ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

 “ஆகவே, தனக்கு வலிமைமிக்க போர்விமானங்கள் வேண்டுமென்றால், தங்குதடையின்றி, பலமுனைத் தாக்குதல்களில் சிறந்த நடுத்தர விமானங்களை [Medium Muti Role Combat Aircraft – MMRCA] வாங்கித் தயாரிக்கவேன்டும என்ற முடிவை பாரதம் எடுத்தது.

வயதாகிவரும், பழைய தொழில்நுட்பமுள்ள மிக்-21 விமானங்களை மாற்றிவைப்பதற்காக, பாரத விமானப்படைத் தலைமை [அப்பாடா, ஒருவழியாக இக்கட்டுரையில் பாரதப் படைத்தலைமை பற்றி வந்துவிட்டது!] வேறு விமானங்கள் வாங்கவேண்டும் என்ற விருப்பத்தை 2000ல், அதாவது கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்குமுன் அப்பொழுதிருந்த அரசாங்கத்திடம் [பாரதீய ஜனதா கூட்டணி] தெரிவித்தது.[1]  அவ்விமானங்கள் பலசெயல்பாட்டுத் திறன்

[multi-role]

உள்ளவையாகவும் இருக்கவேண்டும் என்றும் பாரத விமானப்படைத் தலைமை அரசிடம் கோரிக்கைவைத்தது.  மேலும், பழைய மிக்-21 விமானங்கள் அப்பொழுது பலமுறை விபத்துக்குள்ளாகிவந்தன.  எனவே, அப்பொழுதே நாற்பது ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பம்கொண்ட அவற்றுக்குப் பதிலாக, மிகவும் புதுத் தொழில்நுட்பம்கொண்ட விமானங்களை பாரதம்பெறவேண்டும் என்பதே அக்கோரிக்கையின் சாராம்சம்.

2001ல் அத்தகைய 126 விமானங்களுக்கான விவரக் கோரிக்கை [Request for Information – RFI] எழுப்பப்பட்டது. விவரக் கோரிக்கையா, அப்படியென்றால் என்ன என்ற கேள்வி இப்பொழுது நம் மனதில் எழுகிறது. 

ஒரு திட்டத்தைத் துவங்கும் காலத்தில் நமது தேவை என்ன என்பதைத் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாமலிருக்கலாம்.  உதாரணமாக, ஒரு திருமணத்திற்குத் சமையல் கான்ட்ராக்ட் கொடுக்கவேண்டும் என்னும்போது, எத்தனை காய்கறி, என்னென்ன சிறப்பான சாப்பாடு, எத்தனைபேர்களுக்கு, என்னென்ன ஐட்டங்கள்போடவேன்டும் என்று முடிவுசெய்ய இயலாது.  அச்சமயத்தில், பல சமையல் கான்ட்ராக்டர்களிடம் அவர்கள் என்னென்ன செய்வார்கள், எவ்வளவு செலவாகும், அவர்களது சிறப்பான அம்சம் என்ன என்று பேச்சுவார்த்தை துவங்குவோம்.  அதைத்தான் விவரக் கோரிக்கை என்று சொல்வார்கள்.  இதைத் துவங்குவதால், எவருக்கும் கான்ட்ராக்ட் தரப்போகிறோம் என்று முடிவுசெய்வதில்லை.

அதுபோலத்தான் புதிய போர்விமானத்திற்கு விவரக்கோரிக்கை பல விமானத் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.

ஆனால், அக்கோரிக்கை ஆறு ஆண்டுகள் கிணற்றுக்குள்போடப்பட்ட கல்மாதிரி அரசிடமே கிடந்தது.

அப்பாடா அதுவரை என்ன நடந்தது?

அது அரசு விவகாரம். 

அதற்குள் நாம் போர் விமானத்தின் பலசெயல் திறன்[2] என்றால் என்ன என்று பார்ப்போம்…

அவையாவன:

  • விண் பாதுகாப்பு / விண் மேம்பாடு [air superiority]: வானத்தில் பறந்து, எதிரிகள் தன்னைத் தரையிலிருந்தோ, விண்ணிலிருந்தோ தாக்க இயலாது தற்காத்துக்கொண்டு, கடுமையான எதிரிப்பின்றி எதிரிகள்மீது விண்தாக்குதல் நடத்துவது – அப்படி நடத்தும் திறனிருப்பதுவே விண் மேம்பாடு. இதில் விண்ணில் ஈடற்றநிலையை [air supremacy] அடைந்தால் விமானப்படைகளை எதிர்ப்பே இன்றி எங்குவேண்டுமானாலும் தங்குதடையின்றி இயங்க இயலும்.[3]  1971 வங்கதேச விடுதலைப் போரில் பாரதம் கிழக்குப் பாகிஸ்தானில் விண்ணில் ஈடற்றநிலையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • [எதிரி விமானங்களின்] நுழைவைப் தடுப்பது[Interceptor]: / [எதிரி நமது நில்]ஆக்கிரமிப்பை மறுத்தல்: இவ்வகை விமானம் மிகவேகமாக மிக உயரத்திற்குப் பறந்துசென்று  எதிரியின் குண்டுவீசும் விவிமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்தது. விரைவில் விண்ணிலேற அதன் எஞ்சிங்களுக்கு அசாத்திய உந்துவலிமை இருக்கும்.  சிட்டுக்குருவியைப்போல மேலும்-கீழும் பக்கவாட்டிலும் கண்ணிமைக்குமுன் திரும்பும் திறமையும், மிக உயரத்தில் செயல்படும் வல்லமையும் இருக்கும்.
  • உளவு பார்த்தல்:  தற்பொழுது இது செயற்கைகோள்களால் செய்யப்படுகிறது.  அவற்றிலிருந்து விவரம் பெறும் திறனும் இவ்வகை விமானங்களுக்கு உண்டு.
  • நெருங்கிய விண் ஒத்துழைப்பு: தரைப்படைகள் முன்னேறிச் செல்லும்போது, அவற்றிற்கு ஆதரவாக எதிரிகளின் தளவாடங்கலையும், எதிரிப்படைகள்மீதும் குண்டுவீசித் தாக்குதல்.
  • பறந்து குறிவைத்தல்:  நின்றுகொண்டோ, உட்கார்ந்தோ, படுத்துக்கொண்டோ துப்பாக்கியால் சுட்டாலே, நம்மால் குறிபார்த்து தொலைதூரத்தில் [நூறு மீட்டர்] உள்ள அசையாத குறியை அடிப்பது மிகவும் கடினமான ஒன்று.  அப்படியிருக்கும்போது நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் மேலும் கீழும் பற்நதுகொண்டிருக்கும் போர்விமானம் ஒன்று, அதேமாதிரி பறக்கும் இன்னொரு விமானத்தை குறிபார்த்துத் தாக்கி அழிக்கவேண்டுமென்றால், அதற்குத் தகுந்தவாறு, நுட்பமான வசதிகள், கருவிகள் அதில் பொருத்தியிருக்கப்படவேண்டும்.  ஏனெனில் விமானிக்கு ஓரிரு கணங்கள்கூட குறிபார்க்க நேரமிருக்காது.  அத்துடன் அந்த விமானி தனது விமானத்தையும் எதிரியின் விண்-நிலத் தாக்குதலிருந்து காத்துக்கொள்ளவேண்டும்.  இத்தகைய திறன் படைத்திருக்கும் இவ்வகை விமானம்.
  • விண்ணிலிருந்து நிலத்தை நுட்பமாகத் தாக்குதல்:  இத்திறனும் மேற்சொன்னமாதிரிதான்.  தன்னைத் தாக்கவரும் எதிரி விமானத்திலிருந்து தப்பித்துப் பறந்துகொண்டு, தரையிலிருந்து தன்னைக் குறிவைத்துத் தாக்கும் விமானம்தாக்கிப் பீரங்கிகளையும், எதிரிகளின் உளவறியும் கட்டுமானங்களையும், ஆயுதக் கிடங்குகளையும், இதர இலக்குகளயும் தாக்கும் திறனும் வேண்டும்.
  • கப்பலைத் தாக்கும் திறன்: பொதுவாகவே, போர்க்கப்பல்களில் விமானங்கள் உண்டு, அவற்றையும் சமாளித்து, கப்பல்களின்மீது குண்டுவீசி அவற்றைச் சேதப்படுத்தும் வல்லமையும் இவ்விவிமானங்களுக்கு உண்டு.
  • அணுசக்தி அச்சமூட்டித் தடுத்தல் [அணு ஆயுதங்களை ஏவும் திறன்]:  இவை அணுஆயுதங்களை எடுத்துச் சென்று, எதிரிநாடுகளில் விடும் திறமை பெற்றவை.
  • விண்ணில் [மற்ற விமானத்திலிருந்து] எரிபொருள் பெறும் திறன்:  இதைப்பற்றி முன்பே விளக்கப்பட்டிருக்கிறது.  அதை மிகவும் இலகுவாகச் செய்யும் திறன்படைத்தவை இவ்வகை விமானங்கள்.

மேலே குறிப்பிட்ட அத்தனை செயத்திறன்களை உடைய விமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் [டென்டர்கள்] 2007ம் ஆண்டு இந்தியாவில் அப்பொழுது கோலோச்சிய காங்கிரஸ் கூட்டணி அரசால் ஆறு வழங்குநர்களிடமிருந்து வரவேற்கப்பட்டன.[4] அதில் 126 போர் விமானங்களின் விலை கிட்டத்தட்ட 42000 கோடி ரூபாய்கள் (975 கோடி டாலர்) எனவும் மதிப்பிடப்பட்டது.

ரஃபேல் விமானம்
மிக்-35
ஸாப் கிரிப்பென்

அந்த வழங்குநர்கள் தயாரிக்கும் போர்விமானங்கள் முறையே, ரஷ்யாவின் மிக்-35, ஸ்வீடன் சாப் (Saab) நிறுவனத்தின் ஜே.ஏ.எஸ்-39 கிரிப்பென், பிரெஞ்சு டசோல் நிறுவனத்தின் ராஃபேல், அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டினின் எஃப்-16 ஃபால்கன், போயிங்கின் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னட், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி இணைந்து யூரோப்பியன் ஏரோனாடிக் டிஃபென்ஸ் அன்ட் ஸ்பேஸ் கம்பெனி (EADS) தயாரிக்கும் யூரோஃபைட்டர் டைஃபூன் ஆகும்.

எஃப்-16 ஃபால்கன்
எஃப்-18 சூப்பர் ஹார்னட்

2008ல் அமெரிக்க நிறுவனங்கள் போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ரஷ்யாவின் யுனைட்டெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பொரேஷன், பிரேஞ்சு டசோல், ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் ஆகியவை தங்கள் விமானங்களின் விலைமதிப்பு ஒப்பந்தத்தை அளித்தன. தொழில்நுட்ப மதிப்பீடு, களச் சோதனைகள் [field trials] ஆகஸ்ட் 2008ல் துவங்கி நவம்பரில் முடிந்தன.

யூரொஃபைட்டர் டைஃபூன்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, 2011ல் பாரதப் பாதுகாப்பு அமைச்சகம் டசோல் மற்றும் ஈ.ஏ.டி.எஸ் நிறுவனங்களுடன் போர்விமானங்கள் வாங்குவதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும்,[5] போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இவற்றின் விலைமதிப்பு ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவித்தது.

அதுவரை டசோல் நிறுவனம் ஒரு ரஃபேல் விமானத்தைக்கூட விற்கவில்லை என்பதும், ஆறு நாடுகள் 707 யூரோஃபைட்டர் விமானங்களுக்கு அனுப்பாணை [ஆர்டர்] கொடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.[6]

ஈ.ஏ.டி.எஸ் நிறுவனம் பாரதத்தை யூரோஃபைட்டர் திட்டத்தின் பங்குதாரராக்கி, டைஃபூன் போர்விமானத்தின் வடிவமைப்பிலும், மேன்மைப்படுத்துவதிலும் ஒருபங்கில் அப்பொழுதும், எதிர்காலத்திலும் சேர்த்துக்கொள்ள ஒப்பியது.

ஆயினும், பாரத விமானப்படை ஏற்கனவே பிரெஞ்சு மிராஜ்-2000 போர்விமானத்தை உபயோகப்படுத்துவதாலும், கர்ஜில் போரில் கைகொடுத்ததால் பாரத விமானப்படை விமானிகள் அதன்மேல் உயிரையே வைத்திருப்பதாலும், மிராஜ்-2000க்கு மிகவும் தொடர்புடையது என்பதாலும், ரஃபேல் விமானம் லிபியாவிலும், ஆஃப்கானிஸ்தானத்திலும் களம்கண்டிருந்ததாலும், ஈ.ஏ.டி.எஸ் நிறுவனத்தைவிடக் குறைந்தவிலையில் போர்விமானம் செய்துதர டசோல் நிறுவனமே ஒப்புக்கொண்டதால், 2012ல் பாரதம் அதை முன்னிறுத்திக்கொண்டது.

யூரோஃபைட்டர் டைஃபூனும் லிபியாவில் களம்கண்டும், ஆஃப்கானிஸ்தானத்தில் உபயோகிக்க அனுமதிபெற்றிருந்தாலும், மேற்சொன்ன காரணங்களுக்காக அது புறந்தள்ளப்பட்டது.

திட்ட அறிக்கைக் கோரிக்கைப்படி [Request for Proposal – RFP] 126 விமானங்களில் முதல் 18ஐ ஒப்பந்ததாரர் மூன்று ஆண்டுகளுகளில் பாரத விமானப்படைக்கு செய்து தரவேண்டும் என்றும், மீதியை பங்களூருவிலுள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உற்பத்திசெய்யவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

அடுத்த ஆண்டு டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.  இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.

இதற்கிடையில், டசோல் நிறுவனத்துடன் ரஃபேல் விமானங்கள் வாங்க என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதைக் கண்டால் அது பின்னால் வருவதற்கு கருத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

முதலில் செய்துகொண்ட ஒப்பந்தம் டசோல் நிறுவனத்திற்கும், பாரதத்தின் [காங்கிரஸ் கூட்டணி] அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த ஒப்பந்தம் டசோல் மிகவும் குறைந்த ஏல மதிப்பீடு கொடுத்ததால் செய்யப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு தொடரலாம்.

இதன்படி,

  • வாங்கவேண்டிய 126 விமானங்களில் பதினெட்டு பறக்கும் நிலையில் டசோல் நிறுவனத்தால் தயாரித்துக் கொடுக்கப்படவேண்டும்.
  • மீதி 108 மவிமானங்களைத் தயாரிக்க பாரதத்தின் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு உரிமம் [license] வழங்கப்படவேண்டும்.
  • ஒப்பந்தத்தின் அப்போதைய மொத்த மதிப்பு 1000 கோடி யூரோக்கள் [₹68,150 கோடி].  வெறும் கூடான [bare-bone] பறக்கக்கூடிய விமானத்தின் விலை 10 கோடி யூரோக்கள் [₹765.4 கோடி].
  • இதில் இந்தியாவுக்காகவென்று எந்தவொரு மேம்பாடோ, ஏற்பாடோ கிடையாது.  அப்படிச் செய்தால் அதன் விலை ஆயிரம் கோடி ரூபாய்வரை உயர்ந்து ₹1705 கோடி ரூபாய்களாக உயரும்.
  • அதோடு மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 3.9% பணவீக்க உயர்வுக்கும் வழிசெய்யும் ஏற்பாடும் இருந்தது.
  • இதில் செயல்திறனின் அடிப்படையான போர்த்தளவாட்ங்களைப்பற்றியோ, உதிரிப் பகுதிகள், எஞ்சின், விமானங்கள், இவை தொடர்ந்து கிடைப்பது, விமானம் ஓட்ட, விமானப்பராமரிப்பு, இவைபற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவே இல்லை.
  • ஒப்பந்தம் முடிவுறுத்தப்படாததால், விமானம் எப்பொழுது பாரதத்திற்குக் கொடுக்கப்படவேண்டும் என்றும் அதில் எழுதப்படவில்லை.
Image result for Modi and French President
பிரெஞ்சு அதிபர் பிரான்ஸ்வா ஹாலன்டும், பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும்

இப்படி மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[7]

அடுத்தநாள், பாரதப் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் அம்முடிவு சரிதான் என்றும், இந்த ஒப்பந்தம் பாரத-பிரெஞ்சு அரசுகளுக்கு இடையிலுள்ளது என்றும், டசோல் நிறுவனத்துடனானது அன்று என்றும் தெரிவித்தார்.

[தொடரும்]


[1]   Rafale deal: Why French jets are at the centre of an Indian political storm, By Vikas Pandey BBC News, Delhi, Sep 25, 2018, https://www.bbc.com/news/world-asia-india-45636806

[2]   Omnirole by Design, Dassult Aviation,  https://www.dassault-aviation.com/en/defense/rafale/omnirole-by-design/

[3]  Air Superiority – concept,  https://www.au.af.mil/au/awc/awcgate/warden/wrdchp01.htm

[4]   Rafale deal:  Why French jets are at the centre of an Indian political Storm by Vikas Pandey, BBC News New Delhi, Sep. 26, 2018,  https://www.bbc.com/news/world-asia-india-45636806   

[5]   Rafale:  Did India get a bad government to government deal? By Pushan Das, Observer Research Foundation, Nov. 10, 2018, https://www.orfonline.org/research/rafale-row-did-india-get-bad-government-to-government-deal-45612/

[6]   Eurofigher Typhoon vs. Dassult Rafale by Tommy Phillip, Defence Aviation, July 20, 2011, https://www.defenceaviation.com/2011/07/eurofighter-typhoon-vs-dassault-rafale.html

[7]   India orders 36 French-made Rafale fight jets – PM Modi by John Irish, Elizabeth Pinequ, Reuters Money News, April 10, 2015, https://in.reuters.com/article/india-france-rafale/india-orders-36-french-made-rafale-fighter-jets-pm-modi-idINKBN0N10OL20150410

One Reply to “ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5”

  1. தெளிவான விவரங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *