சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

தொடர்ச்சி.. 

புறநானூறு – 6ஆம் பாடல்:

புலவர் காரிகிழார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தியும்,நல்லுரைகளை வழங்கியும் பாடுகிறார். அவரது பாடல் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமை தெரிகிறது.

“பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின்குடையே,முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக பெரும,நின்சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!”

(பாடல் அடிகள் 14-20)

எதிர்த்த பகைவர் பெரும்படையின் வலிதொலைத்து அவர்தம் அரண்களை அழித்துச் சூறைகொண்டு அவற்றைப் பரிசிலர் மகிழ வழங்கும் அருளாளன் நீ!நின் வெண்கொற்றக் குடை,நீ முக்கண்ணரான சிவபெருமானின் கோவிலை வலம் வருங்கால் மட்டுமே தாழ்ந்து விளங்குக! நான்மறையாளர் வாழ்த்தும்போது நின் தலை தாழ்க!

புறநானூறு – 91ஆம் பாடல்:

ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின் பெரும் கொடைத்திறத்தையும்,நல்லுள்ளத்தையும் வாழ்த்திப் பாடுகிறார்.அவர் அதியமானை,என்றும் நிலைத்து நிற்கும் சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக,என்று வாழ்த்துகிறார்.

“வலம்படு வாய்வாள் ஏந்தி,ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின்,அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே!தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க,எமக்கு ஈந்தனையே”.

களத்திலே பகைவரை வென்று வீரவளை அணிந்திருக்கும் தலைவனே!வீரச்செல்வமும்,பொன்மாலையும் உடைய அஞ்சியே!மலைச்சரிவிலே கடுமுயற்சியுடன் பெற்ற இனிய நெல்லிக்கனி அது.அதனைப் பெறுதற்கு அரிதென்று கருதாது,அதனால் விளையும் பேற்றினையும் கூறாது, நின்னுள்ளத்திலேயே அடக்கிக்கொண்டு, எம் சாதல் நீங்க எமக்கு அளித்தனையே!பெருமானே!திருநுதலில் பிறைநிலவையணிந்தவரும்,நீலமணிமிடற்றை உடையவரும் ஆன இறைவன் சிவபெருமானைப் போல நீயும் நிலைபெற்று வாழ்வாயாக.

அகநானூறு – திருக்கார்த்திகைத் திருவிழா:

அகநானூற்றில் திருக்கார்த்திகைத் திருவிழா பற்றிக் கூறப்படுகிறது. திருக்கார்த்திகைத் திருவிழாவானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திலும்,கேரளத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழாவானது தமிழர்களின் முக்கியமான திருவிழா என்பது அகநானூற்றாலும்,ஔவைப்பிராட்டியாரின் பாடல்களாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகத்தாலும் தெரிகிறது.

திருக்கார்த்திகைத் திருநாளுக்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. திருக்கார்த்திகைத் திருநாளில் தான் பரமேஷ்வரர், ப்ரஹ்மவிஷ்ணுக்களால் அடிமுடி அறியமுடியாத லிங்கோத்பவராக திருவடிவம் கொண்டார்.மற்றொரு சிறப்பு,திருக்கார்த்திகைத் திருநாள் ஆனது முருகப்பெருமான் திரு அவதாரம் செய்த திருநாள் ஆகும்.

தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைப் போக்கத் தோழியானவள் ஆறுதல்கள் கூறுகிறாள்.தலைவி தோழியிடம்,தலைவனின் பிரிவு தரும் துன்பத்தைத் தான் பொறுத்துக்கொள்வதாகவும்,தலைவன் திருக்கார்த்திகைத் திருநாளை தன்னோடு சேர்ந்து கொண்டாட வருவார் என்று நம்புவதாகவும் கூறுகிறாள்.

“மழைக்கால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர,மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுவிளக் குறுத்து,மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர,வருகதில் அம்ம!”

(அகநானூறு, பாடல் 141,அடிகள் 6-11)

ஏர்த்தொழில் மடிந்து, அதனாலே உலகிலுள்ள மற்றைத் தொழில்களும் கெடும்படி மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்தில், சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி,உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடுஇரவில்,அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவில், வீதிகளில் விளக்கு வைத்து,மாலைகளைத் தொங்கவிட்டுப்,பழைமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் விழாவினை,நம்மோடு கூடிக் கொண்டாடும் வண்ணம்;

திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்திலும் கார்த்திகைத் திருவிழா குறிப்பிடப் பட்டுள்ளது (இரண்டாம் திருமுறை, திருமயிலாப்பூர்ப் பதிகம்).

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

கலித்தொகை – கடவுள் வாழ்த்து:

“ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:

படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி”.

வேதங்களுக்குரிய ஆறு அங்கங்களையும் அறியும் அந்தணர்களுக்கு நால்வேதங்களை அருளிச்செய்தவனும், தெளிந்த கங்கையைத் திருச்சடையிலே அடக்கியவனும்,முப்புரங்களை அழித்தவனும், வாக்கிற்கும்,மனத்திற்கும் எட்டாமல் முன் செல்பவனும், கடுங்கூளி என்னும் பின்வாங்காத போரினைச் செய்பவனும்,நீலமணிபோலும் திருக்கழுத்தையும்,எட்டுத் திருக்கரங்களையும் உடையவனும் ஆன சிவபெருமானே! இப்போது யான் கூறுவதைக் கேட்பாயாக.

நின் திருக்கரத்தில் ஒலிக்கின்ற பறை பல ஓசைகளை உண்டாக்க,அனைத்தயும் அழித்து நீ “கொடுகொட்டி” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,பக்கம் உயர்ந்த, அகன்ற அல்குலினையும்,கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையோ,தாளம் முடிந்துவிடும் காலத்தினைத் தன்னகத்தே கொண்ட சீரைத் தருவார்.

முப்புர அசுரர்களோடும்,நின் பகைவரோடும் நீ செய்த போர்கள் அனைத்திலும் நீ வென்று,அப்பகைவர்களை அழித்து, அவர்தம் சாம்பலை அணிந்து நீ “பாண்டரங்கம்” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,மூங்கிலின் அழகைக்கொண்ட மெல்லிய தோள்களையும், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடையவரான உமையம்மையோ,தாளத்து இடைநிகழும் காலத்தினையுடைய தூக்கைத் தருவார்.

கொல்லும் புலியின் தோலினை உடுத்து,கொன்றைமாலை தோள்மேல் அசைய,ப்ரம்மனின் கபாலத்தை ஏந்தி நீ “காபாலம்” எனும் தாண்டவத்தை ஆடுங்கால்,முல்லையரும்புகளைப் போன்ற திருப்பற்களை உடைய உமையம்மையோ,தாளத்தின் முதலெடுக்கும் காலத்தினையுடைய பாணியைத் தருவார்.

என்று சொல்லும்படியாக,பெருமானே!நீ ஸர்வஸம்ஹாரத்தை நிகழ்த்தும் காலத்தில் பாணி,தூக்கு,சீர் ஆகியவற்றை,மாட்சிமை மிகுந்த அணிகளை அணிந்த உமாதேவியார் காக்கும்படி ஆடி,அன்பில்லாத பொருள்களாகிய எமக்காக ஒரு வடிவம் தாங்கி வந்து இவ்வுலகில் தங்கினாயே.

இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார்.அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.

பரமேஷ்வரர் இவ்வாறு உக்ரமாகத் திருநடனம் புரியும் காலங்களில் எல்லாம் அவரின் உக்ரத்தை ஜகன்மாதாவான உமாதேவியார் தணிக்கிறார். சிவசக்தி தத்துவம் இங்கு விளக்கப்படுகிறது.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் கௌதம் காளிதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இந்து தர்மம், குறிப்பாக சைவசமயம் பற்றிய அரிய பதிவுகளை எழுதி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *