
ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.