
எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….