
ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ தன்னைக் காட்டிக்கொள்ளாதபடி இருக்கவும் சொன்னார்.
விழிப்புடன் இரு! கூர்மையாகக் கவனித்துக்கொண்டு, வில்லில் நாணேற்றும் போது வேகமாகச் செய்து எதிரி மேல் அம்பைச் செலுத்துவதில் முந்திக் கொள். எதிரியின் ஆயுதங்களிலிருந்து எட்டி இருந்து அவை உன்னை அடையாதபடி காத்துக்கொள்.
போர்க்களத்தில் யார் வேகமாகத் தன் தாக்குதலைச் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஒரு இமைப்பொழுது என்றாலும், அது ஒருவருக்கு வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும். கவனிப்பதிலோ, எய்வதிலோ, தாக்குவதிலோ எதையும் எவரால் வேகமாகச் செய்ய முடியாதோ அவருக்குப் போர்க்களத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை; அதனால் அவர்க்குப் போர்க்களம் ஒரு கொடுப்பினையே அல்ல.