முகப்பு » அரசியல், சமூகம், விவாதம்

திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்


இந்த முறை ராஜராஜன் சோழன் குறித்து அவதூறாகப் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்தை குறிவைத்து திராவிட சிந்தனையாளர்கள் அடிப்பதை நீங்கள் கவனிக்கலாம். ரஞ்சித் தமிழக அரசியல் களத்தால் கைவிடப்பட காரணமென்ன என்பது தமிழக அரசியலின் வேர் ஒளிந்திருக்கும் இடத்தை கவனித்தால் மட்டுமே புரியும்.

நீதிக்கட்சி – திராவிடர் கழகம் – திமுகழகம் இது மூன்றினுடைய பரிமாணங்களை ஆழமாக உள்வாங்காதவர்களே இவற்றிற்கு ஒரே நிறம் தருவார்கள். ஆனால் இவை உடைத்து பகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நீதிக்கட்சி இங்கு சொல்ல வந்த அரசியல் என்ன? பிராமணர் அல்லாத உயர்ஜாதிகளிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அது ஒரு போதும் இந்து மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை முன்னிறுத்தியது இல்லை. காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பு, ஆலயநுழைவு, சமபந்தி போஜனங்களை வெகு பிரசித்தமாக பிரச்சாரம் செய்து செயல்படுத்தியும் காட்டி வந்த நேரத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதைப்பற்றி அதன் தலைமை பீடத்தின் கருத்தென்ன இருந்தது? அதனுடைய பிராமண எதிர்ப்பு என்பது கூட தங்களை புரட்சியாளனாக காட்டிக் கொண்டு சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருந்தவர்களை அதிகாரத்திடம் நகர்த்தவிடாமல் தாங்கள் கைப்பற்றிக் கொள்வது மட்டும்தான் நோக்கம்.

நீதிக்கட்சி மெல்ல தேய்ந்து அழிந்து போகும் நேரத்தில் பெரியார் திராவிட இயக்கத்தை உண்டு செய்கிறார். பெரியார் அதிதீவிர இந்து மத வெறுப்பை பரப்ப ஆரம்பிக்கிறார். பிராமணர் அல்லாதார் என்கிற ஆயுதம்தான் முக்கியம் என்பதை தீவிரமாக நம்பினார். அதற்கு ஒரே காரணம் அதிகாரம் பிராமணர் அல்லாத, சமூக அடுக்கில் மேல்-இடைநிலை ஜாதிகளிடம் மட்டுமே அது இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் பிராமணிய எதிர்ப்பை மட்டுமே முன் வைத்தார். பெரியார் கலப்பு திருமணத்தால் எந்த பலனும் கிடையாது நாமெல்லோரும் சூத்திரர் எனவே பிராமணருக்கும் நமக்கும் இடையில் நடக்கிற திருமணம்தான் கலப்புத் திருமணம் ஆனால் அதனாலும் ஜாதி ஒழியாது என்று சொன்னார். பிராமணர்கள் அதே மரியாதையோடு இருக்கிறார்கள் கோவிலில், ஆனால் எங்களையும் பஞ்சமரையும் ஒன்றென ஆக்கிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார்.

இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்.

அதற்காக பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னது “தமிழர்களின் வரலாறே பார்ப்பன அடிமை வரலாறு ..திருவள்ளுவன், இளங்கோ, தொல்காப்பியன் எல்லோருமே பார்ப்பன அடிமை. திருக்குறள் தங்க தட்டில் வைக்கப்பட்ட மலம், சிலப்பதிகாரம் பெண்ணடிமை நூல், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஏகவாதங்களை வீசினார். தமிழர்களுக்கு ஒரு பெருமை மிகு வரலாறு இருப்பதையோ அல்லது அவர்கள் அதை பேசுவதையோ வெறுத்தார். அது அவர்களை சிந்திக்க வைத்தால் இந்து மத வெறுப்பையும்,பிராமண விரோதத்தையும் கட்டமைத்து தான் நினைக்கிற அரசியலை எழுப்ப முடியாது என்று நினைத்தார்.

ஆனால் திமுக இதில் முற்றிலும் வேறான சிந்தனை கொண்டது. நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை, திராவிட கழகத்தின் ஒருவகையான மறுத்தல் வாதத்தை விட்டு அது விலகி நடந்தது.

சோழன், பாண்டியன், சேரனை இணையற்ற திராவிட பெருமன்னர்களாக முன்னிறுத்தியது. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் ஆகியவற்றை தன் மனம் போன போக்கில் நாத்திக நூல், தமிழர் மானம் என்றெல்லாம் யாருமே படிக்க மாட்டார்கள் என்ற தீர்க்கமான சிந்தனையில் வலிமையாக பிரச்சாரம் செய்தது. கம்பனின் ராமனை மட்டும் புறக்கணித்தது.

அண்ணா மிக நுணுக்கமாக மறைமலையடிகளின் தனித்தமிழ் சைவ அரசியலை உள்ளே இழுத்தார். “மறைமலையடிகள் சமயத் துறையில் – சைவத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரே உங்களுக்கு அது சம்மதமா? என்று சிலர் கேட்கக்கூடும். அன்பும் அருளும் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன். ஆண்டவன் ஒருவனே என்பதுதான் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன்” (மேடைப் பேச்சு – 24.08.1958 – #அண்ணா)”

ஆக அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை😁

நீலம் சஞ்சிவி ரெட்டியினை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் காமராஜர் உட்கட்சி பிரச்சனையில் விவிகிரியை நிறுத்தினார் இந்திரா காந்தி.ராஜாஜி கூட கடுமையாக கண்டித்தார் அதை. அப்போது இந்திரா வேட்பாளரை முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். அப்போது பெரியாரிடம் காமராஜர் சொன்னதாக சொல்வார்கள் – “கங்கை வென்றான்,கிடாரம் வென்றான்” என்பார்களே இதுதானா? அது என கேட்டாராம்😁

காரணம் திமுக எல்லா மேடைகளிலும் திராவிட தோள்களை பார்த்தீர்களா? சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தது. கருணாநிதியின் துண்டு ஒரு ராஜாவை போல தரையில் கிடக்கும். அவர் தன்னை ஆரூர் சோழன் என்று நம்பினார். தன்னை ராஜராஜன் என்று அவர் வலுவாக நம்பினார். ஆ.ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசியிருக்கிறார்.

நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை முறை, திராவிடர் கழகத்தின் மறுப்பரசியல் வழியில் திமுக செல்லவில்லை; அது தமிழின் விழுமியங்களை போலியாக திரித்து தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல நம்பியது. அதை பரப்பியது. நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசியலை அதன் மைய வேரிலிருந்தே வந்த சீமான் தெலுங்கர் எதிர்ப்பு என்றும், ரஞ்சித் திராவிட-தமிழ்தேசிய எதிர்ப்பு என்றும் உடைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை திராவிட சித்தாந்திகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் திராவிடத்தோடு சமரசம் செய்துகொள்வார். அவர் இவர்களைப் போல பிராமணியம், கொஞ்சநாளாக ராமதாஸ் என்று பேசி கடந்துவிடுவார். ஆனால் ரஞ்சித் நீதிகட்சியில் இருந்து துவங்குவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.

ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை என்பது உண்மை. ஆரோக்கியமாக மாற்றத்தை நோக்கி நகர்வோம். பார்ப்போம்.

கட்டுரையாசிரியர் சுந்தர்ராஜ சோழன் தமிழ்நாடு அரசியல், தேசிய அரசியல், சமூகப் பிரசினைகள் மற்றும் வரலாறு குறித்து தொடர்ந்து காத்திரமான, சுவாரஸ்யமான பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

2 மறுமொழிகள் திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

  1. அத்விகா on June 15, 2019 at 8:04 am

    தமிழகத்தில் திமுக குடும்பங்கள் மீடியாவில் கால்பதித்து தொலைக்காட்சி சானல்கள், தினசரி, வார மாத இதழ்கள் என்று எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிட்டார்கள். ஒரு தலைப்பட்சமான விஷயங்கள் மட்டுமே கருத்தாக்கம் என்ற பொய்யான பெயரில் அவர்களின் குடும்ப வியாபாரங்களுக்கு வசதியான வகையில் திசை திருப்பப் பட்டு , அர்பன் நக்சல்கள் மூலம் மக்களை சென்றடைகிறது. இந்த அர்பன் நக்சல்களுக்கு மறைமுக ஊக்கி திமுக தான்.தமிழகத்தில் அர்பன் நக்சல்கள், மத மாற்ற மெஷினரிகள் , மாவோயிஸ்டுகள் , திமுக இவர்கள் எல்லாருமே மறைமுகமாக கைகோர்த்து உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசி வாரத்தில் வன்முறைகளை சந்தித்து , திருவல்லிக்கேணியில் ஒரு காவல் நிலையத்துக்கே தீவைத்தார்கள் என்ற அளவுக்கு சென்றதற்கு இந்த தீய சக்திகளின் கைகோர்ப்பே காரணம். ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தினை தீக்கிரை ஆக்கிய கயவர்கள் மீது தமிழக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பரம ரகசியமாகவே உள்ளது.

  2. அ.அன்புராஜ் on June 17, 2019 at 7:18 pm

    உண்மை. அரசியல் சதி செயல்களை அப்படியே வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள்.நிறைய எழுதுங்கள். உண்மை வெளிவர வேண்டும். திராவிட நடிகர்களின் சாயம் கலைந்து விட்டதை தமிழகம் உணர வேண்டும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*