தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணி

‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன.

மத்திய அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை நிறைவேற்றியவுடன் (டிச. 12), அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் ஒரு நியாயம் இருந்தது. அங்கு ஏற்கனவே அமலில் உள்ள 1985ஆம் வருடத்திய அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறுவதாக புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் அம்மாநில மக்களுக்கு எழுந்ததில் வியப்பில்லை. அதனால் அங்கு கலவரம் வெடித்தது. (டிச. 12-14) ஆனால், மத்திய அரசும் அங்கு ஆளும் மாநில அரசும் தகுந்த விளக்கம் அளித்தவுடன், அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று நாட்களில் அமைதி திரும்பிவிட்டது. தவிர, கு.தி.சட்டத்துக்கு ஆதரவாக மக்கள் லட்சக் கணக்கில் திரண்ட பேரணியும் (டிச. 19) அங்கு நடந்திருக்கிறது.

பற்றி எரியும் மேற்கு வங்கம்: அரசியல்வியாதிகளின் லீலை.

அகதிகள் பிரச்னையால் தத்தளிக்கும் மேற்கு வங்கத்திலும் டிச. 12 முதலே வன்முறைகள் நடந்தவண்ணம் இருந்தன. ஆனால், அஸ்ஸாம் அமைதியான பிறகும்கூட, அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே வீதிக்கு வந்து 3 நாட்கள் (டிச. 16- 18) நடத்திய போராட்டங்களால், அங்கு மட்டும் அமைதி திரும்பவில்லை. தவிர, பாஜக அரசுக்கு எதிரான அவரது அரசியல்ரீதியான வெறுப்பு முழக்கங்கள் நாடு முழுவதும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், இஸ்லாமியர்களிடையே சந்தேகத்தைப் பரப்பவும் பயன்பட்டன.

ஒருவாரம் கடந்து மேற்கு வங்கம் அமைதிக்கு திரும்பியபோது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பல மாநிலங்களில் வன்முறைகளை அரங்கேற்றினர். அதற்கு தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டு (டிச. 15) வாகனங்களை எரித்த மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த கடும் நடவடிக்கை அவர்களுக்கு பிரசார சாதனமாகிவிட்டது.

இதைக் கொண்டு, நாடு முழுவதும் மாணவர்களை போராட்டக் களத்தில் இறக்கின இடதுசாரி மாணவர் சங்கங்கள். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த விழைந்ததன் விளைவே, பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம்.

எதிர்க்கட்சியினரின் தவறான வழிகாட்டுதலால் பரவிய வன்முறை.

மாணவர்களை முன்னிறுத்திய போராட்டக்காரர்களால் அரசை நிலைகுலைய வைக்க முடிந்தது. மாணவர்களும், எதற்காகப் போராடுகிறோம் என்றே அறியாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அராஜகவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கினர். நாடு முழுவதும் இதுவரை அச்சத்துடன் இருந்த வன்முறையாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகிவிட, ஆங்காங்கு வாகனங்கள் கொளுத்தப்பட்டன; காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். உ.பி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வேறு வழியின்றி காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்தது.

இந்த நேரம் (டிச. 21) வரை, நாட்டில் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை. இதில் வேதனை என்னவென்றால், போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சில லட்சங்கள் மட்டுமே. இதனை நமக்கென்ன என்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் குடிமக்களோ 100 கோடிக்கு மேல்.

சென்னையில் பாஜக நடத்திய கு.தி.சட்ட ஆதரவு நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்கள்.

இந்நிலையில் டிச. 20 அன்று, உலேமாக்கள் சபை உள்ளிட்ட இஸ்லாமிய மத அமைப்புகள் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தமிழகம் எங்கும் மாபெரும் திரளைக் கூட்டி தங்கள் பலத்தைக் காட்டி அரசை எச்சரித்திருக்கின்றன. இன்னமும் அவர்கள், கு.தி.சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்களது வெறித்தனமான மேடைப் பேச்சுகளில் புலப்பட்டது. தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வதும் தெளிவாகவே தென்பட்டது.

இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்த அரசு முயன்றாலும், எதிர்க்கட்சிகள் அவர்கள் தெளிவு பெற விடத் தயாரில்லை. அதனால்தான் வன்முறை பரவுகிறது. இதனை பாஜக அரசு மீதான கரும்புள்ளியாக்க அவர்கள் துடிப்பதும் நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கு.தி.சட்டத்தை விளக்கியும், இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன (டிச. 20) . அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும்கூட லட்சக் கணக்கான மக்கள் பேரணி நடத்தி கு.தி.சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும், இந்தச் சட்டங்களை ஆதரிக்கும் பலருக்கும் கூட, இன்னமும் முழுமையான விவரங்கள் தெரிவதாகத் தோன்றவில்லை. அவர்களுக்காக சில விளக்கங்களை அளிப்பது கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் கூட. இது, வன்முறையை நம்பி, நாட்டின் மீதும் அரசியல் சாசனத்தின் மீதும் கல்லெறிந்து கொண்டிருக்கின்ற மதவெறிக் கும்பல்களும் அறிய வேண்டிய விஷயமே.

எனவே, இங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய தெளிவான, சுருக்கமான விளக்கங்கள் இங்கு கேள்வி – பதில் வடிவில் வழங்கப்பட்டிருக்கின்றன…

1. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது என்ன?

இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதே தேசிய குடிமக்கள் பதிவேடு. 1951ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1955ஆம் வருடத்திய குடிமக்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் பதிவேடு இது. துரதிர்ஷ்டவசமாக இத்தனை ஆண்டுகாலமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் யார் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கும். நமது நாட்டில் இதுவரையிலான அரசுகள் இம்முயற்சியை மேற்கொள்ளாததால், 1955ஆம் வருடத்திய தேசிய குடிமக்கள் பதிவேடே (National Register of Citizens-NRC) இறுதியானதாக உள்ளது. 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோதுதான் குடிமக்கள் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்தச்  சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. 1987க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் ஆகிய அனைவரும் இந்தியர்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.

2. தே.கு.பதிவேடு புதுப்பிக்கப்படாததால், யார் இந்தியர் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறதா?

இதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. கடந்த 65 ஆண்டுகளில் பல  தலைமுறைகள் மாறிவிட்ட சூழலில், உண்மையான இந்தியக் குடிமகன் யார் என்பதைத் தீர்மானிப்பது சவாலானதே. ஆனால், தனது பூர்வீக ஆவணங்கள் (முன்னோரின் சொத்து பத்திரங்கள்), வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒருவரும் தான் தேசியக் குடிமகன் என்பதை நிரூபிக்க முடியும். 1971க்கு முந்தைய பூர்வீக ஆவணங்கள் எதையும் மக்கள் வழங்கத் தேவையில்லை என்று டிச. 31இல் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இவை எதுவும் இல்லாதவர்களும், கல்வி அறிவு இல்லாதவர்களும் கூட சாட்சியங்களின் அடிப்படையில் குடிமகன் பதிவேட்டில் சேர முடியும். குடிமகன் என்பது எந்த மத, மொழி, இன அடிப்படையும் அற்றது என்பதையும் மறக்கக் கூடாது.

3. தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் அமலாக்க பாஜக துடிப்பது ஏன்?

இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும். எனவேதான், தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. தற்போது தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயக முறையில் அதற்கான முயற்சிகளில் பாஜக அரசு இறங்கி இருக்கிறது.

இந்தப் பதிவேட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் காரணமாகவே முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறைகளில் இறங்கி உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானது அல்ல. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

4. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்று மகிழும்,
பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்துள்ள ஹிந்து அகதிகள்.

1947 தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிந்த பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரில் லட்சக் கணக்கானோர் முஸ்லிம் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டு இந்தியாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர்  வந்தனர். அவர்களுக்கு இந்தியா புகலிடமும் குடியுரிமையும் அளிக்க உருவான சட்டமே 1955ஆம் வருடத்திய குடியுரிமைச் சட்டம். இந்தச் சட்டம், இந்தியாவில் யார் குடிமகனாக இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஒருவர் இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதே அந்த சட்டத்தின் அடிப்படை. அரசியல் சாசனத்தில் பாகம்-2, ஷரத்துகள் 5-11 இல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் இச்சட்டம் இதுவரை 6 முறை (1985, 1992, 2003, 2005, 2015, 2019) திருத்தப்பட்டுள்ளது.

5. 2019ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

இந்தியாவின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய (இஸ்லாமிய) நாடுகளில் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து புகலிடம் தேடி இந்தியா வந்துள்ள மக்களுக்கு அடைக்கலமும்,  குடிமகன் என்ற உரிமையும் அளிக்க 2019ஆம் வருத்திய குடிமக்கள் திருத்தச் சட்டம் வகை செய்கிறது. அதற்கு அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (முன்னர் இது 11 ஆண்டுகளாக இருந்தது); 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்தவராக இருக்க வேண்டும்; அவர்கள் ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை (எந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்தார்களோ அந்த நாட்டில்) மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படி அரசுக்கு மனுச் செய்து, இந்தியக் குடியுரிமை பெறலாம் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம்.

இந்த நாடுகளில் நடைபெறும் இஸ்லாமியர்களின் வன்முறையும், சிறுபான்மையினரின் வேதனையும் உலகம் அறிந்த உண்மை. 1947இல் இந்நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையையும் இப்போதைய எண்ணிக்கையையும் ஒப்பிட்டாலே ஆபத்தின் வீரியம் புரியும். இந்த நாடுகளில் நிம்மதியாக வாழ முடியாமல், உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள சொத்துகளையும் உறவுகளையும் இழந்து தப்பியோடி வரும் அபலைகள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்களுக்கு உதவுவது நமது கடமை.

6. இந்த சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை?

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் அவல நிலை.

இந்தக் கேள்வியே அடிப்படைப் புரிதல் அற்றது. ஏனெனில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்களால் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் தான் அடைக்கலம் நாடி இந்தியா வருகின்றனர். அவர்களையும், அவர்களை அந்த நாடுகளில் கொடுமைப்படுத்திய பெரும்பான்மை மதத்தினரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக் கூடாது. இருப்பினும், இஸ்லாமியர்கள் வரவே கூடாது என்று இந்தச் சட்டத்தில் கெடுபிடி ஏதும் இல்லை. தேவை இருப்பின் அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து இந்திய குடியுரிமை பெற முடியும். ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய  ஆறு மதத்தினருக்கு விசேஷமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அடைந்துள்ள பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே. இந்தியாவை விட்டால் அவர்களுக்கு நாதி ஏது?

7. அப்படியானால், பாகிஸ்தானில் அகமதியாக்களும் ஷியாக்களும் முஸ்லிம்கள் என்றபோதும் அங்குள்ள ஷன்னி முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே? அவர்களை இந்தியா புறக்கணிப்பது மதரீதியான பாரபட்சம் ஆகாதா?

பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு; மதரீதியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள நாடு. ஷியாக்களும் அகமதியாக்களும் இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள். ஒருகாலத்தில் அவர்களும் சேர்ந்துதான் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, இஸ்லாம் மதத்தின் உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் மோதலுக்காக நாம் பரிதாபப்பட முடியாது. அது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் இந்தியா தலையிடக் கூடாது.

இருப்பினும் தஞ்சம் வேண்டி வந்தால், பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு அளிக்கப்பட்டது போல புகலிடம் அளிக்கத் தடை ஏதும் இல்லை. தவிர, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்துவரும் வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே எந்த அரசும் செயல்பட முடியும். எதிர்காலத்தில் அகமதியாக்கள் இந்தியக் குடியுரிமை கோரினால், அதை அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

8. அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் தற்போதைய குடிமக்கள் திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏன்?

அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு முகாமில் தங்கள் ஆதாரங்களுடன் திரண்ட மக்கள்.

1951 முதல் 1971 வரை, அண்டை நாடான கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய பங்களாதேஷ்) லட்சக் கணக்கான ஹிந்து, முஸ்லிம் மக்கள் அகதிகளாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவினர். அவர்கள் வங்கமொழி பேசியதால் மேற்கு வங்கத்தில் பிரச்னை ஆகவில்லை. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேகப் பண்பாட்டு அடையாளங்களும் தங்கள் அரசியல் அதிகாரமும் இந்த அகதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதிய அஸ்ஸாம் மாநிலப் பிரிவினைவாதிகள் 1979 முதல் 1985 வரை நடத்திய வன்முறைகளால் 900க்கு மேற்பட்டோர் அங்கு உயிரிழந்தனர். அதையடுத்து, 1985இல் அஸ்ஸாம் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அப்போதைய மத்திய அரசுக்கும் (ராஜீவ் காந்தி பிரதமர்) அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்துக்கான தே.கு.பதிவேடு உருவாக்கப்பட்டு, 1971 மார்ச் 25க்குப் பின்னர் அம்மாநிலத்தில் நுழைந்தவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.

பிற மாநிலங்களைப் பொருத்த வரை, 1951ஆம் வருடத்துக்குப் பின் இந்தியாவுக்குள் வந்தவர்கள் அந்நியர்களாவர். (அதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது வேறு விஷயம்). அஸ்ஸாமிலோ, 1971க்குப் பிறகு வந்தவர்கள், 1985 வருடத்திய ஒப்பந்தப்படி அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமே நேரடிக் கண்காணிப்பில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. இப்போதைய கணக்கெடுப்பின்படி, சுமார் 19 லட்சம் பேர் அஸ்ஸாம் தே.கு.பதிவேட்டில் தகுந்த ஆதரங்களை சமர்ப்பிக்காததால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் உண்டு. அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேக நலனுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, குடிமக்கள் திருத்தச் சட்டப்படி புதிய குடியுரிமை பெறுவோர் அங்கு குடிபுக முடியாது.

9. வேறு சில வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு விலக்கு உள்ளதா?

ஆம். பழங்குடியின மக்கள் மிகுந்த மேகாலயம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின்படி, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லாது. அதாவது, இம்மாநிலத்தவர் அல்லாத ஒருவர் புதிதாக இம்மாநிலங்களில் யாரும் குடிமகனாக முடியாது. அதேபோல, உள்நுழைவு உரிம அனுமதிச் சட்டம் (Inner Line Permit) கொண்டுள்ள அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் 370வது ஷரத்தின் படி இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

10. இந்தியாவின் அண்டைநாடான ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சட்டத்தின் ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்.

இந்த சட்டத் திருத்தம் மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (ஸ்ரீலங்கா) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் குடும்பத்துடன் ஸ்ரீலங்கா செல்லும் ஈழத் தமிழர்கள் பலர் உள்ளனர். மேலும், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுகால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள். இன்று அரசியல் சூழல் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளும் இப்போது இல்லை. எனவே மாறியுள்ள சூழலின் அடிப்படையில், நட்பு நாடான ஸ்ரீலங்கா அரசுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.

1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பலர் அந்நாட்டுக்கே திரும்பிவிட்டனர். தற்போது, 107 இலங்கை அகதி முகாம்களில் சுமார் 64,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீள அவர்களது நாட்டிலேயே குடிபுகச் செய்வதுதான் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்க உதவியாக இருக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை அளிப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இருப்பினும், இப்போதுதான் இதற்கான விவாதம் துவங்கி உள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே, ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படின் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டுகோளை முன்வைத்தால் அவர்களுக்கென புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே விவாதத்தைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழகத்தில் நீலிக் கண்ணீர் விடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஏன் அவர்களை இந்தியக் குடிமக்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையில், அதற்கான வேண்டுகோள் ஈழத் தமிழ் அகதியிடமிருந்து இதுவரை வரவில்லை. அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் கனவுடன்தான் அகதிகள் முகாம்களில் தவிக்கின்றனர்.

11. இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சிலர் கூறுகிறார்களே? நீதிமன்றம் இதற்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதா?

வன்முறையால் அரசையும் நீதித்துறையையும்
மக்களையும் மிரட்ட முயலும் சமூக விரோதிகள்.

கண்டிப்பாக இல்லை. அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணைப்படி, குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டது. இதைத் திருத்த அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள 11வது ஷரத்தின்படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யாருக்கு குடியுரிமை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல் சாசனம் கூறுகிறது. அதாவது அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை வலிமை கொண்ட மோடி அரசு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill- CAB) நிறைவேற்றி, சட்டமாக்கி (CAA) இருக்கிறது. இதனைத் தடை செய்ய முடியாது என்பதே ஹரீஷ் சால்வே போன்ற மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்து.

அடுத்த குற்றச்சட்டு மதரீதியான பாரபட்சம் தொடர்பானது. இந்திய அரசியல் சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இதனையும் குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) மீறவில்லை. இதில் எந்த இடத்திலும் மதப் பாகுபாட்டுக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம், ஏற்கனவே இந்தியாவில் உள்ள குடிமக்கள் தொடர்பானது அல்ல. இது மூன்று முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்ட ‘சிறுபான்மை’ இந்திய வம்சாவளியினருக்கான விசேஷச் சட்டம். இதனையும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றல்ல. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தவிர, குடிமக்கள் பதிவேட்டின் மூல ஆதாரத்தில் மதம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.

12. இந்தச் சட்டத்தை தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனரே! அது சாத்தியமா?

வன்முறைக்கு வித்து:
மேற்கு வங்கத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே
தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி.

நிச்சயமாக இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. இதை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாநில அரசுகள் அதற்கான விலையை அரசியல் சாசனப்படி கொடுக்க வேண்டியிருக்கும். மத்திய அரசுக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைக்க இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அதில் உச்ச நீதிமன்றமும் தலையிடாது. இதேபோலத் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிகளையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால், பரபரப்புக்காக சிலர் வாய்க்கு வந்தபடி அறிக்கை வெளியிடுகின்றனர். உண்மை என்னவென்று அவர்களுக்கே தெரியும்.

13. எத்தனையோ பொருளாதார சீர்திருத்தப் பணிகள் காத்திருக்கையில்,  இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் என்ன அவசரம்?

நல்ல கேள்வி. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்றே தெரியாத நிலையில் தான் நமது நாடு இருக்கிறது என்பதே அவமானம். இந்தப் பணி கடந்த 70 ஆண்டுகளில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யக்கூட நரேந்திர மோடி அரசு வர வேண்டி இருக்கிறது. இதையும் 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில் மோடியால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அப்போது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்தது. தற்போது ஜனநாயகரீதியாக தேர்தல்களில் தனது வெற்றிகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளதால்தான் இவை சாத்தியமாகி உள்ளன. இதனை அசுரப் பெரும்பான்மை கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் செய்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திராது.

நமது குடிமக்களின் நிலை தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கான திட்டங்களை விரயமின்றித் தீர்மானிக்க முடியும். எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் அத்தியாவசியமாகும். அதேபோல, இந்த நாட்டை நம்பி அடைக்கலம் புகுந்தோர் எத்தனை நாட்களுக்கு அவநம்பிக்கையுடன் காத்திருப்பது? அவர்களும் நமது சகோதரர்கள் அல்லவா? அவர்களது கண்ணீரைத் துடைக்க இனியும் தாமதிப்பது சரியா?

இவ்விரு சட்டங்களும் தனித் தனியானவை. என்றபோதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளவை. எனவே, ஏற்கனவே தாமதத்தால் மறுக்கப்பட்ட நீதியை அவர்களுக்கு வழங்குவதே நியாயமாக இருக்க முடியும்.

14. தே.கு.பதிவேடு, கு.தி.சட்டம் ஆகிய விவகாரங்களில் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற பாஜக அரசு தவறிவிட்டது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றனவே?

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றத்தின்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்.

இந்திய ஊடகங்கள் பாஜக அரசின் எந்த நல்ல திட்டங்களை இதுவரை ஆதரித்திருக்கின்றன? ‘ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்ற பழமொழி உண்டு. இடதுசாரி மயமான ஊடகங்களுக்கும், புரட்சிகர ஜனநாயகம் பேசும் லிபரல்களுக்கும் பாஜக எப்போதும் எட்டிக்காயாகவே இருந்துள்ளது. இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் இத்தகைய தவறான நபர்களால் வழிநடத்தப்படுகின்றனர். அதுவே இப்போதைய கலவரங்களுக்கு காரணம். உண்மை நிலையை நாம் மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, இந்த தவறான நபர்களின் அபத்தங்கள் வெளிப்படும். இஸ்லாமியர்கள் உண்மை நிலையை உணர வேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கத் தயார் என்று அதனால்தான் அரசு தற்போது கூறி இருக்கிறது.

15. முன்கூட்டியே இஸ்லாமியர்களுடன் பேசி இருந்தால் தற்போதைய கலவரங்களைத் தடுத்திருக்கலாம் என்ற கருத்து சரியா?

லோக்சபாவில் அதீத பலத்துடன் நிறைவேறிய கு.தி.ச.மசோதா.

உண்மையில், இந்தக் கலவரத்துக்கான அடிப்படை வெறுப்புணர்வு, அயோத்தி ராமஜன்மபூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோதே (நவ. 9, 2019) துவங்கிவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டமும் முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றையும் அப்போது எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அமைதி காத்தன. அப்போது அடங்கி இருந்த அடிப்படைவாத சக்திகள், இப்போது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் வன்முறையில் இறங்கி உள்ளனர் என்பதே யதார்த்த உண்மை.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அனைவரின் கருத்துகளும் செவி மடுக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஜனநாயகரீதியாக நிறைவேறி இருக்கிறது. இப்போது அரசியல் சாசன அடிப்படையில் அது மீறப்பட இயலாத சட்டம். எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்ப்பதாகக் கூறாமல், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை (CAB) எதிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தவர்களின் மனுக்களை உடனடியாக விசாரிக்கவும், இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிமன்றங்கள் மறுத்ததில் இருந்தே, இந்தச் சட்டத்தின் அரசியல் சாசன அடிப்படை வெளிப்படுகிறது.

ராஜ்யசபாவிலும் நிறைவேறிய கு.தி.ச. மசோதா.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மக்கள் மன்றத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையாக முன்வைத்து தேர்தலில் வென்றுள்ளது.  அதனை நிறைவேற்றுவது பாஜகவின் கடமை. இதுவும் இஸ்லாமியர்கள் அறிந்ததே. அவர்களும் வாக்களித்ததால்தான் இந்த அரசு முழுப் பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டுமானால், இதனை விரும்பாதோர் ஜனநாயக முறையில் வென்று சட்டத்தைத் திருத்துவது தான் சரியானது. (ஷாபானு ஜீவனாம்ச மறுப்பு சட்டம் உதாரணம்). அதை விடுத்து வன்முறையில் இறங்கி மிரட்டல் அரசியலைக் கைக்கொள்வது முறையல்ல. இதனால் பாஜகவுக்கு மக்கள் மன்றத்தில் மேலும் ஆதரவு கூடும் என்பதை விரைவில் எதிரிகள் உணர்வார்கள்.

16. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட ஹிந்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற முஸ்லிம் தலைவர்களின் கருத்து உண்மையா?

உண்மையல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளோருக்கு (சுமார் 19 லட்சம்) அம்மாநிலத்தில்தான் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அது அம்மாநிலத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக சாத்தியமில்லை. எனவேதான் விடுபட்டவர்களின் ஆவணச் சரிபார்ப்புக்கு மேலும் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அது தனி விவகாரம்.

அரசு மதிப்பீட்டின்படி, மூன்று முஸ்லிம் நாடுகளில் இருந்து தப்பிவந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் சுமார் 30,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும். இதனை தவறாகப் பிரசாரம் செய்வது அரசியல் சாசனத்தை மீறுவதாகும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும்போதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிக்கல்கள் தெரியவரும். அப்போது நடைமுறை அனுபவத்திலும், சூழ்நிலைக்குத் தக்கபடியும் மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு அந்தப் பிரச்னைகளைக் களைய வேண்டும்.

17. அண்டை நாடான மியான்மரில் மதக்கலவரங்களால் வெளியேறும் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏன் இந்த சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

அஸ்ஸாமில் கு.தி.சட்ட ஆதரவுப் பேரணியில்
அம்மாநில முதல்வர் சர்வானந்த் சோனோவால்.

இதுபோன்ற கேள்விகளை இந்தியாவில் மட்டும் தான் கேட்க முடியும். ரோஹிங்க்யா முஸ்லிம்களால் மியான்மரில் ஏற்பட்ட பிரச்னைகளால்தான் அங்கு கலவர்ம் ஏற்பட்டது; அந்நாட்டு அரசும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது. அதனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை அண்டை நாடான பங்களாதேஷ் (அது ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும்) ஏற்கவில்லை. மற்றொரு முஸ்லிம் நாடான மலேசியாவும் அவர்களைத் துரத்துகிறது. எனவே அவர்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் முறைப்படி வந்த அகதிகள் அல்லர். எனவே மியான்மர் நாட்டுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதே முறையானது. அந்நாட்டு அரசும் அவர்களை திரும்ப ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. ரோஹிங்க்யா முஸ்லிம்களை பாகிஸ்தானோ, பங்களாதேஷோ கூட வரவேற்காத நிலைக்குக் காரணம் என்ன என்று நமது ‘லிபரல்கள்’ ஆராய வேண்டும்.

அடுத்து சீனாவில் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ள உய்கர் முஸ்லிம்களுக்கும் புகலிடம் கொடுக்குமாறு கோரிக்கைகள் நமது இடதுசாரிகளால் முன்வைக்கப்படலாம். அவர்களின் அதிகாரப்பசி அப்படிப்பட்டது. ஆனால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நுழையவும், குடிமகன் உரிமை பெறவும் இந்தியா சந்தை மடமல்ல.

அகதிகள் விவகாரம் உலகளாவிய பிரச்னையாகி வருகிறது. இதனைத் தீர்க்க இந்தியா மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.

18. ‘வசுதைவ குடும்பகம்’; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றெல்லாம் சொன்ன பாரதத்துக்கு, பிற நாடுகளால் கைவிடப்பட்ட மக்களைக் காக்கும் தார்மிகக் கடமை இல்லையா?

கண்டிப்பாக உண்டு. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டிய முதன்மைக் கடப்பாடும் இந்திய அரசுக்கு உண்டு. தனக்கு மிஞ்சியே தானம் என்ற பழமொழி உண்டு. அதை நிறைவேற்றிய பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக உறவுகள், பண்பாட்டு மாற்றங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை உத்தேசித்த பிறகு, வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு கருணை காட்டலாம். அதற்கான காலம் வரும்போது பாரதம் தனது கடமையை நிச்சயம் நிறைவேற்றும்.

18 Replies to “தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்”

  1. The explanation is Crystal clear. This should be printed and distributed by all Nationalistic and Patriotic citizens.

  2. This is the right time to identify the Nationalists and traitors. Indian intelligence agencies have Failed to nose the impending danger in the form of fundamendalists instigated by forces inimical to the interests of the nation from with in and with out.

  3. மிக அருமையான விரிவான விளக்கம் ஊடகங்கள் CAA AND NRC சட்ட உண்மை விவரங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவேன்டும்

  4. அருமையான விளக்கம் இதை படித்த பின்பு முழுமையாக புரிந்து கொண்டேன் நன்றி

    I support CAA & NRC

  5. இச்செய்தியினையும் விளக்கத்தினையும் எப்படிப் பொதுப்புத்தி உள்ளவர்களிடமும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களிடம் கொண்டு செல்வதூ? அவர்களுக்குப் புரிய வைப்பது?

  6. “இந்தப் பதிவேட்ட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் காரணமாகவே முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறைகளில் இறங்கி உள்ளனர்.”

    This single sentence shows just how misinformed Hindus are with respect to Islamists and how they operate. Get this through your head fellas – Islamists do not need any reason to riot. They riot because they want to put the kaafir in his place. They are openly chanting ‘kaafiron ze azaadi’, ‘bas allah ki naam rahega’, and you are saying that they are being misled by the opposition? There is a limit to being naive!

  7. Anunknownman on December
    You hit the nail in it’s bloody head. Indian Muslims very well know that that this issue is not about their right to remain as Indian citizens. Riot for the sake of rioting to keep this Dhimmy Kaffirs in place and nothing more.Majority of JNU did not have clue about CAA/NCR when asked by TV reporters.But they were happy to protest and riot! It is shocking to see our younger generation have turned out to be total idiots and are clueless regarding national issues!!!

  8. Anunknownman
    You hit the nail on it’s bloody head. Hindus are dumb and are dreaming of this mythical Islamic compassion and brotherhood.When will they ever learn????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *