அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. வழக்கம்போல பிரதான எதிர்க்கட்சியான திமுக முன்னதாகவே களத்தில் இறங்கிவிட்டது. அதன் தேர்தல் கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்டது. ஆளும் அதிமுகவுக்கு எதிரான கட்சிகளை இணைப்பது திமுகவுக்கு சிரமமானதாக இருக்கவில்லை. கூடவே, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதால், திமுக கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன்
தொடரும் திமுக கூட்டணி

இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மேலும் சில உதிரிக் கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

இடதுசாரிக் கட்சிகள் தனிக் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகத் தகவல். ஆனால் அக்கட்சிகளுடன் சேர யாரும் இம்முறை முனைப்பு காட்டுவதாகத் தெரியவில்லை. அநேகமாக தொகுதிப் பங்கீட்டில் தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்த அக்கட்சிகள் செய்யும் தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.

2016 சட்டசபைத் தேர்தலின்போது அக்கட்சிகள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்குப் பிறகு சிதைந்துவிட்டது. அதில் இடம் பெற்றிருந்த மதிமுகவும் வி.சி.க.வும் ஆரம்பத்திலேயே திமுக கூட்டணியில் சேரத் துண்டு போட்டுவிட்டன.  இப்போதைக்கு தேமுதிக மட்டுமே மீதமுள்ளது. அக்கட்சி, சூடு கண்ட தெனாலிராமன் பூனைபோல உள்ளதால், அக்கட்சி இடதுசாரிகளுடன் சேரவே வாய்ப்பில்லை. ஆகவே, இடதுசாரிகள் கடைசி நேரத்தில் எந்த முடிவையும் எடுக்க வாய்ப்புள்ளது. அவர்களைப் பொருத்த வரை தேர்தல் என்பது, தங்கள் கட்சிகளின் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைக் காப்பதற்கான வழிமுறை மட்டுமே. ஆகவே கொள்கை அடிப்படையில் கூட்டணி என்றெல்லாம் கதைப்பதில்லை.

ஒரே நேரத்தில் இரு படகுகளில்
ஸ்டாலின் சவாரி!

இதில் விநோதம் என்னவென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டே, காங்கிரஸை மறைமுகமாக எதிர்க்கும் மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்றோருடன் மு.க.ஸ்டாலின் கூடிக் குலாவுவது தான். மமதா கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் முழங்கி இருக்கிறார். அந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதானக் கட்சிகள் எதுவும் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கப் போவதில்லை. மேற்கு வங்கம், உ.பி, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுவிட்டது. ஒடிஷாவின் பிஜு ஜனதா தளமும், தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ். கட்சியும் கேரளம், மேற்கு வங்கத்தில் முக்கியக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவையும் காங்கிரஸை சீண்டப் போவதில்லை. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கட்சிகளில் தேசிய மாநாடு கட்சியும் திமுகவும் மட்டுமே தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி காணும் நிலையில் உள்ளன.


2016 மக்கள் நல கூட்டணி:
சூடு கண்ட பூனைகள்

இதனிடையே, சநாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான வகுப்புவாதக் கும்பல்களை எல்லாம் ஓரணியில் திரட்ட திருமாவளவன் முயன்றிருக்கிறார். அதில் வழக்கம் போல, ஹிந்து மத வெறுப்பையே அடிப்படையாகக் கொண்ட சிறுபான்மை மதவாத, நாத்திக, இடதுசாரிக் கும்பல்கள் கலந்துகொண்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராகப் போராடுவதென அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி பேதமில்லாமல் பாஜகவின் எதிரிகள் பங்கேற்றிருக்கின்றனர். ஆகவே, தமிழக தேர்தல் களம் அதன்மூலம் தெளிவான தோற்றத்தைப் பெற்றிருக்கிறது.

அதாவது, மு.க.ஸ்டாலின் இன்னமும் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் குறித்த நிலைப்பாட்டை எடுக்காதபோதும், திருமாவளவன் நடத்திய மாநாட்டில் ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி, து.ராஜா, நாராயணசாமி (புதுவை) ஆகியோரும் பங்கேற்றிருக்கின்றனர்.  ஆகவே, கடைசிநேரத்தில் ஒரு தொகுதிக்கு உடன்பட்டு கூட்டணியில் இடதுசாரிகள் ஐக்கியமாகவே வாய்ப்புகள் அதிகம்.

இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம், பாமக, தேமுதிக, ஆளும் அதிமுக, புதிய தமிழகம் (இக்கட்சி சென்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தது) ஆகியவை திருமாவளவன் நடத்திய வகுப்புவாத மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது. இதுவரை அதிமுக கூட்டணி உறுதியாகாத நிலையில், யார் எந்தப் பக்கம் இல்லை என்பதை இது தெளிவுபடுத்தி இருக்கிறது. வளவனுக்கு நன்றி.

இதுவரை மாநில ஆளும் கட்சியான அதிமுகவோ, தேசிய ஆளும் கட்சியான பாஜகவோ, கூட்டணி குறித்து வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றே, அதிமுகவின் அமைச்சர் ஜெயகுமாரும், பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர ராவும் கூறி இருக்கின்றனர். ஆனால், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக இரு தரப்பிலும் கசியும் தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதா மறைவும், மோடியின் அரவணைப்பும்

அந்தத் தகவல்களின்படி, அதிமுக- பாஜக- தேமுதிக- பாமக- புதிய தமிழகம் கட்சிகள் ஓரணியில் போட்டியிடக் கூடும். இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் பாஜகவே முனைப்பு காட்டி வருவதாகத் தெரிகிறது.

விஜயகாந்த் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் தேமுதிக திகைப்பில் உள்ளது. ஜெயலலிதாவால் பந்தாடப்பட்ட அக்கட்சிக்கு தற்போதைய அதிமுக தலைவர்கள் மீது எந்த வெறுப்பும் இருக்க வாய்ப்பில்லை.

அதேபோல, தனித்துப் போட்டியிடுவதால் லாபமில்லை என்பதை சட்டசபைத் தேர்தலின்போதே பாமக உணர்ந்துவிட்டது. அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணி பாஜக கூட்டணியில் போட்டியிட்டே தர்மபுரி தொகுதியில் எம்.பி.யாக வென்றார். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டாண்டுகளாக பாஜகவின் நலம் விரும்பியாகப் பேசி வருகிறார். ஆகவே, இக்கட்சிகள் பாஜக அணியில் சேர மனத்தடை எதுவும் இருக்காது.

தேவர், யாதவர், முதலியார், கவுண்டர் ஜாதிகள் சார்ந்த இன்னும் சில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. அவையும் பாஜக கூட்டணியில் சேரலாம்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் சேர்ந்து தனித்து போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். அதனால் பெரும் பாதிப்பு இருக்கப்போவதில்லை. கமல் திமுக கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய விளைவு ஏற்படப் போவதில்லை. ஜி.கே.வாசனின் தமாகா நிலை தான் புரியாத புதிர்.

நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி துவங்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக, தனது ஆதரவு தேர்தலில் யாருக்கு என்பதை அறிக்கையாக வெளியிடுவதுடன் ரஜினி நிறுத்திக் கொள்வார் என்றே தோன்றுகிறது. அவரது ஆதரவைப் பெற பாஜக முயற்சிப்பதாகத் தகவல்.

பாஜக- அதிமுக: இயல்பான நட்புறவு

ஆனால், அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது இருதரப்பிலுள்ள நலம் விரும்பிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அமமுக என்ற கட்சியுடன் தனித்து இயங்கும் தினகரன் அவரைப் பின்னிருந்து இயக்குவதாகக் கேள்வி. பாஜகவுடன் கூட்டணி அமைக்க பல அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, இந்தக் கூட்டணி ஏற்படுவதை விரும்பாத ஊடகத்தினரும் செய்திகளைப் பரப்புகின்றனர். இதற்கு ஸ்டாலினின் நிதியுதவியும் உள்ளது. ஆனால், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனமாக உள்ளனர்.

தினகரன்:
அதிமுகவுக்கு உண்மையான அச்சுறுத்தல்

ஆனால், பாஜக தரப்பில் தமிழிசையும் பொன்.ராதாகிருஷ்ணனும் கூட்டணி விஷயத்தில் உறுதியாக உள்ளதை பேட்டிகளில் புலப்படுத்துகின்றனர். அவர்களைச்  சீண்டிவிடும் செய்தியாள்ர்களின் வலையில் சிக்கி ஏதாவது காட்டமாகக்  கூறிவிடுகின்றனர். இதையே திமுக தரப்பு எதிர்பார்க்கிறது.

பாஜகவின் தேர்தல் கூட்டணியைப் பொருத்த வரை தேசிய தலைவர் அமித் ஷாவும், அவரது மேலிடப் பார்வையாளர்களும் மட்டுமே கூட்டணி குறித்து உறுதிப்படுத்த முடியும். மாநிலத் தலைவர்களின் கருத்துகள் முக்கியமானவையே, என்றாலும், கூட்டணி குறித்து அமித் ஷா மட்டுமே அறிவிக்க முடியும். இதுதொடர்பாக அதிமுகவுடன் தேசியத் தலைவர்கள் முதல்கட்டப் பேச்சு நடத்திவிட்டனர். தொகுதிப் பங்கீடு திட்டம், கூட்டணியில் சேரும் இதர கட்சிகளின் எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகளின் நிலவரம் உள்ளிட்டவற்றை பரிசீலித்த பிறகே கூட்டணி தீர்மானமாக அறிவிக்கப்படும். அதற்குள், உள்ளூர் பாஜகவினர் உளறாமல் இருக்க வேண்டும்.

அடுத்த மாதம் 10ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தைத் துவக்க உள்ளார். அதற்குள் கூட்டணி முழு வடிவம் பெறும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமரும் முதல்வரும்: கைகோர்ப்பார்களா?

அதிமுகவைப் பொருத்த வரை, ஜெயலலிதா இறந்தபிறகு வழிகாட்டும் உறுதியான தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இப்போது அதிமுகவில் இல்லை. ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அதிமுக மதிப்புடன் உள்ளது என்பதை அக்கட்சியினர் நன்றாகவே உணர்ந்துள்ளனர். பல நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக அரசு நீடிக்க பாஜகவே காரணம் என்பதையும் அவர்கள் உணர்ந்தே உள்ளனர். தினகரன் அதிமுகவைப் பிளந்தபோது அதிமுக அரசு கவிழாமல் காத்தது மத்திய அரசே. இது திமுகவினரும் அறிந்த உண்மை. அதனால்தான், அதிமுக அரசை பாஜக ஆட்டிவைப்பதாக ஸ்டாலின் புகார் கூறி வருகிறார்.

இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நன்றாகவே தெரியும். பாஜகவுடன் சேர்வதால் சிறுபான்மையினரின் வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்காதோ என்பதே அவர்களது கவலை. அவர்கள் இதுதொடர்பாக கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதே உண்மை நிலவரம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, எப்போது எடப்பாடி பழனிசாமி அரசை பாஜக தாங்கிப் பிடித்ததோ, அன்று முதலாகவே பாஜகவவால் வழிநடத்தப்படும் பொம்மை அரசு என்றுதான் அதிமுக அரசு பெயர் பெற்ரிருக்கிறது. எனவே புதிதாக ஒருபழியும் சேரப் போவதில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அதிமுக அரசு மீது பெருமளவிலான ஊழல் புகார்கள் எழாததன் காரணம் அது மோடியின் ஆதரவு பெற்றிருப்பதால்தான். இதனால், ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றி முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு இம்முறை அதிமுகவுக்கு கிட்டியுள்ளது!

தவிர, ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை இல்லாத குறையைத் தீர்க்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழரான மோடியின் பிராபல்யம் அதிமுகவுக்கு உதவ வாய்ப்புள்ளது. எனவே அதிமுக- கூட்டணி அமைந்தால், முதல் சாதகம் அதிமுகவுக்கே. இதையெல்லாம் அதிமுக தலைமை மனதில் கொள்ளும் என்றே நம்பலாம்.

மோடியும் லேடியும்…

நடக்கப்போவது நாடாளுமன்ற லோக்சபை தேர்தல். சென்ற லோக்சபை தேர்தலில் ‘மோடியா, லேடியா?” என்ற ஒற்றைக் கேள்வியுடன் தேர்தலைச் சந்தித்த அதிமுக 38 இடங்களில் வென்று காட்டியது, மீதமுள்ள 2 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. உண்மையில் அது நட்புரீதியான போட்டியாகவே அமைந்திருந்தது. அதில் திமுக கூட்டணி காணாமல் போனது.

இம்முறை ஜெயலலிதா இல்லாத நிலையில், மோடி அரசு மேற்கொண்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி, தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை பிரசாரம் செய்து மக்களை எளிதாகச் சந்திக்க முடியும். அதிமுக தலைவர்கள் நல்ல முடிவு எடுக்க, ஜெயலலிதாவின் ஆன்மா ஆசி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம், ஆறுவழிச் சாலை திட்டம், ஸ்டெர்லை ஆலை விவகாரம், மேக்கேதாட்டு விவகாரம் என பல விஷயங்களில் மத்திய அரசு மீது பழிபோடப்படுகிறது. இதனை திமுகவும், பாஜக எதிர்ப்பு ஊடகங்களும், திட்டமிட்டுச் செய்து வருகின்றன. அதனாலும் அதிமுக தயங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிமுக நினைப்பதுபோல அல்லாமல், இத்தேர்தல் பாஜகவை விட அதிமுகவுக்கே மிகவும் தேவையாக உள்ளது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.

அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டால் குறைந்தபட்சம் 60 சதவீத இடங்களில் நிச்சயமாக வெல்ல முடியும். இல்லாவிட்டால், இரு கட்சிகளுமே நஷ்டம் அடைய வேண்டியிருக்கும். ஆகவே, அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்வியை விட, கூட்டணி அமைந்தால் அவ்விரு கட்சிகளுக்கும் நல்லது என்பதே இப்போதைக்கான பதிலாக இருக்க முடியும். அதுவே நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.

.

6 Replies to “அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?”

  1. தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அல்லது ரஜினியுடன் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலை சந்திக்கவேண்டும் . ஏற்கனவே உள்ளபடி பாமக , கிருஷ்ணசாமி, கொங்கு கட்சி, விஜயகாந்த், ஆகியோருடன் இந்த முறை அதிமுகவையும் சேர்த்து அமைத்தால் மட்டுமே பெரிய வெற்றி சாத்தியம். அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டுவிடக்கூடாதே என்று திமுக வுக்கு அசதியில் ஜுரம் கண்டு உள்ளது. மீடியாவில் பொய்யான தகவல்களை பரப்பி எப்படியாவது அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படாமல் தடுக்க பலவித சதிகளையும், தகிடு தத்தங்களையும் செய்துவருகிறது. ஆனாலும் திமுக தமிழகத்தில் இந்த பாராளுமன்றதேர்தலில் வெல்லவே முடியாது என்பதே களநிலவரம் சொல்லும் உண்மை. எம் ஜி ஆர் – ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத சூழலிலும், அதிமுக உடைந்து சில அணிகளாக பிரிந்து இருந்த போதும், கட்டுமரம் உயிருடன் இருந்தபோதும், திமுகவால் ஆர் கே நகரில் டெபாசிட்டைக் கூட திரும்ப வாங்கமுடியவில்லை. கட்சியின் யோக்கியதை அவ்வளவுதான். இலங்கை சிவிலியன் தமிழர் தலையில் கொத்து எறி குண்டுகளை போட்டு, லட்சக் கணக்கானோரை படுகொலை செய்த திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு இனி முழு சமாதி தான் .

  2. இந்திய அரசியலில் இந்தக் கூட்டணி விவகாரம் ஒரு சுவாரசியமான அம்சம். எந்தக் கட்சியும் எதனுடனும் சேரலாம், பிரியலாம்.தேர்தலுக்குமுன் ஒரு கூட்டு, பிறகு ஒரு கூட்டு- ஒரு நெறி முறை இல்லை!
    இதில் தமிழ் நாட்டு நிலவரம் விசித்திரம். தேசீயக் கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவை இங்கு தடுமாறுகின்றன.மாநில பிரிவினை-இன வாதக் கட்சிகளுடன் கூட்டமைத்தே பிழைக்கவேண்டிய பரிதாப நிலை! அதிலும் பாஜகவின் நிலை மிகவும் மோசமானது. அது இரு பிரதான திராவிடக் கட்சிகளுடனும் கூட்டுவைத்து அடிபட்டது. ஆனாலும் கூட்டணி ஆசை விடவில்லை! இன்று இந்த இரண்டு கட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இல்லை!இது பாஜகவுக்கு சாதகமான நிலை. ஆனாலும் ஒரு விஷயம் நிச்சயம். இன்று யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யார் வருகிறார்களோ அவர்களுக்கே இந்தக்கட்சிகள் ஆதரவு தரும்! தனித்து பெரும்பான்மை பெறாவிட்டால், பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது! இன்று அகில இந்திய அளவில் எந்தக் கட்சியும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை! இன்றைய நிலையில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை!எனவே, தமிழ் நாட்டில் அதிமுகவுடன் கூட்டுவைத்தாலும் தேர்தலுக்குப்பின் அது நிலைக்காது! தமிழ் நாட்டில் தேசீய வாதிகள் இல்லாமலில்லை, ஆனால் தேசிய சிந்தனை தனித்து நின்று தழைக்கும் சூழ்நிலை தமிழ் நாட்டில் இல்லை! மேகதாடு அணைக்கு ஆதரவு, ஹிந்தித் திணிப்புக்கு ஆதரவு என்ற நிலையில் பாஜக எந்த தைரியத்தில் இங்கு ஓட்டு கேட்க முடியும்? [ மேகதாடுவிற்கு ஆதரவு இல்லையெனில் கர்நாடகாவில் பாஜக எடுபடாது!] பாவம், பாஜக ! .

  3. I think that everything posted made a lot of
    sense. However, what about this? suppose you were to create a awesome post title?

    I am not saying your information isn’t solid., but suppose you
    added a headline that makes people desire more? I mean அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

    | தமிழ்ஹிந்து is a little plain. You should look at Yahoo’s front page
    and see how they create news headlines to get people to click.

    You might try adding a video or a picture or two to
    get people excited about what you’ve written. In my opinion, it would make your posts a
    little bit more interesting.

  4. Jews of israel are expecting one Messenger/Christ from God. The sign for christ is Eliya who ascended to sky by Harpoon would descend to earth and after that Christ will born ie Eliya should preceed christ. Jesus made a claim to the title christ and the public and the religious Assembly demanded to let them know who is eliya. Jesus indicated St.John the baptist, which is rejected by the religious body. Eliya must descend from Sky in the previous physical body only. So Jesus is chargesheeted as traitor/imposter veda purattan and crucified. The next day is Sabbath which will begin when the Moon appears in the night. In the mid night the Soldiers came and killed two thiefs and Kept the body of Jesus in a crave nearby.Jesus did not die inthe Cross . H e eas saved and went to meet Jews in other countries. This is the true story of Jesus who commanded Go ye not unto Gentiles But Jews only.An Indian praying to Jesus is absurd.Jesus does not love Non-Jews.

  5. யாா் கிறிஸ்து யாா் எலியா ? என்ற கே்ள்விக்கு சரியான விடை காண முடியாததால் வேதபுரட்டன் என்ற குற்றம் சுமத்தப்பட்டுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டாா். பின் காப்பாற்றப்பட்டு வெளிநாடுகளில் வாழும் யுதர்களைச் சந்திக்கச் சென்றாா்.இது உண்மைதான்.

    இயேசு சிலுவையில் சாகவில்லை.உயிர்த்தெழவில்லை.ஏனோ எனது இந்த கருத்தை யாரும் பரிசீலனை செய்யவேயில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. யுதர்கள் இன்றும் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்கவில்லை. கிறிஸ்துவின் வருகைக்காக யுதர்கள் காத்திருக்கின்றார்கள்.

  6. தேர்தல்களில் ஏற்படும் கூட்டணிகள் ஒரு வியாபார பார்ட்னர்ஷிப் போலத்தான். கொள்கை என்பது காங்கிரசுக்கோ அதன் கூட்டணிக்கட்சிகளுக்கோ என்றுமே இருந்தது கிடையாது.பிணம் தின்னிக்கழுகே என்று தஞ்சாவூர் லோக்சபா இடைதேர்தல் மேடையில் ஜூலை 1979 இல் தஞ்சாவூர் கீழ அலங்கத்தில் நடைபெற்ற வேட்பாளர் அன்பில் தர்மலிங்கம் அறிமுக கூட்டத்தில் கூவிய கட்டுமரம், இரண்டே மாதத்தில் செப்டம்பர் 1979 இல் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அந்த பிணம் தின்னிக் கழுகின் கால்களை கழுவி வாழ்ந்ததை நான் அறிவேன். தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் அதிகாரம் என்பது ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்க்க ஒரு அஸ்திரம் .

    மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு ஏராளம் நன்மைகளை செய்துள்ளது.அதனை சொல்லி ஓட்டுகேட்டாலே ஏராளம் திருப்பம் ஏற்படும்.

    1. மதுரை நகரில் எயிம்ஸ் (AIIMS) மருத்துவ மனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் எம் ஜி ஆர் காலத்தில் இருந்து இருந்துவரும் கோரிக்கையாகும். சுமார் நாற்பது ஆண்டுக் கோரிக்கை மோடி ஆட்சியில் தான் நனவாகிறது.

    2.ஜல்லிக்கட்டு விஷயத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த குழப்பத்தை போக்கி ஜல்லிக்கட்டு நடத்த இருந்த சட்ட பூர்வமான தடைகளை விலக்கி , மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்தது மோடி அரசுதான் .

    3.குடிலன் கருணா என்கிற கட்டுமரம் காவிரித்தண்ணீரில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து, கூடுதல் அணைக்கட்டுகளை கட்டிக்கொள்ள கர்நாடகத்துக்கு அனுமதி கொடுத்து, கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தார். அந்தக் கொடுமையை சரி செய்து காவிரி நதிநீர் வாரியம் அமைத்து உத்தரவு போட்டது மோடி அரசு தான். தாங்கள் மத்திய அரசில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காவிரி நதி நீர் வாரியத்தை கலைத்துவிடுவோம் என்று காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவினர் இது பற்றி வாய் திறக்கவே இல்லை.

    4.மத்திய அரசின் மின் திட்டத்தின் கீழ் தமிழக மின்சாரவாரியம் சேர்க்கப்பட்டு, அதன் கடன்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதன் விளைவாக இப்போது , தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை செய்ய தமிழ்நாடுமின் வாரியத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பு உருவாக்கி உள்ளது.

    5.திருச்சியில் ராணுவத்துக்கு தேவையான உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழில்கள் உருவாக மத்திய அரசு பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டு வேலை நடக்க ஆரம்பித்து உள்ளது.

    6.நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்வியில் தனியார் கொள்ளை தடுக்கப்பட்டு , ஏழை மாணவர்கள் உயர்வு பெற மோடி அரசு வழி வகுத்துள்ளது.

    எனவே இந்த ஆறு காரணங்களுக்காகவே மோடி அரசுக்கு தமிழகத்தில் ஆதரவு வட்டம் அதிகரித்துள்ளது. அதிமுகவுடன் ஏற்படும் கூட்டணி மூலம் சென்ற தேர்தலில் எதிரணிகளில் நடந்த நாற்பதும் நமதே ( அதிமுக 37 + பாஜக கூட்டணி 3 ) இந்த தேர்தலில் ஒரே அணியாக நின்று பாண்டி உட்பட நாற்பது இடங்களையும் வென்று சாதனை படைப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *