
பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்… குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தோமே… எங்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல… யாராக இருக்கிறாய் என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்…