
வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…