
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…