அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3

3.  வாக்குச் சீட்டுகள், எந்திரங்கள், மாநில வேறுபாடுகள்

இந்தியாவிலே வாக்குப் போடறது வேற, அமெரிக்காவுல ஓட்டுப் போடறது வேறன்னு பெருமையா மார்தட்டினேன்,  ஆனா, அதுல மண்ணுவிழறது மாதிரி ஒரு விஷயம் கிடச்சுது.  சொல்லட்டுமா?

என்ன ஒரு அரிசோனன், புரியாத பேர்வழியாக இருக்கீங்க?  நமக்குப் பெருமையா இருக்கற விஷயங்களை மட்டும்தான் வெளியே சொல்லணும்.  அதுக்கு மாறா ஏதாவது மத்தவங்க சொன்னாக்கூட, அதெல்லாம் அப்படியில்ல, என்னைப் பிடிக்காதவங்க செய்யற சதி அப்படீன்னு சொல்லிட்டு நழுவணும்.  இதுகூடத் தெரியாம, நீங்க சொன்னதுக்கு எதிராக ஒரு விஷயம் நடக்குதுன்னு சொல்லறீங்களே? இப்படிப் பிழைக்கத் தெரியாத ஆசாமியா இருக்கீங்களேன்னு கேக்கறீங்களா/ 

என்ன பண்ணறது?  தலைலே அப்படி எழுதிவைச்சாச்சு.

நான் சொல்லவந்ததைச் சொல்லிடறேன்.  இணைய உலா வர்றபோது ஒரு படம் கிடைச்சுது.  எகிப்துலே ஒரு அம்மா கையிலே வாக்குச் சீட்டை –  சீட்டுன்னு சொல்லக்கூடாது.  பெரிய சுவரொட்டி — அதுதாங்க போஸ்டர் — அதைக் கையிலே வைச்சுக்கிட்டு யாருக்கு, எதுக்கு ஓட்டுப் போடறதுன்னு தெரியாம முழிக்கறாங்க.  அந்தப்படத்தைப் பார்த்தவுடனேயே, அமெரிக்கா மட்டுமில்லே, எகிப்திலேயும் நாங்கபடற கஷ்டத்தை அவங்களும் படறாங்கனு ஒரு அல்ப சந்தோஷம்.  அதை ஒங்ககிட்ட சொல்லாம்னு நினைச்சேன்.  உடனேயே, “ஏன்யா, ஒரு அரிசோனன்?  இந்தியாவுல, வாக்குப் போடறது ரொம்ப சுளு, நாங்கதான் கஷ்டப்படறோம், அப்படி, இப்படீன்னு பீத்திக்கிட்டயே, இப்ப என்ன பதில் சொல்லப்போறே!  எகிப்திலேயும் மோசடி நடக்குமா, நடக்காதா, சொல்லு!”னு என்னைக் நீங்க என் குரல்வளையைப் பிடிச்சுக் கேட்டா, என் பெருமை என்ன ஆறது?  அதுதான் விஷயம் தெரியாம பெருமைப் படக்கூடாதுங்க பாடத்தைக் கத்துக்கிட்டு, வாசக மகாஜனங்களான உங்ககிட்ட மன்னாப்பு, அதுதாங்க மன்னிப்புக் கேட்டுக்கிட்டு எழுதறேன்.  எதுனாச்சும் தப்பா இருந்துச்சுன்னா, கண்டுக்கிடாம, அன்பா சுட்டிக்காட்டுங்க, நம்ப வேந்தரு ஐயா கருத்து எழுதின மாதிரி.  உங்க பார்வைக்கு அந்தப் படத்தையும் கொடுத்திருக்கேன்.

சரி, மேலே போவோம்.

முதல் அத்தியாயத்திலேயே, அமெரிக்கா இந்தியா மாதிரி இல்லே, இங்கே எலெக்ஷன் கமிஷன்னு ஒண்ணு ஒரேமாதிரி தேர்தல் நடத்தறது கிடையாதுன்னு சொன்னேன்.  ஆனா, தேர்தல் எப்ப நடத்தணும், முடிவுகளை எப்படி அறிவிக்கணும்னு சொல்லியிருக்கு.  இருந்தாலும்,  ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுதந்திரம் இருக்கு.  அது என்ன சுதந்திரம், எதிலே சுதந்திரம்னு கேக்கறீங்களா?  அவசரப்படாதீங்க.  ரொம்பத் தார்க்குச்சி போட்டா, சண்டிமாடு மாதிரி படுத்துடுவேன்  சொல்லவந்தது மறந்து போயிடும்.  என்னை என் போக்கிலே சொல்லவிடுங்க.

இந்தியாவிலே இப்ப மின்னணு எந்திரங்கள், அதுவும் ஒரே மாதிரியான எந்திரங்களைப் பயன்படுத்தறாங்க. அங்கே, ஓட்டுச் சாவடிலே உதவற அரசு அதிகாரிகள், போர்வீரர்கள், வராதோர் ஓட்டைக் பதியறாங்க.

இங்கே அப்படி இல்லை.  நிறையப்பேர் வராதோர் ஓட்டுப் பதிவாங்க.  அதுனால அவங்களுக்குக் காகித வாக்குகளைத்தான் அனுப்பனும்.  இல்லையா?  அதைப்பத்திப் பின்னாலே பேசுவோம்.

ஆனா, இந்தியா மாதிரி முழுக்க முழுக்க மின்னணு வாக்குமுறை அமெர்க்காவுலே இல்லை.  இங்கே மூணுவிதமான வாக்குமுறை இருக்கு.

அட ராவணா!  அமெரிக்கா ஒரு முன்னேறின நாடுன்னு சொல்லறீங்க, இப்ப வாக்குப்பதிவுலகூட அவங்கவங்க இஷ்டப்படித் தேர்தல் நடத்தினா மோசடி —

நிறுத்துங்க!  தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை – மோசடி.  அதைத் திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க.  சுவாரஸ்யமாச் சொல்லவிடாமாக் கண்டதையும் சொல்லி, முட்டுக்கட்டை போடாதீங்க.

அமெரிக்காவிலே மின்னணு வாக்குப் பதிவுதான் (Electronic voting) நடக்குது.  ஆனா, எந்தமுறைலே நடக்குது, அது எப்படிச் செயல்படுத்தப்படுதுங்கறதுலான் நிறைய வேறுபாடு இருக்கு.  தேர்தல்கள் ஒன்றிணைந்த (ஃபெடரல்) மற்றும் மாநில அரசுச் சட்டங்களால் முறைப்படுத்தப் படுகின்றன.  ஆனா, அவை உள்ளாட்சி விதத்தில் நடத்தப்படுகின்றன.  அதுனால ஒரு மாநிலத்திலகூட நிறைய வேறுபாடுகள் இருக்கும்.[i]

ஏங்க, இப்படி தடியெடுத்தவன்(ள்,ர்) தண்டல்காரன்(ள்,ர்)னு தேர்தல் நடத்தறது, எங்க பஞ்சாயத்து தேர்தலவிட மோசமாவில்ல இருக்கு.  இதுல, தேர்தல் ஒழுங்கா நடந்துச்சுன்னு எப்படி—?

எங்கும் சுத்தி ரங்கனைச் சேவிங்கற மாதிரி திரும்பத்திரும்ப ஒரே விஷயத்துக்குத் திரும்பத் திரும்ப வாராதீங்க.  நீங்க ஒருதபா சொன்னா நூறுதபா சொன்ன மாதிரிதான்.  அத்த விட்டுட்டு, நூறுதபா சொன்னா?  ஒருதபாகூடா சரியில்லாமப் போயிடும், பார்த்துக்குங்க!

இந்தியாவிலே உபயோகப்படுத்தற வாக்குப்பதிவு எந்திரம் டைரக்ட் ரிகார்டிங்க் எலெக்ட்ரானிக் வகை, அதாவது தானாகப் பதியும் மின்னணு வாக்கு எந்திரம். (DRE) அப்படிப்பட்ட எந்திரங்கள் அமெரிக்காவிலே இருக்கற ஐம்பது மாநிலங்களிலே, நியூ ஜெர்சி, டெலாவர், சவுத் கரோலினா, ஜார்ஜியா, லூசியானாங்கற ஐந்து மாநிலங்களிலேதான் முழுசாப் பயன்படுத்தப்படுகின்றன. 

அமெரிக்க மாநிலங்களில் வாக்குப் பதிவு முறைகள்

என்ன அஞ்சுதானானு கிண்டல் பண்ணாதீங்க.  21 மாநிலங்கள்ளே காகிதச் சீட்டுகள்தான்.  மற்றதுல கலவை.  எல்லா மாநிலங்கள்ளேயும், வராதோர் வாக்குகள் காகிதத்துலேதான் இருக்கும்.  காகித வாக்குச் சீட்டுகள்லே எத்தனை பேருக்கு ஓட்டு இருக்கு. அத்தனையும் மனிசனாலச் சரியாப் பார்த்து எண்ணமுடியுமா?  பயங்கரமா மீஷ்டீக் — அதுதாங்க தவறு — வராது?  அதுனால காகித ஓட்டை எண்ணிப் பதியற ஆப்டிகல் ஸ்கானிங் (ஒளியியல் அலகீடு) எந்திரமும் எல்லா மாநிலங்களிலேயும் உண்டு.

அதுசரி, ஒரு அரிசோனன்! உங்க அரிசோனாவிலே எப்படின்னு கேட்கறீங்களா?  அரிசோனாவிலே கலவை.  டி.ஆர்.இ எந்திரமும், காகித வாக்குச் சீட்டை எண்ணிப் பதியற ஆப்டிகல் ஸ்கானிங் எந்திரமும் உண்டு.  எந்தெந்த மாநிலத்திலே எப்படி எப்படி வாக்குப் பதிவுங்கறதை தேசப்படத்திலே காட்டியிருக்கு.  விவரமாத் தெரிஞ்சுக்கணும்னா சுட்டியும் கொடுத்திருக்கேன்.[ii]

வாக்குப் போடறதுன்னா, முதல்ல வாக்காளராப் பதிவு செஞ்சுக்கணும்.  அதுக்கு என்ன தகுதி?  அமெரிக்கக் குடிமகனா(ளா) — குடிமகன்னவுடனயே ஒருநாளைக்கு எத்தனை மிலி போடணும்னு கேட்காதீங்க.  நான் சொல்லவந்தது அமெரிக்கப் பிரஜை —  ஏன்ய்யா, அதை முதல்லையே ஒழுங்காச் சொல்லித் தொலைச்சா நாங்க இப்படிக் கேள்வி கேட்கவேணாம்லே, அப்படீன்னு சொல்றீங்களா/  தப்பு என்மேலதான், விட்டுடங்க, ஐயாமாரே, அம்மாமாரே!

அதுவும் பதினெட்டு வயசு, அதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பிரஜையா இருக்கணும்.  அத்தோட, எந்த மாநிலத்தில இருக்கோமோ, அந்த மாநிலத்துலே வாக்காளர் மனுவைப் பூர்த்திசெஞ்சு அனுப்பனும்.  வெறுமனே அனுப்பினாப் போறாது. நீங்க அமெரிக்கப் பிரஜைதான், உங்களுக்குப் பதினெட்டு வயசு ஆயிடுச்சு, நீங்க எந்த முகவரில இருக்கீங்கங்க அப்படீன்னு சான்றும் அனுப்பனும்.  நீங்க எந்தக் கட்சினும் சொல்லணும். 

எந்தக் கட்சியா?  இது என்ன வம்பால்ல இருக்குன்னு சொல்றிங்களா?  அதெல்லாம் ஒண்ணுமில்லே. எந்தக் கட்சிலே வேணும்னாலும் நாம இருக்கலாம்.  அதுக்குப் பணம் கொடுக்கவேணாம்.  அரசுப் பணியாளரா இருந்தாக்கூட எந்தக் கட்சிலேயும் இருக்க்லாம்.  எந்தக் கட்சிலே இருந்தாலும், வேற கட்சிக்கு வேணாம்லும் ஓட்டுப் போடலாம்.  நீங்க இருக்கற கட்சி உங்களுக்குப் பிடிக்கலேன்னா அடுத்த தேர்ந்தல்ல நீங்க உங்க கட்சியை மாத்திக்கலாம்.  ஒண்ணும் சொல்லமாட்டாங்க.  அவங்களுக்கு ஒரு மனு அனுப்பிட்டாப் போதும். கட்சியே வேண்டாம்னா, கட்சி சார்பற்றவர்னும் பதிஞ்சுக்கலாம்.  அத்தனை சுதந்திரம் இங்கே இருக்கு.

இங்கே பெரிய கட்சி ரெண்டுதான்.  இது தவிர ரெண்டு மூணு உதிரிக்கட்சி இருக்கு.  அதிலே ரொம்பக் குறைச்சலாத்தான் ஆளுங்க இருக்காங்க.  கட்சி சாராதவங்க கிட்டத்தட்ட கால் மடங்குலேந்து, மூணுலே ஒருபங்கு இருப்பாங்க.

இந்த வாக்காளர் மனு இந்திலேகூட இருக்கு.  உங்களுக்கு இந்தி தெரிஞ்சா அதிலேகூட எழுதி அனுப்பலாம்.  மொத்தம் பதினைஞ்சு மொழிலே இந்த மனு இருக்கு.[iii]  உடனே, அமெரிக்காவிலேயும் இந்தித் திணிப்பான்னு போர்க்கொடி பிடிக்காதீங்க.  சத்தியமா நான் இங்கிலீஷ்லதான் மனு அனுப்பினேன்.[iv]  ஏன்னா, தமிழ்ல மனு இல்லை.

உங்க மனுவைப் பார்த்து பரிசீலனைசெய்து, உங்களுக்கு ஒரு வாக்காளர் சீட்டு அனுப்புவாங்க.  நேரில ஓட்டுப்போட வந்தீங்கன்னா, அந்த்ச் சீட்டையும், நீங்கதான் அந்தச் சீட்டுல குறிப்பிட்டிருக்கற ஆசாமி/அம்மானு அடையாளச் சீட்டையும் சில மாநிலங்கள்ளே காட்டணும்.

நான் முதமுதல்ல அரிசோனாவிலே ஓட்டப்போட நேரில ஓட்டுச் சாவடிக்குப் போனப்போ, என் பேரையும், முகவரியையும்தான் சொன்னேன்.  அவங்க அப்படி ஒரு பேரில, அந்த முகவரிலே ஆளு இருக்கானானு பார்த்துட்டு எங்கிட்ட வாக்குச் சீட்டைக் கொடுத்துட்டாங்க.  வேற எந்த வம்பும் பண்ணல, நான்தான் ஒரு அரிசோனன் (சட்டரீதியான பெயர் அவுககிட்ட மட்டும்தான் சொல்லணும், உங்ககிட்ட சொல்லணும்ங்கற கட்டாயம் இல்லேல்ல) அப்படீன்னு அடையாளச் சீட்டையோ, வாக்காளர் சீட்டையோ கேட்கலை.  இப்ப ரொம்ப மாத்திட்டாங்க.  அதுனால நான் வரிசைலே நின்னு ஓட்டுப்போடப் போறதில்லே.  ஓட்டுச் சீட்டே என்னைத் தேடி எங்க வீட்டுக்கு வந்துடும்.  ஏன்னா, நான் பெர்மனெனட் வராத வாக்காளர்னு பதிவு செய்து கொடுத்திட்டேன்.

ஏங்க, இப்படி எல்லோரும் பதிவு செய்து கொடுத்துட்டா என்ன பண்றதுன்னு கேட்கறிங்களா?

அதைப்பத்தி அப்பறமா சொல்றேன்.  இப்ப வாக்கு எண்ணற எந்திரங்களைப்பத்திப் பேசுவோம்.

காகித ஓட்டுகளிலே ஏகப்பட்ட பேருக்கு வாக்குப் பதிஞ்சிசுக்கறபோது அதை ஒண்ணுஒண்ணா எண்ணனும்னா மாசக்கணக்குல ஆகும்.  தவிர, தவறுகள் நேர நிறைய வாய்ப்புகள் இருக்கு.  அதுனால, ஸ்கானிங் மெஷின்னு (அலகீட்டு எந்திரம்) ஒண்ணை உபயோகப்படுத்துவாங்க.  வாக்குச் சீட்டை அதுலே கொடுத்தா, அது அதை உள்வாங்கி எங்கெங்கே யாராருக்கு மக்கள் வாக்களிச்சிருக்காங்கன்னு மின்னணு மூலமா பதிஞ்சு பட்டியலிடும்.  வாக்குச்சீட்டுல தவறு இருந்தா, உடனே தவறுன்னு தெரிவிக்கும்.

அதை எடுத்துப் பரிசீலிக்க ஆறுபர்கொண்ட ஒரு குழு இருக்கும் — ரெண்டு ரிபப்ளிகன், ரெண்டு டெமகிராட், ரெண்டு சுயேச்சை இருப்பாங்க.  அவங்க ஒருமனதா வாக்காளர் யாருக்கு ஓட்டுப்போட்டிருக்கார்னோ, அல்லது அந்த வாக்குச்சீட்டைச் செல்லாதுன்னு அறிவிக்கணும்னோ முடிவுசெய்வாங்க. முக்காலே மூணுவீசம் தடவை ஒருமனதா முடிவு இருக்கும். சிலசமய்ம் பாதிப்பாதி முடிவா இருந்தா, ஒரு மேலதிகாரி வந்து வாக்குச் சீட்டைப் பார்த்துத் தன் முடிவைச் சொல்வார்.  அந்த முடிவை ஏத்துக்குவாங்க.

அமெரிக்காவுலே, கொலராடோ, ஹவாயி, ஆரகன், யூட்டா, வாஷிங்டன்ங்கற ஐந்து மாநிலங்கள் யாராருக்கெல்லாம் வாக்குரிமை இருந்து, வாக்காளராத் தங்களைப் பதிவு செஞ்சிருக்காங்களோ, அவங்க அத்தனை பேருக்கும், தபால்லே வாக்குச்சீட்டுகளை அனுப்பிவிடும்.  வாக்காளர்கள் தங்கள் முடிவைப் பதிஞ்சு, குறிப்பிட்ட தேதிக்குள்ள திருப்பி அனுப்பணும். மேலும், முப்பத்திநாலு மாநிலங்கள்(அரிசோனாவையும் சேர்த்து), வாஷிங்டன் டி.சி இவற்றிலே எந்தவிதமான காரணமும் காட்டாம, வராதோர் வாக்குச்சீட்டு கேட்கலாம்[v].  இப்படி அந்தந்த மாநிலங்கள் ஒவ்வொண்ணுத்துக்கும் லட்சக்கணக்கான காகிதவாக்குகள் வந்துசேரும். இதை எண்ணறது மேற்சொன்ன அலகீட்டு எந்திரங்கள்தான்!

வேற சில மாநிலங்கள்ளே, நேர் பதிவு எந்திரம் (Direct Recording Electronic Systems) மூலமா வாக்குப்பதிவு நடக்கும்.  இது கிட்டத்தட்ட இந்தியா மாதிரித்தான்.  வாக்காளர் வாக்கைப் பதிஞ்சவுடன், அது நேரா ஒரு கணிணிலே போய்ச்சேரும், பட்டியலிட.  இது எதைப் பதிஞ்சுதுன்னு காகிதத்திலே அச்சிட்டுக் கொடுக்கும்.  இது சில மாநிலங்களிலே (அரிசோனா உள்பட) இருக்கு.  ஒரே மாநிலத்திலே இந்த எந்திரங்கள் கையாளப்படவும் வாய்ப்பு இருக்கு.  அரிசோனா அந்தமாதிரி ஒரு மாநிலம்.  அமெரிக்காவில இருக்கற ஐம்பது மாநிலங்கள், வாஷிங்டன் டி.சி. இவற்றிலே எப்படியெப்படி வாக்குச்சீட்டுகள், வாக்குப்பதிவுகள் எண்ணப்படுகிறதுன்னு தெரிஞ்சுக்கணும்னா நான் கொடுத்திருக்கற சுட்டிக்குப் போய்ப் பாருங்க.[vi]  உங்க குழந்தைகள் படுத்தினா, அதுங்களைப் பார்க்கச் சொல்லி பரிட்சை வைப்பேன்னு சொல்லிப்பாருங்க.  உங்களை அவங்க ரொம்ப நிம்மதியா இருக்க விட்டுடுவாங்க.

ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும்.  ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார்.  வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு.  ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான். 

இத்தனை கவுன்ட்டிகளும் வாக்குகளை எண்ணி, சரிபார்த்து, உறுதிப்படுத்தி, மாநிலச் செயலருக்குத் தெரிவிக்கணும்.  அவர் அதை உறுதிப்படுத்தணும். 

ஏங்க, ஒரு அரிசோனன்!  இத்தனை கஷ்டம் இருக்கறபோது எப்படிச் சில ஊடகங்கள் வாக்குப் பதிவு முடிஞ்சவுடனேயே யாரு வெற்றிபெற்றார்னு சொல்லிடறாங்கனு கேக்கறீங்களா?  அது ஒரு கலை, பிரம்ம ரகசியம்.  அதை உங்களுக்குச் சொன்னா என் தலை சுக்குநூறா வெடிச்சுப் போயிடும்.

என்ன, உங்க தலைதானே, எங்களுக்கென்ன நஷ்டம், எங்க தலையா வெடிக்கப்போகுது.  அந்தப் பிரம்ம ரகசியத்தைச் சொல்லுங்க அப்படீங்கறீங்களா!

சொன்னா, அடுத்த அத்தியாயங்களை யாரு எழுதறது? 

சும்மா ரீல் விட்டேன். அவ்வளவுதான்.  அதையும் அப்பறமா எழுதறேன்.

இப்ப இவ்வளவு போதும்.  மீதியை அடுத்த அத்தியாயத்திலே பார்ப்போம்.

(தொடரும்)


[i]       Which states use Electronic Voting by Jeremy Laukkonen, Lifewire,  Updated on September 11, 2020,

https://www.lifewire.com/which-states-in-united-states-use-electronic-voting-4174835

[ii]      Voting Methods and Equipments by State, https://ballotpedia.org/Voting_methods_and_equipment_by_state

[iii]     National Voter Registration Form, U.S. Election Assistance Commission,  https://www.eac.gov/voters/national-mail-voter-registration-form

[iv]     Voter Registration form download, https://www.eac.gov/sites/default/files/eac_assets/1/6/Federal_Voter_Registration_ENG.pdf

[v]      Vote by Mail: A State-by-State Guide to Absentee Ballot Voting,  by Rivan V. Stinson, https://www.msn.com/en-us/news/politics/vote-by-mail-a-state-by-state-guide-to-absentee-ballot-voting/ar-BB13ZSXX

[vi]     Voting Methods and Equipments by State, Ballotpedia,  https://ballotpedia.org/Voting_methods_and_equipment_by_state

One Reply to “அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3”

  1. குடிமகன் என்பதை குடிஞர் என்று சொல்லலாம்.

    இந்திய மின்னணு வாக்கு எந்திரங்கள், அமெரிக்க மின்னணு வாக்கு எந்திரங்களிடையே ஒரு வேற்றுமை இருக்கு. இந்திய எந்திரங்கள் சேவியுடன் நேரடித்தொடர்பு கொண்டவையல்ல. வாக்கு எண்ணிக்கை நாளில்தான அதை சேவியுடன் இணைத்து எண்ணிக்கையை ஏற்றுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *