நம்பிக்கை – 9: மௌனம்

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“இன்று மாலை 7 மணிக்கு மஹாதேவன் நம் வீட்டிற்கு வருகிறார். அதற்குள் கௌசிக்கும், ஸ்நேஹாவும் வந்துவிடுவார்கள், இல்லையா?” என்று கேட்டார் சங்கர்.

“ஸ்நேஹா! மஹாதேவன் மாமா 7 மணிக்கு வருகிறார்” என்று ஸ்நேஹாவின் காதில் விழுமாறு சொன்னார் சௌம்யா.

“நல்லது அம்மா. நான் லேகாவிடம் சொல்கிறேன். அவளும் அவரைச் சந்திக்க வேண்டுமென்று ஆவலாய் இருந்தாள்” என்றாள் ஸ்நேஹா.

“ஏன்? நீ அவளிடம் என்ன சொல்லியிருக்கிறாய்?”

“மாமாவுடனான நம்முடைய விவாதங்களைப் பற்றியெல்லாம் அவளிடம் பகிர்ந்துகொண்டேன். சமீபத்தில் அவளுக்குக் கல்யாணம் ஆனதில்லையா? அதிலிருந்து அவள் ஓய்வில்லாமல் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறாள். நம்முடைய விவாதங்கள் அவளுக்கு சுவாரஸ்யமாக இருந்துள்ளன. அவளுக்கும் சில சந்தேகங்கள், கேள்விகள் உள்ளன. அவள் சார்பாக நாம் கேட்டுச் சொல்வதைவிட, மாமாவிடம் அவளாகவே கேட்டுத் தெரிந்துகொண்டால் நல்லது, என்று நினைத்தேன்” என்றாள் ஸ்நேஹா.

மாலை 7 மணிக்கு மேல் மஹாதேவன் வந்தபோது, “டாக்ஸி கிடைப்பது கஷ்டமாக இருந்ததா, இல்லை விமானம் வந்ததே தாமதமா?” என்று கேட்டார் சங்கர்.

“விமானம் சரியான நேரத்துக்குத்தான் வந்தது. விமான நிலையத்தில் டாக்ஸிக்காக நிறைய கூட்டம் இருந்ததால், எனக்கு அரைமணி நேரம் கழித்துத்தான் கிடைத்தது” என்று தன் பைகளைக் கீழே வைத்துக்கொண்டே சொன்னார் மஹாதேவன்.

“மாமா! நம் விவாதங்களை என் தோழியிடம் பகிர்ந்துகொண்டபோது, அவளுக்கும் சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. ஆகவே, அவளையும் டின்னருக்கு அழைத்திருக்கிறேன்” என்றாள் ஸ்நேஹா.

“அவளுடன் நம் விவாதங்களப் பகிர்ந்துகொண்டாயா? சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. தயாராகக் கொஞ்சம் நேரம் கொடு. பத்து நிமிடத்தில் வந்து உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன்” என்று கூறி உள்ளே விருந்தாளிகள் அறைக்குச் சென்றார் மஹாதேவன்.

“வா லேகா! சௌக்கியமா?” என்று உள்ளே வந்துகொண்டிருந்த லேகாவைப் பார்த்துக் கேட்டார் சௌம்யா.

“நன்றாக இருக்கிறேன், மாமி” என்றாள் லேகா.

“என்ன சாப்பிடுகிறாய்? ஜூஸ் தரட்டுமா?”

“ஒன்றும் வேண்டாம் மாமி. குடிக்கத் தண்ணீர் மட்டும் போதும்”.

“எனக்குக் காப்பி கொடு” என்றார் சங்கர்.

“ஆஹா! என்ன நடக்கிறது இங்கே?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் கௌசிக்.

“மஹாதேவன் வந்திருக்கிறார். ஸ்நேஹா லேகாவை டின்னருக்கு அழைத்திருக்கிறாள். சௌம்யா ஸ்பெஷலாக ஏதோ சமைத்துக்கொண்டிருக்கிறாள்” என்றார் சங்கர்.

“வா கௌசிக், எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டபடியே வந்து உட்கார்ந்தார் மஹாதேவன்.

“நன்றாக இருக்கிறேன் மாமா. நீங்கள் சௌக்கியமா?”

“ம்” என்று புன்னகைத்தார் மஹாதேவன்.

“மாமா! இவள்தான் என் தோழி லேகா” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் ஸ்நேஹா.

“நமஸ்காரம் மாமா. உங்களைப் பற்றியும் உங்களுடனான விவாதங்கள் பற்றியும் ஸ்நேஹா நிறையச் சொன்னாள்” என்றாள் லேகா.

“நல்லது” என்று புன்னகைத்தார் மஹாதேவன்

“அண்ணா! உங்களுக்காக மசாலா டீ தயாரித்தேன்” என்று சொல்லியபடியே, அவர் முன் டீ கோப்பையை வைத்தார் சௌம்யா.

“அருமை. நல்ல புத்துணர்ச்சியைத் தரும்” என்று எடுத்துப் பருகத் தொடங்கினார் மஹாதேவன்.

“மாமா! லேகா உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறாள்” என்றாள் ஸ்நேஹா

“கண்டிப்பாகக் கேட்கட்டும். கேள் லேகா”

“மாமா! நம் அனைவரையும் பிணைக்கும் கண்ணுக்குத்தெரியாத சக்திதான் தூய்மையான அன்பு என்று ஸ்நேஹா சொன்னாள். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், என் கணவர் மகேஷின் பெற்றோர்களுடன் இருப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நன் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். நான் இதற்கு எப்படித் தீர்வு கண்டு அவர்களுடன் சமரசம் செய்துகொள்வது?” என்று கேட்டாள் லேகா.

“இந்தப் பிரச்சனை சம்பந்திகளுக்கிடையேயும், புகுந்த வீட்டில் இருப்பவர்களுக்கிடையேயும் மட்டும் ஏற்படுவதல்ல. இது சகோதரரகளுக்கிடையேயும், பெற்றோர்களுக்கிடையேயும், நண்பர்களுக்கிடையேயும், ஏன் குழந்தைகளுக்கிடையேயும் கூட ஏற்படும் பிரச்சனை. மேலும் இது உன் தனிப்பட்ட பிரச்சனை. இதை ஏன் இங்கே கொண்டுவருகிறாய்?” என்று கேட்டார் மஹாதேவன்.

“நீங்கள் ஒரு தீர்வு தந்து உதவுவீர்கள் என்று நினைத்தேன்”.

“உன்னிடம் அவர்கள் குற்றம் கண்டுபிடித்தால் என்ன? அதற்கு நீ எதிர்வினை ஆற்றுகிறாயா?”

“இதுவரை இல்லை. ஆனால் எதிர்வினை ஆற்றவேண்டும், திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற உந்துதலைக் கட்டுப்படுத்தக் கஷ்டப்படுகிறேன்”.

“அட்டகாசம்” என்று கூறிச்சிரித்த மஹாதேவன், “அதை ஏன் கட்டுப்படுத்த விரும்புகிறாய்?” என்று கேட்டார்

“எதிர்வினை ஆற்றுவதைவிட மௌனமாக இருப்பதே மேல்” என்று நினைக்கிறேன்.

“ஓ! உன்னுடைய ‘மௌனம்’ என்கிற அந்த வார்த்தைப் பிரயோகம் மிகவும் வலிமையானது”

“ஏன் மாமா?”

“உண்மையில் இம்மாதிரியான எதிர்வினையில் நான்கு வகை உண்டு. நிம்மதி, அமைதி, சாந்தி, மௌனம். அதாவது ஆங்கிலத்தில் Quiet, Calm, Peace, Silence என்று சொல்லலாம். இந்தப் பட்டியலில், மேலே உயர்ந்த நிலையில் இருப்பது மௌனம். எனக்கு யோகா கற்றுக்கொடுத்த குருதான் இதைச் சொல்லிக்கொடுத்தார்”.

“இதற்கு அர்த்தம்?”

“உன்னுடைய நடப்பு (தற்போதைய) எதிர்வினையானது ‘நிம்மதி’ ஆகும்”

“விளக்க முடியுமா?”

“நிச்சயமாக. எதிர்வினை ஆற்றவேண்டும், திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உனக்குள் ஏற்படும் உந்துதலை, வாயை மூடிக்கொண்டு இருப்பதன் மூலம், மனதளவிலும், உடலளவிலும் கட்டுப்படுத்திக்கொள்கிறாய். அப்படி ஒரு ‘ஓய்ந்த’ நிலையில் இருக்கும்போது அதிலிருந்து நிம்மதி கிடைக்கப்பெறுகிறாய்”.

“நிச்சயமாக, ஒரு வாக்குவாதம் ஏற்படுவதை நான் தவிர்க்கிறேன்”.

“சரியாகச் சொன்னாய். நீ நிம்மதி அடைகிறாய். அதிலிருந்துதான் உன்னுடைய அன்பைக் கட்டமைக்கிறாய்”.

“அப்படியென்றால் அமைதி என்பது என்ன?” என்று கேட்டாள் சௌம்யா.

“எதிர்வினை ஆற்றவேண்டும் என்கிற உந்துதலை நீ தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருக்கும்போது, அந்தத் தொடர் கட்டுப்பாடானது உன்னை அடுத்த நிலைக்கு, அதாவது ‘அமைதி’ நிலைக்குக் கொண்டு செல்கிறது”.

“அந்த நிலையிலும் எனக்கு அந்த உந்துதல் தொடர்ந்து இருக்குமா?”

“உண்மையாக அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் அனுதாபத்துடன் நடந்துகொள்ள ஆரம்பிப்பாய். யாரெல்லாம் உன்னிடம் அப்படி ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறார்களோ, அவர்களிடமெல்லாம் அனுதாபம் காண்பிப்பாய். உன்னிடம் குறை காண்பது அவர்களுடைய இயற்கையான குணம் என்று உனக்குள் ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் அனுதாபம் கொள்ளத் தொடங்குவாய். நிம்மதியான நிலையை அடைந்து அதிலிருந்து அமைதி பெறுவாய். எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கிற உந்துதல் மறைந்துவிடும். முன்பைவிடப் பக்குவமாக நடந்துகொள்வாய்”.

“நான் இப்போது அந்த நிலையில் கண்டிப்பாக இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். அந்த நிலையை எப்படி அடைவது?”

“எளிது. அதைச் சுற்றித்தான் அன்பு என்பது உள்ளது. அவர்களுடைய நடவடிக்கைகளின் ‘காரணமாக’ அல்லாமல், அவர்களுடைய நடவடிக்கைகளை ‘மீறி’ அல்லது அவர்கள் நடவடிக்கைகள் ‘இருந்தபோதும்’ அவர்கள் மீது அன்பு செலுத்துவாய். Not ‘on account of’ their actions, but, ‘in spite of’ their actions! அவர்களுடைய அக்கறை மீது அனுதாபம் கொள்; உன்னுடைய ‘எதிர்வினை’ ‘மறுவினை’ ஆக மாறுவதைக் காண்பாய். You will find your reactions turning into responses”.

“முயற்சி செய்கிறேன். சாந்தி என்பது என்ன?”

“அது உண்மையிலேயே உயர்ந்தது. நீ அமைதியாக இருக்கப் பழகிக்கொள்ளப் பழகிக்கொள்ள, உறவுகளை அதிகம் அனுபவிப்பாய். அவர்களிடம் பச்சாதாபம் கொள்வாய். பரிவு காட்ட ஆரம்பிப்பாய். அவர்களுடைய நடவடிக்கைகளில் அக்கறை கொள்ளத் தொடங்குவாய்; அவ்வாறு சாத்தியமானதைப் பற்றி வியக்கவும் செய்வாய். அவர்களிடம் பரிவு காட்டுவது உனக்கு அமைதி அல்லது சாந்தியைத் தரும். மற்றவர்களின் நவடிக்கைகளை ‘மீறி’ அல்லது அவர்கள் நடவடிக்கைகள் ‘இருந்தபோதும்’ நீ உனக்குள்ளே அமைதியுடன் இருப்பாய்”.

“நான் பேசாமல் இருப்பதன் மூலம் அமைதியைப் பெறுவதாக நினைத்திருந்தேன்”.

“உண்மையில் நீ ஆரம்பத்தில் நிம்மதியை அடைந்தாய்; நாளடைவில் முன்னேற முன்னேற நீ அமைதியைப் பெறுவாய். அது மிகவும் முன்னேறிய நிலை; அந்நிலையை அடைய மற்றவர்களிடம் அளப்பரிய அன்பு செலுத்துவது அவசியமாகும்”.

“அதைப் பயிற்சியின் மூலம்தான் அடைய முடியுமா? குறுக்குவழி ஏதேனும் உண்டா?”

“நிச்சயமாக. அவர்களுடைய நடத்தையை மீறி அவர்களிடம் அன்பு செலுத்துவதே மிகவும் எளிதான குறுக்குவழி”

“இதில் என் சுயமரியாதை எங்கே இருக்கிறது?”

“உனக்கு நீ தான் நீதிபதி. நீ மற்றவர்களிடம் மரியாதையைக் கேட்டுப் பெறுவதில்லை; உன்னுடைய நடத்தையின் மூலமே பெறுகிறாய்; இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் உன்னுடைய எதிர்வினை அல்லது மறுவினையைப் பொறுத்துப் பெறுகிறாய்”.

“அது அடங்கிப்போவது போல ஆகாதா?”

“இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நீ அதை எப்படி எடுத்துக்கொள்கிறாயோ அதைப் பொறுத்தது”.

“ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்கும் நிலை, அன்பின் மூலமாக மட்டும்தான் பெறக்கூடியதா?” என்று கேட்டார் சங்கர்.

“உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துதான் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”.

“நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை எப்படிப் பரிசோதித்துக்கொள்வது, அல்லது கண்காணிப்பது?” என்று கேட்டான் கௌசிக்.

“குறிப்பிட்டச் சூழ்நிலைக்கான உன்னுடைய மறுவினையைச் சோதித்துப்பார். ஆத்திரத்துடன் பல்லைக்கடிக்கின்றாயா, அல்லது அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாயா, அல்லது உண்மையில் சிரித்தபடியே அதைக் கடந்து செல்கிறாயா? இவை குறிப்பிட்டச் சூழ்நிலைக்கான மூன்று வெவ்வேறான மறுவினைகள், மூன்று வெவ்வேறான நிலைகளை உடைய மறுவினைகள்”.

“அண்ணா! நீங்கள் மிகவும் உயர்ந்த நிலையாகக் குறிப்பிட்ட மௌனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் சௌம்யா.

“அது மிகவும் உயர்ந்தது. உண்மையில் அனைத்து உறவுகளுக்கும் அதுவே மையமானது”.

“என்னது? மௌனம் எப்படி உறவுக்கு மையமாக இருக்க முடியும்?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“தூய அன்பின் உச்சமே மௌனம்”.

“உள்ளிருந்து எந்த விதமான மறுவினையும், எதிர்வினையும் இல்லாதிருப்பதுதான் மௌனம் என்கிறீர்களா?” என்று கேட்டான் கௌசிக்.

“அருமையாகச் சொன்னாய் கௌசிக். உண்மையிலேயே, உள்ளிருந்து எந்த விதமான மறுவினையும், எதிர்வினையும் இல்லாதிருப்பதுதான் மௌனம். அதை அன்பினால் மட்டுமே சாதிக்க முடியும். தூய அன்பின் உச்சமே மௌனம்”

“அது உன்னுடைய கருத்தா?” என்று கேட்டார் சங்கர்.

“அது என்னுடைய கருத்தா இல்லையா என்பதை மறந்துவிடு. நீயே ஆய்வு செய்து பார். நீ சூரியன், நிலவு, மலர்கள் மற்றும் இயற்கையில் உள்ள அனைத்தையும், அவற்றின் அளவு, வடிவம், நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விரும்புகிறாய், இல்லையா? அவற்றைப் பார்க்கும்போது, உனக்குள் ஏதாவது மறுவினையோ அல்லது எதிர்வினையோ எற்படுவதை அனுபவிக்கிறாயா?”

“அதற்குக் காரணம், நாம் அவைகளிடமிருந்து எதுவும் பெறுவதுமில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை” என்றார் சங்கர்.

“இல்லை அப்பா. அனைத்து சக்திக்கும் ஆதாரம் சூரியனே. அனைத்து விதமான உணவுக்கும் நீருக்கும் ஆதாரம் இயற்கையே. அவைகளிடமிருந்து நாம் எதுவும் பெறுவதில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?” என்றான் கௌசிக்.

“நன்று. இயற்கையின் இடத்தில் மக்களை வைத்துப்பார். திடீரென்று நீ வித்தியாசமானவனாக ஆகிவிடுவாய். நீ கேட்கவும், எதிர்பார்க்கவும், கொடுக்கவும், எதிர்வினை ஆற்றவும், மறுவினை ஆற்றவும் ஆரம்பித்து விடுவாய். மக்களை உள்ளபடியே ஏன் நம்மால் பார்க்க முடியவில்லை?” என்றார் மஹாதேவன்.

“இப்பொழுது உங்கள் கருத்து எனக்குப் புரிபடுகிறது” என்றாள் லேகா.

“நடப்பில் (தற்போது) நாம் என்ன பெறுகிறோம், என்ன செய்கிறோம் என்பதன் அடிப்படையில் உறவு அமைந்திருப்பதால், அந்தமாதிரி நம்மால் பார்க்க முடியவில்லை”.

“எப்போதும் நான் ஆராயப்படுவதாகவே நான் காண்கிறேன்” என்றாள் லேகா.

“வாழ்க்கைத் துணைகள், சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து உறவுகளுக்கு இடையேயும் அதுவே உண்மை. நீ உனக்குள் விரிவடைந்து, அனைவரிடமும், அவர்களையும் அவர்களுடைய செய்கைகளையும் மீறி அன்பு செலுத்தினாலொழிய, உன்னால் இந்த அமைதி மிகுந்த நிலையை அடைய முடியாது”.

“லேகா! இதைப் பயிற்சி செய்யக்கூடிய அளவுக்குத் திறமை உள்ளவள் தான் நீ” என்றார் சௌம்யா.

“உண்மையிலேயே அதைப் ப்ரீட்சித்துப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது நிச்சயமாக உதவும்” என்று உறுதியாகச் சொன்னாள் லேகா.

“மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்?” என்று கேட்டார் சௌம்யா.

“அந்நிலையை அவ்வளவு சுலபமாக அடைய முடியாது. நீங்கள் சிறந்த மகான்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் முக்கியமானவர் ரமண மஹரிஷி. அவருடைய உபதேச முறையே மௌனம் தான். அவருடைய உபதேசமே மௌனம். அவர் மக்களை மௌனமாக இருக்கத் தூண்டினார். அந்த மௌனத்தில் அனைத்தும் புலப்பட்டன. அவ்வாறு புலப்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்.

“அவ்வாறு கூறியவர்களில் யாரையாவது குறிப்பிட முடியுமா?” என்று கேட்டார் சங்கர்.

“எனக்குத் தெரியும். பால் பிரண்டன் அவ்வாறு கூறியுள்ளார்” என்றான் கௌசிக்.

“அருமை கௌசிக். தயவு செய்து அவர் எழுதியவற்றைப் படியுங்கள். மௌனத்தின் சக்தியைக் கண்டு அசந்து போவீர்கள். மௌனத்தின் ஊடாக, தான் ரமண மஹரிஷியுடன் நடத்திய உரையாடலை விளக்கிக் கூறுகிறார் பிரண்டன்.” என்றார் மஹாதேவன்.

“உண்மையாகவே நான் அவருடைய எழுத்துக்களைப் படிக்க வேண்டும். படிப்பேன்” என்றார் சங்கர்.

“அனைத்து எண்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மௌனமே ஆதாரம். அனைத்து ஒலிகளும் மௌனத்திலிருந்தே எழுகின்றன, மௌனத்திலேயே நிலைக்கின்றன, மௌனத்திலேயே கரைகின்றன”, என்றார் மஹாதேவன்.

“உண்மை தான்” என்றாள் ஸ்நேஹா.

“அனைத்து அறிவும் ஒலியைத் தவிர வேரொன்றுமில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்ததெல்லாம், வார்த்தைகளால் ஆக்கப்பட்டதாக நீங்கள் கற்பனை செய்துகொள்வதெல்லாம், ஒலியைத் தவிர வேரொன்றுமில்லை”.

“அப்படியென்றால் மௌனமே அனைத்து அறிவுக்கும் ஆதாரம் என்று சொல்லலாம்” என்றாள் ஸ்நேஹா.

“அற்புதம் ஸ்னேஹா. சங்கர்! நீ என்னிடம் ஆதாரம் கேட்டாய். நாம் இதுவரைக் கண்டிராத மிகச் சிறந்த குருவான, உன்னுடைய பெயர் கொண்ட ஆதிசங்கரர், தான் எழுதிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை ‘மௌன’ என்றே ஆரம்பிக்கிறார். அந்த ஸ்தோத்திரம் முழுவதும் அவ்வார்த்தையை விஸ்தாரமாக விவரிக்கிறார்.

“உண்மையாகவே எனக்கு அது தெரியாது” என்றார் சங்கர்.

“நாம் ஏற்கனவே நம் விவாதத்தில், இந்தப் பரவெளியைக் கடவுளின் படைப்பாகப் பார்த்தோம். இந்தப் பரவெளியில் பொருட்கள் தோன்றுவதையும், பரவெளியிலேயே இருப்பதையும், அதிலேயே கரைவதையும் பார்க்கிறோம். இவைகள் முழுமையான ஸ்தூலப்பொருட்கள். மௌனம் நுட்பமானது, சூக்ஷுமமானது. ஒவ்வொரு எண்ணமும் மௌனத்திலேயே எழுந்து, மௌனத்திலேயே இருந்து, அதிலேயே கரைகின்றது. உண்மையில் சொல்லவேண்டுமென்றால், உண்மையைக் கண்டறிவதற்கான வாகனமே மௌனம் என்று மௌனத்தின் சிறப்பை நம்முடைய ஆன்மிக நூல்கள் விவரித்துக் கூறுகின்றன”.

“என்ன உண்மை?” என்று கேட்டான் கௌசிக்.

“உன் சுயத்தை அறிந்துகொள்வது, உன்னை நீயே தெரிந்துகொள்வது”.

“எதற்காக மௌனத்தைப் பற்றி அப்படி ஒரு விரிவாக்கம்? அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?”

“வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனம்தான் ஏதோ ஒரு அர்த்தம் பெறுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் உனக்கு உதவுகிறது; மற்றபடி அது ஒரு நீண்ட சத்தம் மட்டுமே. ஒரே ஒரு மௌனம் மட்டுமே இருக்க முடியும். ஜப்பானிய மொழியில் ஒருவித மௌனத்திலும், தமிழில் வேறுவிதமான மௌனத்திலும் நீ இருக்க முடியாது. அனைத்துமே மௌனம்; மௌனத்திலேயே அனைத்தும்”.

“தெய்வமே! நீங்கள் இறைவனைப் பற்றியும் அதையே தான் சொன்னீர்கள். அனைத்தும் இறைவன்; இறைவனுக்குள் அனைத்தும் என்றீர்கள். பின்னர் அனைத்தும் பரவெளி; பரவெளியிலேயே அனைத்தும் என்றீர்கள். இப்போது மௌனத்தைப் பற்றியும் அதே போலப் பேசுகிறீர்கள். நான் ஏதாவது முரண்பாடைக் காண்கிறேனா?” என்று கேட்டான் கௌசிக்.

“இல்லை. நீ முரண்பாட்டைக் காணவில்லை. உண்மையில் நீ சாரத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளாய்”.

“எப்படி?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“எது காலத்திலும் பரவெளியிலும் மாறாமல் இருக்கிறதோ, எது கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் வேறாக இல்லாமலும், எதிர்காலத்தில் வேறாக மாறாமலும் இருக்குமோ, அதுவே உண்மை என்று உண்மையை வரையறை செய்யலாம்; அல்லது உண்மைக்குச் சொற்பொருள் விளக்கம் தரலாம். ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆம்” என்றாள் ஸ்நேஹா.

“பரவெளியைக் கவனத்தில் எடுத்துக்கொள். கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே பரவெளி எதுவும் மாற்றம் அடைந்துள்ளதா? எதிர்காலத்தில் எதுவும் மாற்றம் அடையுமா?”

“இல்லை”

“அதே போல மௌனத்தையும் எடுத்துக்கொள்”

“எனக்குப் புரிகிறது” என்றாள் ஸ்நேஹா

“பரவெளியைப் போலவே மௌனத்திற்கும் தொடக்கமும் கிடையாது; முடிவும் கிடையாது. கடவுளுக்கும் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை, என்றும் சொல்கிறோம்”.

“ஆஹா! அற்புதம்!” என்றான் கௌசிக்.

“ஒரு நிமிடமாவது மௌனத்தில் இருக்க முயலுங்கள்”

“தியானத்தையா குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார் சௌம்யா.

“எப்படி வேண்டுமானாலும் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள். ஒரு நிமிடமாவது மௌனத்தில் இருக்க முயலுங்கள்”.

“அது உண்மையிலேயே கஷ்டம்” என்றார் சங்கர்.

“மிகச்சரி. அதற்கான காரணத்தைக் கீதையில் அர்ஜுனன் சிறப்பாக விளக்குகிறான். பேய் இறங்கிய கள்ளைக் குடித்த, தேளாலும் கொட்டப்பட்ட குரங்கைப் போன்றது மனம் என்கிறான். அப்பேர்பட்ட ஒரு குரங்கினைக் கற்பனை செய்து பாருங்கள். அதனால் ஒரு கணமேனும் ஓரிடத்தில் இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை!”

“நம் மனம் அப்பேர்ப்பட்டதா?” என்று கேட்டான் கௌசிக்.

“ஆம், முழுமையாக. அனைத்து வலிகளுக்கும், துன்பத்திற்கும், சந்தோஷத்திற்கும் ஆதாரம் உன் மனமே. எப்போதும் அந்தக் குரங்கைப் போலவே எதிர்வினை ஆற்றுகிறது. அந்தக் குரங்கை ஒரே இடத்தில் இருக்கச் செய்யப் பயிற்சி அளிப்பது மிகவும் கடினம். அதைப் போல் தான் நம் மனமும்”.

“அவ்வளவு கடினம் என்றால் அதை ஏன் முயற்சிக்க வேண்டும்?”

“நாம் எப்போதும் பல்லைக் கடித்துகொண்டு அதே நிலையில் இருக்க முடியாது. நாம் மேலும் உயர்ந்து மனமுதிர்ச்சி பெறவேண்டும். எப்போதும் பல்லைக்க்கடித்துக்கொண்டு கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க விரும்பினால், நாம் எப்படி மேலும் உயர்ந்து மனமுதிர்ச்சி அடைவது? அது ஒரு விருப்பமா?”

“அப்படியில்லை. மௌனமாக இருப்பதன் மூலம் இதை சாதிக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா?”

“இல்லை. நீ முதலில் அனைத்திடமும் அன்பு செலுத்த ஆரம்பி. உண்மையில் அதுதான் ஆரம்பம். அன்பு அனைத்தையும் வெற்றி கொள்கிறது; அனைத்தையும் இணைக்கிறது. அதைப் பயிற்சி செய்யச் செய்ய அது உன் இரண்டாவது இயல்பாக ஆகிவிடுகிறது. உன்னிடத்தில் கூட நீ வெட்கம் கொள்ளாமல், மிக எளிதாகச் சிரித்துக் கடந்து செல்வாய். அதுவே அன்பின் உண்மையான அறிகுறி”.

“அதனால்தான் தூய அன்பின் உச்சமே மௌனம் என்றீர்கள்” என்றாள் ஸ்நேஹா.

“மிகச்சரி ஸ்நேஹா. நீ புரிந்துகொள்கிறாய்”.

“ஆனால் என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?”

“இதுவரைப் பேசியதே மிகவும் பாரமாக உள்ளது. அதைப் பற்றிச் சிந்தனை செய்ய நேரம் வேண்டும்” என்றார் சங்கர்.

“கண்டிப்பாக. நாம் டின்னர் சாப்பிட்டுவிட்டுப் பிறகு பேசுவோம்” என்றார் சௌம்யா.

“மௌனமாக உணவின் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் லேகா.

(தொடரும்)

2 Replies to “நம்பிக்கை – 9: மௌனம்”

  1. Hafiz Aide Asks Muslims to Wage ‘Jihad’ During Ramzan, Says ‘Flag Of Islam Will Be Hoisted In India And US’

    Jamaat-ud-Dawa, a front outfit of the militant group Lashkar-e-Taiba (LeT), has provoked the Muslims to wage ‘Jihad’ (holy war) during the holy month of Ramzan.

    Maulana Bashir Ahmad Khaki, a senior JuD functionary while speaking at Friday sermon in Rawalakot city of Poonch district, Pakistan occupied Kashmir (PoK), said, “Ramadan is the pious month of ‘Jihad-o-Qital’ (Jihad and killing). Those who attain martyrdom while waging Jihad, doors of heaven remain open”. “JuD cadres are still waging Jihad in Kashmir and fighting with Indian forces in Kashmir. They are waging Jihad for freedom of Kashmir and destruction of India. Urged participants to raise flag of ‘Jihad’ against infidels,” he added. Lashkar-e-Taiba is responsible for sending its terrorists to Kashmir valley and creating mayhem.

    Maulana Bashir also requested the people in PoK to allow their sons to join for Jihad. ” I Appeal participants to donate generously (wheat, ration and cash) during the month of ‘Ramadan’ to JuD and for ‘Mujahideen’ waging Jihad. I also urge women to donate their sons and cash for ‘Mujahideen’ who were waging ‘Jihad’ in Kashmir,” he said.

    Calling himself a messenger of LeT chief Hafiz Saeed, Maulana Bashir said, “Flag of Islam will be hoisted in India and America. Modi (Indian Prime Minister) will be killed. India and Israel will get disintegrated as more and more martyrs will be produced.”

    https://www.dnaindia.com/world/report-hafiz-aide-asks-muslims-to-wage-jihad-during-ramzan-says-flag-of-islam-will-be-hoisted-in-india-and-us-2623199

    ——–

  2. இது ஒரு நல்ல முயற்சி. பிற கட்டுரைகளையும் தமிழில் வெளியிடுவது நன்மை பயக்கும். இக்கட்டுரையின் ஆங்கில மூலம் எங்கு கிடைக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *