நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“மாமா! ‘நான் யார்?’ என்கிற கேள்வியைக் குறைந்த பட்சம் இரண்டு முறையாவது உங்களிடம் கேட்டிருப்பேன்” என்றான் கௌசிக்.

“அதான் தெளிவாகத் தெரிகிறதே? நீ யார் என்று தெரிந்துகொள்ள என்னை ஏன் கேட்க வேண்டும்?” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் மஹாதேவன்.

“மாமா! தெளிவாகத் தெரிந்ததை நான் சென்ற முறை சொன்னபோது, நீங்கள்தான் என் பெயர், தகுதி, உயரம், எடை, திறமை, உறவுகள் என்று தெளிவான அனைத்தையும் ‘நான் இல்லை’ என்று மறுத்துவிட்டீர்களே!”

“ஆமாம். அவை யாவுமே உன்னிடம் இருப்பது, அல்லது நீ சொந்தமாகக் கொண்டுள்ளது, அல்லது உன்னால் செய்ய முடிந்தது, இல்லையா?”

“ஆமாம். அப்படியானால் நான் யார்?”

“அதுதான் உண்மையிலேயே நம் அனைவருக்கும் மெய்யான தேடுதல்”

“ஏன் அவ்வாறு சொல்கிறாய்?” என்று கேட்டார் சங்கர்.

“நாம் எல்லோரும் எதற்காகப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறோம்?”

“வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியாக இருப்பதற்கு”.

“உண்மையில் நாம் புறவுலகிடமிருந்து மகிழ்ச்சியை நாடுகிறோம்”.

“உண்மை”.

“கூடுதலாக, நம்முடைய உடலுக்கோ, மனதுக்கோ, அறிவுக்கோ ஒவ்வாதவற்றைத் தவிர்க்கவும் விரும்புகிறோம்”.

“அது எப்படி?” என்று கேட்டார் சௌம்யா.

“நமக்கு லேசான வலி ஏற்பட்டால் கூட, அந்த வலி கூடாது என்று உடனேயே ஒரு மாத்திரையை உட்கொள்கிறோம்; அதைப்போலவே, ஏதாவது எதிர்மறையான விஷயங்கள் நம் மனதைப் பாதித்தால், உடனே அதை முறியடிக்க வேறு ஏதாவது கிடைக்குமா என்று அதைத்தேடி ஓடுகிறோம்; மேலும், அறியாமையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; நாம் எப்போதும் அறிவை நாடுகிறோம். நமக்கு எதைப் பற்றியாவது தெரியவில்லை என்றால், அதைத் தெரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்கிறோம், சரிதானே?”

“ஆமாம்”.

“துயரத்தையோ அல்லது மகிழ்ச்சியற்ற தன்மையையோ தவிர்த்து சந்தோஷத்தில் நிலைத்திருப்பதே நம்முடைய முழுமையான நோக்கமாக இருக்கிறது”.

“நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நாம் இதை எப்படி சாதிப்பது?” என்று கேட்டார் சங்கர்.

“உன்னுடைய உடல், மனது, அறிவு ஆகியவையெல்லாம் நீதான் என்கிற எண்ணத்தை விலக்க வேண்டும்”.

“என்னது?”

“ஆமாம். உன் உடல் தான் நீ என்று அனுமானித்துக்கொண்டு, அந்த உடல் எப்படியும் மூப்பெய்தி அழுகப்போகிறது என்று தெரிந்தும், அதற்கு அனைத்து விதமானவற்றையும் செய்கிறாய். அது உன்னுடைய செயற்கருவி என்பதால் அதை நன்றாகப் பேண வேண்டியதுதான், ஆனால் அதற்காக உன் உடல்தான் நீ என்று எண்ணிக்கொண்டு அதன் வலிகளையும் உன்னுடைய வலிகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும், கீதை சொல்லும் அடிப்படை விதியான ‘வலி தவிர்க்க முடியாதது; துயரம் கட்டாயமற்றது’ என்பதை நினைவில் கொள்.

“அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டார் சௌம்யா.

“உனக்குக் காயம் ஏற்பட்டால், அதனால் உன் உடலுக்கு ஏற்படும் வலியைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதற்காகத் துயரப்பட்டுக்கொண்டு யாரையாவது, அல்லது கடவுளைக்கூட, சபிக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. ‘நான் என் வாழ்க்கையில் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன், பல பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறேன், எத்தனையோவிதமான பூஜைகள் செய்திருக்கிறேன், எத்தனையோ கோவில்களுக்கும் யாத்திரைகளுக்கும் சென்றிருக்கிறேன். அப்படியிருந்தும் நான் இவ்வளவு வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே’ என்கிற இந்தத் துயரமானது, நீயே உன் மீது சுமத்திக்கொள்வதாகும். இது கட்டாயமற்றது. உன் விருப்பத்திற்கு உட்பட்டது. வேதனையை அனுபவிப்பது உனக்குப் பிடித்திருந்தால், அவ்வாறே அனுபவி. ஆனால் மற்றவர்களை இழுத்து உன் வேதனையைப் பகிர்ந்துகொள்ளாதே. அவர்களை ஒதுக்கிவிடு. வேதனையானது நீயாக உருவாக்கிக்கொண்டது”.

“இவ்விளக்கம் பல விஷயங்களில் என் பார்வையை மாற்றுகிறது”.

“உண்மை. வேதனை உன்னுள் புகாமல் தடுக்கும் அந்தக் கணத்திலிருந்து நீ வேதனையை அனுபவிக்கமாட்டாய். அது உன்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டது. அதாவது அந்த விருப்பத்தேர்வு உனக்காக இங்கேயே இருக்கிறது. ஆனால் வலியைத் தவிர்க்க உனக்கு எந்த வழியும் கிடையாது. மேலும், எந்த வலியும் நிரந்தரம் அல்ல என்பதையும் நீ நினைவில் கொள்ள வேண்டும். அது கொஞ்ச நேரம் இருக்கும், பிறகு போய்விடும். ஆனால் வேதனைய உன் வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டிருக்க முடியும். தாங்கள் வாழ்வில் அனுபவித்த வேதனைகளை நினைவு கூர்ந்து அவற்றை மற்றவரிடம் தொடர்ந்து பகிர்ந்தபடியே இருக்கும் பலரைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படி அவர்கள் தன்னிரக்கத்தில் ஏங்கித்தவிப்பது அவசியமற்றது”.

“நம்முடைய கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் பாடங்கள் கற்பதில்லையா?”

“நிச்சயமாக! கஷ்டமான அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்பது வேறு. அவை மதிப்பிட முடியாதவை. ஆனால் வேதனையிலோ சோகத்திலோ உழலுவது நம்முடைய நேர்மறை சக்தியை வீணாக்குவதாகும்”.

“உண்மை”.

“அதைப்போலவே, என்றுமே உன் மனதைத் திருப்திப் படுத்தவே முடியாது. அது எப்போதும் எதையாவது விரும்பியபடியே இருக்கும். நீயும் அது விரும்பியவற்றையெல்லாம் கொடுத்துக்கொண்டே இருப்பாய். அது எல்லா நேரங்களிலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கும்”.

“நாமும் நம்முடைய மனத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறோம்; அது எப்போதும் நிலையாக இருப்பதில்லை” என்றான் கௌசிக்.

“நன்றாகச் சொன்னாய். உன் உடல், மனது, பெயர், தகுதி போன்றவை தான் உன் சுயம் அல்லது ‘நீ’ என்று நீயாக அனுமானித்துக்கொண்டு, அனுமானித்துக்கொண்ட உன்னை, அதாவது உன் சுயத்தை, நீயே திருப்திப் படுத்த முயற்சி செய்கிறாய். இந்த அனுமானித்துக்கொண்ட சுயம் (SELF) பலவற்றை நாடுகின்றது; மனமும் எப்போதுமே ஆசைகளுடனும், நினைவுகளுடனும், நிறைவு பெறாத நிலையில் இருக்கிறது. இது சரிசெய்யப்படவேண்டும்”.

“எப்படி?”

“நான் ஒரு பிரபலமான ஸ்லோகத்தைச் சொல்கிறேன்.

ந கர்மணா ந ப்ரஜயா தனேன
த்யாகேநைகே அம்ருதத்வமானஸு:

செயல்பாடுகளினாலோ அல்லது மரபு வழியினாலோ அல்லது செல்வத்தினாலோ இறவாநிலையை அடைய முடியாது. துறப்பதால் மட்டுமே அதை அடைய முடியும், என்பதே இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்”.

“எதைத் துறப்பது?”

“தன்முனைப்பை (EGO), அதாவது ‘தான்’ என்கிற எண்ணத்தை, நீ தியாகம் செய்ய வேண்டும்”.

“அது எளிதாக இருக்க வேண்டும். நான் பணிவாக இருக்க ஆரம்பித்து, பெருமையுடனும் கர்வத்துடனும் நடந்துகொள்வதை நிறுத்திவிடுகிறேன். இவ்வளவு தானே?”

“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”.

“நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”

“அதேதான் கௌசிக். உன்னை (SELF – சுயம்), உன் சுயத்தை, நீ அறிந்துகொள்ள ஒரே வழி, உன்னைப்பற்றிய தற்போதைய எண்ணத்தைத் துறப்பதே, அதாவது உன்னுடைய தன்முனைப்பைத் தியாகம் செய்வதுதான். நீ உன்னைப்பற்றி என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதையெல்லாம் துறக்க வேண்டும். உன்னைப்பற்றிய உன் எண்ணங்களையெல்லாம் உன்னிடமிருந்து விலக்கிய பிறகு இருப்பது ‘நீ’ மட்டும் தான்! பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை (Noun, Verb, adjective, adverb) போன்றவை எதுவும் உடனில்லாத ‘நீ’ மட்டும்தான்”.

“அது மகிழ்ச்சிக்குக் கொண்டுசெல்லுமா?”

“நீ மகிழ்ச்சியை ஒரு விளைபொருளாகப் பெறுவதில்லை. இந்தத் தவறான சேர்க்கைகளிலிருந்து உன்னை விடுவித்துக்கொண்ட பிறகு இருக்கும் ‘நீ’ தான் மகிழ்ச்சி”.

“அது உன்னுடைய பொருள்விளக்கமா?” என்று கேட்டார் சங்கர்.

“நீ கேட்டது நல்லது. இதைத்தான் கிருஷ்ணர் கீதையின் ஆறாவது அத்தியாயத்தின் 23-வது ஸ்லோகத்தில் ‘துக்க ஸம்யோக வ்யோகம்’ என்று சொல்கிறார். அதாவது, ‘துக்கம் அல்லது துயரத்தின் சேர்க்கையிலிருந்து விடுபடுவதே சுகம் அல்லது மகிழ்ச்சி’ என்று அர்த்தம்”.

“விரிவாக விளக்க முடியுமா?”

“நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. இவையெல்லாமே நம்மைத் திருப்திப்படுத்தத்தான். இவை எல்லாவற்றிலுமே நாம் நிரந்தரத்தை விரும்புகிறோம்; பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்துமே மாறும், மாற்றத்திற்கு உள்ளாகும்; செல்வத்தின் இழப்பினாலோ அல்லது உறவுகளின் இழப்பினாலோ, சுகமின்மை காரணமாகவோ, அல்லது பெயரும் புகழும் இழப்பதாலோ, இவை மாறிக்கொண்டே இருப்பதால் நாம் துன்பப்படுகிறோம். நமக்கு ஒரு சமயம் சந்தோஷம் அளிக்கும் அனைத்து விஷயங்களும் மற்றொரு சமயம் துக்கத்தையும் அளிக்கும்”.

“உண்மை” என்றார் சௌம்யா.

“மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”.

“நானும் அப்படித்தான் யூகிக்கிறேன்” என்றார் சங்கர்.

“ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி இழக்கிறான் என்பதை கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் 62 மற்றும் 63-வது ஸ்லோகங்களில் அழகாகச் சொல்கிறார் கிருஷ்ணர்:

த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே ||2-62||

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் மிகுந்த விருப்பமுண்டாகிறது. மிகுந்த விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|
ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||

சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்”.

“அற்புதம்” என்றார் சங்கர்.

“நாம் நமது சுயம் என்று நினைக்கும் நமது உடல், மனம், அறிவு ஆகியவை மாறும் வஸ்துக்களாக இருக்கும்போது, நம்முடைய சுயத்திற்கு நாம் மகிழ்ச்சியை நாடுகிறோம். நம்முடைய உடல் மாறிக்கொண்டே இருக்கிறது; அதைப்போலத்தான் நமது மனம், அறிவு, ஆரோக்கியம், செல்வம், பெயர், புகழ் ஆகியவை எல்லாமும்” என்றார் மஹாதேவன்.

“மாறிக்கொண்டிருக்கும் வஸ்துவாகிய நான், மாறிக்கொண்டே இருக்கும் பொருட்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்ட உலகில் நிரந்தரத்தன்மையை எதிர்பார்க்கிறேன். என் துயரத்திற்கும் அதுவே காரணம். இதுதானே நீங்கள் சொல்வது மாமா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“அருமை ஸ்நேஹா. அதிலுள்ள முரண்பாட்டைப் புரிந்துகொள்கிறாயா? மாறிக்கொண்டேயிருக்கும் வஸ்துவாகிய நீ, மாறிக்கொண்டேயிருக்கும் உலகில் நிரந்தரத்தன்மையை எதிர்பார்க்கிறாய். இங்கே ‘நீ’ என்று, உன்னைப்பற்றி நீ அளித்த பொருள்விளக்கத்தின்படியே, உன்னைக் குறிக்கிறேன்”.

“எனக்குப் புரிகிறது. என்னுடைய தன்முனப்பை (EGO) உதிர்த்துவிட்டால் எனக்கு மகிழ்ச்சி கிட்டுமா?” என்று கேட்டான் கௌசிக்.

“மகிழ்ச்சி என்பது வெளி ஆதாரங்களிலிருந்து உன்னுள்ளே செலுத்தப்படுவது அல்ல. அது உன்னுள்ளே இரண்டறக் கலந்திருப்பது; ஆனால் உன் தன்முனைப்பால் மறைக்கப்பட்டிருப்பதால், உன் சுயத்தைப் பற்றிய அறியாமை விளைகின்றது. அந்த அறியாமை விலக்கப்பட்ட பிறகு இருக்கும் ‘நீ’ தான் மகிழ்ச்சி”.

“நீங்கள் அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?”

“நீ தங்கத்திற்கு ஒளியைக் கூட்டுவதில்லை. அதைச்சுற்றிப் பற்றியிருக்கும் அழுக்கை நீக்கிவிட்டால் அது தானாகவே ஒளிர்கிறது. அதுவே அதன் இயற்கையான நிலை. அதைப்போலவே மகிழ்ச்சியே உன் இயற்கையான நிலை; ஆனால், உன்னுடைய உடல், மனம், அறிவு, பெயர், புகழ், செல்வம் போன்றவற்றுடன் நீ உன்னை அடையாளப்படுத்திக்கொள்வது, தன்முனைப்பு (EGO) என்கிற ஒரு புதிய வஸ்துவை உருவாக்கிவிடுகின்றது. அது உன் மகிழ்ச்சியை மறைத்துவிடுகிறது”.

“உண்மை. மகிழ்ச்சி என்னுடன் இரண்டறக் கலந்துள்ளது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார் சங்கர்.

“நாம் ஆழ்ந்த உறக்கத்தில் கண்ட அனுபவத்தை ஆராய்ந்து பார்ப்போம். ஆழ்ந்த உறக்கத்தில், தன்முனைப்பு என்கிற வஸ்து சுத்தமாக இல்லை; எனவே அதனுடன் உன்னை நீ அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. விழித்தெழுந்த பிறகு புத்துணர்வுடன், ஏற்றம் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறாய். அதைப்போலவே, தியானம் செய்யும்போதும், விரைந்து செல்லும் நொடிப்பொழுதுகளில் மௌனத்தை அனுபவிக்கும்போது நீ மகிழ்ச்சியில்தான் இருக்கிறாய். நீ விழித்திருக்கும்போது உன்னைப் பலவீனப்படுத்துவது எதுவென்றால், நீ உன் தன்முனைப்புடன் அல்லது தவறான உன் சுயத்துடன் உன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தான். அதை நிறுத்து; நிறுத்திவிட்டால், நீ எப்போதும் ஏற்றம் கொண்டு, புத்துணர்வுடன் மகிழ்ச்சியில் இருப்பாய்”.

“ஆஹா!” என்று வியந்தார் சௌம்யா.

“உன் செயல்பாட்டினால் அல்லாமல் உன் தன்முனைப்பைத் துறப்பதன் மூலமே நீ இறவாநிலையை அடையமுடியும், என்று நான் முன்னர் சொன்ன ஸ்லோகத்தை குறித்துப்பார். இங்கே இறவாநிலை என்பது பேரானந்த நிலை அல்லது முடிவில்லா மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த மக்ழ்ச்சியானது ஏதாவது ஒன்றினால் ஏற்படுவது அல்ல; அனைத்தையும் மீறி ஏற்படுவது. இது ஏதாவது ஒன்றைச் செய்வதனால் பெறப்படுவதல்ல; உன்னைப் பற்றி நீ கொண்டிருக்கும் தவறான எண்ணத்தை, அதாவது தன்முனைப்பைத் துறப்பதனால் பெறப்படுவது”.

“மஹாதேவன்! அனைத்துப் பற்றுகளையும் துற என்று புத்தர் சொன்னதைப் போலவேதானே இதுவும்?” என்று கேட்டார் சங்கர்.

“ஆமாம். புத்தர் குறிப்பதும் அதைத்தான். உன்னுடைய உடல், கருத்துக்கள், பெயர், புகழ், செல்வம் போன்றவைதான் நீயும் என்கிற எண்ணத்தில் அவற்றின் மீது பற்றுகொள்கிறாய்; ஆனால் அவையெல்லாம் மாறும்; நீயும் அவற்றையெல்லாம் இழப்பாய். ஆகவே, அந்தப் பற்றுகளையெல்லாம் துறந்துவிடு”.

“அனைத்துப் பற்றுகளையும் துறந்துவிட்டால் வாழ்க்கையில் ஊக்கம் என்பதுதான் எது?” என்று கேட்டான் கௌசிக்.

“அனைத்தையும் துறந்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று இதன் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளாதே. அத்தகைய எண்ணம் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும். ஒருவர் எந்தவிதமான பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதை விட்டுவிடாமல், முழுத்திறமையையும் பயன்படுத்தி அதைச் செய்து முடிக்க வேண்டும். எதற்கும் பேராசைப்படாமல், வாழ்க்கைக் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும். மிகவும் அவசியமானது என்னவென்றால், உன்னுடைய தவறான சுயத்தை இழந்து உன்னுடைய உண்மையான சுயத்தை மீட்டுப்பெறுவது”.

“புரிந்தது. நான் யார் என்று தற்போது கருதுபவை உண்மையில் நான் அல்ல; அவை என்னிடம் இருப்பவை அல்லது என்னால் செய்ய முடிந்தவை என்பதால், நான் தற்போது கொண்டுள்ள கருத்தை விட்டுவிட வேண்டும். இது என் சுயத்துடன் நான் இருக்க உதவும்”. என்றாள் ஸ்நேஹா.

“அற்புதம் ஸ்நேஹா”

“அண்ணா! ஒருவர் இதை அடைய எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?” என்று கேட்டார் சௌம்யா.

“நீ இப்போதே அந்த நிலையில் தான் இருக்கிறாய். என்ன, உன்னை வேறுவகையாக அனுமானித்துக்கொண்டுள்ளாய், அவ்வளவுதான். இந்த எண்ணத்தை வெளியேற்ற, நாம் ஏற்கனவே விவாதித்த பயிற்சிகள் அனைத்தும் உதவும்”.

“கடவுளின் ஒப்புயர்வற்ற ஆற்றலையும், நம்முடைய குறைபாடுகளையும் புரிந்துகொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்கிறோம். ‘நான் தான் செய்பவன்’ என்கிற எண்ணத்தை விலக்கி, ஒவ்வொரு செயலையும் கடவுளுக்குச் செய்யும் அர்ப்பணிப்பாக நினைத்துக்கொண்டு செய்து, அதன் பலன்களைக் கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றான் கௌசிக்.

“நிலையான பிரார்த்தனையில் ஈடுபட்டு கடவுளுடன் ஒரு வலிமையான தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்கிறோம். நாம் அனைத்தையும் கடவுளாகவே பார்க்கிறோம்; ஆகவே அனைத்திடமும் அன்பு செலுத்துகிறோம். வெறுப்பு, கோபம் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடுகிறோம்” என்றாள் ஸ்நேஹா.

“சுவாசத்தைக் கட்டுப்படுத்திப் பிராணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய மனத்தையும் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்” என்றார் சங்கர்.

“முறையாக ஜபம் பயில்வதன் மூலம் நாம் சாந்தி பெறுகிறோம்” என்றாள் சௌம்யா.

“உள்ள தொகுப்பிலேயே மிகவும் பரிசுத்தமானது மௌனத்தில் இருப்பது தான். நீ மௌனத்தில் இருக்கும்போது, நீ உன்னுடனேயே இருக்கிறாய்; பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை என்று எதுவும் உன்னுடன் இல்லாமல் ‘நீ’ மட்டுமே இருக்கிறாய்”.

“மாற்றம் இல்லாமல், நோக்கமில்லாமல், பெயரில்லாமல், வடிவமில்லாமல் மௌனமாக இருக்கிறேன். இதுவா நான்?” என்று கேட்டான் கௌசிக்.

“அற்புதம். நீ மௌனமாக இருக்கும்போது நீ தான் உன் சுயம்; நீ சுயமாக இருக்கிறாய்; அங்கே உரிப்பொருளோ, காட்சிப்பொருளோ இல்லை. ‘நீ இருக்கிறாய்’; அவ்வளவுதான். மௌனத்தில் இருப்பதே முழுமையை நிறைவேற்றுவது”.

“இவ்வளவையும் முயற்சி செய்த பிறகும் என்னை நான் முழுமையாக அறிந்துகொள்ளவில்லையென்றால் என்ன செய்வது?” என்று கேட்டான் கௌசிக்

“முதலில், ‘என்னால் முடியும்; நான் சாதிப்பேன்’ என்கிற திடநம்பிக்கையுடன் நீ ஆரம்பிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், இந்தப் பயிற்சிகளைப் பின்பற்றுவது, அனைத்துவிதமான தருணங்களிலும் உன்னை அற்புதமான, அன்பு நிறைந்த ஆனந்தமான மனிதனாக ஆக்கும். அந்த மேன்மையான நிலை உழைத்துப்பெறுவதற்கான தகுதி வாய்ந்தது இல்லையா?

“ஆம். முழுமையாக”.

“விவாதம் மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது. நான் உழைப்பேன்; உழைத்துக்கொண்டெ இருப்பேன்” என்றாள் ஸ்நேஹா.

“மஹாதேவன்! இந்த விவாதங்கள் எனக்கு அனைத்தின் மீதான தெளிவான பார்வையையும், சரியான தோற்றத்தையும் கொடுத்துள்ளது. நான் மிகவும் லேசாகவும், மனதிலிருந்த பாரம் இறங்கியதைப் போன்றும் உணர்கிறேன்” என்றார் சங்கர்.

“நாம் விவாதித்த அனைத்தையும் நம்முடைய முன்னோர்கள் பால்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அற்புதமாகச் சிந்தித்திருக்கிறார்கள். அவர்கள் உச்சத்தை அடைந்த உயர்ந்த சிந்தனையாளர்கள். கலை, அறிவியல் என்று ஆரம்பித்து தொழில்நுட்பம், கட்டிடக்கலை, மருத்துவம், வானவியல், என்று பெயர் சொல்லக்கூடிய அனைத்துத் துறைகளிலும் ஒரு மனித மனம் எந்த அளவுக்கு ஆர்வம் கொள்ளுமோ அந்த அளவுக்கு ஆர்வம் கொண்டு சிந்தனையின் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள் அவர்கள்”.

“அவர்கள் நமக்காக என்ன விட்டுச் சென்றிருக்கிறார்கள்?” என்று கேட்டான் கௌசிக்.

“அவர்கள் வேதங்கள் என்கிற பெரும் புதையல் கூடத்தை நமக்குத் தந்திருக்கிறார்கள். நாம் இதுவரை விவாதித்த அனைத்தும் வேதங்களின் நிறைவுப் பகுதியான, பல்வேறு உபநிடதங்கள் அடங்கிய, வேதாந்தம் என்கிற பகுதியில் அற்புதமாகப் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளது”.

“ஒருவர் அவற்றைச் சாதாரணமாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியுமா?” என்று கேட்டான் கௌசிக்.

“நீ முயற்சி செய்யலாம். ஆனால் ஒரு குருவிடம் கற்றுக்கொள்வதுதான் சிறப்பு. அதுவே என்னுடைய பரிந்துரையுமாகும். கணக்குப்பாடமோ, இயற்பியலோ, அல்லது வேறு எந்தப் பாடமாக இருந்தாலும் உனக்குக் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் தேவை, இல்லையா?”

“கண்டிப்பாக. இல்லாவிட்டால் நாம் வேறு எப்படித்தான் அந்தக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது?”

“அதைப்போலவே, இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள, ஒரு ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது. அந்த ஆசிரியரை நாங்கள் குரு என்று சொல்வோம். ‘குரு’ என்றால் ‘அறியாமையை அகற்றுபவர்’ என்று அர்த்தம்; ஆகவே ஆசிரியர்கள் குரு என்று அழைக்கப்படுகிறார்கள். குருவானவர் உன்னைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வார். நீயாகப் படிப்பதில் தவறான கருத்தாக்கத்திற்கும், பொருள் விளக்கத்திற்கும் ஏதுவாகி, அது உன்னைத் தவறான வழியில் கொண்டுசெல்வதற்கும் வாய்ப்புண்டு” என்று சொன்னார் மஹாதேவன்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவியது.

அதைக் கவனித்த மஹாதேவன் புன்னகைத்தபடியே, பின்வருமாறு சொல்லி நிறைவு செய்தார்.

“நான் முன்னதாக, எப்படி ஒரு மனிதன் தன்னை இழக்கிறான், என்பதற்கு, ஒரு ஸ்லோகத்தைக் குறிப்பிட்டேன். அனைத்துக் காலத்திற்கும் ஏற்ற சிறந்த குருவான ஸ்ரீ ஆதி சங்கரர், தான் இயற்றிய பஜ கோவிந்தம் என்னும் நூலில், எப்படி ஒரு மனிதன் தன்னை மீட்டுக்கொள்கிறான் என்று கூறியுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

சத் சங்கத்வே நிஸ் ஸங்கத்வம்
நிஸ் ஸங்கத்வே நிர் மோஹத்வம்
நிர் மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)

பலர் சத்சங்கம் என்பதை நல்ல மனிதர்களுடன் சேர்ந்துகொள்வது என்று நினைக்கிறார்கள். உண்மையில் அது மெய்மையுடன் இணைந்துகொள்வது.

மெய்மையுடன் இணைந்துகொள்வதன் மூலம் நீ பற்றுகளிலிருந்து விடுபடுகிறாய்;
பற்றுகளிலிருந்து விடுபடுவதன் மூலம் நீ மாயையிலிருந்து விலகுகிறாய்;
மாயையிலிருந்து விலகுவதன் மூலம் மனதில் மௌன நிலையை சாதிக்கிறாய்;
மௌன நிலையில் இருப்பதன் மூலம் உன்னுடைய ஆன்மாவை நீ அறிந்துகொள்கிறாய்!

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:”

(முற்றும்)

3 Replies to “நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]”

  1. TV Jayaraman died two years back. And after writing translation, Haran passed away too?

  2. முறையாக ஜபம் பயில்வதன் மூலம் நாம் சாந்தி பெறுகிறோம்” என்றாள் சௌம்யா.
    உண்மைதான்.
    ———————–
    நிச்சயம் தொளுகை செய்யம் முஸ்லீம் ஜெபம் செய்யும் கிறிஸ்தவன் இந்த சாந்தியை பெறுகின்றான்.
    சமய அனுஷ“டானம் என்று ஏதேதோ செய்யும் பிற்பட்ட மிகபிற்பட்ட அட்டவவணை சாதியைப் சோ்ந்தவனுக்கு ”மனச்சாந்தி” யின் ருசி அறியாதவனாக வளா்க்கப்பட்டுள்ளான். என்று அவனுக்கும் முறையான சமய கல்வி பயிற்சி கிடைக்கும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *