‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

<<முந்தைய பகுதி

தொடர்ச்சி.. 

(5)

இந்திரன், சாத்தன் – ஆராய்ச்சி கலக்கம்

ஆவுடையார் கோயில் குறித்த சென்ற பதிவில்,இத்திருக்கோயிலில், பீடம் இந்திரனாக, இந்திரன் சாத்தனாக, சாத்தன் திருமாலான வேடிக்கைகளைப் பார்த்தோம். அந்த இந்திரனான சாத்தனுக்கே இங்கு கோயில் இருந்தது என்பதை ஸ்தாபிக்க எண்ணி நூலாசிரியர் ஸ்தம்பித்து விழுந்ததை இன்று பார்க்கலாம்.

சாத்தன் முன்பாக ஊர் சபை கூடுவதாலும், குதிரை வீரர்கள் நிறைந்திருப்பதாலும் அவரே மன்னர் பதவி வகிப்பவர் என்று இலவம்பஞ்சில் கட்டிடமொன்றெழுப்பி அதற்கு சம்பந்தமற்ற கல்வெட்டுகளை காட்டி சுண்ணமும் பூச முயன்றுள்ளார். இவர் அவரானார், அவர் இவரானார் என்ற ஜாதகக் கதைகளுக்கு ஆதாரம் எதுவும் காட்டாமல் அடித்து விட்டு, சாத்தனுக்கு மஹாராஜா என்ற பெயர் ஏற்பட்டதற்கு நெல்லைச்சீமையில் ஒரு கோயிலில் உள்ள கல்வெட்டு ஆதாரங்களை காண்பிக்க புகுந்த ஆசிரியரின் நகைச்சுவை உணர்வை இனி ரசிப்போம்.

(தொடர்புடைய நூல் பக்கங்களின்  படங்கள் இங்கே)

பெரும்படை சாத்தன் கோயில் என்று ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கும் ஒரு திருக்கோயிலில் விளங்கும் சாத்தனின் பெயரை பிடித்துத்தொங்கி, சாத்தன் தான் இந்திரன், அதனால் அவன் தான் மஹாராஜா, ராஜாவிடம் தான் குதிரை இருக்கும், திருப்பெருந்துறையில் குதிரை சிலைகள் நிறைய இருக்கு, மாணிக்கவாசகரோ குதிரை வாங்க வந்தவர், அதனால்………. ஆவுடையார் கோயிலில் இருந்தவர் சாத்தன் தான் என்று தீர்ப்பே எழுதிவிட்டார்.

இவர் சொல்லும் பெரும்படை சாத்தன் கோயிலில் உள்ள ஒரு செக்கில் காணப்படும் கல்வெட்டை சுட்டுகிறார் ஆசிரியர்.

//மூங்(கில்)குடி நாட்டு மாறமங்கலத்து திணைகள் பேரால் மிழலூர் அப்பனுழந் இடுவித்த செக்கு//

பண்டைய தமிழ் சமூகத்தில் எண்ணையாளும் செக்குகளை கோயிலுக்கு கொடையாக வழங்குவதும், அப்படி வழங்கினார் பெயரையையோ, அல்லது யார் நினைவாக வழங்கப்பட்டதோ அவர் பெயரையோ வெட்டுவித்தல் மரபு. இவர் சுட்டும் இந்த செக்கை ஒரு குறிப்பிட்ட படைப்பிரிவினர் வழங்கியதாக சொல்கிறார். இருந்துவிட்டுப் போகட்டுமே. எத்தனையோ ஆலயங்களில், படைத்தளபதிகள், படைப்பிரிவின், குழுவினர் என்று இப்படி பலர் வழங்கிய கொடைகள் உள்ளன.

திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கோயிலில், சாத்தனாருக்கு ஒரு படைப்பிரிவினர் செக்கொன்றை வழங்கியதற்காக எந்த கோயிலில் குதிரை சிலைகளை பார்த்தாலும் அது சாத்தன் கோயிலா? இதை வேடிக்கை என்பதா, வேதனை என்பதா ? ஆசிரியரின் இந்த கூற்றின் படிபார்த்தால் விஜயநகர மன்னர்களும், அவர்களை தொடர்ந்து நாயக்க மன்னர்களும் எடுப்பித்த பல தலங்களில் குதிரை வீரர்கள் தாங்கி நிற்கும் மண்டபங்களை கட்டுவித்தனர். அதெல்லாம் சாத்தன் கோயிலா? அதே அளவுகோலில் பார்த்தால் சாத்தனுக்காக தமிழகத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ள கோயில்களிலேயே வரலாற்று சிறப்பும், அதிகமான கல்வெட்டுகளும், தொன்மையும் நிறைந்த திருப்பிடவூர் சாத்தன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை எடுத்து அலசி விசாரம் செய்வோமா?

அது என்ன எங்கு சாத்தனை பார்த்தாலும் சமணம் என்று கொக்கரிக்கத் துவங்குவது? சாத்தன் வழிபாடு பல சமூகங்களும் உள்வாங்கிய மிக மிகத்தொன்மையான ஒன்று. சமணம் என்று முத்திரை குத்தப்பார்த்தால், என்னிடம் ஒரே கேள்வி தான் உள்ளது. தமிழகத்தில் சமணத்துடன் இவ்வளவு நெருங்கிய தொடர்புடைய சாத்தன், வடநாட்டில் இன்றும் பரவலாக இருக்கும் சமணர்களிடம் பிரபலமடையாதது ஏன்? இந்த ஆசிரியர் போல் வாதம் செய்யவேண்டுமெனில், ஒரே வரியில் சொல்லிவிடலாம். தெற்கே தவழ்ந்து வந்த அமண் சமயம், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இங்கிருந்த வழிபாட்டு முறைகளை களவாடி தனதாக்கியது என்று. ஆனால் அப்படி சொல்ல ஒரு காலமும் துணிய மாட்டேன். இப்படி ஒரு கருத்தை முன்வைக்க பல சாட்சியங்கள், எடுத்துக்காட்டுகள், ஆவணங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அவற்றையெல்லாம் நிறுவி முடியாமல் இதை செய்ய மாட்டேன். எங்கு சாத்தனை பார்த்தாலும் சமணம் என்று நியமிப்பதை விட்டு அறிவுகொண்டு ஆராய்வது அனைவருக்கும் நல்லதாம்.

இப்படி இந்நூலாசிரியருக்கு சமூகவியலும், கல்வெட்டும், வரலாறு கைக்கொடுக்காமல் போக, தமிழிலக்கியங்களை கைக்கொண்டு வேடிக்கை காட்டும் பாங்கை ஈண்டு கவனிப்போம். இரண்டு அரும்பெரும் எடுத்துக்காட்டுகள்.

