
உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..