
கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா! மாமா!” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்…. “இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம்…..