1. க்ராமங்களில் உள்ள ஐய்யன் கோயிலுக்கு ஊர் மக்கள் சுடுமண்ணாலான குதிரைகளை செலுத்தி விழா எடுப்பதைப் பற்றி சொல்கிறார் ஆசிரியர். ஊர்பொதுவில் அமர்ந்து, கையில் செண்டு கொண்டு, தர்ம பரிபாலனம் செய்யும், சாத்திர நிபுணனான ஐய்யனுக்கு குதிரைகளும், யானைகளும் வாஹனமாக உள்ளதென்பது அனைவரும் அறிந்ததே. இதில் வைதீக அவைதீக மாற்றுக்கருத்துக்கள் ஒன்றும் இல்லை. அதனால் ஐய்யனார் வழிபாட்டில் இப்படி குதிரைகளை செலுத்துவது பக்தர் வழக்கம். இதை சிலப்பதிகாரத்தில் பாடப்படும் இந்திர விழாவுடன் இணைக்கிறார். என்ன கொடுமையிது. சிலம்பில் நடக்கும் இந்திர விழாவென்பது நாள் குறித்து, பறையறிவித்து, ஊராரெல்லாம் கூடி, கொடியேற்றி, ஊரிலுள்ள மற்ற கோயில்களிலெல்லாம் வழிபாடு செய்து, திக் பந்தனம் செய்து, பலிகள் கொடுக்கப்பட்டு, மங்கள கலசங்கள் நிறுவி, இந்திரனின் திருமேனிக்கு திருமஞ்சனம் ஆட்டுவித்து, மறைநூல்களால் அவனையேத்தி, ஆடல் பாடலால் அவனை மகிழ்வித்து, பூஜைகள் செய்து கொண்டாடிய பெருந்திருவிழா. அதில் யாரும் இந்திரனுக்கு சுடுமண் குதிரையெல்லாம் சமர்ப்பிக்கவில்லை. இந்திரனின் வாகனமும் ஐராவதம் தானே. (ஆசிரியர் ரொம்பவும் மெச்சும் ‘சமண’ இந்திரனுக்கும் கூட.) எங்கிருந்து இப்படி புகாரில் நடந்த இந்திரா விழாவுடன், ஐய்யனார் கோயிலில் மண்குதிரைகள் செலுத்தும் வழிபாட்டை தொடர்புபடுத்த முடிகிறதென்று எவ்வளவு யோசித்தும் விளக்கிக்கொள்ள தவறுகிறேன்.

2. அடுத்த வேடிக்கை மாணிக்கவாசகரின் கீர்த்தித்திருவகவலில் நரியை பரியாக்கி இறைவன் அருளியது பற்றி வரும் வரிகளை ஆசிரியர் அறிந்தியம்பும் பகுதி.

குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் (வரி 27, 28)

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் (வரி 44, 45)

வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும்
மெய்க்காட்டிட்டு வேண்டுருக் கொண்டு (வரி 64, 66)

இவ்வரிகளில் சாத்து என்னும் சொல்லை வைத்துக்கொண்டு சிவபெருமான் குதிரை வணிகராக வந்ததும், குதிரை சேவகனாக வந்ததும் பேசி, குதிரை வீரர்களுக்கு தலைவன் என்கிறார். மேலும் மெய்காட்டுதல் என்பதற்கு பொருள் தேர அடுத்த வரிகளை படிக்காமல் விட்டுவிட்டு, மெய்காட்டுத்தல் என்றால் குதிரைகளும், படை வீரர்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கும் நிலையை நிரூபித்தல் என்று தன் ஆராய்ச்சி முத்தை உதிர்கிறார். இவ்வபத்தம் போதாதென நம்பி திருவிளையாடல் புராணத்தில் “எண்ணாப் பெரும்படை மெய்க்காட்டிட்டு” என்று வரும் வரியைக் கொண்டு, இவ்வரிகளை பெரும்படைச் சாத்தனுடன் தொடர்பு படுத்துகிறார்.

(இவ்வளவு தலை சுற்றவைக்கும் தாவல்களும், காட்சி மாற்றங்களும், ஒருவர் மற்றொருவராகும் விந்தைகளும் மூன்றாம் தர தொலைகாட்சி தொடர்களில் கூட கேள்விப்பட்டதில்லை)

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாசகம் இவ்வம்மையாரை சென்றடைய வழிசெய்வோம்.

இவ்வவலங்களையெல்லாம் படிக்கும்போது, இவ்வாசிரியரின் ஆராய்ச்சியின்மையும், காழ்ப்பும் நம்மை ஹாஸ்யப்படுத்தினாலும், இதை சைவ சித்தாந்த பெருமன்ற வளாகத்தில் அவர் வாசித்தபோது, அங்கிருந்தோர் எப்படி அனுமதித்தனர், எதற்காக பொறுத்துக்கொண்டு இருந்தனர் என்ற கேள்விகள் அச்சம் கொள்ளும் விதமாக உள்ளது. இந்நூலே ஒரு கேலிக்கூத்து, இதற்கு சித்தாந்த பெருமன்ற தலைவர் யாத்துள்ள ஆறு பக்க பதிப்பாசிரியர் உரை அதனினும் விசித்திரம். நூலில் உள்ள மற்ற வேடிக்கை விஷயங்களையும், பதிப்பாசிரியர் உரையில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களையும் அடுத்துப்  பார்க்கலாம்.

அரக்க னாண்மையை , நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத் , திருத்த மாகுமே.

(அரக்கனான இராவணனின் செருக்கை, கால்விரல் அழுத்தத்தால் அறுத்த ஆரூரானை கைத்தொழுவார்க்கு, மனக்கோணல்கள் நீங்கி திருத்தம் அடையும்.)

(6)

இருவர் செருக்கழிக்க வல்லான்

மாணிக்கவாசகர் பற்றிய வரலாற்று ஆய்வு என்று தொடங்கி, அறிவார்ந்தார் ஏற்கும் எவ்வித ஆய்வு நெறிகளையும் கைக்கொள்ளாமல், தன்மனம் போன போக்கில் தமக்கேற்ப செய்திகளை திரித்து நூலாக்கி வெளியிட்ட முனைவர் ஆ.பத்மாவதி அம்மையாரின் நூலில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி வருகிறோம். நூலின் நோக்கம் மாணிக்கவாசகர் கட்டியதாக அடியார் பெருமக்கள் நம்பும் திருப்பெருந்துறை கோயில் ஒரு சிவன் கோயிலே இல்லை என்றும், அது ஏதோ அமண்சமய பாழியென்றும் ஸ்தாபிப்பது. கிஞ்சித்தும் லஜ்ஜையின்றி, எவ்வித ஆய்வும் செய்யாமல், கண்ணால் அளந்து, அதை கதையாக்கி படைத்துவிட்டு ஆய்வென்று அதற்கு பெயரிட்டுள்ளார் நூலாசிரியர். ஆய்வுக்குறிப்புகளை கேட்டாலும் கொடுக்க பயந்து மௌனம் சாதித்து வருகிறார் என்று கேள்வி.

நூலின் தொடக்கத்திலேயே இவர் சிலவருடங்கள் முன் பிரம்பன் வலசையில் நடந்த சைவ சித்தாந்த பெருமன்ற மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், அப்போதுதான் திருப்பெருந்துறைக்கு பெருமன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்றதாகவும் சொல்லியுள்ளார். அப்போது அவ்வூரில் ஏதோ அம்மன் கோயில் திருவிழாவாம். கரகம், தீச்சட்டி, பால்குடம் என்று அமர்க்களமான ஊர்வலம் சிவன் கோயிலில் இருந்து துவங்கியதாக சொல்கிறார். இவர்தம் ஆழ்மனக்காழ்ப்பை அறியாதார், ஏதோ பார்த்தவற்றை பதிந்துள்ளார் என்று எண்ணுவர். ஆனால் அது தான் இவர்தம் அஸ்திவாரம். கிராமக்கோயில் திருவிழா சடங்கு சிவன் கோயிலில் இருந்து துவங்குகிறது என்பது. உடனே , இதிலிருந்து தம் கற்பனை குதிரையை தட்டிவிட்டு, இந்த கோயிலுக்கும் கிராமக்கோயில் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு என்று வினவாமல் நினைக்கவைப்பார். இது தான் இவர் தம் ஆராய்ச்சி பாங்கு. இதை வைத்துதான் ஆராய்ச்சியாளர் என்று வலம் வருகிறார்.

(தொடர்புடைய நூல் பக்கங்களின்  படங்கள் இங்கே)

இப்படி துவங்கிய இவர் தம் ஆராய்ச்சியில் திருப்பெருந்துறை கோயிலில் உள்ள வழிபாட்டு முறைகள், லிங்கபாணம் இல்லாமல் இருப்பது, அம்மையின் சந்நிதியில் திருமேனி ப்ரதிஷ்டையின்றி திருவடிகள் மட்டும் ஏறியருளப் பண்ணியிருப்பது என்று எந்த விஷயத்திலும் புரிதலின்றி, ஆதாரங்களும் இல்லாமல், ஆராய்ச்சி நெறிகளின் கரைக்கு கூட செல்லாமல், கற்பனையில் தாம் காணும் வரலாற்று உலகமே மெய் என்றெண்ணி உளறியுள்ளார். ஆசிரியர் அடித்துவிட்ட நகைச்சுவையில் என்னை கவர்ந்த துணுக்கு. திருப்பெருந்’துறை’ என்றுள்ளதால் இவ்வூர் நீர்நிலைக்கு அருகில் இருக்கனும் என்பது. (இவரும் தொல்லியல்’துறை’யில் வேலையில் இருந்தவர் தான்)

சீரார் பெருந்துறையின் ஒரு பகுதியில் இருக்கும் ஆதி கைலாசநாதர் கோயிலை பற்றியும் பேசியுள்ளார். முதல்முறையாக இவர் தான் அதை போய் பார்த்தார் என்பது போலுள்ளது எழுத்து நடை. ஆனால் அதெலாம் முன்பே திருவாவடுதுறை ஆதீனத்தின் மாதாந்திர இதழிலும், வரலாற்று ஆராய்ச்சியாளர் பெருமக்களால் ஆவணப்படுத்தப்பட்டது தான். அதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த தொல்லியலாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயாவின் 02.03.2014 தேதியிட்ட தினமலர் நாளேட்டில் வெளிவந்த ஆவுடையார் கோயில் கல்வெட்டுகள் பற்றிய கட்டுரையிலும் பேசப்பட்டுவிட்டது. அதுவும் இவர் தம் கண்டுபிடிப்பில்லை.

இந்திர வழிபாடு, சாத்தன் வழிபாடு போன்ற ஆழ்ந்து அறிய வேண்டிய தலைப்புகளை பற்றிய புரிதல் எள்ளளவும் இல்லாமல், எங்கு சாத்தனை பார்த்தாலும் அது சமணத் தடயம் என்று கொள்ளும் மயிலை சீனி வேங்கடசாமியாரின் அவல யுக்தியை கைக்கொண்டு அளந்து விட்டார். அதற்கு நெல்லைசீமையில் உள்ள ஒரு கல்வெட்டை ஆதாரம் என்று புனைந்தார். ஒன்றும் இயலாமல் போக கீர்த்தித்திருவகவலுக்கு பொருள் தருவதாக நினைந்து, சாத்து என்னும் சொல்லை வணிகச்சாத்து என்றாக்கினார். அதைவிட வேடிக்கை, ‘சதுர்ப்படச் சாத்தாய்’ என்ற பதத்திற்கு “குதிரை படைத்தலைவனாகிய சாத்தனாக வந்தார் – என்றும் பொருள் கொள்ளலாம்” என்று மற்றொரு முத்தை உதிர்த்துள்ளார். என்ன சொல்ல? சாத்தாய் என்பது எவ்விதி கொண்டு சாத்தன் என்று பொருள் கொண்டாரோ? இதனினும் நகைச்சுவை, குதிரைச்சேவகன் என்பதை சேவுகப் பெருமாள் என்ற சாத்தனோடு கொண்டு சேர்கிறார். இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுதான் வரலாறா என்றால் அதற்கும் மௌனமே மிஞ்சும்.

மாணிக்கவாசகர் – ஆவுடையார் கோயில் தூண் சிற்பம்

இந்நூலின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் துறையின் 1925-26ஆம் ஆண்டறிக்கையின் பாகம் ii , பக்கம் 98-99இல் பதிப்பிக்கபட்ட ஆவுடையார் கோயில் கல்வெட்டுகளும் (முன்னுரையுடன்) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை திருத்தலம் எது? அவர் எழுப்பிய திருக்கோயில் எது? என்பன போன்ற கேள்விகள் போகின்ற போக்கில் விசாரம் செய்யப்பட்டுள்ளன. இந்நூலின் பிற்சேர்க்கையாக உள்ள செந்தமிழ் நாளேட்டில் வந்த கட்டுரைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் சொன்ன வரிகளையே மீண்டும் தமிழ் படுத்தியுள்ளார் நமது நூலாசிரியர். ஆக பதிப்பித்த பக்கங்களிலும் இவற்றையெல்லாம் குறைத்தால் இந்நூல் பலருடைய கருத்துக்களின் தொகுப்பு என்றே கொள்ளலாம். வேடிக்கை என்னவென்றால் அதில் உள்ள தவறுகளை கூட திருத்தவில்லை. உதாரணத்திற்கு, இந்நூலின் 78வது பக்கத்தில் தொல்லியல்துறையின் ஆண்டறிக்கையில் உள்ளதை பதிப்பிட்டுள்ளதில்,

” Manikkavachakar’s image which has been installed in a separate shrine in the temple is naturally the recipient of great honours, in the same way as the image of Appar the saint of Tiruvanmiyur is honoured in Tiruvadigai, the scene of his saintly labours.”

என்றுள்ளது .

எப்படி திருவான்மியூரில் பிறந்த அப்பர் பெருமான், அவர் தடுத்தாட்கொள்ளப்பட்ட திருவதிகையில் விசேஷமாக கொண்டாடப்படுகிறாரோ, அதுபோல் மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்திருந்தாலும், அருள் பெற்ற திருப்பெருந்துறையில் விசேஷமாக விழாக்கள் எடுத்து கொண்டாடப்படுகிறார், என்றிதை மொழி பெயர்க்கலாம்.

அப்பர் பெருமான் பிறந்த திருவாமூரை திருவான்மியூர் என்று குழப்பிக்கொண்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் இவ்வாண்டறிக்கையை எழுதி பதிப்பித்தவர்கள் சற்றேறக்குறைய 100 ஆண்டுகள் முன் செய்த பிழையை குறிப்பாக காட்டி, தமிழ் படுத்திய அம்மையாரேனும் இந்நூலில் பிழையை சுட்டி, திருத்தியிருக்கலாமே? அந்தத்தவறை தமிழிலும் வேறு அப்படியே மொழிபெயர்த்துள்ளார். (நூலாசிரியர் திருவான்மியூரில் வசிப்பவர் என்பது தனிச்செய்தி)

இப்படி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பிதற்றியுள்ள இந்நூலுக்கு பட்டாலொரு குஞ்சலம் அணிவித்து அழகு பார்த்துள்ளார் பதிப்பாசிரியர் பேராசிரியர், முனைவர் திரு.நல்லூர் சா. சரவணன் ஐயா. அவருடைய பெரிய மனதையும், எல்லோரையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற மனப்பாங்கையும் நிச்சயம் வாழ்த்தலாம். ஆனால் அடிப்படையில் இந்நூலாசிரியரின் கொள்கைகளும், கருத்துக்களும் சித்தாந்த சைவ கோட்பாடுகளை கிண்டலும் கேலியும் செய்வதாக இல்லையா?

இந்நூலில் என்னை மிகவும் பாதித்த பகுதி பக்கம் 72, இரண்டாம் வரியில் வரும் “திருவிளையாடற்புராண கட்டுக்கதைக்குப் பின்…..” என்று நீளும் வரி. வேம்பத்தூராரும் பரஞ்சோதியாரும் பாடியது கட்டுக்கதை என்ற வாசகத்தை பெருமன்றம் பொருட்செலவில் எப்படி பதிப்பித்தார்கள்? இது சிவத்ரோகம் அன்றி வேறில்லையே. இதற்கு ஆறு பக்க அணிந்துரை வழங்கி இதை ஆமோதித்தவாராகின்றாரே ஐயாவும் . இப்படியாவது சித்தாந்த கொள்கைகளை தாழ்த்தி யாருக்கு பெருமை சேர்க்க பார்க்கிறார் இவர்? பொய்யும், புரட்டும், காழ்ப்பும், கற்பனையும் கொண்ட ஒரு நூலில் சிவமும் சித்தாந்தமும் பகடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பெருமன்றமும் துணைபோயுள்ளது. அடியார் பெருமக்களுக்கு பெரும் மனக்கசப்பு விளைத்ததோடு நில்லாமல், இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்.

(இந்நூலால் ஆனா ஒரே நன்மை, இதை படித்துவிட்டு இதுவரை 14 பேர், “இதெல்லாம் தான் ஆராய்ச்சி, இதையும் பதிப்பிப்பார்களென்றால், நானும் எழுதி பதிப்பிக்கலாமே..” என்று தம் ஆர்வத்தை வெளியிட்டுள்ளனர். அதில் 11 பேர் நன்கு பரிச்சயமானவர்கள். நல்ல முறையில் ஆராய்ந்து, உண்மைக்கு புறம்பானவற்றை விலக்கி, தம் உள்ள கருத்தை திணிக்காமல், வரலாறு பேசியும் எழுதியும் வரும் இளைஞர்கள். அவர்களுக்கு உதவி புரிய சரியான புரவலர்கள் கிடைக்க வேண்டுமென்று ஆரூர் பெருமானை வணங்குகிறேன்.)

துள்ளு மிருவர்க்கும் , வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல் , விள்ளும் வினைதானே.

செருக்குற்று திரிந்த ‘இருவருக்கும்’, அச்செருக்கை அழித்து அருளிய வள்ளலான ஆரூர் த்யாகேசப்பெருமானை மனத்தினால் நினைப்பவர் தங்கள் வினையகலும்.

(இவ்விடத்தில் செருக்குற்று திரிந்த ‘இருவர்’ திருமாலும் நான்முகனுமன்றி மற்றாருமில்லை)

(7)

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

என்பது வள்ளுவ நாயனார் உள்ளக்கருத்து. பிறர் வாய் கேட்டவற்றிலேயே நுண்பொருளை ஆராய வேண்டும் என்கிறார். அப்படியிருக்க ஆராய்ச்சியாளர் என்று சொல்லிக்கொண்டு வலம் வருவோர் மேல் எவ்வளவு பெரிய கடமை சுமத்தப்பட்டிருக்கிறது. இதறியாமல் தன் நெஞ்சில் தோன்றியவற்றை சொல்லி, வரலாற்றை திரித்து, வார்த்தைகளால் விளையாடுவது மேன்மக்கள் செயலல்லவே.

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். எவ்வளவு முயன்றும் 15 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட அக்கோயிலில் இந்த மாற்றங்கள் எப்போது வந்தது என்று சொல்ல முயலவுமில்லை. என்ன விதமான ஆராய்ச்சி இது?

60 பக்க கட்டுரையில் இருவது பக்கம் தாண்டாது இவர் தம் சொந்த கருத்து. அதில் தான் இத்தனை குழப்பமும். வரலாறு படைத்தல் என்பதை தவறாக புரிந்துகொண்டார் போலும். தான் முயன்று தன் வரலாறு படைக்க வேண்டுமேயன்றி, பொது வரலாற்றை தம் மனம் போல் படைக்க முடியாது என்பதை யாரேனும் எடுத்துச்சொல்லுங்கள். இந்த நூலாசிரியர் என் நட்பு வட்டத்தில் இருப்பவர் தான். நிச்சயம் இந்த உரைகளை படித்திருப்பார். இவர் தம் வயதும், உடல்நிலையும் கருதி இப்பதிவுகளில் இவரை தொந்தரவு செய்யாமல் இருந்து வருகிறேன். இவற்றையெல்லாம் தொகுத்து அனுப்பி எதற்காவது விடை இருக்கிறதா என்று கேட்க திட்டமிட்டுள்ளேன். அதே சமயம் பெருமன்றத்துக்கும் இவற்றை அனுப்பி விளக்கம் கேட்கலாமென்றுள்ளேன். ஆரூரன் அருள்.

மாணிக்கவாசகர் ஆனி உற்சவ அலங்காரம் – ஆவுடையார் கோயில்

இதற்கிடையே இவ்வாசிரியர் இரண்டு வாரங்களுக்கு முன் பெருமன்றத்தில் தில்லை பெருங்கோயிலை பற்றி சொற்பொழிவு ஆற்றியதாக கேள்விபட்டேன். காணொளியை காணும் படி நேர்ந்தது. வேத பாகங்கள், ப்ரஹ்ம சூத்திரங்களெல்லாம் மெத்த படித்தவருக்கே விழிப்பிதுங்க வைக்கும் விஷயங்கள். இதையெல்லாம் இவர் கையிலெடுப்பானேன்? இருந்து விட்டு போகட்டும், வைதீக மார்கத்தை பற்றி யாரும் எதுவும் பிதற்றலாம். கேள்வியெழாது. ஆயினும் இந்த முத்தெல்லாம் சித்தாந்த பெருமன்றத்தில் தான் உதிர்க்க வேண்டுமா? வேதத்தை நிராகரித்து சைவ சித்தாந்தம் வளர்க்க முற்படுவானேன்? மூவர் முதலிகளும், சந்தானக் குரவர்களும் போஷித்த வேதம் இப்படி சித்தாந்திகளுக்கு ஆகாமல் போகுமோ? ப்ராஹ்மண எதிர்ப்பு என்பது சமூகமும் அரசியலும் சார்ந்த ஒன்று. அதை காண்பித்தே தீர வேண்டுமெனில் தாராளமாக செய்யலாம். ஆனால் அதற்கு சித்தாந்த பெருமன்றம் இடமளிக்கலாமா? அதையும் நேரடியாகச்செய்யாமல் இப்படி ஆராய்ச்சி என்ற பெயரில் அங்கலாய்ப்புகள் செய்வது மனமாசின் வெளிப்பாடு தானே?

இதெல்லாம் போதாதென்று அடுத்து திருத்தணியில் நடக்கவிருக்கும் சைவ சித்தாந்த மாநாட்டின் மகளிர் அரங்கிற்கு முனைவர் ஆ.பத்மாவதி தலைமை வேற தங்கப்போகிறார்களாம். அங்கும் இப்படி ஏதாவது முத்துக்கள் சிந்தினால் எடுத்து வாருங்கள். அதற்கும் நம் மறுப்பை வெளியிடலாம்.

இனி இப்படி அற்பமான காழ்ப்போடு  அன்னிய சமயத்தார் செய்யும் காரியங்களை எப்படி எண்ணித்துணிந்து எதிர்கொள்ளலாம், இந்த நூலை என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுவதை அடியார் பெருமக்கள் கண் விடுகிறேன். ஆளுக்கு ஒரு நூலை வாங்கி அழிக்கலாம் என்று கூட ஒரு அடியார் சொன்னார். அது அவரவர் விருப்பம். அதில் அடியேன் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. அவரவர் தம் ஆச்சார்யர்கள் எப்படி வழிகாட்டுகிறார்களோ அப்படி செய்தல் சிறப்பாம். இதன் பின்னணியில் செயல்படுவோர் மீதும், இந்நூலாசிரியர் மீதும் ஏற்கனவே சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எல்லாம் ஆயத்தமாகிவிட்டிருக்கும் நற்செய்தி சற்றுமுன் தெரியவந்தது. ஆரூரன் துணையோடு நன்மை நாளும் பெருகட்டும். அத்திரமாவது அஞ்செழுத்தாமே.

வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் சிறியேனான அடியேன் இதுவரை இந்த காழ்ப்புமாலைக்கு எழுதிய கண்டனங்களை படித்து, சீர் தூக்கி, தவறுகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கும், மற்றைய அடியார்களுக்கும் தலையலால் கைமாறிலேன். மாணிக்கவாசகர், அடியார் திருக்கூட்டத்தில் ஸ்ரேஷ்டர். அவர் தம் சொல்லுக்கும், வாழ்க்கை வரலாற்றுக்கும் மாசு கற்பிக்க நினைப்பது கண்டு பொறாமையாலே இதை செய்ய நேர்ந்தது. யார் மனமேனும் புண்பட்டிருந்தால் ஆறுதல் அளிக்க ஆரூரனை வேண்டி நிற்கிறேன்.

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே

சீரார் பெருந்துறை அடைந்து, ஆத்மநாதனாக விளங்கும் சிவத்தை கண்டும், அது வேறோர் தெய்வம் என்றெண்ணி மயங்கி மாற்றுரைப்பாரை கண்டு, விடம் நிறைந்த பாம்பினும், பொய்யே புறம் சொல்வார் தம் மெய்யினும் பயந்து நிற்கும் அளவை சொல்லவும் இயலாது.

இனியும் தேவைப்பட்டால் தெளிவுகள் தொடரும்.

ஸ்ரீ த்யாகராஜ மஹாராஜோ விஜயதே.

(முற்றும்)

கட்டுரையாசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் கட்டிடக் கலை நிபுணர்.  கோயில் கலைகள், சிற்பவியல், சமயம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்.  இவற்றைக் குறித்து தொடர்ந்து உரையாற்றியும், எழுதியும்  வருகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

5 Replies to “‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2”

  1. நண்பர் ஸ்ரீ மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களது ப்ரயாசைக்கும் தரவுகளை சேகரம் செய்ய விழைந்த அவரது உழைப்புக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். சட்டரீதியாக அம்மணியாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது முடிபுக்கு வருமுன்னர் அவர் எந்த ஸ்திதியில் இருப்பார் என்பதனை அந்த பார்ச்வநாதரே அறியக்கூடும்.

    தாங்கள் முழுமையாக இன்னொரு வ்யாசம் சமர்ப்பித்தால் இன்னமும் தெளிவு கிட்டும் என எண்ணுகிறேன்.

    என்னைப்போல ஆவுடையார் கோவிலில் தர்சனம் செய்தறியாத பலர் இருப்பர் என எண்ணுகிறேன். தாங்கள் எழுதிய வ்யாசத்திலிருந்து புரிந்து கொண்டது. ஆவுடையார் கோவிலில் கர்ப்பக்ருஹத்தில் ஆவுடையார் மட்டிலும் உள்ளது. ஆவுடையாரில் துளை உள்ளதா இல்லையா. இதற்கு விடை கிட்டவில்லை. அம்பாளின் கர்ப்பக்ருஹத்தில் அம்பாளின் திருவடி மட்டிலும் காணக்கிட்டுகிறது என்றும் புரிந்து கொள்கிறேன். இது மற்றைய சிவாலயங்களிலிருந்து வேறுபட்டது. அதற்கு வேதாகமமரபில் ஒழுகும் சைவ சித்தாந்தவாதிகள் தத்வார்த்த ரீதியாகச் சொல்லும் விளக்கங்கள் யாவை. விளக்கங்களுக்கு ஆதாரமான நூற்கள் யாவை. இவற்றை பொதுவெளியில் பகிர்ந்தால் சொல்லவரும் விஷயம் இன்னமும் முழுத்தெளிவு பெறும்.

    திருவள்ளுவர் சமணர் என்று உரத்துக் குரலெழுப்பும் தீவட்டித்தடியர்கள் அத்துணைபேருக்கும் சக்கரையாய் இனிப்பது மயிலை சீனி வேங்கடசாமியார் நூற்கள். அவற்றை நீங்கள் கட்டுக்கதைகள் என்று கழுவி ஊத்தியிருக்கிறீர்கள். இவரது நூற்கள் நச்சுருண்டைகள் தான் எனும்கைப்புண்ணுக்கு கண்ணாடி காட்டும் வண்ணம் நீங்கள் மேலும் எழுதப்புகல் நன்று. திருவிளையாடற்புராணம் கட்டுக்கதை என்ற கருத்து பழுத்த சைவ சித்தாந்திகளின் வாயிலாகவே கேட்டிருக்கிறேன். ஆனால் அது அவர்களது சொந்தக்கருத்து சைவசித்தாந்தம் பகரும் கருத்தன்று என்பது தங்கள் வாயிலாகா அறிகிறேன். விஷயத்தெளிவுக்கு நன்றி.

    இந்த முனைவர் பத்மாவதி அம்மையார் இயங்கும் தமிழ் பீராய்ச்சிச் சூழல் பற்றி நாம் தெளிவு பெறுதலும் நன்று.

    ஆப்ரஹாமியக்காசில் தமிழகத்தில் பல தமிழ்க்குழுமங்கள் இயங்குகின்றன. அவற்றின் ப்ரதான உத்தேசம் தொல்தமிழ்ச்சமயம் வைதிக சைவ வைஷ்ணவ சமயம் கிடையாது என்று நிர்த்தாரணம் செய்ய விழைவது. மெனெக்கெட்டு ஆராய்ச்சி பீராய்ச்சி ஆய்வு நெறி என்றெல்லாம் இறங்காமல் உரத்துக் கூச்சல் போடுவதன் மூலம் சைவ வைஷ்ணவ சமயங்களை இழிவு செய்வதை இந்த தமிழ்க்குழுமங்கள் முறையாகக் கொண்டிருக்கின்றன. தேவையானால் நேரடியாக இல்லையெனின் மறைமுகமாக இவை பறைசாற்ற விரும்பும் விஷயம் சைவ வைஷ்ணவ சமயங்கள் தமிழகத்துக்கு வந்தேறி சமயங்கள். தொல்தமிழ்நாட்டில் ஜைன பௌத்த சமயங்களே புழக்கத்தில் இருந்துள்ளன என்ற கருத்து இவர்கள் உரத்துக் கூச்சலிடும் கருத்து. இக்கருத்து இவர்கள் செய்த பாதரக்ஷை என்று வைத்துக்கொள்வோம். இந்த பாதரக்ஷைக்கு சரியாக சரித்ரம் எனும் பாதம் அமையவில்லையென்றால் அதை ரத்தம் வரும்படிக்கு அறுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் இந்த ஆப்ரஹாமிய கூலிப்படையினர்.

    நூலாதாரம், தத்வ விசாரம், ஆராய்ச்சி என்று செய்வதற்கு மிகவும் மெனெக்கெட வேண்டும். அப்படியெல்லாம் செய்யாமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பினாத்துதல் ரொம்ப எளிசு. சத்தமாக ஜால்ரா போடுவதற்கு ஒரு படை கைவசம் இருந்தால்……..அதிலும் அப்படையிடம்………தமிழ்க்குழுமங்கள்……டாக்டர் பட்டம் தாங்கிய ………… ஒத்த உள்நோக்கம் உள்ள ஆப்ரஹாமியக்காசில் இயங்கும் ஏனைய நபர்களும் கிடைத்து விட்டால்…… இப்படி நோகாமல் நொங்கெடுப்பது எளுசு.

    ஆப்ரஹாய கூலிக்காசில் எழுதப்படும் பீராய்ச்சிக் காட்டுரைகள் கழுதைகள் இவற்றை களையெடுப்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய காரியம். நூற்றுக்கணக்கான மதுசூதன கலைச்செல்வன் கள் தயாராக வேண்டும். சைவ வைஷ்ணவ சமயங்கள் தெய்வத்தமிழ் மோழியின் ஆன்மா. அந்த ஆன்மாவை தமிழிலிருந்து விலக்கி தமிழ் மொழியினை உயிரிலா ப்ரேதமாக ஆக்க விழைபவை ஆப்ரஹாமிய கூலிக்காசில் இயங்கும் தமிழ்க்குழுமங்கள். இதை கைகோர்த்து செய்ய விழைந்தால் சமயமும் தமிழும் வாழும். அடுத்த தலைமுறைகள் உய்வுறும். மதவெறி பிடித்த ஆப்ரஹாமியம் மீளாக் கல்லறையில் துயில் பெறும். கை கோர்ப்போம்.

  2. அன்புள்ள திரு கிருஷ்ண குமார், ஆவுடையார்கோயில் என இப்போது வழங்கப்படும் திருப்பெருந்துறை பழைய பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுக்கோட்டை வருவாய்க்கோட்டம் ( REVENUE DIVISION) -அறந்தாங்கி தாலுக்காவை சேர்ந்தது.14/1/1974 முதல் , பழைய திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளையும்,பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் அறந்தாங்கி தாலுக்காவையும் இணைத்து புதியதாக புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    இந்த திருப்பெருந்துறை சிவாலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் ஆகும். அதே சமயம் வெள்ளையர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்னர் பாண்டிய நாட்டில் உள்ள பதினேழு சிவாலயங்களில் இதுவும் ஒன்று என்று போற்றப்படுகிறது.

    அரிமர்த்தன பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்க வாசகர் அமாத்தியர் என்னும் அந்தண குலத்தில் உதித்தவர். பாண்டிய மன்னன் உத்தரவின் பேரில் கிழக்கு கடற்கரை துறைமுகமாகிய தொண்டியில் வந்து இறங்கும் வெளிநாட்டு குதிரைகளில் பாண்டிய மன்னரின் குதிரைப் படைக்கு நல்ல குதிரைகளை தேர்ந்தெடுத்து வாங்கும் பொருட்டு , தேவையான பொன்னுடன் ( பணத்துடன்) கிழக்கு கடற்கரையை நோக்கி பயணம் செய்தபோது, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் வீற்றிருந்த சிவபெருமானிடம்
    பஞ்சாட்சர மகாமந்திர அருள் உபதேசம் பெற்று, குதிரை வாங்க கொண்டுவந்த பணத்தை வைத்து அருள்மிகு ஆத்மநாத சுவாமி ஆலயத்தை உருவாக்கினார் என்பது வரலாறு. அவர் இந்த ஆலயத்தை நிர்மாணிக்கும் முன்னர் இருந்த பழைய சிவன் கோயில் ஊரின் வடகிழக்கு அதாவது ஈசானிய மூலையில் இன்றும் உள்ளது. அது அருள் தரு ஆதி கைலாசநாதர் ஆலயம் என்று வழங்கப்படுகிறது. மாணிக்கவாசகர் குதிரை வாங்கவேண்டிய பணத்தில் திருக்கோயிலை கட்டிவிட்டதால், அவர் பாண்டிய மன்னருக்கு குதிரைகளை எப்படி கொடுப்பது என்று கேள்வி வந்தபோது, இறைவன் திருப்பெருந்துறைக்கு தெற்கு /தென்மேற்கு திசையில் உள்ள எழுநூற்றுமங்கலம் என்ற கிராமத்தில் இருந்து எழுநூறு நரிகளை பிடித்து, அவற்றை குதிரைகளாக மாற்றி , அரிமர்த்தன பாண்டியனிடம் ஒப்படைத்தார் என்பது திருவிளையாடல் புராணத்தில் வரும் வரலாறு. மாணிக்கவாசகர் பாடிய எட்டாம் திருமுறை ஆகிய திருவாசகம், மற்றும் திருக்கோவையார் ஆகியவை சைவத்திருமுறைகள் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது நமது மூதாதையர் வாக்கு.

    திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில் ஆதரவற்ற மாணவர்கள் பள்ளி, ஆஸ்டல் , தொழில்கல்வி நிலையம் ஆகியவற்றை உருவாக்கிய மகான் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் , பகவத் கீதைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் , திருவாசகத்துக்கு தமிழிலும் சிறப்பாக உரை எழுதி உள்ளார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் ஜி யு போப் என்ற வெள்ளையர் மொழி மாற்றம் செய்துள்ளார்.

    மாணிக்கவாசகர் என்ற பட்டம் அவருக்கு இறைவனே தந்தது. அவரது ஒரிஜினல் பெயர் திருவாதவூரர் என்பதே ஆகும். மாணிக்கவாசகர் கட்டிய திருக்கோயிலின் இறைவன் பெயர் ஆத்மநாதர் அல்லது ஆன்மநாதர் ஆகும். சிவலிங்கம் கிடையாது. கொடிமரம், நந்தி ஆகியவையும் கிடையாது. ஏனெனில் கயிலையில் இருந்த நந்திகேஸ்வரர் தான் மாணிக்கவாசகராக பூமியில் வந்து அவதரித்தார் என்பது புராணம் கூறும் வரலாறு. நந்தியே மாணிக்கவாசகர் ஆனதால் தனியாக நந்தி கிடையாது.

    இறைவன் ஆத்மநாதர் கல் விக்கிரகமோ, பஞ்சலோக மூர்த்தியோ கிடையாது. சிவ லிங்க வடிவமும் இல்லை. அருவ வழிபாடு தான். அதனால் கர்ப்பக்கிரகத்தில் சிவனின் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்ட இயந்திரம் தரையில் பதிப்பிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டு உள்ளது. அந்த சிவனின் இயந்திரத்துக்கு தான் தினசரி ஆறு கால அபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஒரு இலக்கு வேண்டுமே என்பதற்காக அந்த சிவ பஞ்சாட்சர இயந்திரம் உள்ள பீடத்தின் மீது ஒரு தங்க முலாம் பூசிய மரக்கால் போன்ற ஒரு பாத்திரம் கவிழ்த்து வைக்கப்பட்டு அதன் பின்னர் ஒரு திருவாச்சியை வைத்து, மலர்கள் சூட்டி , வழிபாடு செய்யப்படுகிறது.

    சிவனுக்கு தினசரி அர்த்த ஜாமம் என்னும் இரவு 9 மணி பூஜையில் , புழுங்கல் அரிசி சாதமும், முளைக்கீரை, பாகற்காய் ஆகியவை தான் நைவேத்யம் செய்யப்படுகின்றன. அர்த்த ஜாம பூஜை தவிர பாக்கி உள்ள இதர ஐந்து காலத்திலும் சிவனுக்கு புழுங்கல் அரிசியே சாதமாக்கி நைவேத்யம் செய்யப்படுகிறது.

    பார்வதி தாயாருக்கு இந்த திருத்தலத்தில் யோகாம்பிகை என்று திருநாமம். அதாவது யோகநிலையில் சிவனாரை திருமணம் செய்யும் முன்னர் பார்வதி தவம் இருந்தார் அல்லவா ? அந்த தவ யோக நிலையில் அம்பாள் இருப்பதால், அம்பாளை அருள்தரு யோகாம்பிகை என்று பெயர் சூட்டி வணங்கி மகிழ்கின்றனர். யோக நிலையில் உருவம் கிடையாது என்பதால் அதி சூட்சுமமாக அம்பிகையில் இரு பாதங்களை மட்டும் வைத்து, அந்த பாதங்களுக்கு அபிஷேகமும், அர்ச்சனையும் , நைவேத்தியமும் செய்யப்படுகிறது. அம்பிகையை நேரடியாக காணாமல், சாளரத்தில் இருக்கும் பல்வேறு துவாரங்களில் ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாக மட்டுமே பார்த்து , தரிசனம் செய்யவேண்டும்.

    இந்தக் காலத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் பல்வேறு தேவை இல்லாத ஊகங்களையும் , ஆபிரகாமிய மதமாற்ற மூடர்களின் கைக்கூலியாக செயல்பட்டுவரும் சிலர், இந்து சனாதன மதத்தினை பற்றி மனம் போனபடி எல்லாம் எழுதி , குழப்பம் விளைவித்து வருகின்றனர். சிவனுக்கு மூன்று வடிவங்கள் உண்டு. எந்த வடிவத்திலும் சிவனை வழிபடலாம். உரு என்பது தலையில் ஜடாமுடியுடன் கங்காதரனாக, அர்த்தனாரியாக ,நடராஜராக, தட்சிணாமூர்த்தியாக இப்படி பல்வேறு வடிவங்கள் சிவபிரானாரின் உருவாகும்.இத்தகைய மூர்த்தங்கள் எண்ணிறந்தவை ஆகும். அரு உரு என்பது சிவ லிங்கதிருமேனி ஆகும். அரு என்பது ஆன்ம ஜோதி வடிவம் . திருப்பெருந்துறையில் இருப்பது இந்த ஆன்ம ஜோதி வடிவம் என்பதால் தான் சுவாமி பெயர் அருள்தரு ஆன்ம நாதர் ஆகும். ஆன்மாவின் உருவம் மனித கண்களுக்கு புலப்படாத ஒன்று என்பதால் தான் அருவ வழிபாடு உள்ள ஊர்களில் ஆலயங்களில் சிவலிங்கத்திற்கு பதிலாக சிவ பஞ்சாட்சர மந்திர பதித்த இயந்திரம் பதித்து அங்கே வழிபாடு செய்தல் மரபு.

    திருப்பெருந்துறை திருக்கோயிலில் சிவனுக்கு உருவம் இல்லை என்பதால், சிவனே ஆகிய மாணிக்கவாசகருக்கு ஆனித்திரு மஞ்சனம் பத்து நாட்களும், மார்கழி மாதம் ஆருத்திரா தரிசனம் பத்து நாட்களும் திருவிழா நடை பெரும். சிவனுக்கு உள்ள அனைத்து வாகனங்களிலும் மாணிக்கவாசகர் வீதி உலா வருவார்.

    மாணிக்க வாசகர் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர் என்பது மரபு. திருவாசகத்தில் அவரே இதனை பதிவு செய்துள்ளார்.

    ” தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை – சங்கரா யார்கொலோ சதுரர் –

    அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் – யாது நீ பெற்றது ஒன்று என் பால் –

    சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் – திருப்பெருந்துறை உறை சிவனே

    எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் – யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – ( கோயில் திருப்பதிகம் – திருவாசகம் ).

    திருப்பெருந்துறை சிவன் கோயிலே. இப்படி ஒரு குழப்பமான ஆய்வுக்கட்டுரையை நூலாக வெளியிட்ட சைவ சித்தாந்த பெருமன்றத்தின் கவனக் குறைவை நொந்து கொள்வதை தவிர, இத்தகைய குழப்ப ஆய்வாளர்களுக்கு நல்ல புத்தியை வழங்க சிவபிரானாரை பிரார்த்திப்போம்.

  3. மதிப்பிற்குரிய மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களே,

    இந்த நூல் விமரிசனத்தில், உங்களது தமிழறிவும், திருமுறைத் தெளிவும், சைவசித்தாந்த ஞானமும் ஒருங்கே வெளிப்படுகின்றன. வாழ்த்துக்கள்.

    சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டுள்ள ஒரு நூலில் திருப்பெருந்துறை கோவில் மாணிக்கவாசகர் கட்டியதல்ல எனக் கூறுவதைக்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது சாத்தன் கோவில் என்றும், சமணப் பள்ளி என்றும் கூற முனைவது சைவ நிந்தனையே. அந்தப் பொருந்தாக் கொள்கையை நிலைநிறுத்த, அதற்கும் கீழே போய், திருவாசகத்திலிருந்து எடுத்துக்காட்டுக்கள் தர முயல்வது முழுப் பேதமையே.

    மேலும் திருவிளையாடற்புராணத்தைக் கட்டுக்கதை என்பது, அதிலுள்ள பல திருவிளயாடல்களைக் குறிப்பிடும் திருவாசகத்தை (உ-ம்
    ‘ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
    எந்தை பெருந்துறை ஆதிஅன்று
    கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
    கிடப்பறிவார் எம்பிரா னாவாரே’ எனத் திருவார்த்தையில் -திருவாசகம் 43.6 வருகிறதே. அதுவும் கட்டுக்கதையோ? ) இழிவு படுத்துவது என இந்நூலாசிரியருக்கும் அதற்கு அணிந்துரை வழங்கிய சைவசித்தாந்தப் பேராசிரியருக்கும் தெரியாது போலும்.

    அன்று கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று சொல்லியவர்களுக்கும், இந்த அதி மேதாவிகளுக்கும், அதிக வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

    அன்பன்
    மா அருச்சுனமணி
    உலக சைவப் பேரவை ஆத்திரேலியா

  4. இதுபோன்ற பெருமாள்களின் சைவம் மேலும் சிறந்துவிளங்க சிவத்தை நோக்கி தவமிருப்போம்

  5. கட்டுக் கதைகளால் இட்டுக் கட்டப்படும் மதமாற்றக் கோபுரங்கள். திருப்பெருந்துறை ஆலயயத்தை சமணக் கோவில் என்று நிறுவ மெனக்கெடும் முயற்சிகள் எதன் பின்னணியில் நடக்கின்றன. இதை ஒன்றை நிறுவினால் பிற ஆலயங்களும் இப்படித்தான் சமணக் கோவில்களை இடித்து மாற்றிக் கட்டப்பட்டு சைவம் மற்றும் வைணவ மதங்கள் வளர்ந்தன என்று சொல்ல வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன் காஞ்சி மற்றும் மதுரைக் கோவில்கள் சமணக் கோவில்கள் என்றும் அவற்றை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவரான திருமாவளவன் பேசி இருந்ததைக் கவனிக்க வேண்டும். மற்றொரு கிறித்தவரான சைமன் இது குறித்து பேசி இருப்பதாக அறிகிறேன். அது வரப்போகிற யானையின் மணியின் முன்னோசை என்றால் இன்று திருமதி.பத்மாவதியின் இந்த (கதைப்) புத்தகம் அதன் தொடர்ச்சியாக, அதே மணியின் பின்னோசை எனலாம். அடுத்து விலைக்கு வாங்கிய சில சமணர்களைத் தூண்டி விட்டு ஆலயத்தின் முன் இந்துக்களை வெளியேறச் சொல்லி போராட்டம் நடத்தினால், அதை வழிமொழிந்து மிஷனரி ஆதரவுடன் நாத்திக,திராவிட கைக்கூலிகள் தூத்துக்குடி போல ஒரு கலவரம் நடத்தினால் யானை வந்தே விட்டது என்று அர்த்தம் ஆகும். இது போன்ற ஒரு வருந்தும் நிலைக்கு நம்மை ஆளாக்கியது கிறிஸ்தவர்கள் கட்டி விட்ட ஆரிய/சமஸ்க்ரித வெறுப்புக் கதைகளையும், சாதி கீழ்மை/மேன்மைக் கதைகளையும் நம்பி,நம்பி நம்மை நாமே ஆகப் பெரிய மதச்சார்பற்றவர்கள் என நினைத்துக் கொண்டு அந்த அரசியலை ஆதரித்ததுதான். அவர்களுக்கு ஒட்டுப் போட்டு அமர வைத்ததின் பாவம் தான் நம்மை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது. இதை மறுத்து ஆன்மிகம் வேறு சமூக நடப்பும்,அரசியலும் வேறு என்று கூறுவோர் நமது ஆலயங்கள் இன்றிருக்கும் நிலைக்கு என்ன காரணம் என்று சிந்திக்கவும். இந்துக்கள் பண்டிகைகளைக் கொண்டாட எத்தனை தொல்லைகள், இந்த வருடம் பிள்ளையார் சிலைகளை வைக்க அரசு அதிகம் அல்ல, வெறும் 24 நிபந்தனைகளை மட்டுமே(!) விதித்து இருக்கிறது. பட்டாசு வெடிக்க தடை கேட்டு வழக்கு சபரிமலை வழக்கு, இன்னும் இந்துக்கள் உட்கார்ந்தால் வழக்கு, நின்றால் வழக்கு கூட வரும் காலத்தில் போடலாம்.எல்லாம் பாழாய்ப் போன போலி மதசார்பின்மை அரசியலால் வந்த வினை.
    குதிரை சிலை இருந்தால் சாஸ்தா கோவிலாம், என்ன கொடுமையான ஆராய்ச்சி. ஸ்ரீஆண்டாளை வாய்க்கு வந்தபடி பேசிய போது இந்துக்கள் காட்டிய ஒற்றுமை இன்றைய தேதியில் இன்னும் அதிகமாகத் தேவைப் படுகிறது. கேரளாவில் மாத்ருபூமி பத்திரிகையை ஒன்று சேர்ந்து மக்கள் ஒதுக்கியது நினைவுக்கு வருகிறது.இந்துக்கள் தங்கள் பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு நமது தர்மத்தை மேன்மைப் படுத்தும் அரசியலை ஆதரிக்க வேண்டும்.இல்லை நான் திராவிடன், ப்ராமணனை விரட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்தால் பிறகு உங்கள் இஷ்டம்.
    rajesh k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *