கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

“புனித” செயிண்ட் சேவியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான பாதிரி ஜேம்ஸ் ப்ரோடெரிக், சேவியருடன் பணிபுரிந்த இன்னொரு பாதிரியான மின்குவல் வாஸ் எவ்வாறு ஹிந்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை மதம்மாற நிர்ப்பந்தித்தார் என விளக்குகிறார். மதம்மாற மறுத்தவர்களுக்கு அவர் கொடுத்த தொல்லைகளே ஹிந்துக்கள் மத்தியில் கிறிஸ்தவமதத்தைக் குறித்தான எதிர்மறை எண்ணங்கள் ஏற்படக் காரணமானவர் என்கிறார்.

போர்ச்சுகீசிய சர்ச்சுகளை இந்தியாவில் ஆண்ட மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ அடிப்படையில் ஒரு ஒன்றுமறியாத மூடன். ஆனால் செயிண்ட் சேவியரோ அவரை போர்ச்சுகீசிய அரசரின் அளவிற்குத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். மிகுந்த மூர்க்ககுணம் கொண்ட, இந்தியக் கிறிஸ்தவர்களின் உண்மையான தந்தையும் [?!], நேர்மையாளரான பாதிரி மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ மிகுந்த குறுகிய மனப்பான்மையுடையவர். இந்திய ஹிந்துக்கள்மீது தாளமுடியாத வெறுப்பினை உமிழ்பவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக இருந்தார் அவர்.

போர்ச்சுகீசிய பகுதியிலிருந்த ஹிந்து ஆலயங்களை இடிப்பது மட்டுமன்றி, அந்த ஆலயங்களின் வருமானத்தையும் பிடுங்கி சர்ச்சுகள் கட்டவேண்டும், அதன்மூலமே கிறிஸ்தவத்தை இந்தியாவில் வளர்த்தெடுக்கவேண்டும் எனும் எண்ணமுடையவர், மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ. கோவாவிலோ, கொச்சியிலோ, மலாக்காவிலோ எந்தவொரு ஹிந்துவும் கிறிஸ்தவமதத்தின் மேன்மையை அறிந்து தானாகவே அதில் சேர்ந்துவிடவில்லை. மாறாக, கோர்ட்டின்ஹோ ஹிந்துக்களின் வாழ்வாதாரங்களின்மீது தொடுத்த தாக்குதல்களே அந்த அப்பாவிகள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்கான காரணங்களாக இருந்தன.

அந்தச் செயல்கள் கிறிஸ்துவ மதத்தின்பால் ஈர்ப்பினை வளர்ப்பதற்கு நேரெதிராக வெறுப்பினை ஊட்டிவளர்த்தன. துரதிருஷ்டவசமாக, எப்படியேனும் அடுத்த மதத்துக்காரனை கிறிஸ்தவனாக்கும் அந்தமுறையே ஐரோப்பிய நாடுகளின் ஆசியைப்பெற்ற முறையாகவும் இருந்தது.

அவருடன் பணிபுரிந்த செயிண்ட் சேவியருக்கு ஹிந்துமதம், அதன் மதச் சம்பிரதாயம், சடங்குகள் குறித்தோ எந்த அறிவும் இருக்கவில்லை. அதைவிடவும் இஸ்லாமைக் குறித்து அவருக்குத் தெரிந்தது ஒன்றுமேயில்லை என்றே சொல்லலாம். சேவியரின் காலத்தில் போர்ச்சுகீசியர் இந்தியாவிற்கு வந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் தாண்டியிருந்தன என்றாலும் அவர்கள் ஒருவர்கூட இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தைக் குறித்தோ, மதத்தைக் குறித்தோ அறிந்து கொள்வதற்கான சிறிய முயற்சிகளைக்கூடச் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அந்தப் பழமையான கலாச்சாரத்தைச் சிதைப்பதற்குரிய அத்தனை முயற்சிகளையும் வெறியுடன் செய்தனர்.

செயிண்ட் சேவியரின் காலத்தில் கோவா தீவு ஒரு துறைமகமாக இருந்தாலும், அது மக்கள்தொகை இல்லாததாக, அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பகுதியாகத்தான் இருந்தது. மாண்டோவி, ஜுவாரி ஆறுகள் இந்துமதக் கடவுள்களுக்கு சேவகம்செய்துகொண்டிருந்தன. கோவாவைப் பிடித்தவரான அல்பெர்க்கர்க்கிக்கு அஞ்சி விலகியோடிய முஸ்லிம்கள் மீண்டும் கோவாவிற்குள் வணிகம்செய்ய வந்திருந்தார்கள். பழங்காலந்தொட்டே கோவா ஹிந்துக்களின் ஒரு முக்கியத் தலம் என்பதையும், வணிகத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதொரு பகுதி என்பதையும், இஸ்லாமியர்களிடம் வீழ்ந்த பின்னரும் தெற்காசியாவின் முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பதையும், அங்கிருந்துதான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் மக்காவிற்குச் செல்வதற்காக பல்லாயிரக்கணக்கில் வந்து கூடுவார்கள் என்பதினையும் செயிண்ட் சேவியர் அறிந்திருக்கவில்லை. அல்லது அறிந்திருந்தாலும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இத்தனை சிறப்புடைய ஒரு இந்தியப் பகுதி எளிதில் கிறிஸ்தவமயமாகாது என்பதினை மட்டும் சேவியர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதால், அவர்களை மதம்மாற்றுதற்கு அவராலும், அவரைச் சேர்ந்தவர்களாலும், கடுமையான முறைகள் உபயோகிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

கோவா பகுதியிலிருந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவ பாதிரிகளின் சுவிசேஷ பிரசங்கங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே அவர்களை மதமாற்றம் செய்யமுடியாத பாதிரிகள், ஹிந்துக்கள் தங்களின் கடவுளர்களை வணங்குவதற்குத் தடைசெய்தார்கள். மறுத்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி மதம்மாறாமல் இருக்கும் மற்ற ஹிந்துக்களின் மனதில் சலனத்தை உண்டாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவத்தின் அடிப்படையை அறியாது இவ்வாறு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள், வெளிப்படையாக கிறிஸ்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஹிந்துக்களாகவே இருப்பார்களோ என்கிற சந்தேகத்தின்பேரில் இன்குசிஷன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் பலவும் துல்லியமாக எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆவணங்கள் அனைத்தும் சுவடின்றி இன்றைக்கு மறைந்துவிட்டன. எனவே, இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர்கள் எத்தனைபேர்கள் கட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல்களை இன்றைக்கு நாம் அறியமுடிவதில்லை. எனினும் அவ்வாறு நடந்தது என்பது மறுக்கவே முடியாத உண்மையே.

இருப்பினும் இதுகுறித்தான தகவல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடைத்தவண்ணமே இருக்கின்றன. ஃபிலிப்பே நெரி சேவியர் என்பவர் Gabinete Literatorio பத்திரிகையில் இன்குசிஷன் விசாரணைகள் காரணமாக கட்டையில்கட்டி எரிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினைக் குறித்து எழுதியிருக்கும் குறிப்பு முக்கியமானது.

பாஸின் ஜில்லாவில் 1840-ஆம் வருடம் செய்த சோதனைகளின்போது சதுரக்கற்களால் கட்டப்பட்டு பின்னர் 1786-ஆம் வருடம் இன்குசிஷன் விசாரணை பாதிரிகளால் இடித்துத் தள்ளப்பட்ட வீடு ஒன்றினைக் கண்டோம். அங்கிருந்த கற்பலகை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது…

இந்தக் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் பலரும் கிறிஸ்தவமல்லாத பல பாகனீயச் சடங்குகளையும், விழாக்களையும் கொண்டாடியதால் கிறிஸ்தவ புனித அலுவலகம் அந்த வீட்டை எரிக்குமாறு நீதி வழங்கியது. அதன்படி டிசம்பர் 30, 1747-ஆம் வருடம் Auto de Fe கொண்டாடப்பட்ட நாளன்று எரிக்கப்பட்டது என்கிறது, அக்குறிப்பு.

மேலும், மேற்கண்ட வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் உப்பு தெளிக்கப்பட்டு உழப்பட வேண்டும் என்றும், இந்த தண்டனையைக் குறித்தான கல்வெட்டு ஒன்று இங்கு நிறுவப்பட வேண்டும் எனவும் உத்தரவாகி அதன்படியே செய்து முடிக்கப்பட்டது.

அதாவது இன்குசிஷன் விசாரணைக்குப் பின்னர், அதன் சட்டங்களின்படி, கிறிஸ்தவரல்லாத ஒருவனின் வீடு தகர்க்கப்பட்டது. 1865-ஆம் வருடம் குறிப்புகள் எழுதப்பட்ட அந்தக் கற்பலகை இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டு சாலையில் கிடந்ததாக பாதிரி நெரி சேவியர் குறிப்பிடுகிறார்.

போர்ச்சுகீசிய தளபதியான அல்ஃபோன்ஸோ-டி-அல்புகர்க்கி, கோவாவை வெற்றி கொள்ளுவதற்குமுன்னர் கோவா, பிஜப்பூரைத் தலைநகராக ஆண்டுகொண்டிருந்த யூசுஃப் அடில்ஷா வசம் இருந்தது. அடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான்.

அல்புக்கர்க்கி, அந்த நேரத்தில் ஒர்முட்ஸ் பகுதியை நோக்கிச் செல்லும் வழியில் சிண்ட்டகோரா என்னுமிடத்தில் நங்கூரமடித்து தங்கியிருந்தான். தனோஜா அவனை அங்குவந்து சந்திக்கிறான். அந்த சத்திப்பைக் குறித்து எழுதும் அல்பர்கர்க்கின் மகனான அஃபோன்ஸோ-டி-அல்புக்கர்க்கி,

என்ன காரணத்திற்காகத் தான் கோவா வரவேண்டும் என கேட்டவுடன், கோவாவின் நிலைமை வெகு கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஏராளமான கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அந்தப் பகுதியிலிருக்கும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக இருநூற்றிற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொல்லப்பட்டனர் என்றும், அதன் காரணமாக, அங்கு வாழும் பொதுமக்கள் பொங்கியெழுந்து கோவாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள், கோவாவைத் தான் பிடிக்க நினைத்தால், தனது படைகளுடன் அங்கு சென்றாலேயே அனைத்து கோவா மக்களும் தனக்கு ஆதரவாகத் திரண்டு ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைப்பார்கள் எனத் தனோஜா சொன்னதாக எழுதுகிறான்.

அல்புக்கர்க்கியின் பொதுக்காரியதரிசகளில் ஒருவரான காஸ்பர் கொர்ரியா, ஹிந்து அரசன் தனோஜா அல்புக்கர்க்கியிடம் சொன்னவற்றைக் குறித்துச் சொல்லுகையில், கொள்ளையடிக்கப்பட்ட வியாபாரிகள் எவரும் கோவாவைவிட்டு வெளியில்செல்ல அனுமதிக்கப்படாமல், அடிமைகளைப்போல பிடித்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. நீங்கள் உங்களின் கப்பல்களுடன் ஆற்றின் வழியக உள்ளே நுழைந்து கோட்டைக்கு எதிராக நிறுத்தினாலேயே கோட்டை முழுவதும் உங்களிடம் சரணடைந்துவிடும். முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டும் என அவர்கள் எழுதிய பல கடிதங்கள் என்னிடம் இருக்கின்றன என்கிறார்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *