ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

தமிழாக்கம்: அரங்க. இரகுநாதன்

தனியன்கள்

காலடி தோன்றிய நாளடி தொட்டுஅவர்
காலடி பற்றிய காதலார்ச் … சீலர்க்கு
மாலடி பற்றுதல் மாணடி என்றவர்
தாளடி வீழ்ந்தேன் தவித்து.

பிரம்மஞானம் கூறி பிறப்பறுக்கும் ஆறென்(று)
இரண்டில்லா அத்வைதம் ஈந்தார் … சிறப்பொவ்வா
பத்தியில்லா ஞானமெனப் பண்டுரைத்தார் தாளிணையைப்
பத்திரமாய்ச் சிக்கெனவே பற்று.

வானப் பெரும்புகழ் வண்ஞானி சங்கரரின்
ஞானக் குவையெனும் நாயகன் பாமாலை
மோனப் பொருளுணர்ந்து முத்திபெற வெண்பாவில்
தீனன் பெயர்த்தேன் திளைத்து.

நூல்

ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்
கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே ।
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥ 1॥

1) கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்

மூட⁴ ஜஹீஹி த⁴நாக³மத்ருʼஷ்ணாம்
குரு ஸத்³பு³த்³தி⁴ம் மநஸி வித்ருʼஷ்ணாம் ।
யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேந விநோத³ய சித்தம் ॥ 2॥

2) சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்றுவாய் ..மெத்த
உழைப்பின் உயர்வை உளத்தில் இருத்திப்
பிழையற வாழ்தலே பீடு

நாரீஸ்தநப⁴ரநாபீ⁴தே³ஶம்
த்³ருʼஷ்ட்வா மா கா³ மோஹாவேஶம் ।
ஏதந்மாம்ஸவஸாதி³விகாரம்
மநஸி விசிந்தய வாரம் வாரம் ॥ 3॥

3) நங்கையரின் ஊனழகில் நல்லோரும் நேர்கெடுவர்
தங்கஉடல் வெற்றுத் தசைக்கோளம் … அங்கஎழில்
உன்நிலை மாற்றா(து) உயர்ந்திட பக்திஆழ்
அந்நிலையே ஆ(று)என்(று) அறி.

நலிநீத³லக³தஜலமதிதரலம்
தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் ।
வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மாநக்³ரஸ்தம்
லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥ 4॥

4) கமலஇலை நீர்முத்து காண்சலன வாழ்க்கை
இமயமலை அன்னபெரும் இன்னல் … (இ)யமபயத்
துன்பத்தின் தாக்கத்தைத் தூளாக்கும் அப்பற்றே
இன்பத்துள் எல்லாம் இறை.

யாவத்³வித்தோபார்ஜநஸக்த-
ஸ்தாவந்நிஜபரிவாரோ ரக்த: ।
பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே
வார்தாம் கோঽபி ந ப்ருʼச்ச²தி கே³ஹே ॥ 5॥

5) பெறுமுன் உழைப்பால் பெருகும் உறவால்
பெறுவாய் மகிழ்ச்சி பிறரால் … ஒருகால்
செயலகெட்(டு) உடல்கெட்டு சீர்கெட்ட காலை
அயல்பட்டுச் செல்வர் அகன்று.

யாவத்பவநோ நிவஸதி தே³ஹே
தாவத்ப்ருʼச்ச²தி குஶலம் கே³ஹே ।
க³தவதி வாயௌ தே³ஹாபாயே
பா⁴ர்யா பி³ப்⁴யதி தஸ்மிந்காயே ॥ 6॥ 

6) உயிரோட்டம் உள்ளவரை உன்சுற்றம் கூடும்
உயிரோட்டம் நின்றாலோ ஓடும் … உயிரனைய
இல்லாளும் ஆவியிலா இக்கூட்டிற் கஞ்சியங்கே
நில்லாமல் நீங்கல் நினை

பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த:
தருணஸ்தாவத்தருணீஸக்த: ।
வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த:
பரமே ப்³ரஹ்மணி கோঽபி ந ஸக்த: ॥ 7॥ 

7) குழவிப் பருவம் குதூகலம ஆகும்
இளமை வனிதையர் ஈனக் …களியினில்
மீதமும் இல்லறம் மென்றிட என்றுதான்
நாதனை எண்ணுவாய் நீ

கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோঽயமதீவ விசித்ர: ।
கஸ்ய த்வம் க: குத ஆயாத-
ஸ்தத்த்வம் சிந்தய ததி³ஹ ப்⁴ராத:  ॥ 8॥  

8) பெற்றவர் உற்றவர் பிள்ளையும் சுற்றமும்
வெற்றுற(வு) ஆகிடும் வேடிக்கை … மற்றிவர்பால்
பற்றோடு தாபமேன் பாசமேன் நேசமேன்
சற்றுநீ சிந்திப்பாய் சீர்.

ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம்
நிஸ்ஸங்க³த்வே நிர்மோஹத்வம் ।
நிர்மோஹத்வே நிஶ்சலதத்த்வம்
நிஶ்சலதத்த்வே ஜீவந்முக்தி: ॥ 9॥

9) நல்லவர் நட்பால் நசிந்திடும் வீண்அவா
வல்லதாம் ஆசை விலகிடும் … நில்லாது
மோகமும் ; உள்ளமும் ஒருமுகப் பட்டிடின்
வேகமாய்க் கிட்டிடும் வீடு.

கா தே காந்தா த⁴நக³தசிந்தா 
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா । 
த்ரிஜக³தி ஸஜ்ஜநஸங்க³திரேகா 
ப⁴வதி ப⁴வார்ணவதரணே நௌகா ॥ 10॥ 

10) மக்கள் மனைவியென மாயச் சகதியில்
சிக்கித் தவிக்கும் சிறுமதியே …. முக்காலும்
நல்லவர் நட்பொன்றே நம்பிறப் பாழியை
வெல்கிற ஓடமென் றுணர்

ஜடிலோ முண்டீ³ லுஞ்சி²தகேஶ:
காஷாயாம்ப³ரப³ஹுக்ருʼதவேஷ: ।
பஶ்யந்நபி ச ந பஶ்யதி மூடோ⁴
ஹ்யுத³ரநிமித்தம் ப³ஹுக்ருʼதவேஷ: ॥ 11॥

11) மழித்தலும் நீட்டலும் மாற்றிடாப் பற்றை
ஒழித்திடாப் பொய்யன் உலகம்…பழித்த(து)
அழித்திடா ஞானமில் அந்தகன் அவனைக்
கொழித்திடும் எத்தனென்றே கொள்

அங்க³ம் க³லிதம் பலிதம் முண்ட³ம்
த³ஶநவிஹீநம் ஜாதம் துண்ட³ம் ।
வ்ருʼத்³தோ⁴ யாதி க்³ருʼஹீத்வா த³ண்ட³ம்
தத³பி ந முஞ்சத்யாஶாபிண்ட³ம் ॥ 12॥

12) உடலம் தளர்ந்தும் உரோமம் நரைத்தும்
நடக்கக் கழியே நயப்பார் … கடைவாயிற்
பற்களும் போயினும் பாரிதன் மானிடர்
பற்றுகள் விட்டிலர் பார்

அக்³ரே வஹ்நி: ப்ருʼஷ்டே² பா⁴நு:
ராத்ரௌ சுபு³கஸமர்பிதஜாநு: ।
கரதலபி⁴க்ஷஸ்தருதலவாஸ-
ஸ்தத³பி ந முஞ்சத்யாஶாபாஶ: ॥ 13॥

13) முகத்தை முழங்காலில் மூடி உறக்கச்
சுகத்தில் திளைத்துச் சுவைப்பான் …. புகலென
ஈண்டும் மரத்தடி ஏழையும் ஆசைகள்
ஈண்டல் விடுத்தல் இலை

குருதே க³ங்கா³ஸாக³ரக³மநம்
வ்ரதபரிபாலநமத²வா தா³நம் ।
ஜ்ஞாநவிஹீந: ஸர்வமதேந
முக்திம் ந ப⁴ஜதி ஜந்மஶதேந ॥ 14॥

14) கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்

ஸுரமந்தி³ரதருமூலநிவாஸ:
ஶய்யா பூ⁴தலமஜிநம் வாஸ: ।
ஸர்வபரிக்³ரஹபோ⁴க³த்யாக:³
கஸ்ய ஸுக²ம் ந கரோதி விராக:³ ॥ 15॥

15) சொத்துச் சுகங்களால் சோரா தொதுக்கியே
வெற்றுத் தரையில் விழிமூடார் … சித்தம்
சிறிதும் கலங்காத சீலோர் மகிழ்வைப்
பறித்துக் குலைப்பவர் பாழ்

யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா
ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீந: ।
யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம்
நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ ॥ 16॥

16) இனிமைக் களிபெற்றும் இன்யோகம் கற்றும்
தனிமை விழைந்தும் தகவோர் … கனிந்தும்
உகப்பாய்ப் பரத்தில் ஒருங்கிணைந் தார்க்கிவ்
இகத்திலும் இன்பம் இலக்கு

ப⁴க³வத்³கீ³தா கிஞ்சித³தீ⁴தா
க³ங்கா³ஜலலவகணிகா பீதா ।
ஸக்ருʼத³பி யேந முராரிஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேந ந சர்சா ॥ 17॥

17) கங்கைச் சுவைநீரைக் கைத்தலம் மாந்தியும்
அங்கண் அரியுரை அன்புளம் …. தங்கிடத்
தோன்றும் பொழுதில் தொழுது வழிபட
ஈண்டும் பிறப்பொன் றிலை

ரத்²யாசர்படவிரசிதகந்த:²
புண்யாபுண்யவிவர்ஜிதபந்த:² ।
யோகீ³ யோக³நியோஜிதசித்தோ
ரமதே பா³லோந்மத்தவதே³வ ॥ 18॥

18) கந்தல் உடுத்திக் கடுவினை நீக்கியும்
அந்தத் தியானலயிப்(பு) ஆழ்பவர் … புந்தியுடைப்
பிள்ளையாய் யோகியாய்ப் பிச்சிபோல் வாழ்வரே
தெள்ளியன் நற்றாள் திளைத்து

கஸ்த்வம் கோঽஹம் குத ஆயாத:
கா மே ஜநநீ கோ மே தாத: ।
இதி பரிபா⁴வய ஸர்வமஸாரம்
விஶ்வம் த்யக்த்வா ஸ்வப்நவிசாரம் ॥ 19॥ 

19) எவருந்தன் பெற்றோர் உறவென்று பார்க்கில்
இவரெல்லாம் பொய்யான ஏய்ப்பே … இவற்றைப்
புரட்டென்றும் மாயப் புரிவென்றும் தேரி
விருட்டென்று மாயை விரட்டு

த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு-
ர்வ்யர்த²ம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ।
ப⁴வ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ச²ஸ்யசிராத்³யதி³ விஷ்ணுத்வம் ॥ 20॥

20) என்னுள் இருப்பான் இதர ருளுமிருப்பான்
என்னைப் பொருளின்றி ஏசாதே … தன்னுளே
காண்பானை மாற்றாருள் காண்பாரை மாறுகள்
காணாமல் நீங்கிடும் காண்

ஶத்ரௌ மித்ரே புத்ரே ப³ந்தௌ⁴
மா குரு யத்நம் விக்³ரஹஸந்தௌ⁴ ।
ஸர்வஸ்மிந்நபி பஶ்யாத்மாநம்
ஸர்வத்ரோத்ஸ்ருʼஜ பே⁴தா³ஜ்ஞாநம் ॥ 21॥

21) நண்பன் பகையென்றும் நம்மவர் சுற்றமென்றும்
மண்ணில் பொருளற்ற மாறுகள் … உன்னுடைச்
சக்தியைப் பேதத்தில் சாகடித்தால் எப்போது
முத்தியை ஏற்பாய் மொழி

காமம் க்ரோத⁴ம் லோப⁴ம் மோஹம்
த்யக்த்வாssத்மாநம் பா⁴வய கோsஹம் । 
ஆத்மஜ்ஞாநவிஹீநா மூடா⁴-
ஸ்தே பச்யந்தே நரகநிகூ³டா:⁴ ॥ 22॥ 

22) சினத்துடன் காமம் சிதைத்திடும் ஆசை
மனத்துள மாயையும் மாய்க்கத் ..துணையினைத்
தேராத மூடனைத் தீயாக ஆரிருள்
சோரா தெரித்திடும் சூழ்ந்து

கே³யம் கீ³தாநாமஸஹஸ்ரம்
த்⁴யேயம் ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் ।
நேயம் ஸஜ்ஜநஸங்கே³ சித்தம்
தே³யம் தீ³நஜநாய ச வித்தம் ॥ 23॥

23) ஆயிரம் நாமமொடு ஆர்த்திடுவாய் கீதையும்நீ
மாயவனைத் தூயவுளத் துள்ளிருத்து … ஆய்ந்தபின்னர்
நல்லோரின் நட்பினையே நாடிநீ பெற்றதெல்லாம்
இல்லார்க்கும் ஈவாய் இசைந்து

ஸுக²த: க்ரியதே ராமாபோ⁴க:³
பஶ்சாத்³த⁴ந்த ஶரீரே ரோக:³ ।
யத்³யபி லோகே மரணம் ஶரணம்
தத³பி ந முஞ்சதி பாபாசரணம் ॥ 24॥

24) மனிதா திளைக்கிறாய் மாதர் களியில்
பிணியில் உழல்கிறாய் பின்னர் … இனிஇதைச்
சாவுதான் நீக்கிச் சரிசெய்யும் என்றறிந்தும்
தீவினை நீக்கிடாய் தேர்ந்து

அர்த²மநர்த²ம் பா⁴வய நித்யம்
நாஸ்திதத: ஸுக²லேஶ: ஸத்யம் ।
புத்ராத³பி த⁴நபா⁴ஜாம் பீ⁴தி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ॥ 25॥

25) நிதியம் அமைதியை நீக்கும் மகிழ்ச்சி
மிதிபடும் செல்வம் மிகுந்தால் … விதியால்
மதித்த மகனும் மதியாப் பகையாம்
பொதிந்த அறமிதைப் போற்று

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேகவிசாரம் ।
ஜாப்யஸமேதஸமாதி⁴விதா⁴நம்
குர்வவதா⁴நம் மஹத³வதா⁴நம் ॥ 26॥

26) பலனடக்கும் மூச்சுப் புலனொடுக்க யார்க்கும்
நலனடக்கும் நில்லாமை நிற்றல்.. கலங்கியும்
ஓர்ந்தும் உரைத்தும் இறைமையில் ஆழ்பவர்
சேர்ந்தாரே வீடெனும் சீர்.

கு³ருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த:
ஸம்ஸாராத³சிராத்³ப⁴வ முக்த: ।
ஸேந்த்³ரியமாநஸநியமாதே³வம்
த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥ 27॥

27) குருவவர் தாளைக் குவையெனக் கொள்வார்க்(கு)
இருவினை இன்னல்கள் இல்லை … உருகும்
புலன்கள் உருவில் புகுந்திடக் காட்டும்
நலன்கள் இறைமை நமக்கு

இப்பதிவின் ஆசிரியர் அரங்க. இரகுநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ் இலக்கியம், ஆன்மீகம் குறித்த பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

1 comment for “ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்

    /* commented this */
  1. அருமையான மொழி பெயா்ப்பு. படித்தேன் ரசித்தேன்.மனம் மகிழ்தேன். இலக்கிய வளம் ஆழம் அதிகம்.ஆழ்ந்த ஞானம்.தொடரட்டும் பணிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *