
அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது… கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூஜாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். சில பிராமண பூஜாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். வேறு சிலரோ காலகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்றக்கூடாதென்று சொல்கிறார்கள்… இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் சுவாமி அம்பேத்கர். பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கலாம் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் என்று முடிவு செய்கிறார்கள்….