2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?

இது குறித்து ஹரன்பிரசன்னா, ஜடாயு இருவரது கருத்துக்களை இங்கு அளிக்கிறோம் – ஆசிரியர் குழு .

ஹரன்பிரசன்னா:

யாருக்கு வாக்களிப்பது?

* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.

* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.

* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.

* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.

* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.

* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.

* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.

****

ஜடாயு:

இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் ஜனநாயக வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது. முதல் முறையாக, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பிரம்மாண்ட ஆகிருதிகள் இல்லாமல், அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்த கட்சிகளின் உண்மையான முகங்களாக தரையில் கால்பாவி நடக்க்க கூடிய தலைவர்கள் மோதும் தேர்தலாக இது இருக்கிறது. கடர்ந்த 2-3 நாடாளுமன்றத் தேர்தல்கள் போல உள்ளூர் கட்சிகளுக்கிடையேயான பலப்பரிட்சை என்பதைத் தாண்டி, தேசிய அரசியலின் இரு துருவங்களுக்கிடையேயான மோதலை அதே போல பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாட்டு தேர்தல் களம் அமைந்துள்ளது.

ஒருபுறம் – உறுதியும் செயல்திறனும் உலக அளவில் மதிக்கப்படும் தலைமைப் பண்பும் கொண்ட நரேந்திர மோதி என்னும் பிரதமர் வேட்பாளர். இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான தீர்க்கமான பார்வைகள். கடைக்கோடியில் உள்ளவருக்கும் வாழ்வு (அந்த்யோதயா) என்ற லட்சியத்தில் அமைந்த தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு, முத்ரா வங்கி போன்ற அற்புதமான திட்டங்கள். இந்தியக் கலாசாரத்தையும் இந்துப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் முன்னிலைப் படுத்தும் அணுகுமுறைகள். அன்னியத் தாக்குதல்களையும், உள்நாட்டு தேசவிரோத, பிரிவினைவாத சக்திகளையும் சமரசமின்றி வேரறுக்கும் வகையிலான தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டங்கள். அனைத்து இந்தியர்களுக்குமான முன்னேற்றம். கடந்த ஐந்தாண்டு கால ஊழலற்ற மத்திய ஆட்சியின் மகத்தான சாதனைகள். தமிழகத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை வழங்கி, மத்திய அரசுடன் ஒத்துழைத்து மாநிலத்தை மேம்படுத்தும் அதிமுக மாநில அரசுத் தலைமைகள். இவற்றை முன்னிறுத்தி அதிமுக-பாஜக கூட்டணி களமிறங்கியுள்ளது.

மறுபுறம் – வாரிசு அரசியல். குடும்ப அரசியல். பிரம்மாண்ட ஊழல் பாரம்பரியம். வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பொருளாரத்தை சீரழிக்கும் பிச்சைக்காரத் திட்டங்கள். கடைந்தெடுத்த இந்து வெறுப்பு. இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் சமரசம். கிறிஸ்தவ மதமாற்ற ஆக்கிரமிப்பு சக்திகள் முன் அடிபணிதல். சாதி மோதல்களையும் பிரதேச மோதல்களையும் உருவாக்கி அதில் குளிர்காய்தல். எந்த அரசாட்சி அனுபவமும் இல்லாத ராகுல் காந்தி என்ற கோமாளி இளவரசனை “பிரதமர்” என்று வெட்கமின்றி அறிவித்தல். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சீரழிப்பதற்கான ரௌடித்தனங்கள், ஊழல்கள், துவேஷ பிரசாரங்கள் ஆகியவற்றுக்கான முன் தயாரிப்புகள். இவற்றுடன் திமுக-காங்கிரஸ் கூட்டணி களமிறங்கியுள்ளது.

இந்த சூழலில், குறைந்தபட்ச அறிவு, சிந்தனைத் திறன், சமூக அக்கறை உடைய தமிழ்நாட்டு இந்து வாக்காளர் என்றால் திமுக-காங்கிரஸ் கூட்டணிப் பக்கம் நீங்கள் ஏறெடுத்தும் பார்ப்பீர்களா என்ன?

உங்கள் வாக்குகளை அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கே வழங்குங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி தொடர இரட்டை இலை, தாமரை, மாம்பழம், முரசு ஆகிய இக்கூட்டணிச் சின்னங்களுக்கு வாக்களியுங்கள்.

(கட்டுரையாளர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் எழுதிய பதிவுகள்)

One Reply to “2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?”

  1. “நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல.” This is precisely why we are on the verge of losing a civilizational war against Abrahamic forces. They hate us openly without any qualifiers. Why are we afraid to respond in the same manner?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *