
பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…