முகப்பு » அரசியல், சினிமா

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

January 12, 2019
-  

<< முந்தைய பகுதி

பேட்ட படத்தின் அரசியலை மேலும் பார்க்கும் முன் படத்தைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஏன்னா படத்தைப் படமா பாக்கணும்னு நிறைய பேர் சொல்றாய்ங்க…

சுவாரசியமான திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத இயக்குநரால் எடுக்கப்பட்ட படமாகவே இது இருக்கிறது.

டெரரான கடந்த காலம் கொண்ட பாட்ஷா, அப்பாவி ஆட்டோ டிரைவர் மாணிக்கமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பாட்ஷா வெளிப்படுகிறார். தீயவர்களைக் கொல்கிறார். நல்லவர்களைக் காப்பாற்றுகிறார்.
புலி ஒன்று பூனைபோல் தன் இயல்பு மறைத்து வாழும் வாழ்க்கை (அஞ்ஞாத வாச வேர்கள்) அந்தப் படத்தில் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அதே டெப்ளேட்டைத்தான் பேட்டையிலும் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், வார்டன் காட்சிகளும் சரி… பேட்ட வேலன் காட்சிகளும் சரி… படு மொக்கையாக இருக்கின்றன. உள்ளே போ என்ற பாட்ஷாவின் க்ளாசிக் வசனம் இதில் காமடியாகவே தோன்றுகிறது.

காலேஜில் ஒரு சில மாணவர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள். வார்டனாக வரும் ரஜினி அண்டர்வேரை அவுத்து ரோட்ல ஓடவிட்ருவேனென்று பஞ்ச் (?) டலயாக் பேசுகிறார். உடனே மாணவர் வில்லன் பம்மிப் போய்விடுகிறான்.

மாணவர்களை ஒன்றாம் வகுப்பெல்லாம் இங்க நில்லு… ரெண்டாம் வகுப்பெலாம் அங்க நில்லுஎன்று மிரட்டுகிறார். உடனே அவர்களும் நின்றுவிடுகிறார்கள்.

காண்ட்ராக்ட் வில்லனைப் போய்ப் பார்த்து உன்னை நான் அடிச்சிருவேன் என்று மிரட்டுகிறார். அவரும் பஞ்ச் டயலாக்கை ரசித்தபடியே நிற்கிறார்.

அப்பறம் ரெளடிகள் வீடு கட்டுகிறார்கள். ரஜினி பால் காய்ச்சுகிறார்.

வறட்சி… வறட்சி… அவ்வளவு கற்பனை வறட்சி… இதுதான் இப்படியென்றால், ஃப்ளாஷ் பேக் காட்சிகள் அதைவிட சூர மொக்கை.

படத்தைப் பற்றி இதுக்கு மேல் பேச ஒன்றுமே இல்லை.
தயாரிப்பாளர்கள் ரஜினியின் கால்ஷீட் கிடைத்தாலே கோடிகளை அள்ளிவிடமுடியும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். இயக்குநர்கள் இந்து விரோத சீன்கள் வைத்தாலே போதும் படம் ஹிட்தான் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆக அவர்கள் இருவருடைய அரிப்புக்கு ரஜினி தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி தரமான சிறப்பான செய்கையைச் செய்துகொடுத்திருக்கிறார்.

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அங்கிள்… மரண மாஸ் தலைவா என்ற வசனங்களை படையப்பா நீலாம்பரி மாதிரி ரஜினி போட்டுக் கேட்டுக்கொண்டே படத்தை நடித்துக்கொடுத்துவிட்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரா இருந்தவர், அவரை வெச்சுப் பண்ற அரசியல் (அபாய) காமெடியைப் புரிஞ்சுக்காம பவர் ஸ்டார் ஆகிவிட்டிருக்கிறார்.

பட விமர்சனம் இவ்வளவுதான்.

இனி அரசியலுக்கு வருவோம்.

ரஜினி காந்தை இப்போதே விமர்சிக்கவேண்டாம் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் பல ஸ்வாமிஜிக்கள் மீது மதிப்பு கொண்டவர். இந்து தெய்வ பக்தி கொண்டவர். தேசிய சிந்தனை கொண்டவர் என்பதெல்லாம் உண்மைதான். அவருடைய பெரும்பாலான திரைப்படங்களில் அவருடைய க்ராண்ட் எண்ட்ரி என்பது இந்து தெய்வம் ஏதேனும் ஒன்றைப் போற்றிபாடுவதாகத்தான் இதுவரையும் இருந்தது. பல காட்சிகளிலும் இந்து குறியீடுகளை ஆக்கபூர்வமான தொனியிலேயே பயன்படுத்தியிருப்பார்.

அப்படியானவர் சமீபகாலமாக, இந்து விரோத சிந்தனைகள் கொண்ட இயக்குநர்களின் திரைப்படங்களில் அவர்கள் சொல்வதற்கு ஏற்ப நடித்துவிட்டுப் போவது ஏன் என்பதுதான் கேள்வி.
பறையர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும் அம்மன் கோவில் விழாவில் நான் ஆடிப் பாடுவதாகத் துவக்கக் காட்சி வை என்று ரஞ்சித்திடம் சொல்ல ரஜினியால் முடியாதா..?

பறை என்பது இப்போது இறப்புச் சடங்குடன் தொடர்புடையதாக இருக்கிறது. உண்மையில் ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், பிராமணர் -பட்டியல் வகுப்பினர் போல் ஆயுதம் ஏந்தாத ஜாதியினர் என போர் செய்ய முடியாத மக்களை பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி அறிவுருத்த, வெள்ளப்பெருக்கை மக்களுக்கு அறிவிக்க, உழவர்களை அழைக்க, போருக்கு அணி திரளுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல் வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில் என வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பறையை ஒரு கதாபாத்திரம் சாவு மோளம் என்று அவமானப்படுத்த ரஜினிகாந்த் இந்த வசனத்தை மூச்சுவிடாமல் பேசி கைத்தட்டல் வாங்க முடியாதா..? மொத்தம் இருக்கும் பறைகளின் பெயர்களை ரஜினி வரிசையாக அவருடைய ஸ்டைலில் பட்டியலிட்டாலே நாடி நரம்புகளில் புது ரத்தம் பாயுமே… அது கிராண்ட் எண்ட்ரியாக இருக்காதா என்ன..? கிறிஸ்தவன் ரஞ்சித்துக்கு பறை மீது வெறுப்பு என்றால் ரஜினியும் ஏன் அதையே பிரதிபலிக்கவேண்டும்?

யானை தனது பலத்தை உணராமல் தும்பிக்கை ஏந்துவது போன்ற நிலைதான் இது.

அப்பறம் அவர் அரசியல் கட்சியையே இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்து நாலைந்து வருடங்கள் அவருடைய செயல்பாடுகளைப் பார்த்த பிறகே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது சரிதான்.

ஆனால், எதிர் தரப்பு அப்படி காத்திருந்து கை கட்டி வேடிக்கை பார்க்கவில்லையே. அவர் கட்சி ஆரம்பிக்கக்கூடும் என்று தெரிந்த உடனேயே அவரை மடக்கி இந்து விரோத விஷயங்களைப் பேசவைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழகத்தில் காவிரி புஷ்கரணி, பவானி ஆரத்தி என சில விஷயங்களை இந்துக்கள் முன்னெடுக்கிறார்கள். ரஜினியோ தன் படத்தில் வில்லன் கங்கை ஆரத்தி நிகழ்வில் பங்கெடுத்தபடியே செல்லில் பேசியபடியே வில்லத்தனம் செய்கிறான். எதிரிகள் எப்படி தங்களுடைய வெறுப்பை நுட்பமாகத் திணிக்கிறார்கள். ரஜினி இதை எதற்காக அசடுபோல் பொறுத்துக்கொண்டு போகவேண்டும்.

ஏன், அதே படத்தில் வரும் கிறிஸ்தவ வில்லன் சர்ச்சில் கும்பிடும்போது இதுபோல் ஏதேனும் மொள்ளமாரித்தனம் செய்வதாகவோ பாதிரியாருடன் பேசியபடியே ரெளடித்தனம் செய்வதாகவோ காட்டும்படிச் சொல்லியிருக்கலாமே. கிறிஸ்தவ வில்லன் தனி நபர் போலவும் இந்து வில்லன் மட்டும் இந்து சடங்கைச் செய்யும்போது ரெளடித்தனம் செய்வதாக ஏன் காட்டவேண்டும்? அவன் மீது வரும் வெறுப்பு அவனுடைய பாரம்பரியத்தின் மீதும் வரவேண்டும் என்ற நுட்பமான அரசியல் திட்டமிடல்தானே. ரஜினி இதற்கு ஏன் துணைபோகவேண்டும்?

இப்படி இதுவரை இல்லாத இந்து விரோத காட்சிகளை அவர் திடீரென்று தன் படங்களில் இடம்பெறச்செய்வது ஏன்? இதை அவர் செய்திருக்கவில்லையென்றால் அவருடைய கட்சியை ஆரம்பித்து ஐந்தாறு வருடங்கள் கழித்தே அவரை மதிப்பிட ஆரம்பித்திருக்கலாம். முதலில் ஆரம்பித்தது யார்..? அவர் தானே?

பாட்ஷாவிலும் ஆனந்தராஜ் தெய்வ பக்தி உள்ளவராகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். ஆனால், அந்தப் படத்தின் ஆட்டோக்காரன் பாடல் சரஸ்வதி பூஜையின் தேசிய கீதமாக அல்லவா ரஜினியால் ஆக்கப்பட்டிருந்தது. பேட்ட படத்தில் வெறும் விபூதிப் பட்டை அதுவும் அழியும் நிலையில் மட்டுமே இருக்கிறது. மீதி அனைத்துமே இந்து வளைகாப்புக்கும் பேட்டை கைலி கட்டிக்கொண்டுதான்வந்து நிற்கிறார்.

இஸ்லாமிய மரியாதை தவறல்ல… இந்து மரியாதையும் வேண்டுமே. அதுவும் இந்து அடிப்படைவாதத்தை விலாவாரியாக விமர்சிக்கும்போது இஸ்லாமிய தீவிரவாதத்தை மவுனமாகக் கடப்பது அயோக்கியத்தனம் தானே.
*
அவர் திரைப்படங்களில் பேசுவதைப் பொருட்படுத்தக்கூடாது… நிஜ விழாக்களில் பேசுவதையே கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது என்ன இரட்டை வேடம்..?

ஆன்மிக அரசியலை முன்னெடுக்க விரும்புபவர் தனது திரைப்படங்களில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை ஏன் எடுக்கவேண்டும். ஆன்மிக அரசியல் என்றால் இந்துத்துவ விரோத அரசியல்தான் என்ற செய்தியை ஏன் கொடுக்கவேண்டும். யாருக்குக் கொடுக்கிறார்? அப்படியே செய்வதென்றால் அதை ஒழுங்காகச் செய்யவேண்டியதுதானே. எல்லா அடிப்படைவாதமும் எதிர்க்கப்படவேண்டியவையே என்பதுதானே உண்மையான ஆன்மிக அரசியல்.

பசு காப்பாளர்கள் மீது ஒரு விமர்சனம் வைக்கிறார் என்றால் பசு கடத்தல்காரர்கள் மீதும் ஒரு விமர்சனம் வைக்கவேண்டுமல்லவா..?

இவ்வளவு ஏன், இந்தியாவில் நடந்திருக்கும் வெடிகுண்டு தீவிரவாதச் செயல்பாடுகளில் 90 சதவிகிதத்துக்கு மேல் ஈடுபட்டது இஸ்லாமிய தீவிரவாதிகளே… அமைதிப்பூங்கா தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். வேர்விடத் தொடங்கியிருக்கிறது. ஆன்மிகவாதிக்கு இதுவும் கவலை தரவேண்டுமே…

இதே பேட்ட திரைப்படத்தில் ஏதேனும் ஒரு வழி தவறிய இஸ்லாமிய இளைஞனைக் காட்சிப்படுத்தி அவனுக்கு வன்முறை வேண்டாம் என்று அறிவுரை சொல்லியிருக்கமுடியாதா என்ன..? இந்து என்றால் அவன் செய்யாத தவறுக்கும் சேர்த்து ஏறி மிதிப்பது, இஸ்லாமியன் என்றால் அவன் மெட்ரோசிட்டியில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினாலும் பொத்திக்கொண்டு போவது… என்ற அரசியலைச் செய்ய ரஜினி ஏன் முன்வரவேண்டும்?

அப்பறம் தமிழ் நாட்டில் பி.ஜே.பி.க்கு இரண்டு சதவிகித ஆதரவு மட்டுமே இருக்கிறது. எனவே பாஜக சார்பு என்பது ரஜினிக்கு ஒரு பெரும் சுமைதான்.
பாஜகவுக்கு பத்து சதவிகித ஆதரவு வருவதுவரை ரஜினி தனித்துத்தான் இருக்கவேண்டும்.

இது என்ன வாதம்?

பாஜகவுக்கு பத்து சதவிகித ஆதரவு வந்த பின் ஆதரிக்க இவர் எதற்கு? அதை உருவாக்கித் தரத்தானே இவர் துணிந்து முன்வரவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், ரஜினி பாஜகவுடன் சேரவேவேண்டாம். ஆனால், இந்திய இன்க்ளூஸிவ் அரசியலை முன்னெடுக்கலாமே. இவர் மீது மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பை வைத்து இந்திய இன்க்ளூசிவ் மற்றும் தேச ஒருமைப்பாட்டை பலப்படுத்தும் வேலையைத்தானே திரைப்படங்களிலும் செய்யவேண்டும். உண்மையில் மக்கள் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

உண்மையான பிரச்னை என்னவென்றால், வெளிப்படையான இந்து ஆதரவுடன் ரஜினி அரசியலுக்கு வந்தால், ஊடகங்கள் அவரைக் கட்டம் கட்டித்தாக்கும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அல்லக்கைகளும் அவரை எதிர்க்கும். இதற்கு பயந்துகொண்டு இப்போதே வாய்மூடிக் கொண்டால் நாளை அரசியலுக்கு வந்தாலும் இதையே செய்யமாட்டார் என்று என்ன நிச்சயம்.

மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல இது.

எதிர் தரப்பினர் தமிழகத்தை இந்திய தேசியத்துக்கு எதிராக நிறுத்தும் அனைத்து கீழறுப்பு வேலைகளையும் தொடங்கி ஆண்டு பல ஆகிவிட்டன.

தமிழ் பெருமிதம் என்பது வெறியாகவும், மாநில சுய ஆட்சி என்பது மாநிலப் பிரிவினையாகவும் கார்ப்பரேட் எதிர்ப்பு என்பது இந்திய அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகவும், பாஜக எதிர்ப்பு என்பது இந்து விரோதமாகவும் ஆக்கப்பட்டுவிட்டிருக்கிறது. இப்படியான நிலையில் ஊடகங்கள் யார் பக்கம் வேண்டுமானாலும் இருந்துகொள்ளட்டும். மக்கள் என் பக்கம்டா என்று துணிந்து இறங்கவேண்டும். அதுதானே உண்மையும்கூட.

ஆனால், ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது அரசியலுக்கு வந்திருந்தால் இன்கம்டாக்ஸ் ரெய்ட் அடிப்பார்கள் என்று பயந்து பதுங்கியவரை இப்போது அரசியலுக்கு வரவில்லையென்றால் அதுவும் இந்து விரோத அரசியலை முன்னெடுக்கவில்லையென்றால் மாட்டிக்கொள்வாய் என்று மிரட்டித்தான் இறங்க வைத்திருக்கிறார்கள்என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், ரஜினிக்கு அரசியலில் வர விருப்பமே கிடையாது. அதுபோலவே, இந்து விரோத அரசியலை முன்னெடுக்கும் விருப்பமும் கிடையாது. அந்த இரண்டையும் காலம் போன காலத்தில் ஏன் செய்கிறார்?

அப்பறம் அவர், வாலி வதத்தில் ராமர் செய்ததுபோல் சூழ்ச்சி செய்து ஜெயிக்கப்போகிறார். இந்து விரோதம் பேசி ஆட்சியைக் கைப்பற்றிய பின் இந்து-இந்திய ஆதரவுஅரசியலைச் செய்வார் என்று சொல்கிறார்கள்.

ரஜினி டபுள் கேம் ஆட நிச்சயம் வாய்ப்பு உண்டு. ஆனால், யாரை இதில் ஏமாற்றப்போகிறார் என்பதுதான் கேள்வி.

முதலில் இந்து விரோத ஊடகங்களுக்கு ஏற்ப ஆடியபடியே கடைசியில் இந்து-இந்திய ஆதரவு நிலைப்பாடை எடுக்கப்போகிறாரா..? அல்லது கடைசியில் இந்து – இந்திய ஆதரவை முன்னெடுப்பார் என்று இறுதிவரை நம்பவைத்து இந்துக்களைக் கழுத்தறுப்பாரா..? அவருடைய டபுள் கேம் என்பது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்ப என்ன முகாந்தரம் இருக்கிறது?

சல்லிக்கட்டு விஷயத்தில் பாஜக தமிழ் பாரம்பரியத்தைக் காப்பாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கலாமென்று நினைத்தது. மெரீனாவில் மக்களை ஒன்று திரள விட்டது. மறைமுகமாக பல விஷங்களைச் செய்தும் கொடுத்தது. ஆனால், என்ன நடந்தது? காங்கிரஸின் வழிகாட்டுதலின் பேரில் ஒட்டுமொத்த தமிழ் ரவுடிகளும் சேர்ந்து பாஜகதான் சல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்கிறது என்று சொல்லிச் சொல்லி தமிழ் பெருமிதம் என்ற பெயரில் தமிழ் அடிப்படை வாதத்தை ஆழமாக வேரூன்றிவிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு தமிழகத்தில் நடந்துவரும் அனைத்து போராட்டங்களுக்கும் அந்த சல்லிக்கட்டுதான் மூலகாரணம்.

ஓ.பி.எஸ்.- ஈ.பி.ஸ் மூலம் நல்லாட்சி கொடுத்து தமிழகத்தில் கால் ஊன்றலாம் என்ற பாஜகவின் திட்டமும் கண் முன்னே பொடிந்துகொண்டிருக்கிறது.

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

இறைவா…
எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நண்பர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று! என்றும் சொல்லவேண்டி வந்துவிடும் போலிருக்கிறது.

(முற்றும்)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

 1. BSV on January 13, 2019 at 12:41 pm

  இரஜினிக்கு நடிகர் என்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் கிடையாது. மற்ற அடையாளங்கள் தாற்காலிக வேடங்கள். அரசியலில் நுழைந்தால் ஒவ்வொன்றாக கழன்று விழும் அவசியமானால். நுழையாவிட்டாலும், நேரத்துக்குத் தக்க மாறும். எனவே இரஜினியை நடிகராக மட்டும் பார்த்து சம்பளத்துக்காக உழைக்கிறாரென்றே எடுக்க வேண்டும். நீங்கள் அதிகம் கொடுத்து அவரை புக் பண்ணினால், உங்கள் வசனங்களை ஒப்புவிப்பார்; நடித்துக் காட்டுவார். இப்படம் கலாநிதி மாறனால் இந்துமதத்தையும் இந்துத்துவ‌த்தையும் எதிர்க்க என்றே எடுக்கப்பட்டது. இதற்கு மாற்றாக நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத மதங்களையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் கட்சிகளையும் தாக்கி இன்னொருபடம் எடுக்கலாம். ஆக்ஸிடன்டல் ப்ரைம் மினிஸடர் வந்திருக்கதல்லவா? சும்மா ஒரு நடிகரைப் போட்டு ஏன் தாக்க வேண்டும்? அப்படியே தாக்க வேண்டுமென்றால், கலாநிதி மாறனை அல்லவா தாக்கியிருக்க வேண்டும்?

  என்றுமே இரஜினி பி ஜே பியுடன் இணைய மாட்டார். இந்துத்வ கொள்கைகளை நம்பினாலும் அவற்றோடு தன்னை ஓபனாக காட்டிக் கொள்ள மாட்டார்.

 2. அ.அன்புராஜ் on January 13, 2019 at 5:41 pm

  Let us stop publishing any article on Rajini, he is too small. An is always as actor. Please ignore Rajini and Kamal etc.

 3. பெரியசாமி on January 15, 2019 at 10:26 am

  ரஜினி ஒரு நடிகர் என்ற முறையில் ஒரு திரைப்படத்தில் ஊதியம் பெற்று நடிப்பவர். அவர் தனது அரசியல் கருத்துக்களையோ, சமுதாய முன்னேற்றம் குறித்த தனது கருத்துக்களையோ , ஒரு பெரிய முதலீட்டு கொள்ளையராக இருக்கும் தயாரிப்பு நிறுவனத்திடம் திணிக்க முடியாது. மாறாக ரஜினி அந்த முதலீட்டு நிறுவனத்தின் தயாரிப்புக்களில் இருந்து விலகிக் கொள்ளலாம். அவ்வளவுதான் . தமிழகத்தில் ரஜினியின் அரசியல் தலைமையை விரும்புவோரும் ரஜினிக்காக ஆதரிக்கவில்லை. திமுக , இந்திரா காங்கிரஸ் ஆகிய இரு தீயசக்திகளை விடவும் ரஜினி எவ்வளவோ பரவாயில்லை என்ற கண்ணோட்டத்தில் தான் ரஜினிக்கு ஆதரவு பெருகிவருகிறதே ஒழிய , திமுகவை போல ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவேன் என்றெல்லாம் ரஜினி பொய் சொல்லி ஒட்டுக் கேட்க துணியமாட்டார். அதில் அதிமுக்கியம் ரஜினி மோடிக்கு நண்பர் மோடிமீது பெரிய அளவில் மரியாதை வைத்திருப்பவர் . ஆனால் ரஜினி பாஜக கட்சிக்காரர் அல்ல. அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு தேர்தல் களத்தில் இறங்கினாலும் கூட, மத்தியில் மோடியை ஆதரித்தாலும் , மாநிலத்தில் தனது கட்சியையும், தனது அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதில் தான் குறியாக இருப்பார். திமுக இந்திரா காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற நாட்டு விரோத, பிரிவினை வாத ஆதரவு கட்சிகளின் கையில் தமிழகம் அழியாமல் காப்பாற்ற இன்று ரஜினியால் மட்டுமே முடியும் என்பதே உண்மை நிலை . பாஜக அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த பாமக, விஜயகாந்தை சேர்த்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, ரஜினியின் ஆதரவுக் குரல் கிடைத்தால் பாஜகவின்வெற்றி வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும். அரசியலில் தியாகி , புடம் போட்ட தங்கம் காமராஜரால் , தீய சக்தியான திமுகவை வீழ்த்த முடியவில்லை. ஆனால் எம் ஜி ஆர் தான் திமுகவை வனவாசம் அனுப்பிவைத்தார். அதே போலத்தான் , இன்று உள்ள சூழலில் வக்கிர புத்தி படைத்த ஊழல், குடும்ப அரசியல், பிரிவினை வாதிகளுக்கு மறைமுக ஆதரவு ஆகிய தவறுகளை தொடர்ந்து செய்யும் பதவி ஆசை , பண ஆசை மட்டுமே கொண்ட திமுக அணியை இருந்த இடம் தெரியாமல் அடிக்க ரஜினியால் மட்டுமே முடியும்.

 4. Kannan on January 16, 2019 at 10:07 am

  very true.

 5. அ.அன்புராஜ் on January 16, 2019 at 11:38 am

  BSV on January 13, 2019 at 12:41 pm
  இரஜினிக்கு நடிகர் என்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளமும் கிடையாது. மற்ற அடையாளங்கள் தாற்காலிக வேடங்கள். அரசியலில் நுழைந்தால் ஒவ்வொன்றாக கழன்று விழும் அவசியமானால். நுழையாவிட்டாலும், நேரத்துக்குத் தக்க மாறும். எனவே இரஜினியை நடிகராக மட்டும் பார்த்து சம்பளத்துக்காக உழைக்கிறாரென்றே எடுக்க வேண்டும். நீங்கள் அதிகம் கொடுத்து அவரை புக் பண்ணினால், உங்கள் வசனங்களை ஒப்புவிப்பார்; நடித்துக் காட்டுவார். இப்படம் கலாநிதி மாறனால் இந்துமதத்தையும் இந்துத்துவ‌த்தையும் எதிர்க்க என்றே எடுக்கப்பட்டது. இதற்கு மாற்றாக நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத மதங்களையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் கட்சிகளையும் தாக்கி இன்னொருபடம் எடுக்கலாம். ஆக்ஸிடன்டல் ப்ரைம் மினிஸடர் வந்திருக்கதல்லவா? சும்மா ஒரு நடிகரைப் போட்டு ஏன் தாக்க வேண்டும்? அப்படியே தாக்க வேண்டுமென்றால், கலாநிதி மாறனை அல்லவா தாக்கியிருக்க வேண்டும்?
  ————————————————————–
  மிகச்சரியான பதில். நன்றி.வாழ்த்துக்கள்.
  ஏன் ரஜனி என்ற மண்குதிரையின் மீது அதீதமான நம்பிக்கை வைப்பது ஏன் ? ஒரு படம் வெளிவரும் வேளையில் ரஜனி சற்று விளம்பரம் தேடிக் கொள்வார். தமிழக மக்களை எப்படி ஏமாற்ற முடியும் என்பதை நன்கு அறிந்தவர்களில் ரஜனியும் ஒருவா். கூத்தாடிகள் என்றும் கூத்தாடிகள்தாம். நாய்களை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் ……..

 6. ஜெயசீலன் கணபதி on January 17, 2019 at 12:37 pm

  தமிழ் இந்து வெளியிட்ட நகைச்சுவை கட்டுரைகளில் இதுவே சிறந்த கட்டுரை என்பது எனது தாழ்மையான கருத்து.
  ‘குபீர்’ சிரிப்பை ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் மட்டுமல்ல மகாதேவனும் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
  அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துக்களும்…!

 7. Kannan on January 17, 2019 at 3:43 pm

  How to share this article?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*