
அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்… உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது… விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை.. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது…