குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்

“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக் கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது என்றால் தொடர்ந்து முத்துக்களை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவது நெல்விதைகளை மட்டுமே. புலம்புவது பெண்களின் கிண்கிணிச் சிலம்புகள் மட்டுமே. இங்கு தேடுவது நல்லறத்தையும் புகழையும் மட்டுமே. இப்படிப்பட்டது எங்கள் நாடு”.

திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் இது.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரியநாடே.

தமிழ்நாட்டில் தென்காசிக்கு அருகில் உள்ள தனது நாட்டை, ‘தென் ஆரியநாடு’ என்று இந்தப் புலவர் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். மேன்மையான நாடு என்ற பொருளில், அதுகாறும் தமிழர்கள் ஆரிய என்ற சொல்லை அர்த்தப்படுத்திக் கொண்ட வகையிலேயே தான் இவரும் பயன்படுத்தியிருக்கிறார். இவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டில், ஆரிய திராவிட இனவாதம் என்ற விஷம் தமிழ்நாட்டில் பரவியிருக்கவில்லை, தோன்றியிருக்கவே இல்லை.

குற்றாலத்திற்கு அருகிலுள்ள மேலகரம் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் குடியில் பிறந்த சிறந்த தமிழ்ப் புலவர் இவர். குற்றாலநாதரது சன்னிதானத்தில் வாழ்நாள் முழுவதும் தெய்வத்தொண்டு செய்து வந்தவர். இவரது மேற்படி குறவஞ்சி நூலைப் பாராட்டி மதுரை நாயக்க மன்னரான முத்துவிஜயரங்க சொக்கலிங்க நாயக்கர் ஒருவிளைநிலத்தைப் பரிசளிக்க, அது குறவஞ்சி மேடு என்றே வழங்கப் படலாயிற்று. இதற்கு ஆதாரமாக 1718ம் ஆண்டின் செப்புப் பட்டயம் ஒன்றும் உள்ளதாகத் தெரிகிறது.

மலைகளிலும் அதுசார்ந்த குறிஞ்சிநிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குடிகளின் பெண்களான குறத்தியர் பாடும் பாடல்களால் ஆனது குறவஞ்சி. இது தமிழின் சிற்றிலக்கிய நூல்வகைகளில் ஒன்றாகவே அங்கீகரிக்கப்பட்டு அதற்கான இலக்கணமும் கூடக் கூறப்பட்டுள்ளது. தலைவன் உலாவருதல், தலைவனைக் கண்ட மகளிர் காமுறுதல், தலைவியின் வருகை, அவள் தலைவனைக் கண்டு மயங்குதல், தலைவியின் விரகதாபம், தோழி தலைவனைக் குறைகூற தலைவி அதை மறுத்து அவனைப் புகழ்தல், அவனுக்குத் தூதனுப்ப விரும்பி அடையாளம் கூறுதல், குறத்தி வருதல், அவள் தன் நாட்டு வளம் கூறுதல், தலைவனுடன் சேரும் காலம் பற்றிக் குறி சொல்லுதல், குறத்தியைத் தேடிக் குறவன் வருதல், அவள் மீது சந்தேகப் படுதல், பின்பு சந்தேகம் தீர்தல் ஆகிய கூறுகளைக் கொண்டது குறவஞ்சி. மரபார்ந்த பா வகைகளும், பாமர, நாட்டுப்புறப் பாடல்களும் இதில் கலந்து வரும்.

இந்த நூலில் நாயகி வசந்தவல்லி, குற்றாலத்தில் உறையும் இறைவரான திரிகூடநாதர் மீது கொண்ட காதல் சித்தரிக்கப் படுகிறது.

வசந்தவல்லி பந்தாடுவதைக் கூறும் ஓர் அழகிய பாடல். ‘காதலன்’ திரைப்படத்தில் வந்ததால் இது மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ
மோகினியோ – மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்திய-
தோ எனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்-
பந்து கொண்டாடினளே.

(இந்திரை – திருமகள்; குறும்பல வீசுரர் – குறும்பலா ஈசுவரர், குற்றாலத்து இறைவன் பெயர்; பைந்தொடி நாரி – பொன்வளையலணிந்த பெண்)

தோழியைத் தூதனுப்பும் போது திரிகூடநாதரின் கோயில் பெருமையையும் அவர் கொலுவீற்றிருக்கும் மிடுக்கையும் சொல்லுகிறாள் தலைவி:

திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமும் ஒன்பது காலம் கொலுவிற் சகியே.

பெரிதான அபிஷேகம் ஏழுகாலமும்; ஒருவர்
பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே.

சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்யத்
திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே.

அத்தலையிற் கடந்தவர்கள் நந்தி பிரம்படிக்கொதுங்கி
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே.

காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை.

முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்.

கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்பு தினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்

வழங்குகொடை மகராசர் குறும்பலவிலீசர்
வளம்பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே.

(திரை – அலை; சிற்றிலை – விளையாட்டாகக் கட்டிய சிறிய மணல் வீடுகளை; கிம்புரி – யானை; தேமா – மாமரம்)

இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது.

ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவு பிடித்தாலும் விடோம் குறவர்குலம் நாங்கள்

வெருவி வரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே

அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்

பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே.

குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் – பெருந்தெய்வம், மண்ணின் சாமிகள் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்.

குழல்மொழி இடத்தார் குறும்பலா உடையார்
அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா
செந்திவாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்

புள்ளிமான் ஈன்ற பூவையே குறக்குல
வள்ளி நாயகியே வந்தெனக்கு உதவாய்
அப்பனே மேலை வாசலில் அரசே
செப்பரு மலைமேல் தெய்வ கன்னியர்காள்

ஆரியங்காவா அருட்சொரி முத்தே
நேரிய குளத்தூர் நின்ற சேவகனே
கோல மாகாளி குற்றால நங்காய்
கால வைரவா கனதுடிக் கறுப்பா

முன்னடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலிபோல் வரும் பன்றிமாடா
எக்கலா தேவி துர்க்கை பிடாரி
மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை.

இப்பாடலில் குற்றாலத்தைச் சுற்றியுள்ள இலஞ்சி, மேலைவாசல், ஆரியங்காவு, சொரிமுத்தையன் கோயில், குளத்தூர் ஆகிய தலங்களைப் பற்றிய குறிப்பும் உள்ளதைக் காணலாம்.

சிங்கன் வந்து பாடும் பாடலில், அப்பகுதியை அந்தக் காலகட்டத்தில் ஆட்சிபுரியும் சொக்கம்பட்டி ஜமீந்தார் சின்னணைஞ்சாத் தேவர் மற்றும் சில பிரமுகர்கள், ஊர்த்தலைவர்களின் பெயர்களும் அவர்கள் செய்த தர்ம காரியங்களும் குறிப்பிடப் படுகின்றன. இவை முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளாகும்.

சிங்கியைத் தான் ஊரெல்லாம் தேடிக் களைத்தைக் கூறி தாபத்தால் புலம்புகிறான் சிங்கன்.

சிங்கியைக் காணேனே என்வங்கணச்
சிங்கியைக் காணேனே

சிங்கியைக் காமப் பசுங்கிளிப் பேடையைச்
சீர்வளர் குற்றாலர் பேர்வளம் பாடிய
சங்கீத வாரியை இங்கித நாரியைச்
சல்லாபக் காரியை உல்லாச மோகனச் (சிங்கி)

தாராடுங் குன்றி வடத்தை ஒதுக்கித்
தடமார் பிறுகத் தழுவவந் தாலவள்
வாராடுங் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
மறுத்துநான் பூசினும் பூசலாகா தென்பாள்
சீராடிக் கூடி விளையாடி இப்படித்
தீரா மயல்தந்த தீராமைக் காரியைக்
காராடுங் கண்டர் தென் ஆரிய நாட்டுறை
காரியப் பூவையை ஆரியப் பாவையை (சிங்கி)

குற்றால நகரில் சிங்கியும் சிங்கனும் சந்தித்து ஊடலும் பிணக்கும் கொண்டு பின்பு கூடுகிறார்கள் என்பதாகக் குற்றாலக் குறவஞ்சி முடிகிறது. நூலின் இறுதியில் உள்ள வாழ்த்துப் பாடல்களும் அழகானவை.

சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டா; புலவீர்
குற்றாலம் என்றொருகாற் கூறினால் – வற்றா
வடஅருவி யானே மறுபிறவிச் சேற்றில்
நட வருவியானே நமை.

தாதையிலாத் திருமகனைத் தடமலைக்கு மருமகனை
வேதசங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன்.

சித்ரநதி யிடத்தானைத் தேனருவித் தடத்தானைச்
சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன்.

சிற்றாற்றங் கரையானைத் திரிகூட வரையானைக்
குற்றாலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன்.

தமிழில் உள்ள குறவஞ்சி நூல்களிலேயே மிகச்சிறப்பானதாகக் கருதப்படும் இந்த நூலோடு கூட, திருக்குற்றால மாலை, திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றாலத் தலபுராணம் முதலான பிறநூல்களையும் திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றியிருக்கிறார். தமிழின் மரபிலக்கியங்கள் அனைத்தும் மன்னர்களையும் பிரபுக்களையும் மேல்தட்டு சமுதாயத்தினரையும் பற்றிப் பேசுபவையாகவே உள்ளன. அவற்றை “மக்கள் இலக்கியம்” எனக் கருத முடியாது என்றொரு பொய்ப்பிரசாரம் ‘முற்போக்கு’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தரப்பினரால் செய்யப் படுகிறது. ஆனால், முக்கூடற்பள்ளு, தேசிங்குராசன் கதை, பூலித்தேவன் சிந்து எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதியின் திருத்தலங்களையும், வீரக் காதைகளையும், மக்கள் வாழ்க்கையையும் இணைக்கும் இலக்கியங்கள் தொடர்ந்து புனையப்பட்டு வந்துள்ளன என்பதே உண்மை. அதற்கு ஒரு சிறந்த சான்று குற்றாலக் குறவஞ்சியாகும்.

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் அக்டோபர்-2018 விஜயபாரதம் தீபாவளி மலரில் வெளிவந்தது)

 

2 Replies to “குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்”

  1. அருமையான ஒரு இலக்கிய விளக்கம். படித்தேன்.ரசித்தேன். இயற்பியல் படித்த எனக்கு பல பாடல்களுக்கு பொருள் கொள்வதற்கு சிரமமாக இருக்கின்றது.இப்படி எள்மைப்படுத்தி தரும் போது சுவை குன்றாது தொய்வின்றி படிக்க முடிகின்றது. சிலம்பதிகாரத்தில் இதுபோன்ற இலக்கிய உலா கட்டுரை எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.

  2. திரு. ஜடாயு குறிப்பிட்ட “மக்கள் இலக்கியம்” தொடர்பாக –

    குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் போன்ற இலக்கிய வகைகள் ஒரு விதத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவை எல்லாமே தமிழகம் நாயக்கர் / மராட்டியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டவை. “ஏன்”? என்ற மொட்டையாகக் கேட்பது அவ்வளவு பயன் தராது என்பது என் கருத்து. இதை விட முக்கியமான கேள்வி தமிழ்நாட்டில் அன்றைய சமூக – கலாசாரச் சூழல் எத்தன்மை கொண்டிருந்தது என்பதே. எனக்குத் தெரிந்து இதைப் பற்றி, அதாவது ௧௬-௧௮ – ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் இலக்கிய/ கலாசாரச் சூழலைப் பற்றிய விரிவான ஆய்வு இல்லை. உ.வே.சா. பதிவு செய்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், என் சரித்திரம் முதலிய நூல்களைப் படிக்கும் போது குறவஞ்சி, பள்ளு நூல்கள் ஆதீனங்கள் முதலிய “உயர்கல்வி நிறுவனங்களில்” படிக்கப் படவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும், பல புலவர்கள் இம்மாதிரியான சுவையான நூல்களை அந்த காலக்கட்டத்தில் எழுதினர். இதைப் படித்தவர், கேட்டு இன்புற்றவர் யார்? ஆதரித்த பிரபுக்கள் யார் போன்ற செய்திகள் ஆராயப்படவில்லை. நான் குற்றாலக் குறவஞ்சியை படித்துப் பல ஆண்டுகள் ஆயின. நினைவு சரியாக இருப்பின், இந்நூலில் சில பாடல்கள் ராகங்களின் பெயர்க்குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டன. பழைய பதிப்பு ஒன்றில், இந்நூல் திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் அரங்கேற்றப் பட்டதாக செய்தி படித்த ஞாபகம். ஒரு வேளை இது போன்ற நூல்கள் நாட்டிய/நாடகமாக அரங்கேறியிருக்கலாம்.

    முக்கூடற் பள்ளு நூலும் நாடக வழக்கை ஒட்டியே அமைந்துள்ளது. தவிர அந்நூலில் திடீரென பள்ளனின் இரு மனைவிகளுக்குள் சைவ – வைஷ்ணவ மோதல் ஏற்படுகிறது.வலக்கை – இடக்கை மோதலுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று ஐயப்பட இடமுள்ளது.

    இன்னொரு விஷயம் இங்கே கவனிக்க வேண்டும் – குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் ஆகியவை ஒரு குறிப்பிட்ட குடியினரை முன்வைத்து எழுதப்பட்டவை. இதுவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அந்த (௧௬-௧௮-ம் நூற்றாண்டுகள்) காலக் கட்டத்தின் தனித்தன்மையாகத் தெரிகிறது. இதே காலத்தில் பல சாதியினர் தத்தம் சாதி புராணங்களைச் செய்யுள் வடிவில் யாத்துள்ளனர். இதையெல்லாம் சேர்க்கும் போது, குறவஞ்சியை மட்டும் தனியாகப் பார்க்காமல், அந்த காலக் கட்டத்தில் படைக்கப்பெற்ற பிற இலக்கிய வகைகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் மற்ற சரித்திர ஆதாரங்களுடன் ஆராய்ந்தால் தமிழ்நாட்டின் கலாசார வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதலாம் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *