சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4

(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

(4)

நானாச்சி²த்³ரக⁴டோத³ரஸ்தி²தமஹாதீ³பப்ரபா⁴பா⁴ஸ்வரம்ʼ
ஜ்ஞானம்ʼ யஸ்ய து சக்ஷுராதி³கரணத்³வாரா ப³ஹி꞉ ஸ்பந்த³தே ।
ஜாநாமீதி தமேவ பா⁴ந்தமனுபா⁴த்யேதத்ஸமஸ்தம்ʼ ஜக³த்
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 4॥

பலதுளைக ளுடையகுட முற்றதீ பத்தினொளி
பரவ லெனஐம் பொறிவழிச்
செலுமொளிய ஃதெது?நான் அறிந்தே னெனச்சொலத்
திகழு மொளியெது எதனையிவ்
வுலகமுழுதும் பற்றி யிகலுறும் அவ்வான்ம
சித்தாகி ஞானி கள்தொழும்
திகழுமுயர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி !! (4)

இப்பாடல் சிவபரம்பொருளின் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் இரண்டினையும் சுட்டுகின்றது.

முதலில் உவமையைப் பார்ப்போம். ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது. இரவின் கருமையில், அவ்வொளிக்கிரணங்கள் படர்ந்த இடங்களில் இதுவரைக் காணப்பெறாத பொருள்கள் காட்சிப் படுகின்றன.
இனி இந்த உவமையால் உணர்த்தப்படும் பொருளுக்கு வருவோம்
குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது.

இவ்வைந்து கதிரொளிகளைத் தரும் விளக்கு எது?பொருளைத் தன் பிரகாசத்தினால் காட்டுவது விளக்கு. அதுதான் சோதி, சுடர். அச்சுடருக்குப் பெயராகிய விளக்கு, அச்சுடர் இருக்கும் தகழிக்கும் ஆயது. இடத்திலிருக்கும் பொருளின் பெயர் இடத்துக்கும் ஆயது இடவாகு பெயர். மாயா இயந்திர தநு விளக்கு என்றது அத்தகையதாகும். பொறிகளாகிய தொளைகளின் வாயிலாக ஐம்புல அறிவு தரும் ஒளி எது?

ஏகதேச அறிவுடையதாய், வியஞ்சகம் (துணைக்கருவி) இன்றி, அறியவியலாததாய், அறிவிக்க அறிவதாய், மறந்து மறந்து அறிவதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் அறிவதாய், சித்தசித்தாய் உள்ள சீவான்மாவா? அன்று. இத்தகைய சீவான்மாவுக்கு அறிவொளி அளிக்கின்ற பேரொளி யொன்று அச்சீவான்மாவினுக்குள் பிரகாசித்துக் கொண்டுள்ளதென்பது சைவசித்தாந்தம்.

யஜுர்வேதம் தைத்திரியாரண்ய சாகையில் உள்ள நாராயண சூக்தம், இதயத்தினை இதயகமலம் என்றும் அதன்மத்தியில் அக்கினி சிகை யாகிய ஒளி உளது என்றும் ஓதும். “ நீவார தானியத்தின் (காட்டுநெல்) நுனை போன்ற நுண்ணிதும் பொன்னிறத்ததுமாகிய ஒளியொன்றுண்டு; அவ்வொளிச் சிகையின் மத்தியில் பரமான்மா விருக்கின்றனன்” என்று கூறும்

ஜீவான்மா மூர்த்தி; அதில் பரமான்மா மூர்த்திமான். அண்டம் முழுவதையும் தன்னுள்ளும் புறத்தும் அடக்கி வியாபித்திருப்பவன் பரமான்மா. அவனே மிக நுண்ணியனாய் இதயகமலத்துள் இருக்கும் சீவான்மாவிலும் உள்ளான். அப்பொழுது அவன் அந்தரான்மா எனப்படுவான். அந்தரான்மாவும் பரமான்மாவும் வேறல்லர்; ஒருவரே.

பரமான்மாவாகிய இறைவன் அந்தரான்மாவாகச் சீவான்மாவைத் தன் மூர்த்தமாகக் கொண்டு மூர்த்திமானாக விளங்கி என்ன செய்கிறான்?

கண் காணும் ஆற்றல் உடையதுதான்.அது ஒருபொருளைக் காணும்போது, அதனுடன் ஆன்ம அறிவும் கண்ணொளி வேறு தான்வேறு என்றில்லாமல் அதனோடு ஒன்றி உடனாய் நின்றால்தான், கண் அப்பொருளைக் காணவியலும் ஆன்ம அறிவு உடனாய் நில்லாதபோது கண் அப்பொருளைக் காணவியலாது.
“ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை நுகரும்” (மேற்கோள்). இவ்வான்மாக்கள் அவனை யின்றி அமைந்து ஒன்றையும் விடயியா வாகலான் (ஏது) சிவஞானபோதம் சூ11. முதலதிகரணம்.
ஏகதேச அறிவுடையதாய், வியஞ்சகம் (துணைக்கருவி) இன்றி, அறியவியலாததாய், அறிவிக்க அறிவதாய், சார்ந்ததன் வண்ணமாய் அறிவதாய், சித்தசித்தாய் உள்ள சீவான்மாவின் மீதுள்ள கருணையினால் பரமான்மாவாகிய சிவம் அநாதியாகவே உள் நின்று அதன் அறிவிச்சை செயல்களை ஊக்குவிக்கின்றது.
அந்தரான்மாவாகிய சிவம் உயிருக்குயிராய், அறிவுக்கு அறிவாய் நின்று சீவான்மாவின் அறிவை விளக்குகின்றது. அவ்வறிவின் துணையால் ஆன்மபோதம் ஐம்பொறிகளின் வாயிலாக சத்த பரிச ரூப ரச கந்தம் எனும் புலன்களை அறிகின்றது. ஜீவான்மா, பொறிகளின் வாயிலாக அறியும் அறிவு, சிவம் அந்தரான்மாவாக இருந்து அறிந்து, அறிவிக்கும் உபகாரமேயாகும். ஆன்மா அவனை இன்றி எதையும் அறியாததாகும்.

அந்தரான்மாவாகிய சிவத்தின் செயலைச் சிவஞான சித்தியார்,
“அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
உன்னிய வெல்லாம் உண்ணின் றுணர்த்துவ னாத லானும்” என்றுரைக்கின்றது.

கண்ணொளியும் ஞாயிற்றினொளியும் பொதுமையில் ஒத்து நின்றாலும் ஞாயிற்றினொளி கண்ணொளியிற் கலந்தும், காணப்பெறும் பொருள்களின் மேற் படர்ந்தும் அறிவித்தலைப் போல, முதல்வனின் அருள் ஆன்ம அறிவிற் கலந்தும் பொருள்களோடு கூடியும் கண்டும் காட்டியும் உதவுகின்றது. இதனை முதல்வனின் கண்டு காட்டும் உபகாரம் என்பர்.
இந்த வாய்மையைச் சிவஞான சித்தியார்,

“பொறிபுலன் கரணமெல்லாம் புருடனா லறிந்தான் மாவை
அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்தும் எங்குஞ்
செறிதரு சிவன்ற னாலே அறிந்திடும் சிவனை காணா
அறிதருஞ் சிவனே எல்லாம் அறிந்தறி வித்து நிற்பன்” (231)

“ஒருவனே (சிவன்)உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன்” எனக் கூறுதல் காண்க.

“பலதுளைக ளுடையகுட முற்றதீ பத்தினொளி
பரவ லெனஐம் பொறிவழிச் செலுமொளிய ஃதெது?”

அதுவே சுயஞ்சோதி, பரஞ்சோதி, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி. காரொளிய திருமாலும் கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம் சீரொளிய தழற் பிழம்பாய் நின்றவொளி”’, ‘சிந்தை தன்னை மயக்கந் தீர்க்கும் ஞானவொளி’, அண்டத்துக் கப்பால் நின்ற பேரொளி. (அப்பர், தில்லைத் திருத்தாண்டகம் 10).

இந்தப் பேரொளி பிரகாசமான நுண்ணொளியாய் இதய மத்தியில் உள்ளது. அந்தரியாமியாய் அப்பரமான்மாவிற் குடம்பாயுள்ள சீவான்மாவுக்குமிருக்கை இருதயத்தானமே (பாம்பன் சுவாமிகள்).

எனவே,குடத்தினிள்ள தீபவொளி, ஐந்து தொளகளின் வாயிலாக வெளியே பரவுதல் ஐம்பொறி வாயிலாக உடம்பினுள் உள்ள (சீவ) ஆன்மாவே அறிகின்றதென்று கூறுதல் பிழை என்பது சைவசித்தாந்தம்.

“There is only one athma which is named as jivathma and paramathma. When you focus upon athma from chith aspect, you use the word jivathma; when you focus upon ‘sat’ (Existence) aspect you use the word ‘paramanma’; bur both are one and the same satchith atma only. Remove the adjectives.” – இவ்வாறு கூறுவதன் பொருத்தம் ஆராய்தற்குரியது.

****

“நான் அறிந்தே னெனச்சொலத் திகழு மொளியெது”

தக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தின் நான்காம் பாடலில் இத்தொடரில் அமைந்துள்ள ‘நான்’ என்னும் தன்மை ஒருமைச் சொல் வேதாந்தத்தின் ஆன்ம தத்துவத்தை விளக்குவ தென்பர். வேதாந்தத்தில் ‘ஆன்மா’ என்பது தூய அறிவு; ஞானத்தைக் குறிக்கும் என்பர். சீவான்மா, பரமான்மா என இருவேறு ஆன்மாக்கள் இல்லை. அடைமொழிகளான சீவன் , பரம் எனும் இரண்டையும் களைந்து விட்டு ஆன்மா என்ற ஒன்றையே கொள்ள வேண்டும் என்றும் சீவன் என்பது உடலில் உள்ள சித்தெனும் அறிவு என்றும் பரமென்றது என்றும் நிலையான தோற்றக் கேடுகள் இல்லாத சத்தைக் குறிக்கும் என்றும் கூறுவர். ஆன்மா என்ற பதம் சத்துச்சித்து எனும் ஆன்மதத்துவத்தினைக் குறிக்கும் என்று கூறுவர்.
ஐந்து துளைகளையுடைய குடத்தினுள் வைக்கப்பெற்ற தீபத்தின் ஒளி ஐந்து துளைகளின் வழியே வெளியில் படர்ந்து பொருள்களைப் பிரகாசிக்கச் செய்கின்றதைப்போல், ஐம்பொறிகளின் வாயிலாக உடலின்கண் உள்ள (ஆன்ம) அறிவானது பிரபஞ்சத்தைப் பிரகாசிக்கச் செய்து அதனை அறிகின்றது என்பர். (பிரகாசித்தல் – விளங்கித் தோன்றுதல்).

ஐந்து துளைகளையுடைய கடத்தினுள்ள விளக்கு அத்துளைகளின் வழியே வெளியில் உள்ள பதார்த்தங்களை விளக்குவதோடு உள்ளிருக்கும் பதார்த்தங்களையும் விளக்குகின்றது. அது போலத் தூலசரீரத்தினுள் இருக்கின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் பஞ்சேந்திரியங்களின் வாயிலாக வெளியிலிருக்கும் விடயங்களையும் அறிந்து நிற்கின்ற ஆன்மா, சரீரத்தினுள் “அறிவாக’ (consciousness) பிரகாசித்துக் கொண்டிருக்கிறது ) (ஞானேந்திரியங்களைப் போல மனமாதிய அந்தக் கரணங்களும் ஆன்ம அறிவு விளங்கித் தோன்றுதற்குக் கருவியேயாம்.)

இக்கூற்றின்படி எல்லா சரீரத்திலும் ஒரே அறிவுதான் (consciousness) பிரகாசிக்கின்றது. எல்லா சரீரத்திலும் ஒரே அறிவுதான் (consciousness) பிரகாசிக்கின்றதெனின் எல்லாருடைய அறிவும் ஒருதன்மைத்தாகத்தானே இருக்கவேண்டும்; பிறர் மனத்திலுள்ளதை நான் அறிய வேண்டுமே! யதார்த்தத்தில் அவ்வாறி இல்லையே எனின், இப்பதிலைப் பாருங்கள்:

“You cannot distinguish between your Consciousness and my Consciousness. They appear to be identical. That is why Consciousness is called mahadeep ( ). One Consciousness is simultaneously present in every pot, simultaneously illumining every mind (omnipresent). There is a common question that if my Consciousness is the same as your Consciousness, then why don’t I know your thoughts? First of all, thank God for having this natural law. It is God‟s blessings that we do not know other’s thoughts. It is difficult to deal with even one’s own thoughts. What to speak about dealing with other’s thoughts?”

இது கடவுள் விதித்த இயற்கை நியதியாம்!

இன்னொரு விளக்கம்:

“நான் கர்த்தா, நான் மனுஷன், நான் ஜீவன் , நான் அகர்த்தா, நான் அசங்கன் (அசங்கன் acaṅkaṉ, n. < a-saṅga. One who is free from attachment; பற்றற்றவன்). இந்த வான்மா வென்றுமே யசங்கனாவன் (விவேக சூடா. 114). நான் ஆநந்த வியாபகப் பிரமம்’ என்பவற்றிலுள்ள ‘நான் நான்’ எனும் சாமாநிய அம்சம் அஞ்ஞானி, ஞானி ஆகிய இருவரிடத்தும் ஞானம் அஞ்ஞானம் எனும் எனுமிரண்டு காலத்திலும் காணப்படுகின்றமையால் “நான் அறிந்தே னெனச்சொலத் திகழு மொளியெது” என்றார்.

And when that person realizes that ‘I know myself”,
This whole universe shines after Him alone,
Who shines in the consciousness as the knower.

மேற்காணும் கருத்துக்களுடன் சைவ சித்தாந்தம் பலவிடங்களில் வேறுபடுகின்றது.

பரமான்மா எனும் பிரமம் ஔபச்சிலேடிக வியாபகம்; அவ்விரிந்த வியாபகத்தினுள் சேதன அசேதனப் பிரபஞ்சங்கள் யாவும் அடங்கியுள்ளன. எனவே ‘நான் அறிந்தேன்’ எனப்பிரபஞ்சத்தைச் சுட்டியும், என்னை நான் அறிந்தேன் எனத் தன்னையும் அறிய வேண்டுவதில்லை; பிரமம் தானிருந்தவாறே இருந்து தன் வியாபத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் அறியும்.
இவ்வாறு அறிய வேண்டிய நிலையில் உள்ளது எதுவெனில் அறிவை மறைக்கின்ற ஆணவமலசம்பந்த முடைய ஆன்மாவே.
அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தில் அநாதியாகவே, செம்பில் களிம்புபோல் கலப்புண்டு அணுவெனக் கிடக்கும் ஆன்மாவுக்கு இறைவன் தன் அருளினால் மாயாகாரிய கருவிகளால் அறிவூட்டுகின்றான். கலாதத்துவத்தினைக் கூட்டி ஆன்மாவின்கிரியாசத்தியை எழுப்புகிறான். அது ஆணவமலசத்தியைச் சிறிதகற்றுகின்றது. அப்பொழுது வித்தியாதத்துவத்தால்எழுப்பப்படும் ஆன்மாவின் சத்தியே இவ்வறிவாகும்.

இவ்வறிவு ஆன்மபோதம் என்றும் தற்போதம் என்றும் ஜீவபோதம் என்றும் வழங்கப்படும். இவ்வறிவு இறைவனின் அருளால் தோன்றுவது. இறைவனின் அருளை மறந்த ஆன்மா ‘நானே அறிகிறேன்’ எனத் தன்னையே கருத்தாவாக நினைக்கும். இவ்வாறு தன்னை அகங்கரிப்பதும் மலத்தினாலாம். மாயா காரியங்கள் அனைத்தும் சடம் என அறிந்து அவற்றைவிட்டு நீங்கிய ஆன்மாவுக்கு, இவ்வாறு தெளிந்து அனாத்துமப் பொருள்களை விட்டு நீங்கிய’ நானே’ அறிவுடைப் பொருள் என்ற மயக்க உணர்வு தோன்றும். அப்பொழுது ஆன்மாவுக்குத் தானே அறிவு, தானே கருத்தா , எனக்குமேல் ஓரறிவோ கருத்தாவோ இல்லை எனும் அகங்காரம் தோன்றும். அப்பொழுது, புண்ணியமுடைய ஆன்மாவுக்குச் சிவம் குருவாக வந்து அமையவும், “கண்ணொளி சூரியனுடைய ஒளியுடன் கூடியே பொருள்களைக் காண்கிறது; தான்மட்டும் தனியே நின்று பொருள்களைக் காண்பதில்லை; காண இயலாது. அதுபோல ஆன்மா திருவருளுடன் கூடியே பொருள்களைக் காண்கிறது. திருவருள் காட்டக் காணுமே யொழிய ஆன்மா எதனையும் தானே அறியவும் செய்யவும் இயலாது” என அறியும்.
ஆன்மா அறிவுடைப் பொருளே; அது அறிவிக்க அறியும் பொருள். இறைவன் அறிவுடைய சித்துக்கே அறிவிப்பதன்றிச் சடத்துக்கு அறிவியான். கண்ணொளியுள்ள கண்ணுக்கே சூரிய ஒளி காணத் துணை செய்யும். ஞாயிறின் உதவியை நினையாது கண்டது கண்ணே எனக் கூறுவது போலத் திருவருள் அறிவிக்க அறியும் ஆன்மா, அதுவே அறிவதாக அறிவது பிழை. இது சைவசித்தாந்தம்.

அறிவே (consciousness) ஆன்ம சொரூபம் எனும் கூற்று ஏற்புடையதா?
எது அறிவு? அறிவாவது ஒன்றை விடயிப்பதே யன்றிப் பிறிதன்று. அவ்வாறு விடயிப்பதாகிய அறிவு ஒரு சமயத்தில் நிகழ்தலும் ஒருசமயத்தில் நிகழாதொழிவதும் கண்கூடு. அந்த அறிவு காலத்தாலும் இடத்தாலும் ஏகதேசமாய், குறையறிவாய் நிகழ்வதும் உண்டு. அந்த அறிவு செயற்கையான் (அபரோக்ஷ ஞானம்) நிகழ்வதும் உண்டு. இவ்வாறு அறிவு குறைபாடு உடையது, சர்வஞ்ஞனான, வியாபக ஞானமுடைய பிரமமாக இருக்க முடியாது. இக்குறைபாடுகளையுடைய ஆன்மா பரமான்மாவன்று; சீவான்மாவே.

அறிவாவது ஒன்றை விடயித்தல் என இலக்கணம் கூறல் பொருந்தாது என்றும், விடயித்தல் (அறியும் அனுபவம்)இன்றியும் (ஆலயவிஞ்ஞானம்) அறிவு உண்டென பவுத்தரும் கூறுகின்றனரே எனச் சமாதானம் கூறுவர். அவ்வறிவு எவ்வியல்பிற்று? அனுபவித்தற்கு வாராத அறிவு ஆகாயத்தாமரை போலப் பயனற்றதாகும்.

அறிவு என்பது ஆன்மாவின் குணம். ஆன்மா குணி; அறிவு அதன் குணம். குணி இன்றிக் குணமில்லை. எனவே, ஆன்மாவின் குணமாகிய ஞானம் அல்லது அறிவும் குணியாகிய ஆன்மாவிட்டுத் தனித்து நில்லாது. ஆன்மா என்பதற்குப் பொருள் வியாபகம் என்பதாம். எனவே ஆன்ம அறிவும் வியாபக மானது. வியாபக அறிவு ஏகதேசமானது எப்படி? பிராந்தி ஞானம், அத்தியாசவாதம் என்பதைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *