ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

6 – அக்னி

ரிக் வேதம் குறிப்பிடும் நான்முகக் கடவுளில் முதலாவதாக வரும் அக்னி பற்றிக் கூறியுள்ள முனிவர்கள்: த்ரித ஆப்தயர், ப்ரஹஸ்பத்ய பரத்வாஜர், கதின விஸ்வாமித்ரர், வாமதேவ கௌதமர், புத மற்றும் கவிஷ்திர ஆத்ரேயர்கள், திர்காத்மஸ் அச்யுதர், ஸோமஹுதி பார்கவர், தாருண ஆங்கிரஸர், மைத்ரவாருணி வஸிஷ்டர் ஆகியோர் ஆவார்கள்.

உலகியல் தொடர்பான உடல்-உயிர்-உள்ளம் மற்றும் தெய்வீகத் தொடர்பான சத்-சித்-ஆனந்தத்தின் இடையில், இவ்விரண்டுடனும் தொடர்புடைய சிற்றறிவாகிய நமது புத்திக்கு சக்தி தரும் பேறறிவாகிய “சித்” எனும் நமது உணர்வே இந்த அக்னி. எவ்வாறு அக்னி ஓர் உருவோ, எல்லையோ இல்லாது எங்கும் பரவும் தன்மை கொண்டதோ, அது போலவே “தான்” என்னும் நமது உணர்வும் அதே தன்மை படைத்தது. அது காலம்-தேசம் என்ற வரைமுறைகளைக் கடந்து, எங்கும் பரந்து எப்போதும் இருக்கும் தன்மை கொண்டது. ஆனால் அதை ஒரு தனி மரமாக “நான்” எனும் எண்ணத்தில் தற்போது அடைத்து வைத்திருக்கிறோம். அந்த அக்னியின் ஒரு சிறு பொறிதான் நம் ஒவ்வொருவரின் புத்தியும் ஆகும்.

இங்குதான் உலகம்-தெய்வம் என்று நாம் அறிந்துள்ளவைகளின் தொடர்பும் தொடங்குகிறது. புத்தியின் இயக்கம் தடைபடுமானால், எண்ணங்கள் எழாமலோ, தாறுமாறாகவோ போய், உயிர் இருந்தும் உடலின் இயக்கம் தடைபடும். மாறாக புத்தி சீராக இயங்குமானால், மற்றனைத்தும் சீராக இயங்கி, வளர்ந்து, விரிவடைந்து ஒருவனின் உள்ளம் உலகியலில் இருந்து இறையியல் நோக்கித் திரும்பும் வாய்ப்பு அமையும். அதன் அளவு, அந்த “சித்”தில் இருந்து வரும் பொறியாகிய அருளை நமது புத்தியால் பெருக்கும் செயலின் அளவைப் பொருத்து அமையும். ஒரு சிறு பொறியும் எவ்வளவு வலிமை கொண்டது என்பதை மகாகவி பாரதியாரின் இப்பாடலின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

“அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு, தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?..”

அந்த உணர்வு ஒருவனுக்குப் பெருகும் போது, முன்பு “நான்-நீ” என்று தனி மரமாகவும், பற்பல இனங்கள் கூடி வாழும் தோப்பாகவும் உலகில் உள்ள அனைத்தையும் கண்ட அவன், அனைத்து சீவராசிகளில் காணப்பட்ட வேற்றுமைகளும் வெந்து அழிந்து, அனைத்தும் ஒன்றே என்று தணியும் காட்சியைக் காண்பான். அதற்கு உத்திரவாதம் இருக்கிறதா என்று கேட்போர்க்கு அவரவர் தினசரி அனுபவத்தில் நடப்பதையே காட்டலாம்.

எவருக்குமே ஒன்றைப் பற்றிக் கேட்டவுடன், அது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பானதே. அதைப்போன்ற சந்தேகம் ஒரு பொருளைப் பற்றியும் தோன்றலாம். அப்போது அவர்கள் அந்தப் பொருள் இருப்பதற்கான நிரூபணம் எதையாவது கேட்பார்கள்; அல்லது தேடுவார்கள். இது உலகில் உள்ள எந்தப் பொருளைப் பற்றிய உண்மை என்றாலும், ஒரேயொரு பொருளைப் பற்றி எதுவும் கேட்காமல், அது இருப்பதை அவர்களாகவே உண்மையென்று ஏற்றுக்கொள்வார்கள். அது “தான் இருக்கிறேனா?” என்று தன்னைப் பற்றியே கேட்டுக்கொள்ள மாட்டார்கள். மேலும் தான் இருப்பதை சந்தேகப்படாமலேயே ஒத்துக்கொள்ளவும் செய்வார்கள். இதன் உண்மையைப் பின்னர் அலசலாம்.

சித் என்னும் பேரறிவாகிய அக்னியின் ஓர் ஒளிக் கீற்றால் இயங்கும் புத்திக்குத் தான் இருப்பது நன்கு தெரிகிறது. அது எப்போது? உலகம் இருக்கும்போது மட்டுமே அந்த அறிவு இருக்கிறது. அப்போது அவன் தனது விழிப்பு நிலையில் (ஜாக்ரத்) இருக்கிறான். அந்த நிலையிலேயே அவனால் எவ்வளவு காலம் இருக்கமுடியும்? ஒரு கட்டத்தில் அவன் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றாகத்தானே வேண்டும்? அந்தத் தூக்க நிலையில் அவன் தான் எனும் தன்னைப் பற்றிய உணர்வோடு, உலகத்தையும் இழக்கிறான். அவ்வாறு இழந்தாலும், தூக்கத்தில் இருந்து விழித்ததும் “நல்லாத் தூங்கினேன்” என்று (விழிப்பு நிலையில்) சொல்வதால், அவன் ஆழ்ந்த தூக்கத்தில் (சுஷுப்தியில்) தன்னையும் உலகத்தையும் இழந்தாலும், ‘நல்லா’ என்று சொல்லும் அளவிற்கு ஓர் ஆனந்த அனுபவம் அவனுக்கு வாய்த்திருந்தது என்றுதானே அர்த்தம்?

மேலும், அவன் தினம் தினம் அதை அனுபவிக்கவில்லை என்றால், அவனால் மறுநாளைய வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாது என்றும்தானே அர்த்தம்? அதாவது, விழிப்பு நிலையில் புத்தியுடன் இயங்கும் உலக வாழ்வை அவன் “நான், எனது, நான்-நீ” என்ற பல விதமான எண்ணங்களுடன் வாழ்கிறான். அவன் தனது உறக்கத்தில் தன்னையும் அறியாது “தான் தானாக” இருக்கும் ஆனந்த அனுபவத்தைப் பெறுகிறான். அதாவது “தான்” ஆகிய அக்னியில் இருந்து தெறித்து வரும் புத்தியால் இயங்கும் உலகம் இருக்கும் வரை நான்-நீ என்ற வேறுபாடுகள் தெரியும். அது மறைந்து “தான் தானாக” இருக்கும் நிலையில் ஆனந்தம் மட்டுமே இருப்பதோடு, பேதங்கள் அனைத்தும் மறைந்து, சகல சீவராசிகளும் ஆனந்தத்தில் திளைக்கின்றன.

அதனால் உண்மையை அறிய புத்தி தொடக்கத்தில் உதவும். பின் அதுவும் மறைந்த பின்பே தெய்வீக இயலை உணர முடியும் என்பதையே ஜாக்ரத்-சுஷுப்தி நிலைகள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்விரண்டு நிலைகளுக்கும் இடையே நமக்கு வரும் கனவு (ஸ்வப்ன) நிலையும் நமக்கு சில உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன.

கனவு நிலையைப் பற்றி நாம் காண்பதற்கு முன், நனவு-உறக்க நிலைகளில் நம் அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் நாம் ஓர் ஆனந்தத்தை அனுபவிக்கிறோமே தவிர, அதைப் பற்றி அப்போதே நாம் சொல்லும் நிலையில் இல்லை. அதாவது அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அதற்கு “அவித்யா” என்றும் சொல்வார்கள்.

உலக விஷயங்களைப் பற்றியது என்றாலும், பகலில் அறிவு இருப்பது போல, இரவில் அறியாமை இருக்கிறது. பகல்-இரவு, அறிவு-அறியாமை போலவே சந்திரனின் வளர்பிறை-தேய்பிறை, சூரியனின் உத்ராயணம்-தட்சிணாயனம், பிறப்பு-இறப்பு, வளமை-வறுமை, சேர்தல்-பிரிதல் என்ற பல்வகையான இருமைகளையும் நனவு நிலையில் நாம் உணர்கிறோமே தவிர, உறக்க நிலையில் உணர்வதில்லை. அந்த நிலையில், அவை எதுவுமே இல்லாது, அனைத்து சீவராசிகளும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவித்து அதில் மூழ்கி இருக்கின்றன; ஆனால், அதைப் பற்றிய அறிவுதான் அப்போது இல்லை. ஆனால் அனைவரும் சீராக ஒரே மாதிரி இருக்கிறோம். எந்த ஏற்றத் தாழ்வுகளும் நம்மிடையே அப்போது இல்லை. அந்த ஆனந்த நிலையில் நமக்கு அறிவும் கைகூடினால், அதுவே நாம் பெறுதற்கரிய பேறான தெய்வீக நிலையில் நிற்றல் என்றாகும்.

அதாவது நமது புத்தியைக் கொண்டு, நமது முதல் மூன்று நிலைகளைக் கடந்து இறுதி மூன்று நிலைகளை அடைவதே அந்த முயற்சியாகும். அதன் பயணம் சித் ஆகிய அக்னியில் இருந்து வரும் பொறி, நம் புத்தியை எப்படி வழி நடத்துகிறது என்பதைப் பொறுத்தது. அதற்காகவே தினம் தினம் நமக்கு உலகம் பிறக்கிறது; அது தவிர தன் நிலையாமையையும் காட்டுகிறது. அப்படியும் ஒருவன் தன் வாழ்நாளில் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவனுக்கு மறுபிறவியையும் தருகிறது. இதை நாம் “உஷஸ்” எனும் விடியல் வேளை பற்றிய விளக்கத்தின் போது கண்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் என்றாலும், அது கூடிய விரைவில் வாய்ப்பதற்கு அந்த அக்னி கொழுந்துவிட்டு வளரும் வகையில், நம் புத்தியின் இயக்கம் வளரவேண்டும்.

புத்திக்கு ஒரு புறம் கீழ்நிலையில் இருப்பது உலகவியல்; மறுபுறம் மேல்நிலையில் இருப்பது இறையியல். ஒவ்வொருவரும் உலகியலில் ஈடுபட்டு மேல்நிலையை அடைவதே வாழ்வின் இலக்காகும். அவ்வாறு செய்வதற்கு புத்தி இடம் கொடுக்காது போனால், அவருக்கு உலக வாழ்வும் அதையொட்டிய அனுபவங்களுமே மேலும் மேலும் சித்திக்கும்.

அக்னி இருக்கும் பொருளை எவ்வாறு பிடித்தாலும் அது மேல் நோக்கியே எரிவது, ஒருவனது ஆன்மிகப் பயணம் மேல் நோக்கியே இருக்கவேண்டும் என்பதையே காட்டுகிறது. அக்னிக்கு உருவம் கிடையாது என்பதோடு, அதனுள் சேரும் எதையும் தனதாக்கிக்கொண்டு, வேறுபாடுகள் கொண்ட அனைத்தையும் ஒன்றாக்குகிறது. அக்னியாகிய நம் உணர்வும் எதையும் ஒன்றாகப் பார்க்கும் தன்மையை நமக்கு அருளும்.

“தான்” ஆகிய உணர்வின் ஒரு மங்கலான ஒளியான “நான்” எனும் அகங்காரத்திற்கே வேறுபாடுகள் தெரியும். ஏனென்றால் “நான்” என்பது நம் உறக்க நிலைக்குப் பின் தோன்றும் முதல் எண்ணமே. அதன் தொடர்ச்சியாக உடனே பின்னால் எழுவதுதான் உலகம். எண்ணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும்போது நாம் அனுபவிப்பது ஆனந்தமே. இந்த நிலையை ஒரு சிலர் விழிப்பு நிலையில் சில நொடிகளேனும் அனுபவித்திருக்கலாம்.

“மனம் என்பது ஆத்ம சொரூபத்தில் உள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கிறபோது, தனியாய் மனம் என்றோர் பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்றோர் பொருள் அன்னியமாய் இல்லை” என்று ரமணர் “நான் யார்” தொகுப்பில் கூறுகிறார்.

“ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக்கொள்கிறது” என்றும் ரமணர் கூறுகிறார். இதுதான் கனவில் நடக்கிறது என்பதை நமது அனுபவத்தில் நாம் அறிவோம்.

நம் கனவுக் காட்சியில் நாமா இருக்கிறோம்? நம்மைப் போன்றதொரு ‘கனவு நான்’ என்பவனை உருவாக்குகிறோம். நாம் அறிந்த அல்லது அறியாத நபர்களையும், நிகழ்வுகளையும் அதேபோல உருவாக்கிக்கொண்டு, ஒரு சினிமாவைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு, விழித்தவுடன் அவை எதுவும் உண்மையல்ல என்று உணர்கிறோம். கனவு காணும் மட்டுமே அது நமக்கு ‘உண்மை’.

அவ்வாறு நாம் கண்டதெல்லாம் நம் மனதில் படிந்திருந்தவைகளின் சுவடுகள். மனத்தில் மாசு இல்லையென்றால் அப்போது கனவு கிடையாது; ஆழ்ந்த உறக்கம்தான் இருக்கும். ஆனால் கனவு நிகழும்போது, அப்போது ஒருவன் அதைப் பார்த்து அனுபவித்துக்கொண்டிருந்தான் அல்லவா? அதாவது நம் சித் எனும் உணர்வாகிய அக்னி மங்கலாக தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது என்றுதானே அர்த்தம்? அது புத்திக்கு ஒளி தருவது போல, உடலுக்கு உயிர் எனும் சக்தியையும் கொடுக்கிறது. உயிர் பிரியும் சமயம் உடலின் அந்த சக்தி தரும் வெப்பமும் தணிகிறது.

இவ்வாறாக நாம் காணும் கனவுக் காட்சிகளும், அதன் தன்மைகளும் நமக்குப் பல பாடங்களைப் போதிக்கின்றன. நாம் ஏன் உலகியல் விட்டு இறையியல் பக்கம் முன்னேறவேண்டும்? அதுவே ஏன் நமது வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும்? ஏனென்றால் உலகியலில் பயணம் செய்யும் போது, நம் உணர்வாகிய அக்னி நமக்கு உயிர் சக்தியைக் கொடுத்து, நம்மைப் பல விதமான செயல்களில் ஈடுபட வைக்கும். அவை அனைத்துமே நமது எண்ணங்களின்படி, நம் மனத்தில் படிந்துள்ள வாசனைகளின்படி, ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்துகொண்டே வரும். ஒன்று முடிந்ததும் மனம் நிறைவு அடைந்து, உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் ஆனந்தத்தை அடைவோமா என்றால், நீடித்து நிற்கும் அளவுக்கு அது இருக்காது என்றுதான் கூறமுடியும்.

ஆக உலகியல் இன்பங்கள் நிலையற்றவை என்றாகிறது. அவ்வாறானால் நிலைத்து நிற்கும் ஆனந்த நிலையை அனுபவிப்பதற்கு, உண்மையை உணர்த்தும் இறையியலை நோக்கியே நாம் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறாக நிலையற்றவைகளையும், நிலைத்து நிற்பவைகளையும் நம் புத்தி பிரித்துக் காட்டுகிறது என்று கூறலாம். இந்த முக்கியமானதொரு பாடத்தையே, நமக்கு ஓர் அனுபவமாக, நம் கனவு நிலை நமக்குக் கற்பிக்கிறது.

எவ்வாறு என்றால், நாம் கனவு காணும் வரை நாம் காண்பதை உண்மை என்றுதானே நினைக்கிறோம்; அது உண்மையல்ல என்பது கனவு கலைந்து விழித்த பின்னால் தானே தெரிகிறது? அதேபோல நிலையாமையில் ஊறித் திளைக்கும் நமக்கு, சிற்றறிவு பெருகி பேரறிவில் நிலைக்கும் போது தானே உலகியலின் உண்மை பற்றித் தெரியவரும்? அதுவரை அந்தச் “சித்”தின் மங்கிய பொறியான “நான்” எனும் அகந்தையால் உந்தப்பட்டு நடக்கும் நிகழ்வுகளே உண்மை என்ற மயக்கத்தில்தான் நாம் மூழ்கியிருப்போம்.

ஓர் அக்னிக் குஞ்சு காட்டைப் பொசுக்கும் அளவிற்கு வருவதற்கு, காலம் கனிய வேண்டும்; அறிவு முதிர வேண்டும். அதனால் உண்மையைக் காணத் துடிக்கும் அளவிற்கு தவச் சீலனின் முயற்சி கொழுந்துவிட்டு எரிய வேண்டும். அதில் தன்னையே தியாகம் செய்யும் அளவிற்கு அவன் வளரவேண்டும். ஹோம யக்ஞங்களில் அக்னிக்கு நெய் ஊற்றி அதைக் கொழுந்துவிட்டு எரியச் செய்வது, அவன் தன் அகந்தையை ஞானத் தீயில் பொசுக்குவதையே குறிப்பால் உணர்த்துகிறது. அவனது முயற்சி விடாமல் எப்போதும் தொடர்ந்து நடக்கவேண்டும் என்பதைக் குறிப்பாகக் காட்டுவதற்காகவே, அந்தணர்களின் வேள்வித் தீ அணையாது தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆக வெளியுலகில் அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோம யக்ஞங்கள், நம் உள்ளத்தளவில் புத்தியின் மூலம் நம்மையே தியாகம் செய்யும் அளவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய ஒரு குறியீடுதான். அதில் முதன்மையானது உலகியலில் “நான்” என்னும் எண்ணம் அழியும் வகையில் நமது சிந்தனை-சொல்-செயல் மூன்றும் ஒன்றாகச் செயல்படுவது. அப்போது மட்டுமே, “தான்” எனும் தெய்வீக உணர்வு எஞ்சி நிற்கும். அந்த நிலை கிட்டினால் மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ள எதுவும் வேறுபட்டதல்ல, அனைத்தும் ஒன்றே என்ற உண்மை உணரப்படும். அது நமது புத்தியால் உலகில் உள்ளவைகளைப் பற்றிக் கூறுவதோ, அறிந்துகொள்வதோ அல்ல; உள்ளத்தால் உணரப்படும் அனுபவம் ஆகும்.

அவ்வாறு உணர்ந்ததாலேயே, இதை விளக்கிக் கூறிய ரிஷி, அந்த நிலையில் தான் “அனைத்து உலகின் நண்பன்” என்ற அர்த்தம் தரும் வகையில், விஸ்வாமித்திரர் என்று தன் பெயரை வைத்துக்கொண்டார். விஸ்வம் என்றால் ‘அனைத்தும்’ என்றும் மித்திரன் என்றால் ‘நண்பன்’ என்றும் அர்த்தம். நம் உறக்கத்தில் மட்டும் ஓர் அறியாமையில் நாம் அனைவருடனும் சமநிலை காண்கிறோம் என்றில்லாமல், நனவு நிலையிலும் அறிவுடன் அந்த உணர்வு நமக்கு இயல்பாகவே அமையவேண்டும்.

அதனாலேயே, நான்-பிறர் என்ற தனியுணர்வும், உலகம் என்கிற அமைப்பும் நமது அனுபவமாக ஆகும் வரை நாம் உலகியலில் ஈடுபட்டு, ஆன்ம உணர்வு அடைவதற்குப் பாடுபட வேண்டும். அதற்கான உயிர்ச் சக்தியைத் தந்து, அந்த வழியில் நாம் செல்வதற்குப் புத்தியை அளிப்பதே நம்முள்
என்றும் ஒளிரும் அக்னியாகும்.

நாம் ஒவ்வொருவருமே அந்த நிலையில் உதித்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் உலகியலில் ஆர்வம் மீறி, நம் உண்மையான தெய்வீக நிலையை மறந்தவர்களாக இருந்து, மீண்டும் மீண்டும் புதைமணலில் சிக்கியவர்கள் போல் உலகியலில் ஆழப் புதைந்து போகிறோம். நமது உண்மை நிலையை உணர்த்தவே, நம் உறக்கத்தில் ஓர் ஆனந்த அனுபவம் நிகழ்த்தியும், நம் கனவில் உலக அனுபவங்களின் நிலையாமையை எடுத்துக் காட்டியும் நம் கவனத்தை அந்தச் சக்தி திசை திருப்ப முயற்சி செய்கிறது. அதை உணராமல் “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று நாம் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அறிவுடன் கூடிய அனுபவம் என்று வாய்க்கிறதோ, அன்றே நாம் பிறவிப்பயனை அடைந்தவர்கள் ஆவோம்.

ஜோதி சொரூபமாக உதித்து பின்னர் மலையாகக் குளிர்ந்து நின்ற திருவண்ணாமலை, “அங்கி உருவாயும் ஒளி மங்கு கிரி” என்று கூறப்படும். அதில் அங்கி எனப்படுவது அக்னியே. அக்னி வளர்த்து வேத யக்ஞங்களைச் செய்து உண்மைகளை உணர்ந்த ரிஷிகளை வேத ஆங்கிரஸர்கள் என்பார்கள். ‘ஆங்கிரஸ’ எனும் சொல்லே பின்னர் கிரேக்க மொழியில் ‘ஆஞ்சலோஸ்’ என்றும், ஆங்கிலத்தில் ‘ஏஞ்சல்ஸ்’ என்றும் மருவி வந்தது. அந்தத் தேவதைகளே நம்மைக் காத்து நல்வழியில் நடக்க அருள்பவர்கள். நமது ஏழு நிலைகளிலும் நம்மை வழி நடத்தும் ஏழு ரிஷிகள் அவர்கள். உலகியலிலோ, தெய்வீக நிலையிலோ நாம் எவ்வாறு இருந்தாலும் எப்போதும் நமக்குத் துணை அவர்களே.

நாம் முனைந்து ஒரு செயலில் ஈடுபட்டு, அதைச் செய்து முடிக்க முயற்சிக்கும் போது நமக்கு இருக்கும் உத்வேகம் அந்த அக்னிச் சக்தியின் வெளித் தோற்றமே. அதை நாம் நமது விழிப்பு நிலையில் கவனித்து வளர்த்து வர, ஒவ்வொரு ரிஷியும் தங்களது கவனிப்பை மேலும் கூட்டிக்கொண்டே இருந்து அதைப் பற்றிய அறிவையும் நமக்குள்ளே வளர்ப்பார்கள். அவ்வாறு படிப்படியாகத் தெளிவு பெற்ற ஒருவனுக்கு விழிப்பு நிலையிலேயே ஆனந்த அனுபவம் கைகூடும்.

அதை ஒவ்வொருவரும் அடைவதற்காகவே உறக்கத்தில் இருந்து விழிப்பும் வருகிறது; அதற்கான செயல்களைப் புரிவதற்கென்றே உலகமும் பிறக்கிறது. இல்லை என்றால் உறக்கத்தில் அனுபவிக்கப்படும் ஆனந்தம் அறியாமையோடு இணைந்ததாக நின்றுவிடுகிறது. அதைப் புரிந்துகொள்ளாமல், உலகியல் இன்பங்களை மட்டுமே அறிந்துள்ளவனுக்கு, கனவுத் தோற்றங்களை உருவாக்கி, நம்மையே அதற்குச் சாட்சியாகவும் வைத்து, “பொய்-நான்” மற்றும் பல காட்சிகளையும் காட்டி, விழித்ததும் நமது உண்மையையும், உலகின் நிலையாமையையும் உணர்த்துகிறது. இதுவே ‘உஷஸ்’ எனும் விடியலின் பயன் ஆகும். ஏனென்றால் அப்போதுதானே ஆனந்தம் பற்றியோ, மறையும் கனவுலகம் பற்றியோ நமக்கு ஓர் உணர்வு வருகிறது?

அந்தப் பயன் எப்பிறவியில் வாய்க்கும் என்பது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது. நமது பாவனை எவ்வாறு அமைகிறதோ, அதன்படி நாமும் உருவாகிறோம் . உலகியல் தூல நிலைகளில் இருந்து, தெய்வீக இயல் நுண்ணிய நிலைகளை அடைந்தால் ஒழிய எவரும் தன் உண்மை நிலையையும் உணர முடியாது; உலகியல் துன்பங்களில் இருந்து விடுதலையையும் காண முடியாது. அதை எவ்வாறு அடைவது என்று தெரிந்துகொள்வதற்கு, நான்முக பிரமனின் அடுத்த முகமான இந்திரனைப் பற்றி நாம் அறியவேண்டிய அவசியம் எழுகிறது.

One Reply to “ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6”

  1. இந்த்கருத்துக்கள் ஆத்ம்சிந்தனை செய்வதற்கு வழிகாட்டியாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *