நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

மஹாதேவனும் கௌசிக்கும் வீடு திரும்புவதைப் பார்த்த சங்கர், “சௌம்யா! இன்று இரவு உணவிற்குச் சிறப்பாக என்ன செய்திருக்கிறாய்?” என்று தன் மனைவியிடம் கேட்டார்.

“பூரி மசாலா, பிசிபேளாபாத், குலோப் ஜாமூன் மற்றும் ஸ்நேஹாவின் கைப்பக்குவத்தில் ஸ்பெஷலாகச் செய்த பகாளாபாத்” என்று, உணவு மேஜையைத் தயார் செய்தவாறே பதில் சொன்னார் சௌம்யா. சங்கரும், ஸ்நேஹாவும் அவருக்கு உதவினர்.

வீட்டிற்குள் நுழையும்போதே பதார்த்தங்களின் மணம் மஹாதேவனுக்கும் கௌசிக்குக்கும் பசியை அதிகப்படுத்தியது. முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டு வந்த இருவரும், உட்கார்ந்தவுடனேயே பதார்த்தங்களை ஒரு கை பார்க்க ஆரம்பித்தனர்.

“ஆஹா….! இந்த உணவுக்காகவே அவ்வளவு தூரத்திலிருந்து உங்கள் வீட்டுக்குப் பயணம் செய்து வரலாம் சங்கர்” என்று வியந்து பாராட்டினார் மஹாதேவன்.

“உண்மையில் ஸ்நேஹாவும் சௌம்யாவுக்குச் சமமாக நன்றாகச் சமைக்கக் கூடியவள்” என்றார் சங்கர்

“பிரமாதம்! ஆனால், ஸ்நேஹா சென்ற முறை கௌசிக்குடனான என்னுடைய விவாதத்தில் பங்கு கொள்ளாமல் ஏன் மௌனமாக இருந்தாள்?

“மாமா, இந்த விஷயத்தில் எனக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. மேலும், உங்கள் விவாதத்தில் இடையூறு செய்ய நான் விரும்பவில்லை”.

“உனக்கென்று ஒரு அபிப்பிராயம் இருக்குமானால் அதை நீ சொல்லவேண்டியது தானே?”

“மாமா! ‘உன்னுடைய வெற்றி உன் பிரார்த்தனையில் தான் இருக்கிறது’ என்று அம்மா அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் அப்படியில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“நீ சொல்வது சரிதான். வெற்றி என்பது பிரார்த்தனையில் இல்லை”.

“பிரமாதம்! இனிமேல் நான் அம்மா சொல்வதைக் கேட்கவேண்டியதில்லை. எப்பேர்பட்ட நிம்மதி!”

“ஆனால், பிரார்த்தனை நீ வெற்றி பெற உதவும் என்பதும் உண்மை தான்.” என்று கூறிப் புன்னகைத்தார் மஹாதேவன்.

“என்ன?”

“நீ பிரார்த்தனை செய்தால், நீ மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுமாறு செய்யக் கடவுளால் முடியாது. அது, நீ எழுதும் பரீட்சையாக இருந்தாலும் சரி, நீ விளையாடும் கிரிக்கெட் விளையாட்டாக இருந்தாலும் சரி, நீ பங்கு பெறும் எந்தச் செயலாக இருந்தாலும் சரி”.

“பிறகு…?”

“ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) என்கிற திரைப்ப்டடத்தை நீ பார்த்திருக்கிறாயா?”

“ஆம். பார்த்திருக்கிறேன்.”

“கடவுளின் சக்தி கிடைத்த ப்ரூஸிடம், எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டும் என்று பலர் கேட்கும்போது என்ன நடந்தது?”

“அவர் கேட்டவர்களுக்கு அனைத்தையும் கொடுக்க, பெரும் குழப்பம் விளைந்தது”.

“சரியாகச் சொன்னாய். அது ஒரு திரைப்படமாக இருந்தாலும், அதன் கருத்து மிகச்சரியானது. கடவுள் என்பவர், எங்கும் இருந்துகொண்டு, ‘அங்ஙனமே ஆகுக’ என்று சொல்லிக்கொண்டு, உன்னுடைய அடுத்த நிகழ்ச்சிக்கும் வெற்றி தருபவர் அல்ல”.

“பிறகு….?”

“ஒரு செடியைக் கற்பனை செய்துகொள். தான் வளர்வதற்கும், வலிமை பெறுவதற்கும், உயரமாக நிற்பதற்கும், அது சூரியனைச் சார்ந்து இருக்கின்றது. அது எவ்வளவு அதிகமாக சூரியனைச் சார்ந்து இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக வளர்கிறது. செடி வலிமையாக வளர்வதில் சூரியனுக்குத் தானாக எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், சூரியன் கொடுக்கும் ஒளியையும் சக்தியையும் வேண்டி, அந்தச் செடியானது சூரியனைத் தீவிரமாகச் சார்ந்து இருக்கும்போது, பெரிதும் வளர்ந்து மரமாகின்றது. ஒளியும், சக்தியும் கொடுக்கும் நற்பண்பின் மூலம் சூரியன் தன்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்வதில்லை”.

“புரிகிறது”.

“சூரியனிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் ஒரு செடியைக் கற்பனை செய்து பார். ஆண்டுகளோ, மாதங்களோ அல்ல; சில நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்கும் வலிமை அதனிடம் இருக்காது”.

“உண்மை”.

“அதே போல, நாம் பிரார்த்தனை மூலம் கடவுளைச் சார்ந்திருப்பது லாபம் பெறுவதற்கோ, வெற்றி பெறுவதற்கோ அல்ல. அப்படி இருக்குமேயானால், நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்து, ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதற்கு மாறானதே உண்மை. இரண்டு பேர் கொண்ட ஒரு விளையாட்டில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும். மீறிப்போனால் வெற்றி தோல்வி இன்றி சரிசமமான நிலையில் இருவரும் இருப்பர். இருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்தாலும், இருவருமே வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை”.

“ஒத்துக்கொள்கிறேன். பிறகு, பிரார்த்தனையினால் என்ன பயன்?”

“சூரியனிடமிருந்து செடி வலிமையைக் கேட்பது போல, நீ கடவுளிடமிருந்து அறிவு, வீரம், தைரியம் போன்றவற்றைக் கேட்கிறாய். அவை ஒரு பயன்முடிவை (Result) அடிப்படையாகக் கொண்டவை கிடையாது என்பதால் கடவுளும் அவற்றை அள்ளித்தருகிறார்”.

“அப்படியென்றால்….”

“நீ கடவுளிடம் ஒரு தருணத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலையும், அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதற்கான அறிவையும், எதிர்ப்புகளைச் சந்திக்கும் தைரியத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி, தோல்வி எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமையையும் வேண்டுகிறாய்”.

மேலும் விளக்கம் வேண்டும் என்பதைப் போல அவரை ஏறிட்டுப் பார்த்தாள் ஸ்நேஹா.

“உண்மை தான். நீ வெற்றி பெறும்போது உன்னுடைய எதிர்வினையானது உன் குணத்தைப் பாதி வெளிப்படுத்துகிறது. தோல்விக்கான உன்னுடைய எதிர்ச்செயல் உன் முழுமையான குணத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு தோல்வியைச் சந்திக்கப் பெரும் தைரியம் வேண்டும்”.

“என்னுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?”

“வெற்றி தோல்விக்கான உன்னுடைய எதிர்வினை என்ன என்கிற எளிமையான அளவீட்டின் அடிப்படையில் நீயே சோதனை செய்து பார். வெற்றி பெற்றால் மேலும் கீழும் குதிப்பதும், தோல்வி அடைந்தால் மனமுடைந்து மூலையில் போய் அமர்ந்துகொள்வதும், நீ எந்தப் பயனும் அடையவில்லை என்பதையே நிரூபிக்கும். காலம் செல்லச் செல்ல, இந்த மாதிரியான எதிர்வினைகள் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்டு, அவை மெதுவாக, ஆனால் உறுதியாக, உன் கட்டுப்பாட்டுக்குள் வருவதை நீ உணர்வாய்”.

“பிரார்த்தனையின் பயன் அவ்வளவு தானா? ஏதாவது உதாரணம் காண்பிக்க முடியுமா?”

“உன் அம்மா உனக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு எளிமையான ஸ்லோகத்தை எடுத்துக்கொள்வோம். ஹனுமான் மீதான ஸ்லோகம் ஏதாவது உனக்குத் தெரியுமா?”

“ம்… தெரியும்.

“புத்திர் பலம் யஷோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதாம்
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”

बुद्धिर् बलं यसो धैर्यम् निर्भत्वम् अरोगताम्
अजाड्यं वाक् पटुत्वं च हनुमत् स्मरणात् भवेत्

என்று அழகாகச் சொன்னாள் ஸ்நேஹா.

அதைக் கேட்ட மஹாதேவன், “இதன் அர்த்தம் மிகவும் எளிமையானது.

புத்திர் பலம்: அறிவில் வல்லமை
யஷோ: புகழ்
தைர்யம்: துணிவு
நிர்பயத்வம்: பயமின்மை
அரோகதாம்: நோயின்மை
அஜாட்யம்: மன உறுதி
வாக்படுத்வம் ச: பேச்சுவன்மை – இவையெல்லாம்
ஹனுமத் ஸ்மரணாத்: ஹனுமனைத் தியானித்து
பவேத்: இரு

அறிவில் வல்லமை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, மனவுறுதி, பேச்சுத்திறன் போன்றவையெல்லாம் கொண்ட ஹனுமனைத் தியானித்திருக்கிறேன், என்பதுதான் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்” என்று கூறிவிட்டு, ஸ்நேஹாவைப் பார்த்து,

“இந்த ஸ்லோகத்தில் எங்காவது நீ வெற்றியோ, ஆதாயமோ, செல்வமோ, லாபமோ கேட்கிறாயா? எதுவுமில்லை. உடல், மனம், அறிவு ஆகியவை வல்லமை பெற்றிருக்கும் ஹனுமனைத் தியானித்தபடி இருந்தால் அவை உனக்கும் கிடைக்கும் என்பதாக இந்த ஸ்லோகத்தின் பொருளை எடுத்துக்கொள்ளலாம்” என்று விளக்கினார்.

விவாதத்தின் இடையில் நுழைந்த கௌசிக், ““ஹனுமானால் இதைக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான்.

“சூரியனைச் சார்ந்து இருக்கும்போது, செடி ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்ததா என்ன? ஒரு போதும் இல்லை. இயற்கையில் உள்ள அனைத்துப் பொருட்களும் சூரியனைச் சார்ந்திருக்கும் தன்மைப் படைத்தவை. அது அவைகளின் இயற்கையான குணம். அதைப் போலவே, நம்முடைய பிரார்த்தனையானது, அந்தச் சூரியனையும் படைத்த கடவுளைச் சார்ந்திருப்பது”.

“இதை நான் எப்படிப் புரிந்துகொள்வது? கடவுள் இருக்கிறார் என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?”

“நீயும் ‘இருக்கிறாய்’, உன்னைச் சுற்றியுள்ளவைகளும் ‘இருக்கின்றன’ என்கிற உண்மையே, உருவாக்கவும் அழிக்கவும் தேவையான அறிவும், வல்லமையும், சக்தியும் கொண்ட ஒருவர் இருக்கிறார், என்பதற்கான நிரூபணமாகும். ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த நபர் எங்கே இருக்கிறார்?”

“அவரை ஒரு உருவமாகக் கண்டுகொள்வது என்பது உண்மையிலேயே கடினம்”.

“அப்படியென்றால் அது மூட நம்பிக்கையா?”

“உன் ஆசிரியர் இயற்பியல் பாடம் நடத்தும்போது அவரிடம் நீ நம்பிக்கை கொள்கிறாயா?”

“ஆம், இயல்பாகவே! அவருக்கு அந்தத் தகுதி உண்டு”.

“உனக்கு அந்த நம்பிக்கை இல்லையென்றால் என்னவாகும்?”

“அவர் என்ன பாடம் நடத்துகிறார் என்பதை நான் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம்.”

“சரியே. எல்லா நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் அதுவே அடிப்படை. உன் ஆசிரியரின் தகுதியைப் பரிசோதிப்பதற்கான எந்த ஒரு கருவியும் இல்லாமல் அவர் தகுதியானவர் என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய். அந்த ஏற்புடைத்தன்மையே உன் மேம்பட்ட புரிதலுக்கு உதவுகிறது”.

“உண்மை”.

“கடவுள் விஷயத்திலும் அதுவே உண்மையாகும். ‘கடவுள் இருக்கிறார்; நீ இருக்கிறாய்’ என்பதை நீ முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். படைப்புகள் உன் கண்முன்னால் இயங்குவதால் இது மூட நம்பிக்கை கிடையாது. ஒவ்வொரு படைப்பும், தன்னுடைய இயக்கம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது, அதன் தோற்றுவாய் (மூலம், ஆதாரம்) என்ன, என்பதெல்லாம் தெரியாமல் உயிர்த் துடிப்புடன், உணர்ச்சி மிகுந்து, படைப்பின் சக்தி மிக்க அசைவுகளை உணர்ந்து செயல்படும் நிலையில் இருக்கின்றன. அந்தத் தோற்றுவாயைத்தான், அந்த மூலாதாரத்தைத்தான், நாம் கடவுள் என்கிறோம்”.

“கடவுள் நம்பிக்கை இல்லாமல், நான் பிரார்த்தனை செய்தால்? கடவுள் இருக்கிறார் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் பிரார்த்தனைகள் மூலம் வலிமை போன்றவை பெறலாம் என்கிற கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது”.

“அது ஒரு பொருட்டல்ல. இந்த மேஜை மீது கொஞ்சமாக விளக்கெண்ணை கொண்ட ஒரு டம்ப்ளர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீ விளக்கெண்ணை பார்த்திருக்கிறாயா?”

“ம். பார்த்திருக்கிறேன்”.

“திடத்திலும், நிறத்திலும் அது தேனைப் போலிருக்கும். அது விளக்கெண்ணை என்று தெரியாமல், தேன் என்று நினைத்து நீ அதை உட்கொண்டால்?”

“உவ்வே…”

“அதேதான். அது விளக்கெண்ணை என்று உனக்குத் தெரியாது. தேன் என்று நினைத்தாய். குடித்த பிறகு உன் எதிர்வினையானது, நீ அதை என்னவென்று நம்பினாயோ அந்த நம்பிக்கையைச் சார்ந்ததா, அல்லது, விளக்கெண்ணை தனது வேலையைக் காண்பித்துவிட்டு வெளியே வந்ததா?”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தன்னுடைய வேலையான என் வயிற்றைச் சுத்தம் செய்வதை விளக்கெண்ணை செய்யும்”.

“அதேதான். அதைப் போலவே உன் பிரார்த்தனையும், உனக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் வேலையைச் செய்யும், செய்துகொண்டே போகும்”.

“மாமா! நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா என்று நான் ஏற்கனவே கேட்டேன்”.

“கௌசிக்! கொஞ்சம் நிறுத்திக்கொள். நாம் கை கழுவிவிட்டு இனிப்பு வகைகள் சாப்பிடும்போது தொடர்ந்து பேசுவோம். நீ என்ன சொல்கிறாய் மஹாதேவன்?” என்று கேட்டார் சங்கர்

“கண்டிப்பாக. அவ்வாறே செய்யலாமே! குலோப் ஜாமூனும் ஐஸ் கிரீமும் சேர்ந்தால் அதைப் போல வேறு ஒன்று இல்லை!” என்று ரசனை வெளிப்பட சிரித்தபடியே சொன்னார் மஹாதேவன்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *