
ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார். தமிழ்நாட்டில் மூலை முடுக்கு எங்கும் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் பரவ வேண்டும் என்ற எண்ணத்தை சுவாமி சித்பவானந்தர் உள் வாங்கிக் கொண்டார். ஆகவே இந்தப் பணியைச் செய்ய ஓர் இடத்தில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்று ஆழ்ந்து ஆலோசிக்கலானார். பிறகு வழக்கம் போல் தவத்தில் ஈடுபடலானார். தாம் எண்ணியபடி ஒரு ஸ்தாபனம் அமைக்கத் தகுந்த இடம் அவர் கண்களில் பட்டது. அதுதான் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர் ஆகிய மூவரால் பாடப்பட்ட, தாருகாவன ரிஷிகள் தவம் செய்த இடமான திருப்பராய்த்துறை ஆகும். காவிரியின் தென்கரையில் இவ்வூர் இருந்தது..
Read more →