
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…