சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7

(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

(9)

பூ⁴ரம்பா⁴ம்ʼஸ்யனலோ(அ)னிலோ(அ)ம்ப³ரமஹர்நாதோ² ஹிமாம்ʼஶு꞉ புமான்
இத்யாபா⁴தி சராசராத்மகமித³ம்ʼ யஸ்யைவ மூர்த்யஷ்டகம் ।
நான்யத்கிஞ்சன வித்³யதே விம்ருʼஶதாம்ʼ யஸ்மாத்பரஸ்மாத்³விபோ⁴꞉
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 9॥

நிலம்நீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானன் என்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன் கூர்த்த மதியால்
அலசுவார்க்குத் தன்னை யன்றியொன் றேனுமின்
றானவன் பரம வான்மா
திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !!

அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பகிய சொரூப சிவம், ஆன்மாக்கள் தன்னை உணர்ந்து வழிபட்டு உய்யப் பல்வேறு தடத்தத் திருமேனிகளைக் கொள்கிறது. அவை அனைத்தும் நந்தம் கருமேனிகளைக் களையும் அருட்டிரு மேனிகளாம் என்பது சைவக் கோட்பாடு.

அத்தடத்தத் திருமேனிகள் அரு அருவுரு வுரு எனவும், மந்திர வடிவென்றும், அத்துவா வடிவென்றும் அட்டமூர்த்தி வடிவென்றும் பல்வகைப்படும்.

உருவத்திருமேனிகளில் பரமகுரு மூர்த்தமாகிய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி வடிவம் மிகச்சிறப்பானது. உலக காரணனாகிய பரமசிவன் அருளினால் உருவுகொண்டு ஆரணம் (வேதம்) ஆகமங்களை அருளாதிருப்பனாயின் உயிர் முப்பொருளுண்மை உணர்ந்து வீடுபேறு அடைதல் இல்லையாகும்; மானுடர் முதலிய உயிர்கள் உய்ய குருபரம்பரை இல்லாமற்போகும். எனவே, குருபரம்பரையில் சொரூபசிவன் கொண்ட திருமேனியாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தலையாய திருமூர்த்தமாம். இத்திருமூர்த்தத்தை வேதாந்திகள் ‘ஏகரூப ஈஸ்வரன்’ என்பர். இம்மூர்த்தி வடிவினைக் கந்தபுராணமும், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமும் கச்சியப்பமுனிவரின் திருவானைக்காப் புராணமும் பொருளொடு போற்றுகின்றன.

ஏகனாகிய சிவமே அநேகனாக அருளால் உருவு கொள்கின்றதெனச் சிவஞான சித்தியார் உரைப்பதற்கேற்ப, ‘ எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களினும் இயைந்தே விளங்க லுறுமோ’ என்னுந் தொடர், வியாபக மெய்ப்பொருளான சிவம், தன்னுள் அடங்கியிருக்கும் வியாப்பியப் பொருள்களான சேதன அசேதனங்களுக்கு இருப்பினையும், முறையே அறிவு, இயக்கங்களையும் தந்து ‘நான் அறிந்தேன்’ எனும் அறிவினைத் தந்துதவுவதை உணர்த்துகின்றது.’ என்பதனையும் முன் பாடல்களிற் கண்டோம்.

குணங்குறி கடந்து ஏகனாக நின்ற சிவமே எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானாக அநேகனாகவும் உள்ளான். இவ்வாறு உருவ அருவமானத் தடத்த வடிவினனே பேருருவினனாக விசுவரூபனாகவும் உள்ளான். பரமனின் விசுவரூபத்தைக் கந்தபுராணம் முதலிய புராணங்கள் கூறுகின்றன. அப்பேருருவைப் பரமனமுடைய அருளாளர்களே தங்கள் அகத்தில் ஞானக்கண்ணால் நோக்குவர். நம்மனோரால் அதனை உணர முடியாது.

விசுவநாதனாகவும் விசுவாதீதனாகவும் இருப்பதுடன் உலகுயிர்கள் இயங்குதற்பொருட்டுச் சிவன் விசுவாந்தர்யாமியாகவும் உள்ளான். அந்நிலையைச் சித்தாந்த நூல்கள் அட்ட மூர்த்தம் என்று குறிப்பிடுகின்றன. ஐம்பெரும் பூதங்களான நிலம் நீர் நெருப்பு வளி ஆகாயம் என்பனவும் ஞாயிறு திங்கள் எனும் சுடர் இரண்டும் ஆன்மாவும் எனும் எட்டுமட்ட மூர்த்தமாம். இவற்றுள் முதலேழும் அசேதனம் (அறிவற்ற பொருள்); ஆன்மா ஒன்று சேதனம் (அறிவுடைப்பொருள்) இந்த எட்டினையும் இறைவன் தனது திருமேனியாகக் கொண்டு இயங்குகின்றான். இதனை,

“இருநிலனாய்த் தீயாகி நீருமாகி,
இயமனனாய் எறியுங் காற்று மாகி,
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகி ….
நிமிர்புன்சடையடிகள் நின்றவாறே”

என்னும் அப்பர் பெருமானின் நின்றதிருத்தாண்டகமும், “நிலம் நீர்நெருப்பு உயிர்” எனத் திருவாசகம் திருத்தோணோக்கம் (5) கூறின. சிவன் கலப்பினால் அவ்வப் பொருளாக இருத்தலை ஸ்ரீருத்திரமும் கூறிற்று. பொருள்களுடன் கலந்து ஒன்றி நின்று உயிர்களுக்கு உபகரித்தலை விவேக அறிவுடையவர் எவரும் அறிந்துய்யச் சிவம் இவ்வாறு அட்ட மூர்த்தமாக விளங்குகின்றது.
ஏகரூப ஈசுவரனாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே விசுவாந்தரியாமியாக உலகுயிர்களுக்கு உபகரிப்பதைப் பகவத்பாதர் அவர்கள்,

“நிலம்நீர் நெருப்புவளி ஆகாயம் இரவிமதி
நிலவுமிய மானன் என்னக்
குலவுசர அசரங்கள் தனதெட்டு வடிவமாக்
கொண்டவன்”

என்றருளினார்.

(சரம் இயங்குபவை ; அசரம் – இயங்காதவை locamotary and stationery)

சிவபரம்பொருளாம் பரம ஆன்மாவாகிய ஒன்றே ஆன்மாக்களுக்கு உபகாரமாய் மந்திர உரு, அத்துவ வடிவு, விசுவரூபம், அட்டமூர்த்தம் எனப்பலவாக நிற்கும் உண்மையை மெய்ப்பொருள் உணரும் கூர்த்த மதியுடைய எவரும் அறிவர் என்றும் அவ்வொன்று சிவப்பிரமமாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியே என்றும் பகவத் பாதரவர்கள்,

“கூர்த்த மதியால்
அலசுவார்க்குத் தன்னை யன்றியொன் றேனுமின்
றானவன் பரம வான்மா”

என்று உணர்த்தி அப்பரமான்மவாகிய அத் “திலகநிகர் குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி” யின் திருவடிகளுக்கு வணக்கம் எனத் துதிக்கின்றார்.

(10)

ஸர்வாத்மத்வமிதி ஸ்பு²டீக்ருʼதமித³ம்ʼ யஸ்மாத³முஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஶ்ரவணாத்தத³ர்த²மனநாத்³த்⁴யானாச்ச ஸங்கீர்தனாத் ।
ஸர்வாத்மத்வமஹாவிபூ⁴திஸஹிதம்ʼ ஸ்யாதீ³ஶ்வரத்வம்ʼ ஸ்வத꞉
ஸித்³த்⁴யேத்தத்புனரஷ்டதா⁴ பரிணதம்ʼ சைஶ்வர்யமவ்யாஹதம் ॥10॥

நூற்பயன்

எல்லாம் ஏக பிரம்மமயம் என்றே இயம்புமித் துதியை
வல்லார் சொல்லக் கேட்டாரும் மனத்தால் நினைக்கப் பெற்றாரும்
கல்லால் நீழற் கடவுளருள் கைவந் தவரே தாமாவார்
வல்லார் சித்தி யெல்லாமும் வாழ்வார் வானோர் மதித்திடவே!

இந்தப் பத்தாவது பாடல் , இந்நூலைப் பாராயணம் செய்வோர், நூற்பொருளைச் சிந்திப்போர், நூற்பொருளைப் பிறர் விரித்துச் சொல்வோர், சொல்லச் செவி மடுத்துக் கேட்போர் ஆகியோர் பெறும் பயனக் கூறுகிறது.

நூற்பயனைக் கூறும் பாடலைப் பலசுருதி என்பர். திருஞானசம்பந்த சுவாமிகளின் பதிகங்களில் இறுதிப் பாடல் அப்பதிகத்தினைப் பாரயணம் செய்வோர் அடையும் பயனைக் கூறுவதால் அதனைத் திருக்கடைக் காப்பு என்று அழைப்பதைப் போல இப்பாடலும் பலசுருதி எனப்படுகின்றது.

இத்தக்ஷிணாமூர்த்தி தோத்திரம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அட்டகம் என்றும் கூறப்படுகிறது. எட்டுப்பாடல்களைக் கொண்ட நூலை அட்டகம் (அஷ்டகம்) என்பர். முதல் எட்டுப்பாடல்களே தோத்திர வடிவில் வேதாந்தப் பரப்பினைச் சுருக்கிக் கூறுவன. அவையே நூற்பொருள் உணர்த்துவன. ஒன்பதாவது பாடல் பிரமமே பிரபஞ்சமாக நிறைந்துளது என அறிந்து, அப்பிரபஞ்ச வடிவினதான பிரமத்தை மனதிலிருத்தித் தியானிக்கத் தரும் பாடலாகும்.
ஒன்பது, பத்து ஆகிய இருபாடல்களும் நூற்பொருளுக்குப் புறத்தே நிற்பன. இவற்றை பிற்காலத்தில் யாரோ ஒருவர் இயற்றி நூலுடன் சேர்த்திருக்கலாம், அல்லது’, பகவத் பாதர்கள் இயற்றியதாகவும் இருக்கலாம் என இருவகைக் கருத்து நிலவுகின்றது.

சைவசமய உலகில் எல்லாம் சிவமயம் எனவும் வேதாந்திகளிடையில் சர்வம் பிரம்மமயம் என்னும் வழக்கும் நிலவிவருவதைக் காண்கிறோம். அந்தச் சிவப்பிரமமே ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி. சேதன அசேதனப் பிரபஞ்சம் முழுவதும் இச்சிவப்பிரமமேயன்றி வேறொன்றில்லை யென்று போதித்து அதை அனுபவத்துக்குக் கொணர உதவுவது இந்நூல். அதனால்,’எல்லாம் ஏக பிரம்மமயம் என்றே துதிக்கும் இத்துதியை’ என்றார்.

‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.
அனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும்மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும். இதனைத் திருவாசகம், ‘விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க’ என்றும்,

“நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன்; திருத்தகு
மதியின் தண்மை வைத்தோன்; திண்டிறல்
தீயின் வெம்மை செய்தோன்; பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன்; மேதகு
காலின் ஊக்கங் கண்டோன்; நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட
மண்ணின் திண்மை வைத்தோன்; என்றென்
றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் “

எனவும் கூறிற்று.

அவன் அவையாகி இருப்பதால்தான் அவை அவ்வக்குணங்களும் உடையவாயின. இச்சர்வாத்தும பாவனையைத் தனக்கு உதவுமாறு முருகப்பெருமானை அருணை முனிவர் அழகாகச் சுருக்கமாக வேண்டுகின்றார். “ எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாக இதய பாவ னாதிதன் அருள்வாயே” (அமலவாயு’ எனத்தொடங்கும் பொதுத் திருப்புகழ்)

இவ்வாறு எல்லாம் சிவமயமே என்ற உணர்வடைவதற்குச் சாதனங்களாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் , நிட்டை கூடுதல் எனச் சைவம் கூற சிரவணம், மனனம், தியானம், நிதித்தியாசனம் என்னும் சாதனங்களை வேதாந்தம் கூறுகின்றது.

நிதித்தியாசனம் இந்நூலினுட்பொருளைப் பிறருக்கு உபதேசிப்பவருக்கு மிகவும் இன்றியமையாத சாதனமாகும். தியானம் செய்வோராகிய சாதகர் (சீடர்) மனம் அவ்வப்போது கலைந்து வேறு பொருளின்மேற் சென்றாலும் குறையில்லை. ஆனால் நூலினை உரைக்கும் ஆசிரியனின் மனம் நூற்பொருளினில் முதலந்தம் சிதறாமல் ஒன்றி நிற்க வேண்டும். இதுவே நிதித்தியாசனம். அதனால் ‘இத்துதியைச் சொல்ல வல்லார்’ என்றார்

இச்சாதனங்கள் முற்றியவர்கள் கல்லால் நீழற் கடவுளாகிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அருளைப் பெற்றவராவர்; அவ்வருளாவது அக்கடவுளின் சொரூபமாக விளங்குதல்; பரமான்ம சொரூபமாதல்; சிவமயமேயாதல்.

சிவமயமாதல் , இதுவே இந்நூலினை அனுசந்தித்தலின் பயன். இந்நூற்பயன் கைவந்தவர் சிவஞானியாவர். சிவஞானம் பெறலே இந்நூலினைக் கற்றலின் முக்கியப் பயன். சிவஞானம் பெற்றவர்கள் ‘ஈசுவரத்துவம், சுவாமித்துவம்’ எனும் தலைமைத்தன்மை உடையவர்களாவர். பிரபஞ்ச வாதனை அற்றவராவர். அவாவந்தப் பயனாக வேறு சில சித்திகளும் அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு வந்து சேரும். அச்சித்திகளை அந்த ஞானியர் பொருட்படுத்துவதில்லை. ஞானியர் அட்டமா சித்திகள் கைவரப் பெற்றாலும் அவற்றைக் ‘கான்ற சோறு’ என அருவருத்து ஒதுக்குவர்.
இத்தகைய ஞானியரை வானகத்துத் தேவரும் வணங்குவர்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *