
சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்துள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான். ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.