவித்திருந்தார். மஹாதேவனைப் பொறுத்தவரை, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராக மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றிக் கேட்கப்படும் எந்தவிதமான கேள்விகளையும் எதிர்கொண்டு பதிலும் விளக்கமும் அளிக்கும் அறிவும் கொண்டிருந்தார் என்பதால், சங்கருக்கு அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆகவே நண்பரின் வருகையை சங்கர் மிகவும் எதிர்பார்த்திருந்தார்.

மஹாதேவன் வந்த அன்று மதிய உணவு உண்டபிறகு, சங்கரும் மஹாதேவனும் பழைய விட்டுப்போன கதைகளையும் சம்பவங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கடவுள் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றித் தன்னுடைய மகனும் மகளும் கொண்டிருக்கும் மனப்பான்மை பற்றிய தன் கவலையை மஹாதேவனிடம் சங்கர் தெரிவித்தார். மஹாதேவன் அவர்கள் இருவரையும் சந்திக்க விரும்பினார்.

மஹாதேவன் கௌசிக் ஸ்நேஹா இருவரிடமும் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டறிந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கௌசிக், “எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது; அப்பா எங்களை கடவுள் மீது நம்பிக்கை கொள்ளச்சொல்லி வற்புறுத்துகிறார்” என்று சொன்னான்

“எனக்கும் நம்பிக்கையில்லை” என்றார் மஹாதேவன்

“என்னது!! உங்களுக்கும் நம்பிக்கை இல்லையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸ்னேஹா. கௌசிக்கும் ஸ்னேஹாவும் அப்படி ஒரு பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

“ஆமாம்; எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. நாம் ஒரே படகில் தான் செல்கிறோம். We are sailing in the same boat! உங்களுக்கு எந்தக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை?” என்று கேட்டார்

“அது ஒரு விஷயமல்ல; எங்களுக்கு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கையில்லை” என்றான் கௌசிக்

“வேறு எதில் தான் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது?”

“என் மீது!”

“நல்லது. அதாவது நீ உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளாய். உன்னால் என்ன செய்ய முடியும் என்று நீ நினைக்கிறாய்?”

“எதையும்! என்னால் எதையும் செய்ய முடியும்”.

“ரொம்ப நல்லது. சோதித்துப் பார்ப்போம். நான் உனக்கு ஒரு இனிப்பான மாம்பழத்தைத் தந்து அதைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும், என்று சொன்னால், உன்னால் இருக்க முடியுமா?”

“ம்… முடியும்”.

“சரி. அதை உன் வாயருகே எடுத்துச் சென்று சாப்பிடாமல் வைத்திருக்க வேண்டும் என்றால், உன்னால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியுமா?”

“கண்டிப்பாக. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை”.

“அதை வாயருகே கொண்டு சென்று, கடித்துவிட்டு, விழுங்காமல் இருக்க வேண்டும் என்றால், உன்னால் அப்படி விழுங்காமல் இருக்க முடியுமா?”

“ஓ… கண்டிப்பாக இருக்க முடியும்!”

“சரி. இப்போது விழுங்கச் சொல்லிவிட்டு, தொண்டைக்கு அப்பால் பழம் உள்ளே போகாதவாறு வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால், உன்னால் அப்படி வைத்திருக்க முடியுமா?”

“இல்லை, முடியாது.”

“நீ சாப்பிடும் உணவின் சக்தியையும் பலத்தையும் உன்னுடைய இடது காலுக்கு மட்டும்தான் நீ அனுப்பவேண்டும் என்று நான் சொன்னால், உன்னால் அவ்வாறே செயல்படுத்த முடியுமா?”

“இல்லை… முடியாது.”

“அப்படியென்றால் உனக்குள், அதாவது உனது உடலுக்குள் செயல்படும் செயல்கள் எதைத்தான் உன்னால் கட்டுப்படுத்த முடியும்?”

“ம்ம்ம்………”

“சரி, உன் மனதைச் சோதிப்போம். உனக்கு மிகவும் பிடித்த பாடல் எது?”

“ப்ரோ சேவா ரெவருரா….”

“ஆஹா! அருமையான பாடல். அந்தப் பாடல் என்ன ராகம் என்று தெரியுமா?”

“கமாஸ்!”

“அருமை. இப்போது உன் நினைவிலிருந்து அந்தப் பாடலை அழித்துவிடேன்.”

“அதெப்படி முடியும்? என்னால் முடியாது!”

“ஆகவே, உன் மனதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை. வேறு எதுதான் உன்னுள் உன் கட்டுப்பாட்டில் உள்ளது? என்னையோ அல்லது வேறு யாரையோ உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?”

“தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், என்னிடம் இதை ஏன் கேட்கிறீர்கள்?”

“உன்னால் எதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைச் சோதிக்க. ஸ்தூலமான உன் உடலுறுப்புகளின் செயல்களையே உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சூக்ஷுமமான மனதின் ஆற்றலை எவ்விதத்திலும் உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, உன்னால் மிகவும் குறைவான சில செயல்களைத்தான் கட்டுப்படுத்த முடியும் என்கிற முடிவுக்கு நான் வரலாமா?”

“உங்கள் வழியில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எதைத்தான் நிரூபிக்க முயற்சி செய்கிறீர்கள்?”

“சரி, வேறு வழியில் பார்க்கலாம். காலை எழுந்தவுடன் நீ என்ன செய்கிறாய்?”

“பல் துலக்கி, குளித்து, உடையணிந்து, சாப்பிட்டு, காலணிகள் அணிந்துகொண்டு கல்லூரிக்குச் செல்வேன்”.

“நல்லது. பல் துலக்குவதை ஒரு வாரம் நிறுத்திப்பாரேன்?”

“ஐய்ய…. நாற்றம் அடிக்கும்!”

“குளிக்காமல் இருந்து பாரேன்…”

“வாய்ப்பே இல்லை, அது இன்னும் கொடுமை!”

“யார் உன்னை இதையெல்லாம் செய்யச் சொன்னார்கள்?”

“அப்பாவோ, அம்மாவோ, நான் சிறுவனாக இருந்தபோது சொல்லிக் கொடுத்திருக்கலாம்.”

“சபாஷ்! ஆனால், இதற்கெல்லாம் ஆட்சேபணை தெரிவித்து, உன் வழியில் செய்ய வேண்டியது தானே? செய்து பாரேன்!”

“இது எங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறது; அனைவரும் இதைச் செய்கிறார்கள்; எப்படியிருந்தாலும் சமூகத்தில் இது இயல்பானதொரு பழக்கம் தானே!”

“சரி. சமூகத்தில் இயல்பாக இருக்கும் ஒரு பழக்கத்தைக் கடைப்பிடிக்க நீ சம்மதிக்கிறாய். அவசியம் என்று நீ புரிந்துகொள்ளும் பழக்கத்தைத் தொடரவும் ஒத்துக்கொள்கிறாய். ஆனால் கடவுள் நம்பிக்கை என்று வரும்போது மட்டும் நீ ஆட்சேபிக்கிறாய், ஏன்?”

“கடவுளைக் காண முடியாது. மேலும் பல கடவுள்கள் இருப்பது குழப்பமாகவும் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அந்த மாதிரியான ஒரு கோட்பாட்டை நான் எப்படி நம்பமுடியும்? எனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்?”

“எனக்கும் இளம் வயதில் இதே பிரச்சனைதான் இருந்தது. உண்மையில், கடவுளுக்கு பெயரோ, உருவமோ கிடையாது. அதைத்தான் கிருஷ்ணரும் கீதையில் சொல்கிறார்.”

“உண்மையாகவா? உங்களால் நிரூபிக்க முடியுமா?”

“கண்டிப்பாக. 13-வது அத்தியாயத்தைப் பார். கடவுளுக்கு பெயருமில்லை, உருவமுமில்லை, எல்லாம் அறிந்தவன், சர்வ வல்லமை பெற்றவன்…. என்று அவர் வெளிப்படுத்துகிறார்.”

“அதனால்…..”

“நம்முடைய ஆரம்ப விவாதத்துக்குச் செல்வோம். உன் உடலின் செயல்பாடுகளையும், மனத்தின் செயல்பாடுகளையும் உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது, அவை வேறு ஒன்றால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதையும் நீ ஒத்துக்கொள்கிறாய்.”

“ம்… ஆம், ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன்.”

“அதே தான் மற்ற உயிரினங்களையும் அதே விதத்தில் கட்டுப்படுத்துகிறது”.

“சரி, அதனால்?”

“கடவுளுக்கு பெயரில்லை, உருவமில்லை என்று நான் சொன்னால் நீ ஒரு பிரச்சனையை எதிர்கொள்வாய்”.

“புரியவில்லை…”

“பெயருமில்லாத, உருவமுமில்லாத ஒன்றைக் கற்பனை செய்து பாரேன். உருவமில்லாத ஏதாவது ஒன்றை உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?”

“இல்லை. வாய்ப்பே இல்லை.”

“அதுதான் பதில்! இந்த அடையாளப்படுத்துதல் இருக்கின்றவரை நம்மால் உருவமில்லாத எதையுமே கண்முன் கொண்டுவர முடியாது. இந்த அடையாளப்படுத்துதல் என்பதுதான் கடவுளுக்கு உருவமளிப்பதற்கான காரணம். பெயரில்லாத உருவமில்லாத கடவுளை, மஹாவிஷ்ணு என்கிற பெயரில், நம் முன்னால் கண்களால் காணும்படிக்கு ஒரு உருவம் கொடுத்து, அந்த உருவத்திலும் பெயரிலும் வழிபடுகிறோம். மற்ற பலவிதமான உருவங்களுக்கும் இதே தான் பொருந்தும். உன்னுடைய ஈடுபாட்டுக்கும், சௌகரியத்துக்கும் ஏற்ப நீ உருவத்தையும் பெயரையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதுவரை இல்லாத உருவத்தைக் கூட நீ சொந்தமாக உருவாக்கிக்கொள்ளலாம். உன்னுடைய பக்தியும், உன்னுடைய திறமைக்கு அளவு உண்டு என்கிற புரிதலும், கடவுள் சக்தி வாய்ந்தவன் என்கிற அறிதலும் தான் முக்கியம். அதுதான் பிரார்த்தனை! அதைத்தான் கிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார். உனக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா?”

“நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சுவாரஸ்யமாக இருப்பது போல் தோன்றுகிறது.”

“அவசியம் யோசி! நன்றாக யோசனை செய்து உன்னுடைய முடிவுகளை எனக்குச் சொல்லு.”

(தொடரும்)

3 Replies to “நம்பிக்கை – 2: யார் கடவுள்?”

  1. அருமையான விளக்கம் அளித்துள்ளார் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக உள்ளது இந்துமத்தில் உள்ள வழிபாட்டு முறைகள் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய நம் முன்னோர்களின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *