செவ்வேள்: மூன்று தரிசனங்கள்

குறவேடர் திருமகளின்
செழித்துயர் முலை சேர்ந்து படிந்த 
குங்குமத்தின் சிவப்போ? 
எப்போதும் தன்னடியார் மீதான அன்பின்
அனுராகத்தின் சிவப்போ? 
தாரகாரி, உமது அச்சிவந்த மார்பிற்கு நமஸ்காரம்.

– சுப்ரமணிய புஜங்கம் 11 (சங்கரர்)

கவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காஶ்மீர ராகம் என்பது குங்குமம், அதாவது காஷ்மீரத்தின் குங்குமப் பூ (saffron). தாரகாரி – தாரகனை அழித்தவர்.

காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார். தத்துவார்த்தமாக, வள்ளியை முருகன் தேடிவந்து மணம் புரிந்தது, அன்புறும் ஜீவர்களுக்காக இறைவன் தானே இரங்கி வரும் எளிவந்த தன்மையை (ஸௌலப்யம்) குறிக்கிறது என்று வாரியார் சுவாமிகள் தனது நூலொன்றில் கூறுகிறார்.

புலிந்தே³ஶ-கன்யா-க⁴னாபோ⁴க-³துங்க³-
ஸ்தனாலிங்க³னாஸக்த-காஶ்மீர-ராக³ம் ।
நமஸ்யாமஹம்ʼ தாரகாரே தவோர꞉
ஸ்வப⁴க்தாவனே ஸர்வதா³ ஸானுராக³ம் ॥ 11॥

****

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

– கந்தர் அனுபூதி 30 (அருணகிரிநாதர்)

[ஒவ்வாதது – இந்த உபதேசத்திற்கு நிகரில்லாதது என்னும்படி; அல்லது ஆன்ம லட்சணத்திற்கு உலக வாழ்க்கை ஒவ்வாதது என்னும்படி; இசைவிப்பது – எடுத்துக் கூறுவது]

செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது. அதிகாலை, மாலை இரண்டு பொழுதுகளும் சந்தியா என்றே அழைக்கப் படுகின்றன. இந்த இரண்டு பொழுதுகளிலும் வானில் செம்மை படர்கிறது. இந்தப் பொழுதுகளில் அக விழிப்பையும் உள்ளுணர்வையும் வேண்டும் காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து தியானிக்க வேண்டும் என்றே சந்தியாவந்தனம் என்கின்ற நித்யகர்மத்தை வேதநெறி வகுத்தளித்திருக்கிறது.

அந்த ஞானப் பொருளாக வேலவன் விளங்குகிறான். குருவாக வந்து அவனே அதை உபதேசிக்கிறான். அந்த உபதேசத்தின் மூலம் சுட்டப்படுகின்றதான வாக்குக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட பூரணமான பரம்பொருளைத் தனது உள்ளுணர்வால் அறிந்து கொள்வதன்றி எப்படி ஒருவருக்கு எடுத்துரைப்பது என்கிறார்.

இரவுக்கும் பகலுக்கும் இடையில் அந்தி போல, உமைக்கும் சிவனாருக்கும் இடையில் கந்தன் அமர்ந்து அருள்புரியும் சோமாஸ்கந்த மூர்த்தி உருவைக் குறித்தார் என்றும் கொள்ளலாம்.

****

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

– குறுந்தொகை 1 (திப்புத்தோளார்). குறிஞ்சித் திணை.

போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன் (சேயோன் – சிவந்த நிறமுடையவன்). அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன.

தலைவன் கொடுத்த கையுறையை (அன்பளிப்பு) மறுத்துத் தோழி கூறியது என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. கைநிறைய செங்காந்தள் மலர்களோடு, தன்னை ஏற்பாளோ மாட்டாளோ என்ற கேள்விகளோடு, தலைவியைக் காண வருகிறான் தலைவன். அவனைச் சந்திக்கும் தோழி, பார்த்தாயா இந்த மலை முழுதும் சிவப்பாகும் படி பூத்திருக்கிறதே செங்காந்தள் என்று சொல்லுகிறாள். அவ்வளவு தான். அதோடு பாடல் முடிந்து விட்டது. அவள் எதைக் குறிப்புணர்த்த விரும்பினாள்? இந்தச் சிவப்பு போலவே அவள் நெஞ்சமெங்கும் உன்மீதுள்ள காதலால் நிரம்பியுள்ளது என்றாளா? அல்லது செவ்வேளைப் போன்றே பகைவரை அழிக்கும் திறமும் மேனி எழிலும் கொண்ட தலைவனன்றோ நீ எனப் புகழ்ந்தாளா? அல்லது இந்த மலைமுழுதும் ஏற்கனவே காந்தள் பூத்துவிட்டது (தலைவியின் மனம் வேறொருவரிடம் காதல் வயப்பட்டு விட்டது) என்று சொல்ல விரும்பினாளா? அதை நம்மிடமே விட்டுவிடுகிறார் கவிஞர். குறுந்தொகையின் முதற்பாடலாக, குறிஞ்சிக் கடவுள் குமரனுக்கான வாழ்த்துப் போலவும் அமைந்துள்ளது இந்தப் பாடலின் சிறப்பு.

மேற்கூறியவற்றில், முருகனின் செம்மை நிறம் அவனது காதலையும் பெருங்கருணையும் குறிப்பதாக முதற்பாடலில் பயின்று வந்தது. இரண்டாம் பாடலில், அது ஒளிரும் ஞானத்தின் குறியீடாயிற்று. மூன்றாம் பாடலில் அசுரரை அழித்துச் சிவந்த வேல்தாங்கிய அவனது வீரத்திருமேனியின் நிறமாயிற்று.

கருணை, ஞானம், வீரம் – இவற்றின் திருவுருவான செவ்வேளை நிதம் போற்றுவோம்.

One Reply to “செவ்வேள்: மூன்று தரிசனங்கள்”

  1. குறமாதின் இருதுங்க தனகுங்கு மந்தான்
    கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
    திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
    திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *