நேதாஜி: தலைவர்களின் தலைவர்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(இன்று நேதாஜியின் 122வது பிறந்த நாள்)

பாரத நாட்டின் வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பேரிடம் உண்டு. தேச விடுதலைக்காக பலரும் பல வகைகளில் உள்நாட்டில் போராடிக் கொண்டிருந்தபோது, வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்து நாட்டை மீட்க முயன்றவர் நேதாஜி. அதுதான் அவரை பிற தலைவர்களிடமிருந்து சிறப்பாக அடையாளப்படுத்துகிறது.

நேதாஜி என்றால் மக்களின் தலைவர் என்றுதான் பொருள். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரே நேதாஜிதான். இந்தச் சிறப்பை அவர் தனது 30வது வயதிலேயே அடைந்துவிட்டார் என்பதில் இருந்தே அவரது ஆளுமை புரியும்.

ஆனால் ஒரே நாளில் நேதாஜி மகத்தான தலைவர் ஆகிவிடவில்லை. இந்த நாட்டின் வரலாற்று நீரோட்டத்தில் அவர் தானும் நீந்தினார்; எதிர்நீச்சலும் அடித்தார். அந்தக் காலகட்டத்தில் பல தலைவர்கள் அவரது ஆளுமையை செதுக்கியுள்ளனர். நேதாஜிக்கு உபகாரமாகவோ, படிப்பினை அளிக்கும் வகையிலோ பல தலைவர்கள் இயங்கி, அவரை வரலாற்றில் மிளிரும் நாயகன் ஆக்கினர். அந்தச் சிற்பிகளை நினைவுகூர்வதென்பது, நேதாஜியின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதுதான்.

பெற்றோரும் குடும்பமும்:

ஜானகிநாத் போஸின் குடும்பம்
(வலதுகோடியில் நிற்கிறார் சுபாஷ்)

அன்றைய வங்க மாகாணத்தின் கட்டாக்கில் (இன்றைய ஒடிஸா) புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதிக்கும் பிறந்த 14 குழந்தைகளில் 9வது குழந்தை சுபாஷ் சந்திரன். அவரது பிறந்த நாள்: 1897 ஜனவரி 23. சுபாஷின் குடும்பம் ஆன்மிகப் பின்னணி கொண்டதாக இருந்தது. அவரது இளமைப்பருவ வளர்ச்சியிலும் தெய்வ நம்பிக்கையிலும் தாய் பிரபாவதிக்கு பெரும் பங்குண்டு.

அதேபோல தனது தமையன் சரத்சந்திர போஸுடன் சுபாஷுக்கு நெருக்கம் மிகுதி. வாழ்வின் பல இக்கட்டான காலகட்டங்களில் சரத்தின் ஆலோசனையை சுபாஷ் நாடி இருக்கிறார். தனது தந்தை ஜானகிநாத் போஸின் கண்டிப்பான வளர்ப்பால்தான் சுபாஷின் அறிவு விசாலம் அடைந்தது. அவரது வற்புறுத்தல் காரணமாகவே அவர் லண்டன் சென்று ஐ.சி.எஸ். படித்துத் தேறினார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடிய சுபாஷின் போராட்டக் குணத்தால் அவரது பெற்றோர் வருந்தியது உண்மை. ஆனால், அந்தக் குணமே தங்களிடமிருந்துதான் சுபாஷுக்குத் தொற்றியது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பின்னாளில் வெளிநாடு சென்றபோது, 1937-இல் வியன்னாவில் எமிலியை சுபாஷ் மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு அனிதா என்ற புதல்வியும் பிறந்தாள். சுபாஷின் வெளிநாட்டு வாழ்வில் எமிலிக்கு முக்கியமான பங்களிப்பு இருந்தது.

ராமகிருஷ்ண மடத்தின் உறவு:

சுவாமி பிரம்மானந்தர்

அந்தக் கால வங்காளிகளில் பெரும்பான்மையானவர்கள் பிரம்ம சமாஜத் தொடர்பு கொண்டிருந்தனர். ஜானகிநாத்தும் அதில் விலக்கல்ல. பிரம்ம சமாஜத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகவே ராமகிருஷ்ண மடம் அமைந்தது. பிரம்ம சமாஜத்தின் போதாமைகளையும் குறைகளையும் தவிர்த்து ஆன்மிக எழுச்சி இயக்கமாக ராமகிருஷ்ணர் இயக்கம் சுவாமி விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. ஜானகிநாத்தின் மகனான சுபாஷுக்கு இயல்பாகவே சுவாமி விவேகானந்தர் மீடு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரது போதனைகளும் ராமகிருஷ்ண மடத்தின் செயல்பாடுகளும், அவரை துறவியாகும் எண்ணத்துக்கு இட்டுச் சென்றன. விவேகானந்தரை தனது மானசீக குருவாக வரித்துக் கொண்டார் சுபாஷ்.

மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் கொல்கத்தா மாகாண எல்லைக்குள் இரண்டாவது மாணவனாகத் தேறிய சுபாஷ், ஆன்மிக நாட்டத்தால், 16வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினான். இரண்டு மாதங்கள் பல இடங்களில் அலைந்து திரிந்த சுபாஷ், இறுதியில் சுவாமி விவேகானந்தரின் சக துறவியான சுவாமி பிரம்மானந்தரை (ராக்கோல் மஹராஜ்- 1863- 1922) வாரணாசியில் சந்தித்தார். அவர் ஜானகிநாத்தின் நண்பரும் கூட. அவர் சுபாஷின் எண்னங்களை முழுமையாக உணர்ந்தார். ஆனால் சுபாஷ் துறவியாவதை அவர் விரும்பவில்லை. சுபாஷால் அரசியல் அரங்கில் அளப்பரிய சாகசங்கள் அரங்கேற்றப்பட உள்ளதை உணர்ந்துகொண்ட அவர், தேசப்பணியில் ஈடுபடுமாறு அவனை வழிப்படுத்தினார். அதுவே நேதாஜி என்ற நிகரற்ற தலைவர் தேசத்துக்குக் கிடைக்கக் காரணமாயிற்று. இதனை நேதாஜியே பதிவு செய்திருக்கிறார்.

பிரம்மானந்தருடனான சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம்,   “யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்களது வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் சிறு துளி கிட்டியது. அதனால்தான் என் வாழ்க்கையைத் தேசத்துக்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன். இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். அதே  சுவாமி பிரம்மானந்தர் வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

அரசியல் குரு சித்தரஞ்சன் தாஸ்:

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

அக் காலகட்டத்தில் வங்க மாகாணம் அற்புதமான தேசத் தலைவர்களால் எழுச்சி அடைந்துகொண்டிருந்தது. அவர்களுள் தேசபந்து என்றழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் (1870- 1925) முக்கியமானவர். வழக்கறிஞரான அவரது வாத திறமையால், அலிப்பூர் சதி வழக்கில் புரட்சியாளர் அரவிந்த கோஷ் விடுதலை ஆனார். புரட்சிப் படையான அனுசீலன் சமிதியிலும் தாஸ் இருந்திருக்கிறார். அவரது அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சுபாஷ், தாஸ் அங்கம் வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார்.

தாஸின் முயற்சியால்தான் சுபாஷ் கல்லூரிக் கல்வியை முடித்தார் என்பது குறிப்பிட வேண்டிய தகவல். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற சுபாஷ் அங்கு இந்தியர்களைக் கேவலப்படுத்திய பேராசிரியர் ஓடனுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதால் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டார். அப்போது தாஸின் முயற்சியால் கொல்கத்தா, ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து படித்து, தத்துவ இயலில் பி.ஏ. பட்டம் (1918) பெற்றார் சுபாஷ்.

அப்போது தனது மகன் பிரிட்டீஷ் இந்திய ஆட்சிப் பணியான ஐ.சி.எஸ். பயில வேண்டும் என்று ஜானகிநாத் விரும்பினார். சுபாஷுக்கு அதில் நாட்டமில்லை. நம்மை அடிமைப்படுத்தியுள்ள நாட்டவரின் அரசில் சேவகம் செய்வதற்கான ஐ.சி.எஸ். படிப்பதா என்று அவர் கேள்வி எழுப்பினார். அப்போது சி.ஆர்.தாஸ் சுபாஷை வரவழைத்து அறிவுரைகள் கூறினார். ஐ.சி.எஸ். படித்து வந்து தேசப் போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே ஆங்கிலேயரை நம்மால் துரத்த முடியும் என்றார் அவர். ஐ.சி.எஸ். படிப்பதற்காக தானும் லண்டன் சென்று வந்ததை தாஸ் சுட்டிக்காட்டினார். அதன் விளைவாக லண்டன் செல்ல சுபாஷ் ஒப்புக் கொண்டார்.

பிரிட்டன் சென்ற சுபாஷ், 1919-இல் ஐ.சி.எஸ். படிப்பில் 4வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். நாடு திரும்பியவுடன் அவருக்கு உயரிய அரசு வேலைவாய்ப்புகள் காத்திருந்தன. அப்போதுதான், தனது பெற்றோரும் பிரிட்டீஷ் அரசும் அதிர்ச்சி அடையும் வகையில், தான் படித்துத் தேறிய ஐ.சி.எஸ். பட்டத்தை உதறுவதாக சுபாஷ் அறிவித்தார். “எனது தாய்நாடு அடிமையாக இருக்கும்போது எனது ஒருவனின் முன்னேற்றம் மட்டுமே முக்கியமானது என நான் கருதவில்லை” என்று தனது தமையன் சரத்துக்கு கடிதமும் எழுதினார் சுபாஷ்.

நாடு திரும்பிய சுபாஷ் மிக விரைவில் அரசியல் அரங்கின் மையப் பகுதிக்கு வந்தார். அவரை சி.ஆர்.தாஸ் வழிநடத்தினார். தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் நிர்வாகியாகவும் சுபாஷை அவர் நியமித்தார்.

அந்தச் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் மகாத்மா காந்தி தவிர்க்க இயலாத தலைவராக உருவாகி இருந்தார். 1921-இல் சுபாஷ் காந்தியை நேரில் சந்தித்தார். இருப்பினும் சி.ஆர்.தாஸே அவருக்கு மிகவும் அணுக்கமானவராக இருந்தார்.

காந்தியுடன் ஊடலும் பிரிவும்:

மகாத்மா காந்தியுடன் நேதாஜி

காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் (1920-1922) சி.ஆர்.தாஸும் சுபாஷும் தீவிரமாகப் பங்கேற்றனர். அதனால் ஆறுமாத காலம் சிறைவாசம் அனுபவித்தனர். இதனிடையே சௌரிசௌராவில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் மனம் நொந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இதனை தாஸும் சுபாஷும் ஏற்கவில்லை.

1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ் கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை வகித்தார். சட்ட சபைத் தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு சட்டசபைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை விரைவில் பெற முடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால் அதனை காந்தி  ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் எதேச்சதிகாரமான வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடியே  ‘சுயராஜ்யக் கட்சி’ என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ‘சுயராஜ்யா’ என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார்.

இதனால் காங்கிரஸுக்குள் ஏற்கனவே இருந்த திலகர்- கோகலே கால மோதல் போன்ற பிரிவினை நேரிட்டது. இந்நிலையில் 1924-இல் நடைபெற்ற மாந்கராட்சித் தேர்தலில் போட்டியிட்டு சி.ஆர்.தாஸ் கொல்கத்தா மேயராகவும் சுபாஷ் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் தேர்வு பெற்றனர். அவர்களது நல்ல நிர்வாகம் காரணமாக 1925இல் நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தேர்வாகினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் தனிப்பிரிவாகச் செயல்பட்ட சுயராஜ்யக் கட்சியினரை சமாதானப்படுத்த, “சுயராஜ்யக் கட்சியினரின் கொள்கையே காங்கிரஸ் கட்சியின் கொள்கை” என்று அறிவித்தார் காந்தி. அதன்மூலமாக இரு தரப்பிலும் பூசல்கள் குறைந்தன. 1925இல் சி.ஆர்.தாஸும் காலமானார். அதையடுத்து அவரது தலைமைப் பொறுப்பு சுபாஷுக்கு வந்து சேர்ந்தது. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆனார்.

எனினும் கட்சிக்குள் அமைதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காந்தியின் வழிமுறைகள் மீதும், அவரது தன்னிச்சையான அறிவிப்புகள் மீதும் அதிருப்தி அடைந்திருந்த கட்சியினருக்கு போஸ் உள்ளிட்டோரின் எதிர்ப்புக் குரல் அருமருந்தாக இருந்தது.

1927-ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் போஸ். அவரது முயற்சியால் 1928 ல் கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை   காந்தி தலைமையில் கூடியது. அப்போது பூரண சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் யாருக்கும் அஞ்சவில்லை.அவர் காந்தியின் முடிவு தவறு என மாநாட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி- போஸ் மோதல் மீண்டும் ஆரம்பமானது.

நேருவின் சுயநலம்:

ஜவஹர்லால் நேருவுடன் நேதாஜி

நேதாஜியின் முடிவை அப்போதைய இளம் தலைவரான ஜவஹர்லால் நேரு ஆதரித்தார். அதன்பிறகு இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடியே  ‘விடுதலைச் சங்கம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார்.

அவரைப் போலவே சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், “காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை’’ என்று கூறி, கட்சியிலிருந்து விலகினார். ஸ்ரீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு ‘காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி’யை நேதாஜி தொடங்கினார். அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உள்கட்சி ஜனநாயகத்துக்காகப் போராடியது.

காங்கிரஸ் கட்சியில் காந்தியின் ஆதிக்கம் பெருகியது. கட்சி உறுப்பினராகக் கூட இல்லாதபோதும், அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக காங்கிரஸ் கட்சி அவரை உயர்ந்த பீடத்தில் நிறுத்திக்கொண்டது. நேருவும் போஸிடமிருந்து படிப்படியாக விலகினார். நேதாஜி இருந்த இடத்தை மிக விரைவில் அவர் பிடித்துக் கொண்டார். காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக நேரு உயர, காந்தியை எதிர்த்ததால் நேதாஜி பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

எனினும்,  வங்கத்தில் நேதாஜியின் செல்வாக்கு குறையவில்லை. சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்ட நேதாஜி மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நலம் சீர்கெட்டது. அவரை விடுவிக்குமாரு காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட போஸ் 1930இல் கொல்கத்தா மாநகராட்சி மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். 

உலக நாடுகள் விஜயம்:

அடால்ஃப் ஹிட்லருடன் நேதாஜி

1933இல் அவரது உடல்நலம் மறுபடியும் சீர்கெட்டது. சிறைவாசம் காரணமாக ஏற்பட்ட இந்த உடல்நலக் குறைவைச் சரிசெய்ய வெளிநாடு சென்றார் போஸ். அப்போது ஐரோப்பா கண்டத்தில் பல நாடுகளுக்குச் சென்றார்.

அங்கிருந்தவாறே, இந்திய சுதந்திரப் போராட்டம் (1920- 1934) என்ற தனது நூலை அவர் 1934-இல் வெளியிட்டார். அதனை இந்தியாவில் ஆங்கிலேய அரசு தடை செய்தது.

ஐரோப்பா பயணம் நேதாஜியின் அரசியல் பார்வை விரிவடைய உதவியது. அப்போது கம்யூனிஸம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல பாசிஸம் என்ற ஆதிக்கக் கோட்பாடும் மேற்கத்திய நாடுகளில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டிலும் நேதாஜி நம்பிக்கை கொள்ளவில்லை. வர்க்க அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் கம்யூனிஸம் முழுமையான முன்னேற்றத்துக்கு உதவாது என்பது போஸின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர் பின்னாளில் துவக்கிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியை கம்யூனிஸ ஆதரவு இயக்கமாக வங்காளிகள் மாற்றிவிட்டனர்.

பிரிட்டன் சென்ற போஸ், அங்கு எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்களான கிளமென்ட் அட்லி, ஸ்டாஃபோர்ட் கிளிப்ஸ் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். ஆயினும் அவர்கள் காலனி நாடான இந்தியாவின் தலைவராகவே அவரை மதித்தனர்.

அதன்பிறகு இத்தாலி சென்ற நேதாஜி அதன் அதிபர் முசோலினியைச் சந்தித்தார். பின்னாளில் அச்சு நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவை இணைந்து இரண்டாம் உலகப் போரில் இறங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற சந்திப்பு அது. அன்றே, இந்தியாவில் இருந்து பிரிட்டன் வெளியேற, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஆதரவைப் பெறுவது குறித்து நேதாஜி ஆலோசனை நடத்தினார்.

பிறகு ஆஸ்திரியா சென்ற அவர் 1937-இல் தனது வாழ்க்கைத் துணையான எமிலியைக் கண்டு மணம் புரிந்தார். 1938-இல் அவர் நாடு திரும்பினார்.

1941-இல் இந்தியாவில் வீட்டுக்காவலில் இருந்து தப்பி பெஷாவர், ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா சென்ற நேதாஜி, அங்கிருந்து ஜெர்மனி சென்றுஅதன் அதிபர் அடால்ஃப் ஹிட்லரை 1941இல் சந்தித்தது தனிக் கதை.

ஹிட்லருக்கு அடிமைப்பட்ட தேசமான இந்தியா மீது ஏளனமான கருத்துகள் இருந்தன. போஸுடனான சந்திப்பில் அதை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். ஆனால், போஸ் அதை ஏற்கவில்லை. எனது தாய்நாட்டை தாழ்த்திப் பேசுவதை என்னால் ஏற்க முடியாது என்று ஹிட்லரிடமே சொன்னார் போஸ். அவரது தேசபக்தியும் துணிவும் ஹிட்லரை மிகவும் வியக்க வைத்தன. 1943 வரை ஜெர்மனியில் நேதாஜி அரசு விருந்தினராக இருந்தார்.

பிறகு ஹிட்லரின் உதவியால், நீர்மூழ்கி கப்பலில் ஜப்பான் சென்று சேர்ந்த நேதாஜி நடத்திய வீரச்சமர் அனைவரும் அறிந்தது. ஜப்பான் உதவியுடன் அவர் புதுப்பித்த இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ.)  ‘தில்லி சலோ” என்ற முழக்கத்துடன் மணிப்பூர் வரை படையெடுத்ததும், அதனால் ஆங்கிலேயன் அரண்டதும் வீர சரித்திரம்.

ஜப்பான் பிரதமர் ஹிடேகி ஜாடோ, நேதாஜி மீதான நம்பிக்கையில் நேதாஜியை ‘அமையவுள்ள சுதந்திர இந்திய அரசின்’ பிரதமராக அறிவித்தார். இரண்டாம் உலகப் போரில் (1939- 1945) பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்ட நாடுகளுக்கு உதவுவதன் மூலமாக தாய்நாட்டின் சுதந்திரத்தை அடை அவர் திட்டமிட்டார். உலக போரின் போக்கு மாறி இருந்தால், நமது நாட்டின் வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கும்.

காந்தியுடன் மீண்டும் முரண்பாடு:

பட்டாபி சீதாராமையா – நேதாஜி

1938இல் நாடு திரும்பிய நேதாஜிக்கு கதாநாயகனுக்கு உரிய வரவேற்பு கிடைத்தது. அவர் காங்கிரஸ் கட்சியின் இயல்பான தேசியத் தலைவரானார். அந்நிய ஆதிக்கத்திலிருந்து பூரண சுதந்திரம் வேண்டுவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்; அதற்காக எந்த வழிமுறையையும் பயன்படுத்தலாம்  என்று அவர் முழங்கினார்.

கட்சிக்குள் நேதாஜியும் மக்களிடையே காந்தியும் செல்வாக்கு பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய காந்தி, 1939இல் திரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் தனது பிரதிநிதியாக நேருவை நிறுத்த முற்பட்டார். அவர் தயங்கவே, பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். ஆனால், நேதாஜியின் செல்வாக்கின் முன்பு சீதாராமையாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.நேதாஜி தலைவராகத் தேர்வானார். இத்தேர்தலில் தென்பாரத காங்கிரஸ் பிரதிநிதிகளின் வாக்குகளை நேதாஜிக்கு ஆதரவாகத் திரட்டியதில் தமிழகத் தலைவர் முத்துராமலிங்க தேவர் முதன்மை வகித்தார்.

ஆனால், இந்தத் தோல்வியை காந்தியால் ஏற்க முடியவில்லை. “பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி” என்று அறிக்கை விடுத்த காந்தி, காங்கிரஸ் கட்சிக்குள் நேதாஜி விருப்பம் போல செயல்படட்டும் என்று கூறி அதன் வழிகாட்டி பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். இது உண்மையில் உள்கட்சி ஜனநாயகத்தின் மீதான கடுமையான தாக்குதல். இத்தனைக்கும் காந்தி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை. நேரு காந்தியை ஆதரித்தார். தனது தோல்விக்கு பொறுப்பேற்று காந்தி உண்ணாவிரதமும் இருந்தார்.

காந்தியின் இந்த முடிவு நேதாஜியைப் புண்படுத்தியது. ஏற்கனவே மூன்று முறை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவாறே துணை அமைப்பாகப் போராடிய அனுபவத்தில், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், ‘அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்’ என்ற அமைப்பை தோற்றுவித்தார். தனது கட்சி, காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னணி துணை அமைப்பாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், காந்தி- நேரு தலைமையிலான காங்கிரஸ் பிரிவினர் நேதாஜியின் அமைப்பை தனிக் கட்சியாகவே கருதினர்.

தேவரும் போஸும்:

பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் நேதாஜி

ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1908- 1963) பொறுப்பேற்றார். தேவரும் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர். ஆனால், காந்தியின் தன்னிச்சையான அரசியல் முடிவுகளில் அவர் பேதம் கொண்டிருந்தார். எனவே போஸுடன் நெருக்கமாக உணர்ந்தார்.

போஸ் தனிக்கட்சி துவக்கியவுடன் தமிழகம் வந்தபோது, அவருக்கு வேறு எங்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு சென்னை மாகாணத்தில் கிடைத்தது. 1939 செப்டம்பர் 6- 9 ஆகிய மூன்று நாட்கள் நேதாஜி மதுரை, சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார்.

போஸுடன் தேவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக, இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டபோது, தேவரின் அழைப்பை ஏற்று பலநூறு பேர் பர்மாவில் ஐ.என்.ஏ.வில் இணைந்தனர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் எனக் கூறிய தேவர், நேதாஜியுடன் தோள் சேர்ந்தது வியப்பானதல்ல.

அதேபோல, சர்தார் வல்லபபாய் படேலின் அண்ணனான வித்தல்பாய் படேல் நேதாஜியின் தலைமையை உணர்ந்தவர். சுயராஜ்யக் கட்சியின் நிறுவனர்களுள் அவரும் ஒருவர்.  போஸின் தேசப்பணிகளால் கவரப்பட்ட வித்தல்பாய் படேல் தனது ரூ. 1,20,000 மதிப்புடைய சொத்தை போஸின் தேசப்பணிகளுக்காகக் கொடுத்தார். ஆனால் காந்தி அந்தத் தொகையை காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கேற்ப மட்டுமே செலவிட வேண்டும் என்றார். அதற்கு போஸ் மறுத்ததால், வழக்கு நீதிமன்றம் சென்றது. வித்தல்பாயின் உயில் தெளிவாக இல்லாததால் போஸ் அந்தத் தொகையை இழந்தார். வித்தல் பாயும் 1933இல் காலமானார்.

ஜவஜர்லால் நேருவின் தந்தை மோதிலாலும் வல்லபபாயின் அண்ணன் வித்தல்பாயும் நேதாஜியுடன் பணிபுரிந்தவர்கள். ஆனால், ஜவஹரும் வல்லபபாயும் காந்தியுடன் இருந்தவர்கள். இந்த வரலாற்று முரணைப் புரிந்துகொண்டால், அப்போதைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்ற இளம் தலைவராக நேதாஜி இருந்ததை உணர முடியும்.

ராஷ்பிகாரி போஸின் ஆசி:

இந்திய தேசிய ராணுவத்தைப் பார்வையிடும் நேதாஜி

புரட்சியாளரான ராஷ் பிகாரி போஸ் (1986- 1845) நேதாஜிக்கு முன்னரே ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜப்பான் சென்று அங்கு இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர்; சுதந்திர இந்திய அரசு (ஆசாத் ஹிந்த்) எல்லைக்கு வெளியே செயல்படுவதாகவும் அறிவித்தவர். 

நேதாஜி ஜப்பான் வந்த தகவலை அறிந்த அவர், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்தார். தனது போராட்ட வாரிசாக நேதாஜியை அறிவித்த அவர், இந்திய தேசிய ராணுவத்தை அவரிடம் ஒப்படைத்தார். ஜப்பான் அரசின் உதவியுடன், போர்க்கைதிகளாக இருந்த பிரிட்டீஷ் இந்தியக் கைதிகளைக் கொண்டு ஐ.என்.ஏ.வை வலுப்படுத்தினார் நேதாஜி.

வெளிநாட்டிலிருந்து இந்திய சுதந்திரத்துக்காகப் மற்றொரு புரட்சியாளரான செண்பகராமன் பிள்ளையின் முழக்கமான “ஜெய்ஹிந்த்” என்ற மந்திரத்தையும் நேதாஜி சுவீகரித்துக் கொண்டார். சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் வானொலியில் இருந்தபடியே இந்தியர்களுக்கு சுதந்திர அறைகூவலையும் அவர் விடுத்தார்.

1944 ஜூலை 4ல் பர்மாவில் (இன்றைய மியான்மர்) ஐ.என்.ஏ. ஆதரவாளர்களிடம் பேசிய நேதாஜி, “ரத்தம் தாருங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்” என்று முழங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் ஜப்பான் வீழ்ந்தது. அதன் விளைவாக ஜப்பான் அரசின் உதவிகள் தடைப்படவே, போர்முனையில் ஐ.என்.ஏ. தோல்வியுற்றது.

ஐ.என்.ஏ. வீரர்கள் பிரிட்டீஷ் ராணுவத்தின் ஆயுத பலம் முன் கொத்துக் கொத்தாக மடிந்து வீழ்ந்தனர். எனவே ஐ.என்.ஏ. தளபதிகள் சரண் அடைவதாக அறிவித்தனர். ஆங்கிலேயரிடம் சரணடைய விரும்பாத நேதாஜி தனி விமானத்தில் ரஷ்யா தப்பிச் சென்றார். ஆனால், அந்த விமானம் 1945 ஆகஸ்ட் 18இல் விபத்துக்குள்ளானதால் அவர் அமரரானதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்காதோரும் உள்ளனர். மக்கள் மனங்களில் மரணமின்றி வாழும் நேதாஜிக்கு ஏது மரணம்?

மாபெரும் சாகசப் பயணம்:

சுதந்திர இந்திய அரசை அறிவித்த நேதாஜி


நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது.

பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்.

மகாத்மா காந்தி என்ற மாபெரும் அரசியல் ஆளுமையுடன் மோதி வென்றவர் என்பதே அவரது பெருமை. ஆயினும் காந்தியை தேசத்தந்தையாக மதித்து அவரது வழியிலிருந்து தானாகவே விலகிக்கொண்டவர் நேதாஜி. சிங்கப்பூரிலிருந்து 1944 ஜூலை 6 இல் ஆஸாத் ஹிந்த் வானொலியில் பேசிய நேதாஜி, காந்தியை தேசத்தந்தை என்றே அவர் வர்ணித்திருந்தார். மகாத்மா காந்தி தனது போராட்டத்துக்கு ஆசி அளிக்க வேண்டும் என்று தனது உரையில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருக்கு யார் மீதும் அரசியல்ரீதியான வெறுப்போ, கோபமோ இருந்ததில்லை.

விதிவசத்தால் ஐ.என்.ஏ. தோல்வியின் பிடியில் சிக்கிய நிலையிலும் நேதாஜி மனம் கலங்கவில்லை. 1945 ஆகஸ்ட் 15இல் அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையில் அவரது தன்னம்பிக்கையும், தேசபக்தியும் ஜுவாலையென ஒளி வீசுகின்றன. அவரது அறிக்கையின் ஒரு பகுதி இது:

 “நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். இந்த தற்காலிகத் தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளைத் தளர விடாதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல,  விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!”

இந்த அறிக்கை வெளியான அடுத்த மூன்று நாள்களில் நேதாஜி  நம்மிடமிருந்து பிரிந்தார். பாரதம் ஓர் உன்னதமான தவப்புதல்வனை இழந்தது. பாரத வரலாறும் வேறு திசையில் திரும்பியது.

வரலாற்றின் பக்கங்களைப் படிப்பவர்களாக மட்டும் இராமல், வரலாற்றை உருவாக்குவோராகவும் நாம் மாற முடிந்தால், நாம் ஒவ்வொருவரும் நேதாஜி ஆக முடியும். வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது என்ற உண்மையை உணர்ந்தால், வாய்ப்புகளை நம்மாலும் உருவாக்க முடியும். தடைகளைப் படிக்கற்களாக்கும் லாவகம் தெரிந்தால் நம்மாலும் சாகசங்களை நிகழ்த்த முடியும்.

இதயத்தில் எரியும் சுதந்திரக் கனலும், அசைக்க முடியாத தேசபக்தியும், சுயநலமின்றிப் போராடும் குணமும், யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரமும், தெளிந்த அறிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் உலகையே தன்பக்கம் திருப்ப முடியும் என்பதற்கு நேதாஜியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.   

ஜெய்ஹிந்த்!

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

2 மறுமொழிகள் நேதாஜி: தலைவர்களின் தலைவர்

  1. Srinivasan on January 23, 2019 at 12:32 pm

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  2. அ.அன்புராஜ் on January 23, 2019 at 2:48 pm

    அருமையான கட்டுரை.நன்றி.பாராட்டுக்கள்.திரு.போஸ் அவர்களுக்கு உதவியவர்கள் ராணுவத்தில் பணியாற்றி தியாகம் செய்தவர்களின் விபரங்களையும் வெளியிடலாமே.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*